எல்லா சிறுவர்களை போலவே எனது பால்யமும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் கலந்தே கழிந்ததால் பண்டிகைகளை பல நேரங்களில் நான் சிறப்பாக எல்லாம் கொண்டாடியது இல்லை.
எனினும், எல்லோரையும் போலவே எனக்கும் தீபாவளி பண்டிகை என்பது கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது தான்.
எந்த பண்டிகை கொண்டாடாமல் போனாலும், தீபாவளிக்கு எப்படியாவது புது துணி, பட்டாசு, பலகாரம் கிடைத்து விடும். வருஷம் தவறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது என்னளவில் தீபாவளி தான்.
உறவுகள் என்று எல்லாம் அப்போது பெரிதாக யாரும் கண்டு கொள்வது இல்லை என்பதால், உறவினர் வீடு விஜயம், கூடி கொண்டாடுதல் போன்றவை எதுவும் இருந்தது இல்லை. ஆனாலும் எப்படியாவது தீபாவளிக்காக புது துணி கடைசி நேரத்திலாவது எடுத்து பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடுவது தடைபட்டது இல்லை.
முக்கியமான விஷயம், தீபாவளிக்கு கண்டிப்பாக புதுப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்பது. தீபாவளி ரிலீஸ் படங்களை தீபாவளி அன்றே பார்க்கும் வழக்கம் அப்போது இருந்தது.
குணா, தளபதி இரண்டும் ஒரே நாளில் பேக் டூ பேக் பார்த்த பரவச நினைவுகள் எல்லாம் இப்போதும் பசுமையாக இருக்கிறது.
வளர்ந்து எப்படியோ தட்டு தடுமாறி படித்து முடித்து வேலைக்கு போக ஆரம்பித்து சுயமாக சம்பாதிக்க தொடங்கிய காலத்தில் மெல்ல மெல்ல இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் குறைந்து போய் விட்டது.
அதிகமாக புத்தகஙகள் படிக்க ஆரம்பித்ததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். புத்தகம் வாசித்தல், சிந்தித்தல், சுயமரியாதை, பகுத்தறிவு போன்றவை இது போன்ற பண்டிகைகள் பற்றி நமக்குள்ளேயே கேள்விகளை எழுப்ப தொடங்கி விடும். அவற்றுக்கான சரியான, நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கங்கள் கிடைக்கும் வரையும் அந்த கேள்விகள் உறுத்திக் கொண்டே தான் இருக்கும்.
அந்த கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்காததாலோ என்னவோ மெல்ல மெல்ல தீபாவளி பண்டிகை மீதான ஆர்வம் எனக்கு குறைய தொடங்கி விட்டது.
அப்படியான கேள்விகள் நமக்கு அமையும் ஆசிரியரை பொறுத்தும் அமையலாம்.
என் பள்ளிக் காலங்களில் தீபாவளி பண்டிகையின் வரலாறு குறித்து என் ஆசிரியர்களில் ஒருவர் சுருக்கமாக சொன்னது இங்கே பலரும் விளக்கமாக இப்போது பல நண்பர்கள் இணையத்தில் விரிவாக எழுதுவதை பார்க்கையில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.
தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் சந்தோஷமான பண்டிகையாகவும், தமிழ் நாட்டில் முன்னோர்/நீத்தோர் வழிபாடாகவும் கொண்டாடப்படும் வித்தியாசம் எதனால்? என என் சக மாணவர் ஒருவர் அப்போது கேள்வி எழுப்பினார்.
இது குறித்து எனது ஆசிரியர் சொன்ன காரணங்களில் ஒன்று.. "நரகாசுரன் என சொல்லப்படும் அசுரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பவர் தென்னாட்டு கடைநிலை மக்கள் என்பதை போன்ற புனைவுகள் தான் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இறைவனின் பிரியத்துக்குரிய உயர் வகுப்பு தேவர்கள் யாகம் செய்வதற்கு நரகாசுரன் இடையூறாக இருப்பதாக கிருஷ்ணரிடம் தேவர்கள் புகார் சொல்ல அவர்களுக்காக நரகாசுரனை பகவான் கிருஷ்ணன் வெற்றி கொள்கிறார். அந்த வெற்றியை கொண்டாடும் பண்டிகையாக வட மாநில மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
அசுரர்கள் என குறிப்பிடப்படும் மக்களாகிய நாம், தோல்வி உற்ற காரணத்தால் நீத்தார் வழிபாடாக முன்னோர் வழிபாடாக இந்த நாளை கொண்டாடுகிறோம். அதனால் தான் தீபாவளி அன்று உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து குளிப்பது (பெல குளி போல), முன்னோருக்கு படையல் வைப்பது போன்ற சடஙகுகள் நாம் செய்கிறோம். காரணம் இது நம் முன்னோர்கள் இழந்த நாள். அதனால் இதில் நாம் மகிழ்ச்சியாக கொண்டாட எதுவும் இல்லை" என சொல்வார் ஆசிரியர்.
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கூட இது என் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் சென்று தங்கிக் கொண்டது.
எனது ஆசிரியர் அப்போத சொண்ணதைப் போன்ற கருத்துக்களைக் கொண்ட பல பதிவுகள் இங்கே சமீப காலமாக இணையத்தில் காணக் கிடைக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னதை போல, சம்பாதிக்க தொடங்கிய பிறகான பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றின் பின்னால் ஓடிக் கொண்டு இருக்கையில் கொண்டாட்டங்கள் குறைந்து போக தொடங்கியதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.
எந்த குழப்பமும் இல்லாத பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாட எந்த தயக்கமும் வந்தது இல்லை. ஆனால், விடை தெரியாத கேள்விகள் வேறு உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்ததால் தீபாவளிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டேன்.
சில வருடங்கள் இப்படி போக, சிவகாசி பட்டாசு ஆலை விபத்து ஒன்று 2000 களின் துவக்கத்தில் நிகழ்ந்து பல குழந்தை தொழிலாளர்கள் உயிரிழந்த செய்திக்கு பின் பட்டாசு வாங்குவது குறைந்து, பண்டிகை ஆர்வமே இல்லாத போது புது துணி எதுக்கு என அதுவும் நின்று, நாம் தோற்ற நிகழ்வுக்கு வாழ்த்து எதற்கு என வாழ்த்து அட்டை அனுப்புவதற்கும் மனமின்றி நிறுத்தி.. சில ஆண்டுகள் இப்படியே கழிந்தது.
ஆனால், வாழ்க்கை ஒரு வட்டம் ஆயிற்றே.
மீண்டும் குடும்பம், புதிய உறவுகள், சம்பாத்தியம், விட்டு போன உறவுகள் என எல்லாம் சேர சேர.. நாமும் ஊருடன் சேர்ந்து வாழ தயார் ஆகி தீபாவளி கொண்டாடும், புது துணி எடுக்கும், குழந்தைக்காக பட்டாசு வாங்கும், இனி பிரிந்து போய் விடாமல் தக்கவைத்து கொள்வதற்காக தேடி தேடி போய் உறவுகளுடன் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரு பெரும் நிகழ்வாக தீபாவளி என் வாழ்வில் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.
வாழ்க்கையில் நமது கொள்கைகளை விடவும் மேலானதாக ஆகி விடுகிறது குடும்பத்திற்கான சில சடஙகுகள்.
அப்படி ஒரு சடங்காக, சம்பிரதாயமான நிகழ்வாக, இன்றைக்கும் கழிந்து போய் கொண்டு இருக்கிறது இந்த தீபாவளி.
இனி என்றைக்கும்..
No comments:
Post a Comment