கோவை & மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது தான் சமீபத்திய பரபரப்பு.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூர் (கோவை) தனது தொழில் வளர்ச்சி வேகத்தால் தென்னிந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக மாறி வருகிறது.
IT நிறுவனங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமான கோவை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.
எதிர்கால தேவைக்கான போக்குவரத்து வசதிகளை தொலைநோக்கோடு ஆரம்பிக்கும் விதமாக டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது (2006-11) திட்டம் தீட்டப்பட்டு கோவை நகருக்கான வளர்ச்சியை கருதி மெட்ரோ சேவைக்கான முதல் கட்ட கணக்கெடுப்பும் திட்ட வரையறையும் செய்யப்பட்டது.
ஆனால் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் ஆட்சிக்கு வந்த அதிமுக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், கோவைக்கு மெட்ரோ திட்டம் தேவை இல்லை என அந்த திட்ட பணிகளை கிடப்பில் போட்டார்கள். மெட்ரோவுக்கு பதிலாக மோனோ ரயில் திட்டத்தை கோவைக்கு கொண்டு வருவோம் என அதிமுக சொன்னது. ஆனால் அதற்கும் எந்த ஆக்கப்பூர்வமான பணிகளையும் அதிமுக எடுக்கவில்லை.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அவர்களது ஆட்சியில் (2017–2021) கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு அதற்கான feasibility studies மேற்கொள்ளப்பட்டன.
2021 தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தபிறகு தான் கோவைக்கான விடிவுகாலம் பிறந்தது.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த கோவை மெட்ரோ திட்டத்தை மீண்டும் உத்வேகம் பெறவைத்தது திமுக . CMRL (Chennai Metro Rail Ltd) மூலமாக திட்ட அறிக்கை DPR தயாரிப்பு செயல்முறைகள் வேகமெடுத்து 2023இல் DPR மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு Phase-1 DPR மற்றும் CMP சமர்ப்பிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
அப்படி அனுப்பப்பட்ட திட்டம் தான் இப்போது மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.
திட்டத்தை திருப்பி அனுப்பியதற்கு மத்திய அரசு சொன்ன முக்கியமான காரணங்கள்:
🔹2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கோவை நகரின் மக்கள் தொகை 15 லட்சம் தான். குறைந்தது 20 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ திட்டம் அனுமதி அளிக்கப்படும்
🔹கோவை மெட்ரோவில் 5-6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. சென்னை நகரிலேயே மெட்ரோ ரயிலில் இப்போது 4 லட்சம் பேர் தான் பயணிக்கிறார்கள் என்கிற நிலையில் கோவையில் 5 முதல் 6 லட்சம் பேர் வரை பயணிப்பார்கள் என சொல்லி இருப்பது அதிகமாக தோன்றுகிறது.
🔹கோவை மெட்ரோ திட்ட அறிக்கையில் ரயில் 34 கிமீ வேகத்தில் பயணிக்கும் என சொல்லப்பட்டு உள்ளது. இந்த வேகத்தில் செல்வதற்கு ஆட்டோ ரிக்ஷா போதும்.
🔹கோவை நகருக்கு மெட்ரோ திட்டம் தேவை இல்லை. அதற்கு பதிலாக BRTS போன்ற பேருந்து திட்டங்களை செய்தால் போதும்
இப்படியான காரணங்களை குறிப்பிட்டு கோவை நகருக்கான மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது.
மத்திய அரசு சொன்ன காரணங்கள் நியாயமானவை தானா? என்பது தான் கடந்த சில நாட்களாக நடந்து வரும் விவாதத்தின் முக்கிய காரணி. அது நியாயமான காரணங்கள் தானா என்பதை பார்ப்போம்.
மக்கள் தொகை போதுமானதாக இல்லை:
2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் DPR தயாரிக்கப்பட்டு உள்ளது. அப்போது கோவை நகரின் மக்கள் தொகை சுமார் 15 லட்சம். 14 ஆண்டுகள் கழித்து இப்போது கோவையின் மக்கள் தொகை சுமார் 32 லட்சம். ஆனால் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை வெறும் 15 லட்சம் தான் இருந்தது என்பதால் மெட்ரோ ரயில் திட்டம் அனுமதிக்க முடியாது என மத்திய அரசு சொல்லி இருக்கிறது.
இப்போது அனுமதி கொடுத்தாலும் மெட்ரோ செயல்பாட்டுக்கு வர சுமார் ஐந்து வருடங்கள் ஆகலாம். அப்போதைய தேவையை கருத்தில் கொண்டு தான் DPR தயாரிக்கப்பட்டு உள்ளது.
இப்போதே சுமார் 30 லட்சம் மக்கள் தொகை கோவையில் உள்ளது. IT நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகள், Multi Model Logistics Park (MMLP), Defense Industrial Corridor என பல தொழிற்சாலைகள் கோவைக்கு இன்னும் சில ஆண்டுகளில் வரவுள்ளன.
கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகிய நிறுவனங்களுக்கு வரும் மக்கள், நீலகிரி வால்பாறை போன்ற சுற்றுலா தலங்கள், கோவில்கள் ஆகியவற்றுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகம்.
மெட்ரோ ரயிலை கோவையில் வசிக்கும் மக்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்கிற வாதம் சரியானது அல்ல. கோவைக்கு வேளை விஷயமாகவும் வேறு காரணங்களுக்காகவும் வந்து செல்லும் மக்களும் தினசரி உபயோகிப்பார்கள்.
கோவை விமான நிலையம் 2025 ஏப்ரல் - செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 17 லட்சம் பயணிகளை கையாண்டு உள்ளது. அவர்களுக்கும் கோவை நகரத்துக்குள் வர மெட்ரோ தான் உதவும்.
எனவே 2011 ஆம் ஆண்டு (14 வருஷத்துக்கு முன்னர்) கோவையில் மக்கள் தொகை குறைவாக இருந்ததை காரணம் காட்டி 2023 இல் வரவேண்டிய மெட்ரோ திட்டத்தை திருப்பி அனுப்புவது எல்லாம் நியாயமே இல்லாத செயல்.
சென்னையை விட கூடுதல் பயணிகள்?
சென்னையை விட கோவையில் அதிக பயணிகள் பயணிப்பார்கள் என DPR சொல்லி இருக்கிறது. அது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சென்னை மெட்ரோவில் நான்கு லட்சம் பேர் தான் பயணிக்கிறார்கள். ஆனால் சென்னை மெட்ரோவை விட குறைவான தூரம் பயணிக்கும் கோவை மெட்ரோவில் எப்படி 5 லட்சம் பேர் பயணிப்பார்கள் என மத்திய அரசு கேள்வி கேட்டு உள்ளது.
சென்னையில் புறநகர் ரயில் சேவைகள், MRTS ரயில் சேவைகள் எல்லாம் உள்ளது. அதிலெல்லாம் பெரும்பாலான மக்கள் பயணிக்கிறார்கள். அது போக மற்றவர்கள் தான் மெட்ரோவை பயன் படுத்துகிறார்கள்.
கோவையின் நிலை அப்படி அல்ல. கோவையில் புறநகர் ரயில் சேவை இல்லை. இப்போது விமான நிலையம் செல்ல பேருந்து அல்லது கார் தான் பயன்படுத்த முடியும். மெட்ரோ வேண்டும் எல்லோரும் அதை தான் பயன்படுத்துவார்கள்.
கோவை மெட்ரோ பாதையே கல்லூரிகள், IT நிறுவனங்கள், விமான நிலையம் ஆகியவற்றை மத்திய நகரத்துக்கு இணைக்கின்ற வகையில் அமைக்கப்படுகிறது. அதனால் மெட்ரோ வந்துவிட்டால் பெரும்பாலான மக்கள் மெட்ரோவை தான் பயன்படுத்துவார்கள்.
இதை எல்லாம் ஆலோசித்து தான் தெளிவான விரிவான திட்ட அறிக்கையை கொடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமல் அந்த திட்டங்களை திருப்பி அனுப்பியதோடு, கோவை & மதுரைக்கு மெட்ரோ தேவை இல்லை. அதற்கு பதிலாக BRTS வசதியை பயன்படுத்தலாமே என போகிற போக்கில் ஒரு ஆலோசனையையும் வழங்கி இருக்கிறது மத்திய அரசு.
கோவை மதுரையை விட குறைவான மக்கள் தொகையை கொண்ட பல நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களை அனுமதித்த மத்திய அரசு கோவை & மதுரைக்கு மட்டும் திட்டத்தை தகுந்த காரணங்கள் இல்லாமல் திருப்பி அனுப்பி இருப்பது தமிழ்நாட்டின் அபரிமிதமான வளர்ச்சியை மட்டும்படுத்தும் செயல் போல தோன்றுகிறது.
தமிழ்நாட்டிலேயே இருக்கும் கோவையிலேயே வசிக்கும் பலரும் கூட அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் மறுப்பை நியாயப்படுத்தும் விதமாக கோவைக்கு மெட்ரோ தேவை இல்லை என சொல்ல தொடங்கி இருப்பதும் வருத்தமானது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் திமுக அரசு தொலைநோக்கு பார்வையில் அடுத்த ஐந்து காண்டுகளுக்கு பிறகான தேவையை கருத்தில் கொண்டு கோவை நகரை மேம்படுத்த எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நாம் ஆதரித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தான் கோவை நகரம் வளர்ச்சி பெற உதவும்.
அரசியல் வேறுபாடுகளை கடந்து கோவைக்கான திட்டங்களை எல்லோரும் ஆதரிக்க வேண்டும், அவற்றை முடக்கும் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது தான் இப்போதைய தேவை


No comments:
Post a Comment