Sunday, September 19, 2010

இலவச செல்போன் - ரொம்ப முக்கியம்!

வித்தியாசமான காமடிகளை அரங்கேற்றுவதில் அரசாங்கங்களை அடிச்சுக்கவே முடியாது என்பதற்கு மற்றும் ஒரு சம்பவம் கிடைத்திருக்கிறது.

இலவசம் இலவசம்னு எல்லாத்தையும் இலவசமா கொடுத்து கொடுத்து மக்களை மட்டம் தட்டி வைப்பதில் தீவிரமான அக்கறை காட்டும் மத்திய அரசு, புதிதாக அதிரடியாக அறிவித்திருக்கும் ஒரு திட்டம் ஆச்சரிய படுத்துகிறது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் சச்சின் பைலட்.  இவர் இப்போது தொலை தொடர்பு துறைக்கான இணை அமைச்சராக இருக்கிறார்.  இவரோட பாராளுமன்ற தொகுதில்  இருக்கும் "வறுமை கோட்டுக்கு கீழே" உள்ள மக்களுக்கு பி.எஸ்.என்.எல் சார்பாக இலவச சிம் கார்டு, இலவச இன்கமிங் கால் வசதியுடன் இலவச செல்போன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் என்கிற வரையறை மத்திய அரசால் எப்படி செய்யப்படுகிறது என்றால், மாதம் 600 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்யக்கூடியவர்கள் என்று.  அப்படி கஷ்டப்படும் ஜீவன்களுக்கு மத்திய கிடங்குகளில் வீணாகி கொண்டு இருக்கும் உணவு தானியங்களை இலவசமாக கொடுப்பதற்கு வீம்பாக மறுப்பு தெரிவித்து மல்லு கட்டும் மத்திய அரசு, அதே ஜீவன்களுக்கு இலவசமாக செல்போன் கொடுக்கிறது!

கால கொடுமை!

இப்படி செல் போன் கொடுப்பது, சமூகம் மீதான தன நிறுவனத்தின் அக்கறையை வெளிப்படுத்துவதாக பி.எஸ்.என்.எல் சொன்னாலும், அதனை   தொலை தொடர்பு துறை ராஜாங்க அமைச்சர் தொகுதியில் மட்டும் கொடுத்து இருப்பதில் என்ன விதமான சமூக அக்கறை இருக்கிறது என்பது புரியவில்லை.

மேலும், இப்படியான இலவச செல்போன் என்பது வறுமையில் வாடும் மக்களுக்கு மேலும் கூடுதல் செலவாக தான் அமையுமே அல்லாமல், அவர்களுக்கு அதனால் எந்தவிதமான பிரயோஜனமும் இருப்பதாக தெரியவில்லை.

வறுமையில் வாடுகிற மக்களுக்கு, வேலை வாய்ப்புக்களை பெருக்குவது, வாழ்வாதாரங்களை பெருக்கி கொடுப்பது, கல்வி, சுயதொழிலுக்கான வழிகளை காட்டுவது, வீணாகும் தானியங்களையாவது கொடுத்து உதவுவது என்பன போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை யோசிக்காமல் அவர்களுக்கு செல்போன் கொடுப்பது என்பது செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவுக்கும் மட்டுமே பயனளிக்க கூடியதாக இருக்குமே தவிர, வறுமையில் வாடும் ஜீவன்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இருக்க நியாயம் இல்லை.


மேலும்,  ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், சச்சின் பைலட் தொகுதி என்பதால் அங்கே இந்த இலவச செல்போனை விநியோகித்த பி.எஸ்.என்.எல், அடுத்த படியாக, கடந்த 18.09.2010 அன்று கோவை அடுத்த அவினாஷியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது.  இந்த பகுதி தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா அவர்களின் தொகுதிக்குட்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!

பி.எஸ்.என்.எல்லை பொறுத்தவரை, வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இப்போதைய உடனடி அத்தியாவசிய தேவை என்பது செல்போன் என்று தீர்மானித்து விட்டதாகவும், அப்படியான வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டுமே இருப்பதாக முடிவு செய்துவிட்டதாகவும் தோன்றுகிறது.

பசியால் வாடுவோருக்கு உணவு தானியம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துக்கு வீம்பாக மறுப்புரை வழங்கிய மத்திய அரசு, இப்போது அவர்களுக்கு இலவச செல்போன் வழங்குவதன் நோக்கம் தான் புரியவில்லை.

சோற்றை விடவா செல்போன் முக்கியம்?

அயோத்தி தீர்ப்பும் - அவசர அறிக்கையும்

பாபர் மசூதி இடிப்பு, ராமர் கோவில் கட்டுமானம், போன்ற பரபரப்புக்களால் கலவர வன்முறை களமான அயோத்தி வன்முறைகள் குறித்தான வழக்கின் தீர்ப்பு வரும் 24ம் தேதி வரவிருக்கிறது.

கடந்த வாரம் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன் படி, தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் அச்சமயம் வெளியூர் செல்லாமல் அவரவர் ஊர்களிலேயே இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.  மேலும், மாயாவதி அவர்கள் வன்முறை நிகழாமல் தடுப்பதற்கான சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், அவ்வேற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்லி இருப்பதுடன், காங்கிரசார் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து அமைதி நிலவ செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 16.09.2010 அன்று, மத்திய அமைச்சரவை கூடி எடுத்த மற்றொரு தீர்மானமும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களையே வலியுறுத்தி இருக்கின்றது.  அத்தீர்மானம் அரசின் சார்பில் விளம்பரமாகவும் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது.

இந்த இரண்டு அறிக்கைகளின் நோக்கம் என்ன? இவ்வளவு அவசரமாக எதற்காக இப்படியான அறிக்கைகள் வெளியாகின்றன? அரசு ஏதேனும் மிக பெரிய வன்முறையை எதிர்நோக்குகிறதா?  அல்லது அவ்வாறான ஒரு வன்முறை வேண்டும் என்று விரும்புகிறதா?

ஒண்ணுமே புரியலை!

Printfriendly