Monday, March 12, 2012

உ.பி தேர்தல் முடிவு - இந்தியாவின் எதிர்காலம்?

பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகி, சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

மேலும் 3 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்து தலை குனிந்து நிற்கிறது.

ஒரு முக்கியமான காலகட்டத்தில், பொருளாதார மேம்பாடை எதிர்நோக்கி காத்திருக்கும் எதிர்கால இந்தியா எப்படி இருக்கும்? இந்த தேர்தல் நமக்கு சொல்ல வருவது என்ன?


உத்தரபிரதேசம் இந்தியாவின் மிக பெரிய மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பதால், இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கை அது வகிக்கிறது.


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கியமான பங்கை வகிக்கும் என பலமாக எதிர்பார்க்கப்பட்டாலும், சமாஜ்வாடி கட்சி தனி பெரும் கட்சியாக முகிழ்த்து இந்தியாவின் முக்கிய கனவுகளை எல்லாம் மாற்றிப்போட்டிருக்கிறது.

தேர்தல் முடிவுகள் குறித்த அரசியல் அலசல்களான, காங்கிரஸ் தோல்விக்கான காரணம், மாயாவதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள், முலயாமின் மீள் வருகை என்பதை எல்லாம் விவாதப்பொருள் அல்ல இங்கு.  இந்த தேர்தல் முடிவு, இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்கும் என்பதை மட்டுமே பொருளாக கொள்கிறேன்.

காங்கிரஸ் தயவின்றி சமாஜ் வாடி ஆட்சி அமைப்பதால், இன்றைய தேதியில், பலமான மாநில கட்சியாக சமாஜ்வாடியும் உருப்பெற்றிருக்கிறது.  தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.கவும் தத்தம் பெயரையும் பெருமையையும் போட்டி போட்டு கெடுத்துக்கொண்டதில், இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. இச்சூழலில், மாநில கட்சிகள் பரவலாக பெற்றுவரும் வெற்றிகள் சற்று யோசிக்க வைக்கிறது. மாநிலங்களுக்கான அதிகாரங்கள், உரிமைகள் என்கிற நோக்கில், மாநில கட்சிகள் வலுப்பெறுவது ஆதரிக்கக்கூடியது என்றாலும் கூட, இப்போது வெற்றிபெற்றிருக்கின்ற மாநில கட்சிகள் பலவும் மத்திய அரசை குறிவைத்து இயங்குபவை என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால், இப்போதைய மாநில கட்சிகள் பெற்றிருக்கின்ற வெற்றி குழப்பத்தை தருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலிதளம் கட்சி ஆட்சி அமைத்து இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் செல்வி. ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்காளத்தில் மமதா பானர்ஜி என பரவலாக முக்கிய மாநில கட்சிகள் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன.

காங்கிரஸ் அரசின் மீதான அதிருப்தி பெருகி வரும் வேளையில், காங்கிரஸுக்கு மாற்றான வலுவான கட்சியாக எதுவும் இப்போது இல்லை. தேசிய கட்சியான பா.ஜ.க சொந்த கட்சியின் பிரச்சனைகளில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இருப்பதாக கருதப்பட்ட செல்வாக்கின் மாயை மெல்ல மெல்ல விலகி வருகிறது.

மற்றொரு தேசிய கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, அந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கான நோக்கத்தை விட்டு விலகி பயணித்து, மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. கேரளம், திரிபுரா, மே.வங்காளம் ஆகிய மாநிலங்களை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஆழமாக வேரூன்றுவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், பாட்டாளிகள், ஏழை எளிய மக்களுக்கான எந்த ஆதரவு நிலைப்பாட்டையும் ஆக்கப்பூர்வமாக எடுக்காமல் பெயரளவிற்கு இயங்கி வருகின்றன.

இது நாள் வரையும் மாநில அளவில் ஆங்காங்கு இயங்கி வந்த மாநில கட்சிகளும் ஒருவாறு தேசிய சிந்தனை இல்லாமல், நம்பிக்கை இல்லாமல் தான் இயங்கி வந்தன.  இவ்வாறான சூழலில் தான் உத்திர பிரதேச தேர்தல் வெற்றியை பார்க்க வேண்டி இருக்கிறது.

பீஹார் மாநிலத்தின் வலுவான தலைவராக, நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். ஒரிசாவில் பிஜு ஜனதா தளம், கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பஞ்சாபில் அகாலி தளம், மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் என மாநில கட்சிகள் வலுவாக இருக்கிற கால கட்டம் இது.

அடுத்த ஆண்டு மத்தியில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் விரைவில் எதிர்பார்க்கக்கூடியது, வழக்கமாக தேர்தல் காலங்களில் தோன்றக்கூடிய மூன்றாவது அணி.

மமதா போன்ற வலுவான அரசியல் தலைவர்கள் வேறு வழியின்றி இது வரையும் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்து வருவதாகவே உணரப்படுகிறது. உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் அவரை போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தரக்கூடும். ஏற்கனவே மூன்றாவது அணியில் பங்கெடுத்த பாதல், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா போன்றவர்களும், தேவேகவுடாவின் புதல்வர் குமாரசாமி, முலயாம், நிதிஷ் என ஒரு மிகப்பெரிய மாநில கட்சிகளின் கூட்டணியை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அவ்வாறு ஒருவேளை மூன்றாவது அணி தோற்றுவிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

தொங்கு பாராளுமன்றம்

அதிகார கைப்பற்றல்களுக்கான போட்டிகள்

யார் தலைவர் என்கிற மோதல்கள்

திறனற்ற நிர்வாகம்

பொருளாதார நிச்சயமற்ற தன்மை

வளர்ச்சி விகித பாதிப்பு

இன்றைக்கு இந்தியா இருக்கும் சூழலில் இதுபோன்ற ஒரு நிலையற்ற அரசியல் சூழலை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்திய தொழில்துறையும், பொருளாதாரமும் என்ன ஆகும் என்பதெல்லாம் இனி வரும் ஒன்றரை ஆண்டுகளை பொறுத்தே அமையும்.


சந்திரபாபு நாயுடு, முலயாம், ஜெயலலிதா, நிதிஷ்குமார் என பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் மூன்றாவது அணியில் அதிகமாக இருக்கும் நிலையில், காங்கிரசும் பாஜகவும் இனியேனும் சுதாரித்து, தத்தம் தவறுகளை திருத்தி, மக்கள் செல்வாக்கை மீண்டும் பெற்று வலுவான ஒரு கட்சி ஆட்சி முறைக்கு வழிவகுத்தால் ஒழிய, இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியானதே என கருதுகிறேன்!

No comments:

Post a Comment

Printfriendly