Sunday, March 18, 2012

இந்திய பட்ஜெட் 2012 - என்ன தரும்?ந்திய பட்ஜெட் இந்த ஆண்டுக்காக தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கலாக்கி   ஒரு மிக  பெரிய அறிவிப்புக்களின் பட்டியலை வெளியிட்டார். அந்த அறிவிப்புக்களின் சாரம் என்ன? அடுத்து எதிர்வரும் காலங்களில் இந்திய பொருளாதாரம் என்னவாக இருக்கும்? இந்த பட்ஜெட் நமக்கு சொல்ல வருவது என்ன?

முதல் பகுதி உரையை காண்கையில் ஒரு முற்போக்கான வளர்ச்சி பாதையை நோக்கிய முன்னேற்றத்துக்கான பட்ஜெட்டுக்காக காட்சி அளித்தது. காரணம் வட கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி, பொருளாதார சீர்திருத்தம், வரி சீரமைப்பு, ஜி.எஸ்.டி amalaakkam, சுகாதார திட்டங்கள், அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள், விவசாய ஊக்குவிப்பு திட்டங்கள் என மகிழ்ச்சியான விஷயங்கள் தான் வெளியானது. அப்படியே இருந்திருந்தால் இந்தியா மிக சிறப்பான வகையில் தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக கருதி சந்தோஷப்பட்டிருக்க முடியும்.  ஆனால் பிரனாபின் முழுமையான பேச்சை படித்தபின் ஏற்பட்டிருக்கும் கருத்து மாறுபட்டதாக இருக்கிறது.

பிரணாப் பேச்சின் இரண்டாம் பகுதியை பார்க்கையில் முழுமையாக முதலாளித்துவத்துக்கான ஆதரவான பட்ஜெட்டாக தெரியும் நிலை இருக்கிறது. விமானபோக்குவரத்தில் அந்நிய கடனுக்கு அனுமதி, விமான உதிரிபோருட்களுக்கு இறக்குமதி வரி ரத்து, விமான எரிபொருளை நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி என விமான நிறுவனங்களை மகிழ்ச்சி படுத்தும் அறிவிப்புக்களும், பிற தொழில் கூறுகளில் மிக பெரிய சலுகைகளும், நடுத்தரவர்க்கத்டுக்கான அதிகபட்ச தண்டனையும் வெளியாக தொடங்கியது.

வரிகளை பொறுத்தவரை  உற்பத்தி வரி மற்றும் சேவைவரி  2 % உயர்வு, அனைத்து சேவைகளும் வரிக்கு கொண்டு வருதல், ஏற்றுமதி சேவைக்கான வரி, இறக்குமதிக்கான வரி ரத்து, வருமான வரி சலுகையில் மிக குறைந்த முன்னேற்றம், ஜி.எஸ்.டி திட்டத்தில் தெளிவின்மை போன்றவற்றால், உள்நாட்டு தொழில்கள் முடங்கவும், வெளிநாட்டு மற்றும் இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வளரவுமான வரி விதிப்புமுறை  அமல் செய்யப்பட்டு இருக்கிறது. பணவீக்கத்தின் தற்போதைய நிலையம், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் வீழ்ச்சியும் ரூபாயின் மதிப்பு சரிவு  எல்லாம் சேர்ந்து பொதுமக்களின் சம்பாத்தியத்தின் பலனை பாதியாக குறைத்திருக்கும் நிலையில், வரி உயர்வு, அதிலும் சேவை வரி உயர்வு என்பது அவனது திட்டமிட்ட செலவினங்களில் திட்டமிடாத கூடுதல் செலவாக கூடுதல் சுமையாக அவனை அமிழ்த்தக்கூடும்.

பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீடு அதிகரித்திருப்பதும், போர் விமானங்கள்  வாங்குவதற்கான முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுத்திருப்பதன் காரணம் புரியவில்லை. அடிப்படை வசதிகளில் போதிய வளர்ச்சி இல்லை என பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்ளும் மத்திய அரசு, அத்தகைய அடிப்படை வசதிகளுக்கான முக்கியத்துவத்தி குறைத்துவிட்டு போர் விமானங்களை ஆர்வமாகவும் அவசரமாகவும் வாங்குவது உறுத்துகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்துவதற்காக மிக பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது வரவேற்க்கத்தக்கது. சாலைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் முன்னெடுத்து செல்லும் காரணி என்பது சற்று தாமதமாகவேனும் புரியதுவங்கி இருக்கிறோம். குறிப்பாக, பின்தங்கிய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் அதிக அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு அப்பகுதிகளை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்.

நிர்வாகத்தை பொறுத்தவரை, 3 % என எதிர்பார்க்கப்பட்ட நிர்வாக செலவு 13 % என உயர்ந்திருப்பது சுத்தமாக நிர்வாக திறமை இல்லை என்பதையும், ஒட்டு மொத்த நிர்வாகமும் சீர் கேட்டு போயிருக்கிறது என்பதையும் தான் காட்டுகிறது.  22 % வருவாயை கடனை நம்பி இருக்கும் இந்திய பட்ஜெட்டில் 18 % செலவினம் கடனுக்கான வட்டியாக  இருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கக்கூடியது. இதை விட மிக மோசமான பொருளாதார திட்டமிடல் வேறு என்ன இருக்க முடியும்?  வளர்ச்சி பணிகளுக்கு 7 % மட்டுமே நிதி ஒதுக்கும் ஒரு நாட்டில் 22 % கடனுக்கு 18 % வட்டி என்பது கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதை போன்றது.

சுருக்கமாக சொல்வதானால், முற்போக்கான திட்டங்களை தருவதாக சொல்லப்பட்டாலும், அவை அனைத்தும் பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், நடுத்தர மக்களுக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் பாதகமாகவும் இருக்க கூடியதாக இருக்கிறது இந்த பட்ஜெட்.


No comments:

Post a Comment

Printfriendly