Tuesday, July 24, 2012

நானும் செல்போனும்


ப்போது நான் ஒரு சிறிய கடையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த கடையின் முதலாளிக்கு துபாயில் ஒரு சொந்தக்காரர் இருந்தார். அவருக்கு அவசரமாக ஒரு துக்க செய்தி சொல்லவேண்டி இருந்ததால் ஐ.எஸ்டியில் அவருடைய ஆஃபீசுக்கு அழைத்தோம். ஆனால் அங்கே அவர் ஆஃபீசில் இல்லை. ஃபோனை எடுத்த அவருடைய அலுவலக உதவியாளர், வேறொரு நம்பர் கொடுத்து இதில் கூப்பிட்டீங்கன்னா அவர்கிட்டேயே பேசிக்கலாம்னு சொன்னார். அந்த நம்பருக்கு அழைத்து, அவரிடம் விஷயங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின், முதலாளி அவரிடம் கேட்டார், இது எந்த நம்பர்? வீட்டு நம்பரா? என்று. இல்லையில்லை இது என் ஹேண்ட் ஃபோன்.. நான் இப்போ கார்ல வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்னு சொன்னார் அவர். அவ்வளவு தான். நாங்க ஃபோனை கட் பண்ணிவிட்டு கிட்டத்தட்ட சிலை மாதிரி ஆஃபீசில் எதிரெதிர் உட்கார்ந்திட்டிருந்தோம். முதலாளி சொன்னார் பார்றா.. கார்ல போயிட்டிருக்கும்போதே ஃபோன்ல பேசுறான்.. வீட்டுக்கு போயித்தான் பேசணும்னு கட்டாயமில்லை.. ஃபாரின் ஃபாரின் தான்ன்னு அன்னைக்கு முழுக்க சிலாகிச்சிட்டே இருந்தார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மாசங்களிலேயே சென்னைக்கு செல்ஃபோன் சேவை வந்திருச்சு! என்னிடம் ஒரு பேஜர் இருந்தது அப்போது! பேஜர் கம்பெனிக்கு ஃபோன் செஞ்சு தகவலை சொல்லிட்டா அவங்க அதை குறுந்தகவலா எனக்கு அனுப்பிருவாங்க. அதை படிச்சு விஷயத்தை தெரிஞ்சுக்கலாம். ஆனால் டிவிட்டர் மாதிரி லிமிட்டட் வார்த்தைகள் தான் உபயோகிக்கமுடியும் என்பதால் பெரும்பாலான மெசேஜ் கால் மீ என்பதாக தான் இருக்கும்!

செல்ஃபோன் சேவை வந்ததும், முதலாளி ஆசை ஆசையாக ஒரு கனெக்ஷன் எடுத்தார். சென்னையில் அப்போது ஸ்கைசெல் & ஆர்.பி.ஜி ன்னு ரெண்டு நிறுவனங்கள் தான் செல்ஃபோன் சேவை கொடுத்தது. முதலாளி, ஸ்கைசெல் ஃபோன் வாங்கினார். அப்பிளை பண்ணின அடுத்த நாளே கனெக்ஷன் கிடைச்சிருச்சு. ஒரு லேண்ட் லைனுக்காக 10,000 ரூபாய் டெப்பாசிட் கட்டி, 7 வருஷம் வரைக்கும் காத்திருந்து கனெக்சன் வாங்கிட்டு இருந்த சமயத்தில் ஒரே நாளில் போன் கனெக்சன்ங்கறது நம்பமுடியாத சந்தோஷ அதிர்ச்சி.
நோக்கியா 2110 போன், 27,000 ரூபாய். இதுக்கான தொகை இன்ஸ்டால்மெண்ட் பேசிசில் மாச ஃபோன் பில்லிலேயே வந்திரும். மாசம் 3,000 ரூபாய். கால் சார்ஜ் இன்கமிங் 8.44 அவுட்கோயிங் 16.32. ரோமிங் எல்லாம் கிடையாது. நாம எந்த ஊருக்கு போறோம்ன்றதையும், எந்த நாட்களில் அங்கே இருப்போம்ன்றதையும் ஒரு லெட்டர் எழுதி கொடுத்திட்டா அந்த ஊரில், அந்த நாளில் நம்ம ஃபோன் வேலை செய்ய ஏற்பாடு செய்வாங்க. அம்புட்டு தான்! ஆனா அதுவே பெரிய விஷயமா இருந்தது.

ஒரு முறை முதலாளி வீட்டிலேயே ஃபோனை வெச்சிட்டு வந்துட்டார். அதை எடுத்துவர சொன்னபோது நான் அடைந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது. முதல் முதலில் அந்த ஃபோனை என் சட்டை பாக்கெட்டில் பத்திரமாக வெச்சிகிட்டு (விழுந்திருமோ?) சைக்கிள் மிதிச்சிட்டு கடைக்கு வந்த பரவசம் இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு.

காலங்கள் ஓடிச்சு, நானும் பல கம்பெனிகள் மாறி, மெல்ல மெல்ல வளர துவங்கினேன். 2002ம் வருஷம் நான் முதல் முதலில் எனக்குன்னு ஒரு செல்ஃபோன் வாங்கினேன். எனது தோழி தான் உபயதாரர். புது செல்ஃபோன் வாங்க வக்கிலாத காரணத்தால், மோட்டோரோலா T190 ஃபோனை செகண்ட்சில் வாங்கினேன். ரொம்ப நாளா வெச்சிருந்தேன் அந்த ஃபோனை. முதல் முதலில் வாங்கின ஃபோன் என்கிற செண்டிமெண்ட் வேறே. ஏர்டெல் (ஸ்கைசெல் நிறுவனத்தை கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்துகிட்டேயிருந்து பாரதி கம்யூனிகேஷன்ஸ் வாங்கி ஏர்டெல்ங்கற பேரில் சேவை செய்ய ஆரம்பிச்சிருந்தாங்க அப்போ!) கனெக்சனுடன் அந்த போன் 2004 வரைக்கும் என்கிட்டே இருந்தது. பல ஊர்களுக்கு அந்த ஃபோனை எடுத்து போயிருக்கேன். ஆனா பேட்டரி சரியா நிக்காததால அந்த ஃபோனை கொடுத்துட்டு ஒரு கலர் மொபைல் வாங்கணும்னு ஐடியா வந்துச்சு.

இன்னொரு நண்பர் தயவில் இன்ஸ்டால்மெண்டில் சீமென்ஸ் A65 ஃபோன் வாங்கினேன். கலர் மொபைல், WAP வசதி இருந்தது, அதுவே பெரிய விஷயமா தெரிஞ்சுது எனக்கு. நல்ல நெட்வர்க் இழுக்கும் திறன். ஒருமுறை பஸ்சில் நெல்லைக்கு போயிட்டு இருக்கும்போது விருதுநகர் தாண்டி பொட்டல் காட்டில் வண்டி போயிட்டு இருக்கு. பக்கத்து சீட் நண்பரின் நோக்கியா போனில் சுத்தமா சிக்னல் இல்லை. ஆனால் என் சீமென்சில் தென்காசி டவர் காட்டிட்டு இருக்கு! அப்புறம் தான் தெரிஞ்சது, நெட்வொர்க் கம்மியூனிகேசனின் முக்கிய நிறுவனம் சீமென்ஸ்னும், எல்லாருக்குமே செல்போன் டவர்ல இருக்கிற உபகரணங்களையெல்லாம் அவங்க தான் அமைச்சு கொடுத்துட்டு இருக்காங்கன்னு.

எனக்கு ரொம்ப ஆச்சரியமான விருப்பமான விஷயம், எந்தெந்த பகுதிக்கு பயணிக்கிறோமோ அந்தந்த பகுதியின் பெயர் ஃபோனில் வருவது. பல பயணங்களில் தான் ஓஹோ இந்த ஊரு இங்கே தான் இருக்காஆச்சரியப்படுத்தின பல பல ஊர்களை பார்த்தேன். படிச்சிருப்போம், முக்கியமான ஊர்கள் நினைவில் இருக்கும் ஆனா செல்ஃபோன் பார்த்து தான், அட இங்க தான் இருக்கான்னு வியந்ததெல்லாம்.

ஒரு கட்டத்தில் கட்டணங்கள் கட்டுபடியாகலை. சென்னைக்கு வெளியே வந்தா ரோமிங்! அதுக்கு தனியா 6 ரூபாய் சார்ஜ்! இந்த சமயத்தில் ஏர்டெலில் ஒரே ஸ்டேட் ஒரே ரேட்னு ஒரு ஸ்கீம் கொண்டுவந்தாங்க. அதாவது நம்ம சிம்முக்கு ரெண்டு நம்பர் கொடுப்பாங்க. சென்னைக்கு ஒரு நம்பர். தமிழகத்துக்கு இன்னொரு நம்பர். (சென்னை தமிழகத்தின் பாகம் அல்ல ன்னு அவங்க விளம்பரத்தில் வரும் வாசகம் உறுத்தலா இருக்கும்!) இந்த ரெண்டு நம்பருக்கும் சேர்த்து ஒரே சிம். ரெண்டு நம்பரில் எதில் கூப்பிட்டாலும் நமக்கு கால் வரும்! ஆனா தமிழக நம்பருக்கு வரும் கால்கள் இலவசம். சென்னை நம்பர் எனில் ரோமிங் கட்டணம். 

இந்த குழப்பமான சிஸ்டத்தை புரிஞ்சுக்கறதுக்குள்ளேயே தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்பு அமைச்சரா ஆனாரு! ஒரே மாநிலத்துக்குள்ளே ரோமிங் எதுக்கு? ன்னு ஒரு கேள்வியை கேட்டு, சட்டத்தையே மாத்தி, மும்பை, கல்கத்தா, சென்னை நகரங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் இருந்துவந்த ரோமிங் சார்ஜை ரத்துசெஞ்சு, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம்னு அறிவிச்சாரு. இதுக்கும் சி.ஏ.ஜி தத்தக்கா பித்தக்கான்னு குதிச்சாங்க. அரசுக்கான வருவாய் இழப்பு, சட்ட மீறல்னெல்லாம் பேச்சு வந்தது. ஆனா தயாநிதி மாறன் உறுதியா இருந்து மக்கள் வசதிக்கான அந்த சட்டத்தை அமல் படுத்தினாரு! அதனால் நான் தப்பிச்சேன். ஒரே நம்பரை வெச்சு, தமிழகம் முழுவதும் ஹாயா சுத்த ஆரம்பிச்சேன்.

சீமென்ஸ் போனிலும் பேட்டரி பிராப்ளம் வந்ததால் பெரும்பான்மை கருத்துக்கு உட்பட்டு, நோக்கியாவையே வாங்கிக்கலாம்னு முடிவு செஞ்சு, இன்னொரு நண்பர் புண்ணியத்தில் நோக்கியா 3120 போன் வாங்கினேன். இதுவும் கலர் மொபைல், இண்டெர்நெட் வசதி இருந்தது. ஆனாலும், புளூ டூத், கேமரா, எல்லாம் இல்லையேன்னு ஒரு ஏக்கம். இந்த போனுக்கே 6,500 ஆச்சு, இதுக்குமேல ஆசைப்படக்கூடாதுன்னு அடக்கிக்கிட்டேன்.

ஸ்பெக்ட்ரமின் இரண்டாம் ஒதுக்கீட்டில் சென்னைக்கு புதுசா பி.ஸ்.என்.எல் & ஹட்ச் போன்கள் வந்தது. பி.எஸ்.என்.எல் சிம் வாங்கணும்னு ஒரு வெறி வந்துச்சு. காரணம் எல்லா ஊரிலும் கவரேஜ், கால் கட்டணங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. ஆனா சிம் கிடைக்கிறது கஷ்டம். 

மயிலாபூரில் ஒரு நண்பர் இருந்தார். அவரது ஆலோசனையின் படி, மந்தைவெளி எக்சேஞ்சில் காலை 5 மணிக்கே போயி லைனில் நின்னேன். அப்பவே நான் 70வது ஆளோ என்னமோ. ஒருவழியா லைனில் நின்னு, காத்திருந்து, மதியம் 3 மணி சுமாருக்கு சிம் வாங்கினேன். அது கிடைச்சதே அதிசயமான விஷயம்ன்றதால, அதை கொண்டாட 2 நாள் லீவு போட்டு ஊரு சுத்தினேன். ஆனா, பி.எஸ்.என்.எல் நிறுவனம் என் கழுத்தை அறுத்திருச்சு. எந்த ஊருக்கு போனாலும், ஃபுல்லா டவர் கவரேஜ் இருக்கும். ஆனா கால் பண்ணினா போகாது. நமக்கு யாராவது கால் பண்ணினாலும் கூட தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்னு தான் மெசேஜ் வந்திட்டு இருக்கும். 2005 பிப்ரவரியில் ஒரு முக்கியமான அவசர செய்தியை என்கிட்டே சொல்லமுடியாம எங்கப்பா பட்ட கஷ்டத்தின் காரணமா, பி.எஸ்.என்.எல்லை தூக்கி தூரப்போட்டுட்டு, மீண்டும் நம்பிக்கையான ஏர்டெல்லுக்கே வந்தேன்.

ஏர்டெல்லில் என்ன பிரச்சனைன்னா, கண்டினியூயஸ் கால் சார்ஜு ஜாஸ்தி கவரேஜ் இருக்காது. சென்னையிலிருந்து சேலத்துக்கு ரயிலில் போறதா இருந்தா, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை மாதிரியான முக்கிய டவுன்களில் மட்டும் போன் எடுக்கும். ஜோலார் தாண்டினா சேலம் வரைக்குமான காட்டு வழியில் சுத்தமா டவர் இருக்காது. கேம்ஸ் மட்டும் தான் ஆடிட்டு இருக்கவேண்டி இருக்கும்.
இருந்தாலும் வேறு வழியில்லாம ஏர்டெல்லையே கட்டி அழவேண்டி இருந்ததுக்கான காரணம், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில், குறிப்பா வட மாநிலங்களில் நல்ல நெட்வர்க் கவரேஜ் இருக்கும். நான் அடிக்கடி பயணிக்கறதால் ஏர்டெல்லிலேயே இருந்தாகவேண்டிய நிர்ப்பந்தம்.

இதுக்கிடையில் வேறொரு காரணத்துக்காக எல்.ஜி B2070 போன் வாங்கினேன். அதில் மோடம் சிறப்பா இருக்கும்ன்றதால், வீட்டில் உள்ள லேப்டாப்பில் நெட் பிரவுசிங் செய்ய சிறப்பான போன். அதை வெறுமனே நெட்டுக்காக மட்டுமே பயன்படுத்தினேன். எல்ஜி போன்  ரொம்பவே உபயோகமா இருந்தது, நல்லா நெட்வர்க் இழுக்கும், தெளிவான சவுண்ட், டிசண்டான லுக்குன்னு கலக்கல். கும்பகோணம் ரயில்நிளையத்தில் வெச்சு அது தொலைஞ்சு போச்சு. அதுக்கப்புறம் சின்ன சின்னதா சில நோக்கியா  போன்களும்  சில சைனா போன்களும்  வாங்கினேன் அடிக்கடி போனை தொலைக்கிற ஆள் நான். அதனால விலை கம்மியா அதே சமயம் நிறைய வசதிகள் இருக்கிற போனா பார்த்து வாங்கினேன். 2007 லேயே S 30 னு  ஒரு சைனா போன், டுயல் சிம், டச், கேமரா, புளு டூத் னு வாங்கியிருக்கேன். என்னுடைய பல போன்களை என் சில சொந்தக்காரங்களும் சில நண்பர்களும் வெச்சிருக்காங்க, நினைவு சின்னம் மாதிரி. எத்தனை போன் வாங்கினாலும் போன்கள் மீதான ஆசை குறையவே இல்லை விதம் விதமா வசதிகளை தேடி தேடி போன் வாங்குற பழக்கம் மட்டும் திரவே இல்லை.      

நவீன ஸ்மார்ட் போன்கள் வந்தபோது, எல்லாரையும் போல எனக்கும் ஸ்மார்ட் போன் வாங்கும் ஆசை வந்தது. எல்லா வெப்சைட்டிலும் ரிவியூ பண்ணி அலசி ஆராய்ந்து என் பட்ஜெட்டுக்கும், என் தேவைக்குமான கான்பிகரேசனில் ரெண்டு ஃபோனை ஷார்ட்லிஸ்ட் செஞ்சு வெச்சேன். ஒண்ணு நோக்கியா C5-03, இன்னொண்ணு சாம்சங் காலக்ஸி பாப் (2011 ஜூனில்). இதில் எதை எடுக்கிறதுன்னு ஒரே குழப்பம். தி மொபைல் ஸ்டோர் கடையின் சேல்ஸ்மேனின் ஒபினியனை(!) கேட்டதில் சாம்சங் ஆண்டிராய்டுன்னு ஒரு புது ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேரை யூஸ்பண்றாங்க சார். அது எந்த அளவுக்கு சேஃபுன்னு தெரியாது. நோக்கியாவின் சிம்பியன் ஓ எஸ்சை நம்பி வாங்குங்கன்னு ரெகமண்ட் செஞ்சதால நோக்கியாவையே வாங்கினேன். சாம்சங்கை விட (3.2 MP) சிறந்த கேமரா (5MP) இருந்ததால் எனக்கும் ஓரளவுக்கு ஓகேவா இருந்தது.

ஆனா ஆண்டிராய்டு இந்த போடு போடும்னு அப்போ எனக்கு தெரியலை. சில மாசத்துக்கு முன்னே செம்ம கடுப்பில் அந்த ஸ்டோருக்கு போயிப்பார்த்தேன், ஆனா அந்த சேல்ஸ்மேன் ரிசைன் பண்ணிட்டாராம். தப்பிச்சாரு!
இப்போதைக்கு, என் எல்லா தேவைக்கும் இந்த போன் போதுமானதா இருக்கு. ஆனா, சத்தியமா நானெல்லாம் செல்ஃபோன் வெச்சுக்குவேன், அதிலேயே மெயில் செக் பண்ணுவேன், ஃபோட்டோ எடுப்பேன், பாட்டு கேப்பேன், இண்டர்நெட் பிரவுஸ் பண்ணுவேன்னு கனவு கூட கண்டதேயில்லைங்க!

கனவு கண்டா தான் பலிக்கும்ன்றது எல்லாம் சும்மா! 

4 comments:

  1. "எனக்கு ரொம்ப ஆச்சரியமான விருப்பமான விஷயம், எந்தெந்த பகுதிக்கு பயணிக்கிறோமோ அந்தந்த பகுதியின் பெயர் ஃபோனில் வருவது. பல பயணங்களில் தான் “ஓஹோ இந்த ஊரு இங்கே தான் இருக்கா”ஆச்சரியப்படுத்தின பல பல ஊர்களை பார்த்தேன்." நானும் மிக ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

    அருமையாக நினைவுபடுத்தி எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. nostalgic.. பி.பி.ல். அறிமுகப்படுத்தப்பட்ட எடுத்த கனெக்ஷனை இன்னும் பயன்படுத்தும் நண்பர்கள் இருக்காங்க.. மணி தான் பாத்துக்கலாம்னு நெனச்சேன் ஊரு பேருலாம் வருமாடானு என் மாமா கேட்டது எனக்கு நெனப்பு வந்துடுச்சு.. இப்போ மாமா இல்ல கூகிள் மாப்ஸ்ல அவரு கட்டுன பங்களாவ காமிக்க..

    ReplyDelete
  3. :)) As usual precious in infos... nice narration

    ReplyDelete

Printfriendly