Tuesday, July 31, 2012

டெசோ மாநாடு!


டந்த மாதம் கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்த ஈழ ஆதரவாளர்கள் மாநாடு விழுப்புரத்தில் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் பாதுகாப்பு காரணங்கள் கருதியும்,வெளிநாட்டிலிருந்து வரும் பிரதிநிதிகளின் பயண / தங்கும் வசதி கருதியும் மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறும் என முடிவாகி இருக்கிறது. இதில் ஈழ ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் என பலரும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

சரி, இப்போது எதற்காக இந்த மாநாடு? அதை பற்றி பேசுவதற்கு முன்னால், நாம் சின்னதாக சுருக்கமான ஒரு ரீகேப் சென்று வருவோம்!
டெசோ புதிதல்ல. 80களில் போராளி குழுக்களுக்கிடையே சகோதரசண்டை ஏற்பட்டபோதே துவக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ஈழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு (Tamil Ealam Supporters Organisation). 

ஏன் அப்படி ஒரு அமைப்பு அப்போது உருவாக்கப்பட்டது?

ஈழத்தில் இனப்பிரச்சனை தோன்றி, பெரியவர் செல்வா தலைமையில் அமைதி அறவழி போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த 50 களிலிருந்து 70களின் இறுதி வரைக்கும் பேச்சுவார்த்தையை முன்னிலைப்படுத்தியே போராட்டம் என்பது இருந்து வந்தது. அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு அமைதிக்கான சிறு வெளிச்சம் தெரிய தொடங்கிய 1976ல் புலிகள் அமைப்பு யாழ்ப்பாண மேயரை சுட்டுக்கொன்று அதை ஆயுத போராட்டமாக மாற்றினர். 

அந்த நிகழ்வுக்கு பின், இலங்கை அரசு அரச பயங்கரவாதத்தை ஏவி கடுமையான உள்நாட்டு போராக தாக்குதல் நடத்த துவங்கியது.வேறு வழியின்றி நாமும் போராளி குழுக்களுக்கு ஆயுத உதவி, பண உதவி எல்லாம் செய்து அரசை எதிர்த்து போரிட்டாவது ஈழ தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்வை பெற்று தரவேண்டும் என முனைந்தோம். EPRLF, TELO போன்ற போராளி குழுக்களுடன் புதிதாக தோன்றிய LTTE (புலிகள் அமைப்பு) அமைப்பையும் சமமாக பாவித்தே எல்லா உதவிகளும் செய்யப்பட்டது. ஆனால் காலப்போக்கில், மக்களுக்கான போராட்டம் என்பது மெல்ல திசை மாறத்துவங்கியது.

புலிகள் அமைப்பு, தங்கள் இயக்கத்தை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடத்தொடங்கி, மக்களுக்கான போராட்டத்தை, தமிழர்களின் பிரதிநிதித்துவத்திற்கான போராட்டமாக மாற்றினர். இதன் காரணமாக, பிற குழுக்கள் அனைத்தையும் அழித்தொழித்து, தாங்கள் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதி என நிலைநாட்ட முயன்றதன் காரணமாக, போராளிக்குழுக்களுக்கிடையே சகோதர சண்டைகள் நடைபெற துவங்கியது.

1983ல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள், மதுரை தமிழ் மாநாட்டை காரணம் காட்டி அனைத்து போராளிகுழுக்களையும் மதுரைக்கு வரவழைத்து பேச்சு நடத்தினார். தமிழகம் போராளிகுழுக்களுக்கு உதவி செய்வது ஈழ தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தானே தவிர தலைமைக்காக அடித்துக்கொள்வதற்கல்ல என்பதை உணர்த்தி அனுப்பினார். அப்போது தான் டெசோ அமைப்பு முதல் முதலில் தோற்றுவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் அவர்களது மறைவு வரையும் நல்லபிள்ளையாக இருந்த புலிகள் அமைப்பு, அதற்கு பின் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் முகமாக அனைத்து குழுக்களையும் அழித்து தாங்கள் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதிகள் என்பதை நிலைநாட்டிக்கொண்டனர்.

நமக்கு வேறு வழி இல்லை.

ஈழத்தமிழர்களுக்கென்று மிச்சமிருக்கும் ஒரே அமைப்பான புலிகளை ஆதரித்தாகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாலும், அவர்களது வன்முறை பாதையை தமிழகம் எப்போதுமே ஆதரித்ததில்லை.

1959லேயே சிதம்பரம் நகரில் தனி ஈழம் தான் தமிழர்களுக்கான தீர்வு என முழங்கிய கலைஞர் தான் ஈழ விவகாரத்தில் மிக முக்கிய தமிழக பிரதிநிதி. ஈழ விவகாரத்தில் முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ் அமைப்பின் தங்கபாலு போன்றோரும், அதிமுகவின் ராசாராம் போன்றோரும் கூட கலைஞரின் ஆலோசனைப்படியே தான் தத்தம் நிலைப்பாடுகளை எடுத்து வந்தனர். அவ்வளவு ஏன், ஈழ போராட்டம் உச்சத்தில் இருந்த 80களில் அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆரே கூட, ஈழ விவகாரத்தை பொறுத்த மட்டில் கலைஞரின் ஆலோசனையை அடியொற்றியே முடிவுகள் எடுத்துவந்தார். எல்லா வகையிலும், தமிழகம் தனி ஈழத்துக்கு ஆதரவாக இருந்தபோதிலும், ஆயுத போராட்டம் வன்முறை என்பதை ஆதரித்ததில்லை.

1991ல் அவசியமேயில்லாமல் ராஜீவை கொன்றபின், ஆயுதபோராட்டத்துக்கு எதிரான மனநிலை தான் தமிழகத்தில் ஏற்பட்டது. ஈழ ஆதரவு என்பதை 1991க்கு முன், 1991க்கு பின் என தாராளமாக பிரித்துக்கொள்ளலாம்.

1991க்கு முன், எப்படியேனும் தமிழர்கள் அமைதி வாழ்வு வாழவேண்டும், அதற்காக எந்த அமைப்பு துணைநின்றாலும் அவர்களை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கவேண்டும் என்றிருந்த நிலை, 1991க்கு பின் முற்றிலுமாக மாறிவிட்டது. ஈழத்தமிழர்கள் அமைதியான வாழ்வு வாழவேண்டும், ஆனால் அது ஜனநாயக ரீதியிலாக இருக்கவேண்டும் என்கிற மனப்பான்மையே தமிழகத்தில் பரவலாக ஏற்பட்டது. இன்று வரை, தனிஈழ ஆதரவு, புலிகள் ஆதரவு போன்ற நிலைப்பாட்டை எடுத்த கட்சிகளை தமிழக மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து வருவதை, தொடர்ந்து தமிழக அரசியலை கவனித்து வருவோர் நன்கு அறிவார்கள். (இணையதளத்தில் சில நூறு பேர்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடு என்று, நல்லவேளையாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை) 

மதிமுக, வி.சி, சி.பி.அம், பா.ம.க போன்ற கட்சிகள் வெற்றிக்கூட்டணியில் இருந்த காலங்களிலும் கூட தோல்வியை தழுவியதற்கு இதுபோன்ற ஈழ ஆதரவு தான் காரணம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கக்கூடும். பின்னர் படிப்படியாக முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் புலி ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஜனநாயக முறையில் தமிழர்கள் சம உரிமை பெற்று அமைதி வாழ்வு வாழவேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள்.

ஈழத்தோடும், புலிகளோடும், எந்த தொடர்பும் இல்லாத, ஈழ விவகாரம் குறித்து ஆழ்ந்த தெளிந்த விஷயஞானமற்ற சிறு சிறு இயக்கங்கள் மட்டுமே, பரபரப்புக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும் ஈழ விவகாரத்தை கையிலெடுத்து மக்களின் உணர்வுகளின் பலவீனத்தை நம்பி அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களை விட்டுவிட்டு நாம் விஷயத்துக்கு வருவோம்.

2009 இறுதிகட்ட போருக்கு பிந்தய இப்போதைய சூழலில் இருந்து தான் நான் இப்போது இந்த டெசோ மாநாட்டை பார்க்க விரும்புகிறேன்.

ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்து, உலக நாடுகளின் கண்காணிப்புக்குள் இலங்கை இப்போது இருந்து வருகிறது. இந்தியா முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கையை கொண்டுவரும் ஒரு பெரு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதில் நல்ல முன்னேற்றமும் தெரியத்தொடங்கி இருக்கிறது. மறுவாழ்வு பணிகளுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகளும் மக்களுக்கான வளர்ச்சி பணிகள், சாலை மேம்பாடு, கல்வி, தொழில் போன்ற துறைகளில் மேம்படுத்துதலை செய்து வருகின்றன.

ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் சொன்னபடியான அதிகார பரவல், ஜனநாயக முறையிலான ஆட்சிமுறை ஆகியவை செயல்படுத்தப்படுவதற்கான சூழல் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. 

ஏற்கனவே 2000ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஜனநாயகமுறையில் ஒரு தேர்தல் நடைபெற்று வரதராஜபெருமாள் அங்கே சில காலம் முதல்வராக இருந்து ஒரு அமைதியான ஜனநாயக ஆட்சி நடத்தியதும், அந்த தேர்தலில் புலிகள் அமைப்பு ஆதரித்த இயக்கம் தோல்வி கண்டதும், பின்னர் புலிகள் அமைப்பு அந்த ஆட்சியையே தகர்த்து எறிந்து வரதராஜ பெருமாளை ஓடவிட்டு, மீண்டும் மொத்த தமிழர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் தனி பெரும் கதை.

இப்போது அப்படியான அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையில், சர்வதேச கண்காணிப்பு தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் மிக விரைவான, நல்லவிதமான முன்னேற்றங்களுக்கு வாய்ப்பு இருப்பதை அனைவரும் உணரக்கூடும்.

இப்படியான சூழலில் தான் கூடுகிறது டெசோ மாநாடு!

இதன் நோக்கம் மிக தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஐ.நா அமைப்பின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிற கோரிக்கை, தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றி ஈழ தமிழர்களே சுயமாக முடிவெடுத்துக்கொள்ளவேண்டும் என்பதன் மறைபொருளாக நான் உணர்கிறேன். இப்போது கிடைத்திருக்கும் சூழலை, தமிழர்களுக்கு ஆக்கப்பூர்வமாக எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதை பற்றிய ஆலோசனைகளை, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பிரதிநிதிகளின் கருத்துக்கள் மூலம் அறிந்து, அதன் பேரில் உரிய நடவடிக்கைகளை பின்னர் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

பரபரப்புக்காகவும், குறுகிய பிரபல்யத்துக்காகவும் பல்வேறு சிறு இயக்கங்களும், சில பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்யும் பரப்புரைகளையும் பசப்புரைகளையும் புறக்கணித்துவிட்டு பார்த்தால், இப்போதைய இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவசியமானதாகவும் தோன்றக்கூடும்!

இனிமேல, ஈழ தமிழர்கள் ஈழத்தில் எப்படி வாழவேண்டும், அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும், அதிகார பரவல், சம உரிமை, சுய ஆட்சி முறை, அதற்கெல்லாம் என்னென்ன சட்ட திருத்தங்கள் வேண்டும், அல்லது தனியான ஈழம் தான் தேவையா அப்படியென்றால் அதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டும், ஐநா பொது வாக்கெடுப்புக்கு என்ன முயற்சி செய்யவேண்டும் என்பன போன்ற மிக முக்கியமான விஷயங்களை எல்லாம் விரிவாக ஆலோசிக்கவே இந்த மாநாடு என தெரிகிறது!

தனி ஈழம் அமைக்கவேண்டும் என ஏன் தீர்மானம் நிறைவேற்றப்படாது என்பதற்கான விளக்கமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. 

பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்காமல், அவர்களது ஆலோசனையை அறியாமல், நாமெ ஒரு தீர்மானத்தை மாநாட்டுக்கு முன்பே அறிவித்து அதை நோக்கி மாநாட்டை கொண்டு செல்வதென்பது ஜனநாயகமாக இருக்காது. எனவே தீர்மானங்கள் என்னென்ன என்பதை மாநாட்டில் விவாதிக்கப்படுவதை வைத்து தான் முடிவு செய்யப்படும் என்கிற விளக்கம் சரியாந்து என்றே கருதுகிறேன். மேலும்,சமீபத்தில் பாலிமர் சேனலில் சுப.வீரபாண்டியன் அவர்கள் எடுத்துக்காட்டியதை போல, இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்ற நிலையில், அவர்களை வைத்துக்கொண்டு, தனி ஈழ தீர்மானம் நிறைவேற்றி, அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்திக்கொள்ளவும் கூடாது என்கிற நிலைப்பாட்டையும் நாம் கவனிக்கவேண்டும்  
நாமே ஒரு முடிவு எடுத்து அதை தான் ஈழ தமிழர்களும் கடைபிடித்து ஆகவேண்டும் என இங்கே உள்ள சில சிறு இயக்கங்கள் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கும் வேளையில், ஈழ விவகாரத்தில் முழுமையான ஈடுபாடும், ஆர்வமும், ஈழ தமிழர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்தான சிந்தனையும் கொண்டதாக இந்த மாநாட்டு நோக்கம் எனக்கு தெரிகிறது!
பார்ப்போம்!

மாநாட்டில் என்னென்ன விவாதங்கள் நடக்கின்றன, என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று. அதுவரை அவசரப்படாமல் இருக்கத்தான் வேண்டும் நாம்!


1 comment:

  1. கலைஞர் தன் சுய நலத்துக்காகவே இந்த மாநாட்டை கூட்டுகிறார் என எடுத்துக்கொண்டாலும் இந்த மாநாட்டைக் கண்டு இலங்கை அரசுப்பிரதிநிதிகள் பயம் கொள்வதே இந்த மாநாட்டுக்கான வெற்றி.

    ReplyDelete

Printfriendly