Wednesday, July 18, 2012

தமிழக ஊடகங்கள்

டகங்கள் தான் ஒரு நாட்டின் தலையெழுத்தை பல முறை மாற்றிப்போட்டிருக்கிறது. பத்திரிக்கை தர்மம் என்பது நேர்மையான விமரிசனங்கள், குறைகளை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்கும் திறன், செய்திகளை செய்திகளாகவே தருவது என்பனவாக தான் பல காலம் இருந்தது.


டி.ஆர்.பி, சர்குலேஷன், நம்பர் 1 போன்ற காரணிகள் எப்படியாவது பரபரப்பான செய்திகளை கொடுத்து முன்னணிக்கு தங்கள் நிறுவனத்தை கொண்டு வந்துவிடவேண்டும் என்கிற வெறிக்கு அஸ்திவாரமிட்டது. எந்த ஒரு செய்தியையும் முதலில் தருவது தான் பிரபலமாவதற்கான முறை என்றிருந்தது மாறி, இப்போது செய்திகளை உருவாக்குவது, செய்திகளை திரிபாக்குவது போன்ற முறைகளால் முன்னணியை நோக்கி செல்ல துவங்கி இருக்கின்றன பத்திரிக்கைகள். 

ஊடகம் என்பது பத்திரிக்கைகள், இணைய செய்தி தளங்கள், சமூக வலை தளங்கள், தொலைகாட்சி செய்திகள் என பலவும் அடங்கியதால் நாம் பொதுவாக ஊடகம் என்றே இந்த பதிவில் இனி சொல்வோமாக!

இந்திய அளவில் அரசியலை தீர்மானித்த ஊடகங்கள் குறித்த பல விஷயங்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். ஆந்திராவில் ஈநாடும், கேரளத்தில் மாத்ருபூமியும், தமிழகத்தில் தினத்தந்தியும் ஒரு காலகட்டத்தில் அரசையே தீர்மானிக்கின்ற சக்திகளாக இயங்கின.

இன்றைய காலகட்டம் மிக விசித்திரமாக இருக்கிறது. நான் தமிழகம் சார்ந்த ஊடகங்களை மட்டுமே இங்கே விவாதிக்க விரும்புகிறேன் என்பதால் பிற தேசிய ஊடக நிகழ்வுகளை விட்டுவிடுவோம்!

தமிழகத்தில் அரசியல் சாராத நேர்மையான செய்திகளை செய்தியாக தருகிற பத்திரிகைகள் மிக மிக சொற்பமானவை. மற்றபடி, பெரும்பாலான ஊடகங்கள் ஏதேனும் ஒரு சார்பு நிலை கொண்டவையாக இருப்பதால், அது தொடர்பாகவே செய்திகளை தருகின்றன.

80களில் ஒரு கேலிசித்திரம் வெளியிட்டதற்காக அப்போதைய அதிமுக அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட ஆனந்த விகடன், ஜெ தலைமையிலான அதிமுக அரசால் கடுமையாக நடத்தப்பட்ட நக்கீரன், ஜூனியர் விகடன், ஹிந்து போன்ற பத்திரிக்கைகள் ஆகியன இப்போதும் சுதந்திரமான கருத்துக்களை வெளியிடமுடியாமல் தான் இருக்கிறது.
ஹிந்து பத்திரிக்கை மிக தீர்க்கமான கட்டுரைகளை வெளியிட்டு நேர்மைக்கு பெயரெடுத்த பத்திரிக்கை. இந்தியாவின் மனசாட்சி என காந்தியடிகளாலேயே புகழப்பட்ட பத்திரிக்கை. ஆனால், ஒரு கட்டுரைக்காக, ஜெ, ஹிந்தி ஆசிரியை குழுமத்தின் மீதே வழக்கு பதிவு செய்து, வீடுபுகுந்து மிரட்டி, துவம்சம் செய்து, ஐந்து ஆசிரியர்களையும் பெங்களூரு வரை துரத்தி சென்று ஒரு தீவிரவாதியை கைது செய்வதை போல கைது செய்து கொண்டுவந்ததற்கு பின் மொத்தமாக ஆடி தான் போய்விட்டது.

அதே போலவே, பத்திரிக்கையாளர்கள் ஊர்வலத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அரச பயங்கரவாதத்தை ஏவி மொத்தமாக போட்டு தாக்கியதில், ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்துக்கும் ஜெ. என்றாலே சிம்மசொப்பனம் என்றாகிவிட்டது.

இவையெல்லாம் ஒரு புறம்.

இன்னொரு மிக முக்கியமான பிரச்சனை, செய்தியாளர்கள். பாரம்பரியமான பத்திரிகையான விகடன் குழுமத்தில் கூட, இப்போது முறையாக தமிழக வரலாறு தெரிந்திராத, சுய சிந்தனை அற்றுப்போன, முன்முடிவுகளுடனான இளம் செய்தியாளர்களின் கட்டுரைகளே வெளிவர துவங்கி இருக்கின்றன. செய்திகளும் கட்டுரைகளும் சுவாரஸ்யமாகவும், சுவையாகவும், பரபரப்பாகவும் இருக்கும் அளவுக்கு உணமையாக இருப்பதில்லை என்பதில் என்னை போன்ற பாரம்பரிய விகடன் வாசகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தருகின்ற ஒன்று. நான் விகடன் என குறிப்பிட்டு சொல்ல காரணம், விகடன் தான் மிக நேர்மையான பத்திரிகையாகவும், மிகுந்த அரசியல் ஞானமுள்ள செய்தியாளர்களைகொண்டதாகவும் இருந்து வந்தது என்பதால். விகடனின் நிலையே இப்படியென்றால், மற்ற பத்திரிகைகளை பற்றி நீங்களே யோசித்துக்கொள்ளலாம்.

செய்தி திரிபு, அதனால் ஏற்படுத்தப்படும் பரபரப்பு என்பது தமிழகத்தின் சமீபத்திய பத்திரிக்கை வியாதியாகிவிட்டது. வியாபார நோக்கில் வெளியிடப்படும் இத்தகைய செய்திகள் பல அரசியல் மாற்றங்களையே ஏற்படுத்தி இருக்கின்றன. செய்தியாளர்கள் கேட்கும் பல கேள்விகள் உள்நோக்கத்துடனும், குதர்க்கமாகவும் கேட்கப்பட்டு வருகின்றனவேயன்றி, முன்பை போல, பேட்டியாளர்களின் பதில்களை கவனித்து அதன் அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான கேள்விகளாக அவை இருப்பதில்லை. 

இதற்கு மிக ச்மீபத்திய உதாரணம், இரு தினங்களுக்கு முன்பு கலைஞர் அவர்களை டெசோ விஷயமாக பேட்டிகண்ட பத்திரிகையாளர்களின் குதர்க்க திரிபுகள். அந்த பேட்டியை முழுமையாக படித்தவர்களுக்கு தெரியும், தலைப்பிற்கும் பேட்டிக்கும் சம்மந்தமில்லை என்பது. மாநாட்டில் விவாதத்திற்கு பின்பு தான், கலந்துகொள்ளும் பிரதிநிதிகளின் கருத்துக்களையெல்லாம் கேட்டு தான் மாநாட்டு தீர்மானம் இறுதியாக்கப்படும் என  தெளிவாக சொல்லியிருப்பதை, முன்முடிவுகளின் அடிப்படையில், இப்போதைக்கு தீர்மானம் இல்லை, முக பல்டி என பரபரப்பு தலைப்பு கொடுத்து செய்தியாக்கியது ஒரு மிக சிறு உதாரணம். இது போல பலபல தலைவர்களின் பல பல பேட்டிகள் தவறாக செய்தியாக்கி மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டு, பேட்டியின் உண்மையான சாரம்சத்தை மறைத்து, பத்திரிகையின் / பேட்டியெடுப்பவரின் தனிப்பட்ட புரிந்துகொள்ளலும், முன்முடிவுகளுமே மக்களின் கருத்தாக திணிக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்களால் நொந்து தான், தமிழக ஊடஙகங்களுக்கு பேட்டியே கொடுக்கமாட்டேன் என ஜெ. ஒரு முறை தெளிவாக அறிவித்தார். இப்போதும் தமிழக ஊடகங்களிடமிருந்து அவர் விலகியே இருக்க காரணம், குறுகிய மனப்பான்மையுடன், செய்தியை தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் திரித்து வெளியிடும் தமிழக ஊடகங்களின் பழக்கம் தான்!

செய்தியின் உள்ளீடுகளுக்கு சற்றும் சம்மந்தமற்ற தலைப்புக்களை பரபரப்புக்காக வைத்து வாசகனை முட்டாளாக்கும் புதிய யுக்தி, கடந்த 10 ஆண்டுகளாக தமிழக பத்திரிக்கைகளில் காணலாம். பெரும்பாலான வாசகர்கள், தலைப்பை மட்டுமே படிப்பவர்களாக இருப்பதால், தலைப்பை வைத்தே பல விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதால், அப்படியான பரபரப்பு தலைப்புகள் வைக்கப்படுகின்றன.


யூகங்கள், கிசுகிசுக்கள் போன்றவைகளால் பல அரசியல் மாற்றங்களை கொண்டுவந்த பெருமையும் தமிழக ஊடகங்களுக்கு உண்டு. ஊடகங்களின் தவறான திரிபுகளால் தான் மதிமுக என்கிற ஒரு இயக்கமே தோன்றியது என்பது பலரும் அறிந்த ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு. மத்திய அரசிடமிருந்து வந்த செய்தியை, ஜெ. முறைப்படி கடிதம் மூலம் கருணாநிதிக்கு அனுப்ப, அதை பற்றி கேள்வி கேட்ட  பத்திரிகையாளர்களிடம் அந்த கடித விவரத்தை விளக்கின கருணாநிதியின் பேட்டியை, தன்னை கொலை செய்ய வைகோ முயற்சித்தார் என கருணாநிதி சொல்லியதாக செய்தி வெளியிட்டு தமிழக அரசியலின் போக்கையே மாற்றிய பெருமை ஊடகங்களை தான் சாரும். (பின்னர் உண்மை தெரிந்து வைகோ கலைஞருடன் நட்பு பாராட்டியது தனி கதை!)

இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆளும்கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் சகஜமாக பழகிவரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அது சாத்தியப்படாமல் போனதில், பரபரப்பு வேண்டி தவம் கிடக்கும் தமிழக ஊடகங்களும் ஒரு காரணி என்பதை யாரும் மறுக்கவியலாது. சாதாரணமான சந்திப்புக்களுக்கும் கூட, உள்நோக்கம் கற்பிப்பதும், யூகமான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு பத்திரிக்கை விற்பனையை அதிகப்படுத்துவதும், பின்னர் பெட்டி செய்தியில் மன்னிப்பு கேட்பதும் தமிழக ஊடகங்களின் வாடிக்கையாகி போனது.

பேட்டியெடுப்பவரின் சார்புநிலை, முன்முடிவுகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் போன்றவையே அந்த பேட்டி செய்தியாகும்போது வெளிப்படுகின்றன.. அந்த செய்திகளை படிக்கும் லட்சக்கணக்கானவர்கள், பேட்டியெடுப்பவரின் மனநிலை அடிப்படையிலேயே செய்திகளை புரிந்துகொள்ளுகிறார்களே தவிர, பேட்டி கொடுத்தவரின் கருத்தை புரிந்துகொள்ள முடிவதில்லை. 

தமிழக ஊடகங்கள், எப்போது தங்கள் சொந்த கருத்துக்களை மக்கள் மீது திணிக்காமல், செய்தியை செய்தியாக தர பழகிக்கொள்ளுமோ தெரியவில்லை! அதற்கு முன்பாக, சமூக, அரசியல் பற்றி தெளிவான சிந்தனையுள்ள, சுயமாக சிந்திக்கும் திறனுடைய, முன்முடிவுகளற்ற, சார்புநிலையற்ற செய்தியாளர்களை பத்திரிகைகள் தங்களுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்! நடக்கிற காரியமா அது?

1 comment:

  1. நல்ல கட்டுரை தோழர். பலர் பேச தயங்கும் விஷயத்தை நேர்மையாக பேசியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

Printfriendly