Monday, July 30, 2012

இனியேனும் திருந்துமா ரயில்வே?


ன்று காலை எழுந்ததுமே ஒரு துயரசெய்தி தான் வந்து அறைந்தது மனதை! 

புதுடெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்11 கோச்சில் மின்கசிவு காரணமாக(!) ஏற்பட்ட தீவிபத்தில் உடல்கருகி 50+ பேர் பலியான செய்தி.

சமீப காலங்களில் ரயில் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றதை காண்கிறோம். ஆனால் இந்த விபத்து எனக்கு வித்தியாசமாக பட்டது! 
ரயிலில் 110V டி.சி மின்சாரம் தான் இருக்கும். அது கசிந்து ஸ்பார்க் ஆகி தீயாக மாறி, எரிந்து மொத்த கோச்சையும் நாசம் செய்திருக்கிறது என்பதை என்னால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் குறிப்பாக ஒரே ஒரு பெட்டி மட்டுமே எரிந்திருக்கிறது. தீ பரவவில்லை. இதே கோச்சில் இருந்த சில பயணிகள் தீ பிடித்த ஆரம்ப கணங்களிலேயே அடுத்தடுத்த பெட்டிகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து உயிர் பிழைத்திருக்கிறார்கள்!



கோச்சின் கதவுகள் திறக்கமுடியாமல் போனதிலும், அச்சத்திலும், நெருக்கடியிலும் சிக்கியே பல பயணிகள் தீக்கிரையாகி இருக்கின்றனர். அதிலும் பெரும்பாலும் அப்பர் பர்த்தில் படுத்தவர்களே எரிந்திருக்கின்றனர். இந்த அப்பர் பர்த் சிஸ்டமே கொடுமையானது. யார் அதை அனுமதித்தார்கள் எனப்து இன்னமும் புரியவில்லை. சுத்தமாக காற்றுவசதியோ, நேராக உட்காரும் வசதியோ கூட இல்லாத ஒரு நெருக்கடியான பெர்த் அது! முதலில் அதை தடை செய்யவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கருத்து! அதே போல, சைடு அப்பர் பெர்த் பகுதியில் வெண்டிலேட்டர் போல ஒரு ஜன்னல் வைக்கவேண்டும் என்பதும் எனது கோரிக்கைகளுள் ஒன்று.



விபத்து நடந்து ஒரு மணிநேரத்துக்குள்ளேயே தீயணைப்பு வண்டிகள் வந்துவிட்டது மகிழ்ச்சியான செய்தி. மீட்பு நடவடிக்கைகளும், தகவல் பரிமாற்றங்களும் சிறப்பாக இருந்திருக்கின்றன. ஆனால் பாதுகாப்பு? அது தான் பயமாக இருக்கிறது.

முற்காலங்களில் மூன்றாம் வகுப்பு பயணிகளை எப்படி ரயில்வே நடத்தியதோ, அதேபோலவே தான் இப்போது இரண்டாம் வகுப்பு பயணிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறது என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமே உள்ளது! மூன்றாம் வகுப்பை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்றாலும் கூட அங்கே கடைபிடிக்கப்பட்ட அதே அணுகுமுறையை தான் இப்போது இரண்டாம் வகுப்பு பயணிகளிடம் காட்டி கொண்டிருக்கிறோம்! 

சுத்தமின்மை, குடிநீர் வசதியின்மை, எலி, கரப்பான்பூச்சி போன சுகாதாரமற்ற சூழலில் படுக்கைகள்/இருக்கைகள், பாதுகாப்பில்லாத பயணம், எந்த ரயில் நிலையத்திலும் யார் வேண்டுமானாலும் ஏறிவரும் வசதியால் உடமைகளுக்கு பாதுகாப்பின்மை, நிம்மதியின்மை, உதவியாளரோ, நடத்துனரோ இல்லாத குறை என கிட்டத்தட்ட இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏதோ 'தண்ணிதெளித்துவிட்ட' நபர்களாகவே ரயில்வே நடத்தி வருகிறது. தென்னக ரயில்வே கொஞ்சம் பரவாயில்லை! வட மாநில ரயில்பெட்டிகளில் காலை வைப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.

இத்தனை விபத்துக்கள் நடந்தும் ரயில்வே பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. உபரியாக பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கும் ரயில்வே அதை உருப்படியாக செலவு செய்யலாமெ? அதை விட கொடுமை, ஒவ்வொரு ரயில் பயணச்சீட்டுக்கும் ரூ.20/- பாதுகாப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதாவது பணம் கொடுத்தும் நமக்கு பாதுகாப்பில்லை! இந்தியா சகிப்புதன்மையுடைய நாடு என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது!

சரி

இனி ரயில்வே என்ன செய்வதாக உத்தேசம்? ரயில் பயணங்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளும் மனிதர்களே என்கிற எண்ணம் எப்போது ரயில்வேக்கு வரும்?

ஆயிரக்கணக்கான பணியிடங்களை குரூப் டியில் உருவாக்கி, ஒவ்வொரு ரயிலையு சுத்தப்படுத்தி, பாதுக்காத்து, தரமான பராமரிப்பு செய்வதற்கு ரயில்வேயால முடியாததல்ல! ஆனால் செய்யவேண்டுமே? செய்வார்களா?
 

No comments:

Post a Comment

Printfriendly