Sunday, July 8, 2012

சி.பி.ஐ படும் பாடு!



நேத்தைக்கு ஒரு அதிரடியான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இருந்து வெளியாகி இருக்கு.

உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் செல்வி.மாயாவதி மீது சி.பி.ஐ தொடர்ந்திருக்கிற சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்திருக்கு உச்சநீதிமன்றம். தாஜ் வணிக வளாகத்தில் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் துணை வழக்கா சி.பி.ஐ, சொத்து குவிப்பு வழைக்கை பதிவு செஞ்சு விசாரிச்சிட்டு வந்தது. அதாவது 2003 ம் ஆண்டு மாயாவதியின் சொத்து மதிப்பு ரூ. 1 கோடி தான். 2007 ம் ஆண்டு இது ரூ.50 கோடியா அதிகரிச்சிருக்கு. இந்த சொத்து விவரங்களை வருமானவரி தாக்கல் செய்யும்போது தெளிவா காமிச்சிருக்காங்க. அதுக்கான வரியும் கட்டி இருக்காங்க. ஆனா எப்படி இவ்வளவு சொத்துவந்ததுன்ற சி.பி.ஐயின் கேள்விக்கு, அதெல்லாம் கட்சி தொண்டர்கள் கொடுத்த அன்பளிப்புன்னு மாயாவதி சொன்னாங்க. அதை சி.பி.ஐ ஏத்துக்கலை. முதல்வரா இருக்கும்போது இந்த அளவுக்கு சொத்து சேர்த்திருப்பது சட்டவிரோதமானதுன்னு சொல்லி, எப்படி அவ்வளவு சொத்து சேர்ந்ததுன்னு ஒரு வழக்கை பதிவு செஞ்சு விசாரிச்சிட்டு வந்தது சி.பி.ஐ. அந்த வழக்கை தான் சட்டவிரோதம்னு சொல்லி உச்சநீதிமன்றம் இப்போ ரத்து பண்ணியிருக்கு. அதுக்கு சொல்லப்பட்ட காரணம் தான் விசித்திரமானது.

தாஜ் வணிக வளாக வழக்கு பத்தி தான் நாங்க விசாரிக்க சொன்னோமே தவிர மாயாவதி மீது வழக்கு பதிவு செஞ்சு விசாரிக்க சொல்லலை. எங்க தீர்ப்பை சி.பி.ஐ தப்பா புரிஞ்சுகிட்டு வழக்கை பதிவு செஞ்சிருக்காங்க. சி.பி.ஐ தன் அதிகார வரம்பை மீறி செயல்படுது. இது சட்ட விரோதம். அதனால் நாங்க அந்த சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யுறோம்னு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லி இருக்காங்க.

அரசியல் சாசனப்படி, சி.பி.ஐ ஒரு தனியான சுயேட்சையான அமைப்பு. ஆனால் சி.பி.ஐயால் என்ன காரணங்களாலோ அப்படி சுயேட்சையா செயல்பட முடியறதில்லை. பல பல சந்தர்ப்பங்களில் ஆளும்கட்சியின் பிடியிலோ, அரசின் பிடியிலோ தான் சி.பி.ஐ செயல்பட்டுட்டு வருதுன்னு பரவலா ஒரு குற்றச்சாட்டு இருக்கு. சி.பி.ஐ உண்மையிலேயே எப்போ சுதந்திரமா செயல்படுதுன்னா, எந்த வித அரசியல் / அரசு சார்பான தொடர்பும் இல்லாத பொதுவான கொலை வழக்குகள் மாதிரியான விஷயங்களில் தான் சி.பி.ஐ தன்னிச்சையா செயல்பட முடியுது. அம்மாதிரியான வழக்குகளில் தான் சி.பி.ஐயின் முழுமையான திறமையும் வெளிப்படுது.

இதில்லாம, எந்த ஒரு வழக்கிலாவது அரசியல் பின்னணி, அரசு நிர்வாக தொடர்பு, அரசியல்வாதியின் தலையீடுன்னு இருந்தா அதுமாதிரியான வழக்குகளில் சி.பி.ஐ சுதந்திரமா செயல்பட முடியறதில்லை. யாராவது ஒருத்தர் சி.பி.ஐயை கட்டுப்பாட்டுக்குள் வெச்சிட்டு இருக்கவே முயற்சி செய்யுறாங்க. அப்படியான சூழல்களிலெல்லாம், உச்சநீதிமன்றம் தான் சி.பி.ஐக்கு பக்கபலமா இருந்து ஓரளவுக்கு சி.பி.ஐயின் சுதந்திரத்தை காப்பாத்திட்டு வந்திருக்கு. ஆனா இந்த முறை, இந்த தீர்ப்பை படிச்சபோது, உச்சநீதிமன்றமும் சி.பி.ஐயை கட்டுப்படுத்த முயற்சி செய்யுதோன்னு ஒரு சந்தேகம் வர்றதை தவிர்க்கமுடியலை எனக்கு.

எந்த ஒரு வழக்கிலும் கட்டுப்பாடுகள் இல்லாம, தனக்கு சரின்னு பட்டால் வழக்கு பதிவு செஞ்சு விசாரிக்கிற உரிமையும் கடமையும் சி.பி.ஐக்கு இருக்கு. அந்த வகையில் தான் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தாஜ் வணிகவளாக வழக்கை விசாரிச்சிட்டு வந்தபோதும், கூடுதல் விவரங்கள், ஐயப்பாடுகள் அடிப்படையில் மாயாவதி மீதும் சி.பி.ஐ வழக்கை பதிவு செஞ்சு விசாரிச்சிட்டு வந்தது. இந்த வழக்கு கோர்ட்டில் தாக்கலானபோது, அந்த வழக்குக்கு அடிப்படை முகாந்திரம் இருக்கிறதா சொல்லபபட்டது. அதன் அடிப்படையில் தான் வழக்கு நடந்துட்டு இருந்தது. ஆனால், நேத்து உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு, சி.பி,ஐயின் தனி அதிகாரத்தை பறிக்கற மாதிரி இருக்குது. அதை விட அதிர்ச்சியானது, இந்த தீர்ப்பின் அடிப்படையில் மற்ற வழக்குகளில் நேர வாய்ப்பிருக்கின்ற மாற்றங்கள்.

நாங்க அனுமதி கொடுக்காம சி.பி.ஐ மாயாவதி மீது வழக்கு பதிவு செஞ்சிருக்கிறது சட்டவிரோதம்னு உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறதால வந்த அதிர்ச்சியே முழுமையா போகாம இருக்கு. இதில், அதே தீர்ப்பில் “வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் ஒப்புகை உள்ளதாலும், முறையான வரியை மாயாவதி செலுத்தி இருப்பதாலும், விஷயம் அதோடு முடிஞ்சிருச்சு. அதுக்கப்புறமும் எப்படி எந்த வகையில் வருமானம் வந்ததுன்னு எல்லாம் சி.பி.ஐ விசாரிக்கிறது சட்டவிரோதமானது”ன்னு உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கு. அப்படின்னா, எப்படி வேணும்னாலும் சம்பாதிச்சிக்கலாம், அதுக்கான வருமான வரியை மட்டும் செலுத்திட்டா போதுமான்னு ஒரு அதிர்ச்சி நமக்கெல்லாம் வரத்தானே செய்யுது?

இன்னொரு பக்கம் பார்த்தா, இதே போல வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்து சொத்து குவிப்பு வழக்கை எதிர்நோக்கி இருக்கிற பல அரசியல்வாதிகளும், வரி கட்டியிருக்கிறதை சாக்கா வெச்சு விடுவிக்கப்பட்டிருவாங்களான்னு ஒரு சந்தேகமும் வருது! அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறதா இருந்தா, முறையா வருமான வரி கட்டியும், சொத்து குவிப்பு வழக்கை எதிர்நோக்கி இருக்கிற நம்ம தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும், திமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் அது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக தான் இருக்கும்.

எனக்கு இப்போ குழப்பத்தை தந்திட்டு இருக்கிறதெல்லாம் இந்த கேள்விகள் தான்:

1. சி.பி.ஐ தன்னிச்சையான அமைப்பு இல்லையா? அவர்களால் சுதந்திரமாக (அடிப்படை முகாந்திரம் இருக்கும்பட்சத்தில்) வழக்குகளை பதிய முடியாதா?

2. வருமானத்துக்கு பொருந்தாதவகையில் அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் (அரசு பதவியின் மூலம் ஊழல் செய்து சம்பாதித்து இருந்தால்) அதற்கான வரியை மட்டும் (30%) கட்டினாலே அது சட்டப்பூர்வமான சம்பாத்தியம் ஆகிவிடுமா?

உங்களில் யாரிடமாவது இந்த இரண்டு கேள்விக்கும் பதில் இருக்குதுங்களா?

1 comment:

  1. 1. சி.பி.ஐ தன்னிச்சையான அமைப்பு இல்லையா? அவர்களால் சுதந்திரமாக (அடிப்படை முகாந்திரம் இருக்கும்பட்சத்தில்) வழக்குகளை பதிய முடியாதா.
    முடியாது.உள்துறை அமைச்சகத்தினை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியாது என்றே தொன்றுகிறது.
    2.வருமானத்துக்கு பொருந்தாதவகையில் அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் (அரசு பதவியின் மூலம் ஊழல் செய்து சம்பாதித்து இருந்தால்) அதற்கான வரியை மட்டும் (30%) கட்டினாலே அது சட்டப்பூர்வமான சம்பாத்தியம் ஆகிவிடுமா?
    இல்லை. குடியரசு தலைவர் தேர்தலுக்கான கணிசமான ஓட்டுக்கள் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும் சட்டபூர்வமான சம்பாத்தியமாக மாற்றப்படும்.

    ReplyDelete

Printfriendly