Thursday, December 27, 2012

ஜெ.வெளிநடப்பு சரியா?


ன்றைய முக்கிய செய்தியே டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது தான். இது சரி என ஒரு சாராரும், தவறான முன்னுதாரணம் என மற்றும் பலர் சொல்லி இருக்கிறார்கள். என்ன தான் நடந்தது?

இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி குழும கூட்டம் நடைபெற்றது.

இது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடப்பது தான்.

இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டில் மாநிலங்கள் எட்டிய வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள், அடுத்த ஐந்தாண்டுக்கான திட்டங்கள், மாநிலங்களின் பிரச்சனைகள், தேவைகள் எல்லாம் விவாதித்து, அதற்குரிய திட்ட ஒதுக்கீடுகளை வழங்குவார்கள்.

அப்படியான கூட்டத்தில் நமது தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தனது உரையை தொடங்கிய பத்தாவது நிமிடம், நேரமாகிவிட்டதை குறிக்கும் மணி அடிக்கப்பட்டது. இதில் கவனம் சிதறிய ஜெயலலிதா, தனது உரையை முழுமையாக படிக்க போதுமான நேரம் வழங்கப்படாததையும், தனது மாநில பிரச்சனைகள்/தேவைகள் குறித்து பேசுவதற்கு வெறும் பத்து நிமிடங்கள் தான் ஒதுக்கீடு என்பதை கண்டித்தும், ஒரு மாநில முதல்வர் பேசிக்கொண்டிருக்கையில் மணி அடித்து அமர சொல்லிய அவமானத்தை கண்டிக்கும் வகையிலும் அந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.

என்னை பொறுத்தவரையில் இது மிக மிக சரியான நடவடிக்கை தான்! தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநில முதல்வர்களுக்கும் இதே நிலை தான், எனினும் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து கருத்து சொன்ன திமுக தலைவர் கலைஞர் அவர்களும் கூட, “இப்படி மணி அடிப்பது வழக்கம் தான். ஆனால் அதற்காக பேச்சை நிறுத்தவேண்டியதில்லை. கூடுதலாக இன்னும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் பேசலாம். இந்த நடைமுறை காலம் காலமாக இருந்து வருவது தான். எனினும் தமிழக முதல்வரை மத்திய அரசு அவமானப்படுத்தியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது” என பட்டும் படாமலும் கருத்து சொல்லியிருக்கிறார்.

மாநில உரிமைகளுக்காக இந்தியாவில் எழுந்த முதல் குரலுக்கு சொந்தக்காரர் கலைஞர். மாநில முதல்வர்களுக்கான மரியாதையை அதிகாரமாக கேட்டு பெற்றவர் அவர். அந்த பெருமை இந்திய வரலாற்றில் எப்போதுமே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால், இன்றைய நிகழ்வில் அவர் சொல்லியிருக்கும் கருத்து ரசிக்கத்தக்கது அல்ல.

அடுத்த ஐந்தாண்டு திட்டங்களுக்கான தேவைகள் பற்றி விவாதிப்பதற்கான தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் ஒரு மாநிலத்துக்கு வெறும் பத்து நிமிடம் தான் ஒதுக்கப்படும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முழு உரையையும் அச்சிட்டு கொடுத்து விட்டதால் பேச தேவையில்லை என சொல்வோர்கள், அந்த உரையை அனுப்பி வைத்திருந்தாலே போதுமே, எதற்காக முதல்வர் நேரடியாக கலந்துகொள்ளவேண்டும்? என்கிற கேள்விக்கு விடை சொல்வதில்லை.

ஒரு மாநிலத்தின் தேவைகளை விரிவாக உரையாக அச்சிட்டு கொடுத்தாலும் கூட, அதன் முக்கிய சாரம்சங்களை சுருக்கமாக எடுத்து உரைப்பது தான் வழக்கம். அப்படியான உரைக்கு இதுவரையும் முப்பது நிமிடங்கள் வரை அனுமதி இருந்தது. அதன் அடிப்படையிலேயே தமிழக முதல்வர் தனது உரையை தயார் செய்து இருந்தார்.

ஆனால், எந்த முன்னறிவிப்புமின்றி பத்தாவது நிமிடத்திலேயே மணி அடிக்கப்பட்டது ஆச்சரியமான அதிர்ச்சி மட்டுமல்ல, தனது உரையை முழுமையாக படிக்கவிடாமல் செய்யப்படும் நிகழ்வு என்பதை நொடியில் அவர் புரிந்துகொண்டுவிட்டார். அதனால் தான் தான் அவமானப்படுத்தப்பட்டதாக சொல்லி, கூட்டத்திலிருந்து வெளியேறி இருக்கிறார்.

என்னை பொறுத்தவரை, 30 சொச்சம் மாநிலங்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தில், ஐந்து மணிநேரம் தான் பேச அனுமதி என்பதே வஞ்சனை தான். ஒவ்வொரு மாநிலத்துக்கும் எடுத்து சொல்வதற்கான முறையான நியாயமான நேர ஒதுக்கீட்டினை மத்திய அரசு வழங்கி இருக்க வேண்டும். இதற்காக தான் எல்லா மாநில முதல்வர்களும் நேரடியாக டெல்லி சென்று இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். வெறும் பத்து நிமிடம் தான் பேச முடியும் மற்றவை அச்சிட்டு கொடுத்து விடுங்கள் என்பது சரியல்ல. ஒரு மாநில முதல்வரின் ஒரு நாள் என்பது எத்தனை முக்கியத்துவமானது என்பதை யாரும் அறியாமலில்லை. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதே, எங்கள் மாநில மக்களின் நன்மைக்காக இந்த திட்டங்களை தாருங்கள் என நேரில் விளக்கமாக எடுத்து சொல்வதற்காக தான். ஆனால், அப்படி கேட்பதற்கே வாய்ப்பு மறுக்கப்படுவது என்பது, இந்த மாநில முதல்வரை அவமானப்படுத்துவதாக அல்லாமல், அந்த மாநில மக்களின் தேவைகளை செவிகொடுத்து கேட்க தயாராக மத்திய அரசு இல்லை என்பதை காட்டுவதாகவே நான் உணர்ந்துகொள்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு 30 சொச்சம் மாநிலங்களின் திட்டங்கள் பற்றி விவாதிப்பதற்கான கூட்டம் எனில் குறைந்தது மூன்று நாட்களேனும் நடத்தப்பட்டிருக்கவேண்டும். அது தான் மாநில மக்களுக்கு செய்யப்படும் மரியாதை. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ, அவர்களின் தேவைகள் என்ன என்பதை எடுத்து சொல்வதற்காகவேனும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன்.கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தபின் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதாவின் குரல், தமிழகத்தின் குரலாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மாநில முதல்வர்களின் குரலாக காண்கிறேன். மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் பற்றி முழங்கிய கலைஞர் அவர்கள் அதை விமர்சிப்பதை ஏனோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது ஜெயலலிதாவுக்கான அவமானமாக மட்டுமல்ல. ஏழரை கோடி தமிழ்மக்களின் தேவைகளை எடுத்து சொல்ல சென்ற தூதர் அவர். அவரை அவமானப்படுத்தியதை நாம் நம் மக்களை அவமானப்படுத்தியதாகவே காண்கிறேன்.

மத்திய அரசு தனது முடிவுகளையும், ஆராய்ச்சி கட்டுரைகளையும், எதிர்கால திட்ட ஒதுக்கீட்டில் தாங்கள் எடுத்திருக்கும் முடிவுகளை மாநிலங்களுக்கு அறிவிக்கும் அறிக்கையையும் சொல்வதற்கான ஒரு கூட்டமாக மட்டுமே தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தை பயன்படுத்திக்கொள்கிறதோ என்கிற ஐயம் எனக்கு நெடு நாட்களாகவே உண்டு!

இனி வரும் காலங்களிலேனும், மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் மரியாதையையும் தருவதற்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய வெளிநடப்பு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்!

1 comment:

  1. மிக சரியான அலசல், தங்கள் கருத்திற்கு உடன்படுகிறேன்
    ஆயினும் அகர வரிசைப்படி தமிழ்நாடு கடைசியில் தான் பேச வேண்டும். தங்கள் மாநிலம் கடைசியில் தான் பேச முடிகிறது என்றே மேற்கு வங்காளம் (W) பஸ்ஜிம் கங்கா என்று மாற்றியது (B)
    முதலில் தான் பேச வேண்டுமென்றும், சென்னைக்குத் திரும்ப வேண்டுமென்றும் நம்முடைய முதல் அமைச்சர் சொன்னதின் பேரில் முதலில் பேசுமாறு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
    இதையும் தாங்கள் கணக்கெடுக்க வேண்டும்.

    ReplyDelete

Printfriendly