திமுக தலைவர் கலைஞர்
அவர்கள் இன்றைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம்சம் மிக எளிமையானது.
திமுக பேச்சாளரும் நடிகையுமான திருமதி. குஷ்பூ அவர்களையும் அவரது வீட்டையும் தாக்கிய
திமுகவினரை கண்டித்து வெளியாகி இருக்கிறது அந்த அறிக்கை.
சமீபத்தில் கலைஞர்
அவர்கள் சூசகமாக தனக்கு பின் திமுக தலைமை பதவிக்கு ஸ்டாலின் தான் வரக்கூடும் என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அழகிரி, ஸ்டாலின் குரூப்புகளுக்கிடையே நீண்டகாலமாக பனிப்போர் நடந்துகொண்டு
தான் இருக்கு. அழகிரி அவர்கள் தனது எதிர்ப்பை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.
திமுகவின் முக்கிய
தலைவர்கள் அனைவருமே ஸ்டாலினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். ஸ்டாலின்
மீது பொதுவாகவே எல்லோருக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. மென்மையானவர், மனிதாபிமானம்
மிக்கவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், அடிமட்ட தொண்டன் வரை மிக எளிமையாக பழகக்கூடியவர்,
எல்லோரையும் அனுசரித்து செல்லக்கூடியவர், 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து, கட்சியின்
போராட்டங்களில் கலந்து சிறை சென்றவர்ன்னு அவரது ஆதரவு பட்டியல் மிக நீளமானது. அவர்
திமுகவின் தலைவராக ஆவதில் பெரும்பாலான கட்சியினருக்கும், மிகப்பெரும்பாலான பொதுமக்களுக்கும்
எந்த அதிருப்தியும் இல்லை என்பது தமிழகம் அறிந்த உண்மை. அதன் அடிப்படையிலே தான் கலைஞரும் தனக்குப்பின் ஸ்டாலின் தான் திமுகவின் தலைவராகவும்,
திமுகவின் மக்கள் பணிகளை முன்னெடுத்து செல்லும் தளபதியாகவும் விளங்குவார் என மறைமுகமாக
தெரிவித்திருந்தார்.
ஆனால் இதை இன்னொரு
கோணத்திலிருந்தும் நாம் பார்க்கவேண்டும்.
இன்றைக்கு தமிழகத்திலுள்ள
அரசியல் கட்சிகளிலேயே உட்கட்சி ஜனநாயகம் மிக மிக சிறப்பாக இருக்கும் ஒரு கட்சி என்றால்
அது திமுக மட்டும் தான். உட்கட்சி தேர்தல்களை ஒழுங்காக நடத்தி, எல்லோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு
முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளைக்கொண்டு இயங்கும் இயக்கம், பொதுக்குழு/செயற்குழு
போன்ற கூட்டங்களில் வெளிப்படையாக கட்சியையும் கட்சியின் முடிவுகளையும் விமர்சனம் செய்ய
அனுமதிக்கும் இயக்கம் என திமுகவின் பெருமை பலமானது. அப்படியிருக்கும் ஒரு கட்சியில்
திமுகவின் அடுத்த தலைவர் இவர் தான் என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட நியமன
முறைக்கு வருவது எனக்கு ஆரம்பத்தில் மிகுந்த அதிருப்தியாக தான் இருந்தது. தேர்தல் மூலம்
தேர்ந்தெடுக்கப்படவேண்டிய தலைவரை, நியமனம் செய்வது என்பது எனக்கு ஒப்புமையான விஷயம்
அல்ல. அதிலும், இன்றைய தேதியில் தமிழகத்துக்கு என இருக்கும் ஒரே ஆறுதல் இயக்கமான திமுகவில்
இப்படியான உட்கட்சி குழப்பங்கள் வருவது தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நன்மை தருவதாகாது.
இந்த அடிப்படையிலான
இதே கருத்தை தான் சில வாரங்களுக்கு முன்பு திருமதி. குஷ்பு அவர்களும் சொல்லியிருந்தார்.
ஸ்டாலின் தான் தலைவர் என்பதை தேர்தல் தான் முடிவு செய்யவேண்டும் என்கிற ரீதியில் அவர்
தெரிவித்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத ஸ்டாலின் ஆதரவாளர்கள் திருமதி. குஷ்பூ மீது
தாக்குதல் நடத்துவது, அவரது வீட்டை தாக்குவது, அவரது குழந்தைகளிடம் கொலைமிரட்டல் விடுவது
என இறங்கி திமிலோகப்பட்டது அனைவரும் அறிந்ததே!
இந்த சம்பவத்தை
கண்டித்து தான் கலைஞர் அவர்கள் மிக மிக தாமதமாகவும், மென்மையாகவும் தனது கண்டனத்தை
தெரிவித்து இருக்கிறார். அந்த அறிக்கையை படித்தாலே, அது பேரளவில் வெளியிடப்பட்ட அறிக்கை
என்பது விளங்கிவிடும். ஒரு பேரியக்கத்தின் தலைவர், தனது இயக்கத்தின் மீதான மதிப்பு
மக்கள் மத்தியில் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக வெளியிட்ட அறிக்கையாக தான் அது இருக்கிறது.
திருமதி. குஷ்பூ
அவர்களை பொறுத்தவரை தனக்கு மனதில் பட்டதை வெளிப்படையாக யாருக்கும் அஞ்சாமல் தெளிவாக
எடுத்து சொல்லக்கூடியவர். அதே போல தான், ஸ்டாலின் விஷயத்திலும் தனது கருத்தை தெரிவித்து
இருக்கிறார். கருத்து தவறு எனில் விளக்கம் கேட்டிருக்கலாம், மறுப்பு தெரிவித்து இருக்கலாம்.
இப்படி பல வழிகள் இருக்க அவரையும் அவரது வீட்டையும் தாக்கி இருப்பது கட்சிக்கு கட்சியினரே
ஏற்படுத்திக்கொள்ளும் கெட்டபெயர் எனபதை இந்த சம்பவத்தை கண்டிக்க முன்வராத மூத்த தலைவர்களும்
உணர்ந்ததாக தெரியவில்லை.
ஆனால் எனது ஆச்சரியமே
வேறு!
மிக மிக நடுநிலையானவர்,
கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பவர் என்றெல்லாம் போற்றப்படும் திரு ஸ்டாலின் அவர்க்ள்,
இந்த தாக்குதலுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்காதிருப்பது தான் ஆச்சரியம்! அடுத்த
தலைவராக முடிசூடவிருக்கும் வேளையில் தன் மீதான எந்த விமர்சனமும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டிய
நிலையில் இருக்கும் ஸ்டாலின் அவர்கள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, தனக்கு மக்களிடமிருக்கும்
மதிப்பையே குலைக்கக்கூடிய ஒரு நிகழ்வுக்கு எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன் என்பது
புரியவில்லை.
தமிழக அரசியலில்
வன்முறை, விமர்சனத்துக்கான தாக்குதல் போன்றவை புதிதல்ல. 1960களிலேயே தொடங்கிய விஷயம்
தான் அது. காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் மோதல், காங்கிரஸ் & திமுக மோதல், திமுக
& அதிமுக மோதல், பாமக & வி.சி மோதல் போன்றவை மிக பிரபலம்.
தன்னை விமர்சித்தவர்களை
தாக்குதலுக்காளாக்கும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கிவைத்த திமுக பின்னாளில் கொஞ்சம்
பக்குவமடைந்து கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க தொடங்கியது. திமுகவை விமர்சித்து
தாக்குதலுக்குள்ளானவர்களின் பட்டியல் மிக மிக நீளம். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் முதல்
பத்திரிக்கையாளர் சோ வரை என சமூகத்தின் எல்லா நிலையிலிருந்தவர்களும் விமர்சித்ததற்காக
தாக்கப்பட்டவர்களில் அடக்கம்.
திமுக பக்குவமடைந்த
போது, அதிமுக விமர்சகர்களை தாக்கும் கலாச்சாரத்தை கையிலெடுத்துக்கொண்டது. பத்திரிக்கையாளர்கள்,
அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அதிமுகவும் பாரபட்சமின்றி விமர்சகர்களை
தாக்குதலுக்குள்ளாக்கி இருக்கிறது.
ஆனால், அதிமுகவில்
உட்கட்சி விமர்சனமும் இல்லை, அதனால் அதனடிப்படையிலான தாக்குதலும் இல்லை என்பது ஒரு
ஆறுதல். திமுகவின் நிலை அப்படியல்ல. கருத்து சுதந்திரத்துக்காக போராடும் முகத்தை கொண்டுள்ள
அதே திமுகவில் தான் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் முகங்களும் உள்ளது. அதன் மிக சமீபத்திய
உதாரணம் தான் திருமதி. குஷ்பூ மீதான தாக்குதலும், அதை கண்டிக்க மனமின்றி கண்டித்திருக்கும்
இன்றைய அறிக்கையும்.
திமுக மீது இப்போது
மக்களுக்குள்ள மரியாதையை காப்பாற்றிக்கொள்ள திமுக முன்வரவேண்டும். கருத்து சுதந்திரத்தை
அனுமதிப்பது, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது, கழகத்தில் அடிநாதமான கடமை கண்ணியம்
கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை பக்குவப்படுத்துவது, போன்ற செயல்களின் மூலம் தான் அது
முடியும். அப்படியல்லாமல், இது போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமல் விமர்சித்தவர்களை
தாக்குவதும், சம்மந்தப்பட்ட தலைவர்கள் அதை பார்த்து மௌனமாக இருப்பதும், சில நாட்கள்
கழித்து பெயரளவில் ஒரு அறிக்கை வெளியிடுவதும், திமுக தனது வன்முறை தன்மையை எப்போதுமே
மாற்றிக்கொள்ளாதோ என்கிற அச்சத்தை தான் தமிழக மக்கள் மனதில் விதைக்கும். இது திமுகவுக்கும்,
தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் நல்லதல்ல என்பதை தற்போதைய தலைவர் கலைஞரும், வருங்கால
தலைவராக எதிர்பார்க்கப்படும் ஸ்டாலினும் உணர்ந்தால் பரவாயில்லை!
உணர்வார்களா?
No comments:
Post a Comment