Wednesday, March 20, 2013

மற்றுமொரு விலகல் நாடகம்!
2004 முதல் 2013 வரையிலான இந்த ஒன்பது ஆண்டு காலங்களில் திராவிட முன்னேற்ற கழகம், மத்திய அரசிலிருந்து விலகுவதாக, மத்திய கூட்டணியிலிருந்து விலகுவதாக இதுவரை ஆறு முறை அச்சுறுத்தி இருக்கிறது. அதில் மூன்று முறை தான் ஆசைப்பட்ட காரியத்தை சாதித்தும் இருக்கிறது. அந்த ஆறு முறையும் வெகு லாவகமாக பின்வாங்கி தங்கள் கட்சியின் பெயரை செவ்வனே கெடுத்துக்கொண்டும் உள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10% பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பதவி விலகல் அச்சுறுத்தல் நடத்தி அதை தடுத்த பொது நிகழ்வாகட்டும், இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பதவி விலகல் அச்சுறுத்தல் நடத்தி மனித உரிமைகளுக்கான (பொய்யான?) வாக்குறுதியை பெற்ற சமூக நிகழ்வாகட்டும், ஏழு மத்திய அமைச்சர் பதவிகளை தரவேண்டும், அதுவும் தமிழக வளர்ச்சிக்கான துறைகளாக வேண்டும் என அச்சுறுத்தி பெற்ற சொந்த, சுயலாப, மாநில நலன் சார்ந்த நிகழ்வாகட்டும்… அவரது பதவி விலகல் நாடகத்தை எந்த சங்கடமும் இல்லாமல் தான் செய்து வந்துள்ளார்.

எனினும் இந்த முறை, அவர் விடுத்திருக்கும் அச்சுறுத்தல் என்பது உணர்வுப்பூர்வமானது மட்டுமல்ல, அவசிய தேவையானதும் கூட என்பதை எல்லா நடுநிலையாளர்களும் அறிவார்கள். மேலும், இன்றைய சூழலில், மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் இல்லை, எதிர்கட்சியாகவும் இல்லை. மாநில அரசு ஏகப்பட்ட வழக்குகளை கையில் வைத்து, மொத்த கட்சியினரையும் வளைக்க காத்துக்கொண்டிருக்கிறது. பொதுமக்களின் அபிமானத்தையும் இழந்து அனாதரவாக நிற்கிறது திமுக என்னும் பேரியக்கம். இந்த சூழலில், மத்திய அரசில் இருந்து வெளியேறுவது மட்டுமல்லாமல், மத்திய ஆளும் கூட்டணியிலிருந்தே மொத்தமாக வெளியேறுவது என்பது உச்சபட்ச ரிஸ்க் என்பதை உணராதவர்கள் இல்லை. இந்த பின்னணியில் வைத்து இந்த பதவி விலகலை காண்கையில் தான் இது மொத்த பணயம் என்பது விளங்கும்.

நேற்றிரவு குடியரசு தலைவரிடம் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளும் கடிதத்தையும், இன்று பிரதமரிடம் அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தையும் முறைப்படி சமர்ப்பித்தாயிற்று.

சரி இப்போது இத்தனை அழுத்தம் தரவேண்டிய அவசியம் என்ன?

2009-ல் இறுதிப்போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததற்கான ஆதாரங்களை மீடியாக்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி ஆவணங்களாக வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் இலங்கை தீவிரவாத ஒடுக்குதல் என்கிற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும், மனித உரிமைகளை மீறியதற்கும் கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் அமெரிக்க, ஐநாவின் மனித உரிமை குழுவில் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறது.

அந்த தீர்மானம் வலுவானதாக இல்லை என்பதாலும், அது போர்க்குற்றம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போன்றவை குறித்து தெளிவான குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதாலும், முறையான சுதந்திரமான நடவடிக்கைகளை இலங்கைக்கு எதிராக எடுப்பதற்கான வலியுறுத்தல்கள் இல்லை என்பதாலும், அத்தகைய வலுவான திருத்தங்களை இந்தியா கொண்டுவரவேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்திலிருந்து எழுந்தது.

அதை நோக்கிய பயணத்தை திமுக கடந்த 2012ம் ஆண்டே ஆரம்பித்து விட்டது. ஈழ விவகாரத்தில் ஒத்த கருத்துடைய இயக்கங்களை எல்லாம் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் டெசோ வுக்கு மறுஜென்மம் கொடுத்து புதுப்பிக்கப்ப்ட்டது. ஐநாவிடமும் பல்வேறு நாடுகளின் பிரதமர்களிடமும் நேரில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை கொடுத்து விவகாரத்தின் வீரியத்தை விளக்கி சொல்லி, ஐ.நாவில் தீர்மானம் வருகையில் அதை ஆதரிக்க வேண்டுகோளும் விடுத்து விட்டு வந்தது.

இந்திய நாடாளுமன்றத்திலும், தனது குரலை கடந்த ஒராண்டு காலமாக ஓங்கி ஒலித்து வந்தது. இதன் அடிப்படையில் தான், கடந்த 2012ம் ஆண்டு ஐநாவில் தாக்கலான தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ஆனால் அந்த தீர்மானம் மிக மென்மையாக அமைந்திருந்ததால் நாம் எதிர்பார்த்த பலனை அப்போது பெற முடியாமல் போய்விட்டது. இது வரை பட்ட அத்தனை பாடுகளும் வீணாகிப்போனதன் வலியை மனதுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்த திமுக, இந்த ஆண்டு அப்படி வீணாகப்போய்விடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, விலகல் நாடகம்(!) நடத்தியேனும் இந்திய அரசு ஐநா தீர்மானத்தில் வலுவான திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என மெனக்கெட்டு கொண்டிருக்கிறது.

எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இன்று, மத்திய அரசு சூசகமாக தெரிவித்து இருக்கிறது. சோனியா அவர்கள், இலங்கையிலுள்ள தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சொன்னதோடு, இந்திய அரசை எந்த நாடும் தங்கள் இஷ்டத்துக்கு வளைத்துக்கொள்வதை அனுமதிக்கமுடியாது என்பதையும்  உறுதியாக சொல்லி இருக்கிறார்.

மத்திய வெளியுறவு அமைச்சர், திரு.சல்மான் குர்ஷித், சோனியா அவர்களின் முடிவே இறுதியானது என தெரிவித்திருப்பதோடு, அவசரமாக ஐநாவுக்கான இந்திய தூதரை டெல்லி வரவழைத்து இன்று நீண்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தியா ஐநா தீர்மானத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் 21ம் தேதிக்குள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் தான் ஐநாவில் திருத்தம் கொண்டு வரமுடியும். அதனால் தான் திமுக விலகல் முடிவை அறிவித்த அதே நேரத்தில், அவருக்கு வந்த வேண்டுகோளை அடுத்து, இந்திய நாடாளுமன்றத்தில் 21ம் தேதிக்குள் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, ஐநாவில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்தால், முடிவை ‘பரிசீலனை’ செய்யலாம் என்கிற ஒரு பரிகாரத்தையும் வெளியிட்டிருந்தார்.

இச்சமயத்தில், திமுகவை பகைத்துக்கொள்வது என்பது இந்திய நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்பதுணர்ந்த மத்திய அரசு, இன்று, அனைத்து கட்சி கூட்டம் கூட்டி அதில் நாடாளுமன்றத்தில் அவசர தீர்மானம் கொண்டுவருவது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

இந்திய அளவில் ஈழ விவகாரத்தை கொண்டு சென்றதிலும், நாடாளுமன்றத்திலும், ஐநாவிலும், பிற உலக நாடுகளிலும் ஈழ ஆதரவை பெற்று தந்ததிலும் தனி ஒரு இயக்கமாக திமுக இயங்கியதை யாரும் மறுக்க முடியாது!

1950 களிலிருந்தே ஈழ விவகாரத்தில் முழுமையான ஆழ்ந்த அனுபவம் உள்ள கலைஞர் 1970 களிலேயே அகில இந்திய அளவில் இந்த விவகாரத்தை கொண்டு சென்று இந்திய தலைவர்களை ஈழ விவகாரத்தின்பால் ஈடுபடுத்தினார். வாஜ்பாயி, பஸ்வான், பகுகுணா போன்ற இந்திய தலைவர்கள் ஆகட்டும், தங்கபாலு, ராசாராம், போன்ற தமிழக தலைவர்கள் ஆகட்டும், எல்லோரையும் ஈழத்தின் பால் ஈர்த்து சென்றதில் அவரது பங்களிப்பு அளப்பரியது.

அது தான், இப்போதைய நாடாளுமன்ற விவாதத்தில் மிகவும் கை கொடுத்தது. பஸ்வான், யஷ்வந்த் சின்ஹா, டி.ராஜா, லாலு போன்ற தேசிய தலைவர்கள் ஈழ விவகாரம் குறித்து அக்கு வேறு ஆணி வேறாக அலசிய அந்த விவாதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அந்த ஆதரவு தான் இன்றைக்கு நாடாளுமன்ற தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதுவரையும் வெறும் தமிழகம் சார்ந்த விவகாரமாக மட்டுமே இருந்துவந்த ஈழ விவகாரம், இப்போது இந்திய அளவிலான விவகாரமாக உருவெடுத்திருக்கிறது.

இத்தனை அடிப்படை கட்டமைப்பையும் ஏற்படுத்தி, ஒட்டு மொத்த இந்திய அரசியலையும் தன் பக்கம் ஈர்த்து தனக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்த பின் தான், விலகல் ‘நாடகத்தை’ அரங்கேற்றி இருக்கிறார்.

இப்போது மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. திமுக கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றியாகவேண்டிய ஒரு கட்டாய நிர்ப்பந்தத்தில் தத்தளிக்கிறது. இதை, நேற்றைய ப.சிதம்பரம் அவர்களின் பேட்டியில் தெளிவாக உணரமுடிந்தது.

"பொய்ம்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”

என வள்ளுவர் சொன்னதை போல, இது வெறும் வழக்கமான நாடகமாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் எதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டதோ, அந்த நோக்கம், வழக்கம் போல நிறைவேறினால், அது தான் தமிழகத்தின் அவசிய தேவையாக இருக்கக்கூடும்.

அந்த வரம் கிடைக்குமா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும். காத்திருப்போம்!

No comments:

Post a Comment

Printfriendly