இந்த அறிவிப்பு
வெளியானதும் திமுக தலைவர் தனது முதலாவது கண்டன அறிக்கையை வெளியிட்டு அரசின் அறிவிப்பை
திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார். மேலும் பல தமிழுணர்வாளர்களும் இந்த அறிவிப்புக்கு
எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்!
என்னை பொறுத்தவரை
அரசின் இந்த அறிவிப்பில் எதிர்ப்பதற்கு எதுவுமிருப்பதாக தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால்
மகிழ்ச்சியோடு வரவேற்கவேண்டிய ஒரு அறிவிப்பு இது.
இந்த திட்டம் ஒன்றும்
புதிதல்ல. ஏற்கனவே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1982ல் கொண்டு வந்த திட்டம் தான்.
குறிப்பிட்ட சில அரசு பள்ளிகளில் மட்டும் இருக்கும் இந்த திட்டம் இனி அனைத்து அரசு
பள்ளிகளுக்கும், மாநகராட்சி/நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டு இருக்கிறது.
1985 ம் ஆண்டு
வரை (எனது ஐந்தாம் வகுப்பு வரை) நான் ஆங்கிலவழி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் படித்து
வந்தேன். அப்பாவின் வேலை பிரச்சனைகாரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும் 6 ம் வகுப்பிலிருந்து
தனியார் பள்ளியில் தொடர்ந்து பயில முடியாத நிலை.
கோவை சித்தாபுதூரில்
உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் எனது 6 ம் வகுப்பு தொடர்ந்தது. அதுவும்
ஆங்கில வழியில். அப்போதே அந்த வசதி இருந்ததை சுட்டிக்காட்டவே இந்த சம்பவத்தை சொல்கிறேன்.
குறைந்த கட்டணத்தில்,
அரசு பள்ளியில் தரமான ஆங்கில கல்வி பெற்றதன் பயன் தான் எனது இன்றைய வளர்ச்சி என்பதில்
எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு!
ஆங்கிலவழி கல்வி
ஏன்?
இந்தியா மிக வேகமாக
வளரும் நாடு. பல்வேறு நாடுகளுடனும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வர்த்தக தொடர்புடையவர்கள்
தான் நாம் எல்லோருமே. எனவே எந்த ஒரு விஷயத்துக்கும் நமக்கு ஆங்கில அறிவு அவசியமாகிவிட்டது.
ஆயிரம் ரூபாய்க்கு
ஒரு செல்ஃபோன் வாங்கினாலே அதன் வழிகாட்டி புத்தகத்தை படித்தறிந்துகொள்ள ஆங்கிலம் தேவை.
தமிழகத்துக்குள்ளேயே உழன்றுகொண்டிருக்கும் புழுக்கள் அல்ல நாம். பிற மாநிலங்கள் பயணிக்கையிலும்,
பிற நாடுகள் கடக்கையிலும் நமக்கு ஆங்கிலம் அவசியம் ஆகிறது.
ஆங்கில அறிவு என்பது
கிட்டத்தட்ட அடிப்படை தகுதி என்கிற அளவிற்கு இன்று ஆகிவிட்டது. எந்த ஒரு தகவலும் ஆங்கிலம்
இன்றி வருவதில்லை.
தாய்மொழியிலேயே
பயின்றால் என்ன குறை?
ஒரு சாரார் தங்களது
வழக்கமான குதர்க்க கேள்விகளை முன்வைத்து வாதாடுவது உண்டு. இந்த விஷயத்திலும் அது இல்லாமல்
இல்லை. சீனா போன்ற நாடுகள் முழுமையாக தாய்மொழி கல்வி தானே அமல்படுத்தி இருக்கின்றன?
அவர்கள் வளரவில்லையா? என்றொரு கேள்வி இணையதமிழுணர்வாளர்களால் சுற்றுக்கு விடப்பட்டு
இருக்கிறது.
மேலோட்டமாக பார்த்தால்
நியாயமான கேள்வி போல தான் தோன்றும்!
சீனா மிக பெரிய
நாடு. மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி என்பதால்
பரந்து விரிந்த அந்த நாட்டின் எந்த மூலை முடுக்குக்கு சென்றாலும் ஒரு சீனன் தகவல் பிரச்சனையில்
சிக்கிக்கொள்ளாமல் முழு ஆயுள்காலமும் வாழ்ந்துவிட முடியும். வெளிநாடு செல்ல நேர்கையில்
மட்டும் தான் அவனுக்கு சிக்கல்.
இந்தியா அப்படி
அல்ல. இந்தியா அடிப்படையில் ஒரு நாடு அல்ல. இது மாநிலங்களின் கூட்டமைப்பு. இங்கு வழக்கத்தில்
இருக்கும் மொழிகள் 200க்கும் மேல். அதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 21.
நமது தாய்மொழியை
எடுத்துக்கொண்டால், தமிழகம் புதுவை தவிர பிற மாநிலங்களுக்கு செல்கையில் நமக்கு நம்
தாய்மொழியால் எந்த உபயோகமும் இல்லை. இதே நிலை தான் மற்ற நாடுகளுக்கு பயணிக்கையிலும்.
தமிழகத்திலேயே
பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்து புதைந்துகொள்ளும் மனிதர்களுக்கும், தமிழகம் தவிர
பிற மாநிலங்களோடோ, பிற நாடுகளோடோ எந்த தகவல் தொடர்பும் வைத்துக்கொள்ளாத மனிதர்களுக்கும்
வேண்டுமானால் தமிழ் போதுமானதாக இருக்கும். ஆனால் பிற மாநிலங்கள், பிற நாடுகள் ஆகியவற்றுடன்
தொழில், பயண தொடர்பு கொண்டவர்களுக்கு தமிழ் போதாது.
இதை இன்னும் கொஞ்சம்
சுருக்கி பார்த்தால், இந்தியாவில் பயணிக்க ஹிந்தியும், பிற நாடுகளுடன் தொடர்புக்கு
ஆங்கிலமும் என்றொரு மும்மொழி கொள்கைக்கு முன்னர் இந்திய அரசு முயற்சி செய்தது நினைவுக்கு
வரலாம். ஒருவேளை அந்த கொள்கை வென்றிருந்தால், இந்தியாவில் அனைத்து மாநிலத்தவரும் தத்தம்
தாய்மொழியோடு, ஆங்கிலம் ஹிந்தி ஆகிய பொதுமொழியையும் கற்று இந்தியாவுக்கு என்று ஹிந்தியும்
பிற நாடுகளுக்கு என்று ஆங்கிலமும் என வழக்கத்திற்கு வந்திருக்கும். இது கிட்டத்தட்ட
சீனாவை உதாரணம் காட்டும் ‘தமிழுணர்வாளர்களின்’ கருத்துக்கு உடன்பாடானதாக இருந்திருக்கும்.
ஆனால், நம்முடைய
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இரு மொழி கொள்கையே போதும் என உறுதியாக இருந்ததால்,
மாநிலத்துக்கு தாய்மொழி என்றும், பிற மாநிலங்கள், பிற நாடுகள் என அனைத்துக்கும் பொதுவாக
ஆங்கிலம் என்றும் இன்றைக்கு முடிவாகி இருக்கிறது.
இப்போது என்ன அவசியம்?
இதுவரை தமிழகம்
உலக வரைபடத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருந்த ஒற்றை மாகாணம். ஆனால் இப்போதோ உலக வரைபடத்தில்
மிக முக்கியமான மாகாணம். தகவல் தொழில் நுட்பம், வாகன உற்பத்தி, உயர் தகுதி இயந்திர
உற்பத்தி, என பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வரும் பகுதி. இங்குள்ளவர்களுக்கு அடுத்த
இருபது ஆண்டுகளுக்கான தொழில்வாய்ப்புக்கு இப்போதே ஆச்சாரம் இட்டுக்கொண்டிருக்கும் பகுதி.
நம் மக்களுக்கான
வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாமும் இது போன்ற பெரும் தொழில் நிறுவனங்களை நம்பி என ஆகிவரும்
சூழலில், உலகோடு ஒத்திசைந்து வாழவேண்டும் எனும் வள்ளுவன் வாய்மொழிக்கேற்ப நம்மை நாமே
தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசர அவசிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது. எனவே தான்
அனைவரும் ஆங்கில கல்வி பயின்று அதில் தக்க தேர்ச்சியும் பெறவேண்டும், அது தான் இனி
வரும் காலங்களில் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் என்பதை இப்போதைய அரசு உணர்ந்து
இந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
எதிர்கால கல்வி
வளர்ச்சி?
ஆங்கிலம் என்பது
அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் மட்டுமே பயில முடியும் என்கிற நிலையில் இருந்ததால்,
நம் மக்களில் 63% பேர் இன்னமும் அரசு பள்ளிகளில் தான் பயின்று வருகிறார்கள். இன்றைக்கு
வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் திறமை இருக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இல்லாததால்
தான் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறோம்
என்கிற ஆணவத்திலேயே பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஏகபோகமாக செயல்பட்டு வருவதையும் நாம்
அறிவோம்.
அரசே அரசு பள்ளிகளில்
குறைந்த கட்டணத்தில் ஆங்கில கல்வி அளிப்பதன் மூலம் இனி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கவும்,
தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவும், வேலை வாய்ப்பில் தன்னம்பிக்கையுடன் போட்டியிடவும்
ஒரு சிறப்பான வாய்ப்பு ஏற்படும்.
ஆங்கில கல்வி அறிவு
இல்லாததால் மேல்படிப்பு படிக்க தயங்கி 12ம் வகுப்போடு படிப்பை ஏறக்கட்டிய நிலை மாறி
அனைவருமே பட்டதாரியாகவும் இது அடிப்படை வாய்ப்பாக அமையும்.
இதன் மூலம் கல்வி
வளர்ச்சியும் மேம்படும். தனியார் கல்வி நிலையங்களின் ஆதிக்கமும் மட்டுப்படும். ஊரக
மாணவர்களும் நகர மாணவர்களுக்கு நிகரான கல்வியறிவு பெறுவார்கள்.
இப்படியான ஒரு
திட்டத்தை கண்டிக்கும் நபர்கள் யாராயினும் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல,
நம் மாணவர்களை ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடைத்து வளர்ச்சியடைய முடியாமல் செய்ய
விரும்பும் சிறுமதியாளர்கள் என்றும் முத்திரை குத்தப்படவேண்டியவர்களாகின்றார்கள்.
*** **** **** ****
பிற்சேர்க்கை : 17 ஆண்டுகளுக்கு பின் என் பள்ளிக்கு மீண்டும் சென்று வந்த நினைவலைகள். புகைப்பட தொகுப்பு http://www.facebook.com/media/set/?set=a.1210434535992.2034092.1082597225&type=3
*** **** **** ****
பிற்சேர்க்கை : 17 ஆண்டுகளுக்கு பின் என் பள்ளிக்கு மீண்டும் சென்று வந்த நினைவலைகள். புகைப்பட தொகுப்பு http://www.facebook.com/media/set/?set=a.1210434535992.2034092.1082597225&type=3
சிறந்த கட்டுரை. உடன் படுகிறேன்
ReplyDeletecompletely agree with the article. I think we should also learn Hindi ( at least those who are willing).
ReplyDeleteஎந்த மொழியும் நாமே விரும்பி கற்றுக்கொள்வது தவறில்லை. திணிப்பதுதான் தவறு. ஹிந்தி திணிக்கப்பட்டதால் எதிர்த்தார்கள். ஹிந்தி படிக்கக்கூடாது என்று யாருமே சொல்லவில்லை. தேவைப்படுபவர்கள் படித்துக்கொள்ளலாம். இந்தியாவுக்கென்று பொதுவான மொழியாக ஆங்கிலம் ஏன் இருக்கக் கூடாது?
ReplyDelete