Tuesday, June 18, 2013

திருத்த வேண்டிய தீர்ப்பு!


நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கினார் நீதியரசர் உயர்திரு. கர்ணன் அவர்கள். சென்னை உயர்நீதிமன்றம் தன் பங்குக்கு பல பல விசித்திரமான தீர்ப்புக்களை தந்திருக்கிறது. பல பகுத்தறிவு ததும்பும் முற்போக்கான தீர்ப்புக்களையும் தந்திருக்கிறது. ஆனால் நேற்றைய தீர்ப்பை எந்த ரகத்தில் சேர்த்துவது என்று இன்னமும் தெரியவில்லை!

விஷயம் இது தான்!

கோவை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. மனைவி தனது கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டது குறித்தான வழக்கு. இதில் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெறவில்லை என்பதால் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என கணவன் வாதம் வைக்கிறார். ஆனால் இருவரும் இணைந்து வாழ்ந்ததையும், அதன் மூலமாக இரண்டு குழந்தைகள் பிறந்ததையும் அவர் மறுக்கவில்லை. இணைந்து வாழ்வது வேறு, திருமண பந்தம் என்பது வேறு. அதனால் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என்பது கணவரின் நிலைப்பாடு.


இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அவர்கள், “திருமண வைபோகம் என்பதெல்லாம் வெறும் சம்பிரதாயங்கள் தான். சமுதாயத்துக்கு அறிவிப்பதற்கான ஒரு சடங்கு தான். எனவே அவை எல்லாம் இல்லாவிட்டாலும், திருமணம் செய்துகொள்ளலாம்”. அது செல்லும் என்பதாகவும், “சட்டப்பூர்வமாக திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலோடு உறவு வைத்துக்கொண்டால், அதை தகுந்த ஆதாரங்களோடு நிரூபித்தால்(?) அதன் அடிப்படையில் அதை சட்டப்பூர்வமான திருமணமாக அறிவிக்கலாம்” எனவும், “அந்த அடிப்படையில் இந்த குறிப்பிட்ட வழக்கில் கணவர் மனைவிக்கு மாதம் ரூ.500/- ம் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000/- ம் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும்” எனவும் தீர்ப்பளித்திருக்கிறார்.

மனிதாபிமான நோக்கிலும் சட்ட நோக்கிலும் இந்த தீர்ப்பில் எந்த குறையும் யாரும் சொல்லிவிட முடியாது. மறுக்கப்பட்ட ஒரு நீதியை பத்தாண்டுகளாக போராடிய பெண்ணிற்கு, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பெற்று கொடுத்திருக்கிறது என்கிற வகையில் மிகவும் பாராட்டுக்குரியதும் கூட.

ஏற்கனவே சில நீதிமன்றங்கள் இதே போன்ற சில தீர்ப்புக்களை கொடுத்து இருக்கின்றன. அவற்றுள் சில:

Ø  திருமணம் ஆகியிருந்தாலும் உறவுக்கு வற்புறுத்துவது, சம்மதமின்றி உறவு கொள்வது ஆகியவை பாலியல் வன்கொடுமை என கருதப்படவேண்டும்.

Ø  திருமணத்துக்கு பின்னர் இரண்டாண்டுகளுக்குள் அந்த திருமண பந்தம் உறவாக பரிணமிக்காத நிலையில் அந்த திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது

Ø  திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், ஒன்றாக வாழ்வது, தெருவில் ஒன்றாக ஜோடியாக வலம் வருவது, பலரும் இவர்கள் இணைந்து பயணித்ததை பார்த்தது, ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்றவற்றை நிரூபிப்பதன் மூலம், அவர்களை தம்பதியாக அறிவிக்கலாம்

Ø  பதினாறு வயதுக்கு மேல் பரஸ்பர ஒப்புதலோடு உறவு கொள்வது சட்டவிரோதமாகாது

…மற்றும் பல.

சட்ட ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும், எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்கிற நோக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

ஆனால், சமூக நோக்கில் அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

பரஸ்பர ஒப்புதலோடு உறவு வைத்துக்கொண்டாலே சட்டப்பூர்வ திருமணமாக அது அங்கீகரிக்கப்படும் எனவும், அதன் பின் சம்மந்தப்பட்டவரிடமிருந்து எழுத்துமூலமான ஒப்புதலோ, சட்டப்பூர்வ விவாகரத்தோ வாங்காமல் செய்யப்படும் திருமணம் செல்லாது எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

இதன் படி, தற்போது குடும்பமாக வாழ்வோரைக்கூட அவர்களது முன்னாள் காதலர்கள் சட்டப்பூர்வமாக தொந்தரவு செய்ய முடியும். மேலும், சட்டப்பூர்வமான திருமணம் என அங்கீகரிக்கப்படுவதால் சொத்துரிமைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

காதலர்களாக மட்டும் அல்லாமல் அவர்களுக்கிடையே பரஸ்பர உறவும் ஏற்பட்டு இருந்து, பின் ஏதேனும் ஒரு காரணத்தால் பிரிய நேர்ந்தால், ‘சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து எழுத்துமூலமான ஒப்புதல்’ பெற்றபிறகே வேறு நபருடன் திருமணம் செய்யவேண்டியதிருக்கும், இனி!

இந்த தீர்ப்பின் அமலாக்கம் எப்போதிருந்து என தெரியவில்லை. பொதுவாகவே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கள் என்பது சட்டம் தான். அந்த வகையில் பார்த்தால், இதன் சிக்கலும் தீவிரமும் புரியும்!

இந்த தீர்ப்பின் மிக பெரிய அனுகூலமே, இனி தவறு செய்யும் முன் பலமுறை யோசிப்பார்கள். நினைத்தவுடன் பிரிவு என்பது அசாத்தியம். பெண்கள் அதிகம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவார்கள். ஏமாற்ற நினைக்கும் ஆண்களிடமிருந்து சட்டப்பூர்வ உரிமைகளை பெற முடியும்.

ஆனால், இந்த சட்டம் முன் தேதியிட்டு அமலானால், இப்போது வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் பலருக்கும் சிக்கலாக அமைந்து விடக்கூடும். ‘முன்னாள்கள்’ இனி தைரியமாக வீட்டுக்கு வந்து தற்போதிருக்கும் துணையை வெளியேற்றிவிடவும் முடியும், சொத்துரிமை பெறவும் வழி வகுக்கும். திருமண பேச்சுவார்த்தையின் போதே 'NOC' வாங்கி சமர்ப்பிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை!
எனவே பல பல சமூக சிக்கல்களுக்கு காரணமாக வாய்ப்பிருக்கும் இந்த தீர்ப்பு குறித்து தகுந்த விளக்கங்களையும், திருத்தங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் கொடுப்பது இப்போதைய அத்தியாவசியமாக உணர்கிறேன்!

சில தீர்ப்புக்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் திருத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பின் நிலை என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடக்கூடும்!

2 comments:

  1. மேலோட்டமாக பார்க்கும்போது பாராட்டக் கூடிய தீர்ப்பாக தோன்றுகிறது. அதனுள் இவ்வளவு சிக்கல்கள் அமைந்துள்ளது எதிர்பாராதது. நீங்கள் சொல்வதை கவனத்தில் கொண்டு தேவையான திருத்தங்கள் செய்யவேண்டியதும் அவசியமாகிறது.

    ReplyDelete
  2. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் விஷயங்களைப் பரிசீலித்து, தேவையான சட்டத்தை இயற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நீதிமன்றம் விரிவான சட்டங்களையும் விதிமுறைகளையும் இயற்றி கொண்டிருக்க முடியாது.கோடிட்டுக் காட்டும். நீதிமன்றத்தை அணுகினால் நிவாரணம் அளிக்கும். சட்டம் இயற்ற வேண்டியது சட்டமன்றத்தின் பனி; பொறுப்பு!

    ReplyDelete

Printfriendly