இந்த தொடரின் பாகம்-1 & பாகம்-2 ஆகியவற்றை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என்பதால் நாம நேரா விஷயத்துக்கே போயிரலாம். இந்த பாகத்தில் நாம் விவாதிக்க போறது ‘அந்நிய முதலீடு’ பத்தி தான்.
என் முதல் பாகத்தை
படிச்ச பலரும் ‘அந்நிய செலாவணி’ என்பதை ‘அந்நிய முதலீடு’ என்பதுடன் போட்டு கன்பீசன்
ஆகி சகட்டு மேனிக்கு விமர்சிச்சதால, முதலில் அது ரெண்டுக்குமான வித்தியாசத்தை பார்த்திரலாம்.
அந்நிய செலாவணி
(Foreign Reserve) என்பது நம்மிடம் இருக்கும் டாலர் கையிருப்பு. இந்த அந்நிய செலாவணி
எந்த அளவுக்கு நம்ம கிட்டே கையிருப்பு இருக்குதோ அதன் அடிப்படையில் தான் உலக நிதி நிறுவனங்கள்
நம்ம நாட்டின் கடன் நம்பகத்தன்மையை (Credit Credibility) வரையறை செய்யும். இப்படியான
நிதி நிறுவனங்களின் வரையறை அடிப்படையில் தான் நம் நாட்டுக்கு மற்ற நாடுகள் முதலீடு
செய்யும். ஆக, நம்ம கிரெடிட் ரேட்டிங்கை நல்லபடியா வெச்சிக்க நாம முயற்சி செய்யணும்.
சரி, அதை எப்படி
செய்யறது?
இந்தியாவில் இருந்து
ஏற்றுமதி ஆகும் பொருட்கள், சேவைகள் (Export of Goods & Services) எல்லாத்துக்கும்
நாம டாலரில் பணம் வாங்குறோம். இன்னொரு பக்கம் நமக்கு தேவையான பொருட்கள், சேவைகளை இறக்குமதி
(Import of Goods & Services) செய்யுறோம். அதுக்கு நாம டாலரில் பணம் கட்டுறோம்.
ஏற்றுமதியை விட இறக்குமதி குறைவா இருந்தா நமக்கு டாலர் கையிருப்பு வரும். அதன் மூலம்
அந்நிய செலாவணி அதிகரிக்கும். ஆனா இப்போதைய நிலையில் ஏற்றுமதியை விட 32% அதிகமா இருக்கு
இறக்குமதி.
அதனால, நமக்கு வர்ற டாலர்களை விட நாம கொடுக்க வேண்டிய டாலர் அதிகமா இருக்கு. வேறே வழியில்லாம நாம நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து கொடுக்க வேண்டியதா இருக்கு. இந்த வகையில் அந்நிய செலாவணி குறையுது.
அதனால, நமக்கு வர்ற டாலர்களை விட நாம கொடுக்க வேண்டிய டாலர் அதிகமா இருக்கு. வேறே வழியில்லாம நாம நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து கொடுக்க வேண்டியதா இருக்கு. இந்த வகையில் அந்நிய செலாவணி குறையுது.
அந்நிய செலாவணி
கையிருப்பு டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை நிர்ணயிக்குது என்பதால் ரூபாயின்
மதிப்பு அதிரடியா குறைஞ்சிருச்சு.
‘அந்நிய முதலீடு’ங்கறது
வெளிநாட்டு நிறுவனங்கள் நம்ம நாட்டில் செய்யும் முதலீடு. ஏன் வெளிநாடு முதலீடு செய்யணும்?
இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சி பணிகளுக்கு வாய்ப்பு இருக்கு. இன்னமும் சாலை, அடிப்படை
வசதிகள் இல்லாத ஊர்கள் அனேகம். ஒழுங்காக வரி கட்ட கூட யோசிக்கும், வரி ஏய்க்கும், நாணயமற்ற
மக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்திய நாட்டில் அரசாங்கத்தால் மட்டுமே அவ்வளவு வளர்ச்சி
பணிக்கான நிதியையும் திரட்டிட முடியலை. நம்மகிட்டே அந்த அளவுக்கு நிதி கையிருப்பும்
இல்லை. கடனா வாங்கினாலும் அதை திருப்பி கொடுக்க ஆகும் காலம் எவ்வளவுன்னு சொல்ல முடியாது.
உதாரணமா, 100 கி.மீக்கு ஒரு ரோடு போட நாம 425 கோடி ரூபாய் கடன் வாங்குறோம்னு வெச்சுக்கிட்டா,
அந்த 100 கி.மீ ரோடு மூலம் அந்த 425 கோடி ரூபாய் வசூலாக எத்தனை வருஷம் ஆகும்னு யாருக்கும்
தெரியாது. ரிட்டர்ன் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் (RoI – Return of Investment) அந்த அளவுக்கு
கியாரண்டியா இல்லை.
நம்ம கிட்டே பணமும்
இல்லை. நமக்கு நிறைய வளர்ச்சியும் தேவை. நம்மால் கடனும் வாங்க முடியாது. அப்போ என்ன
செய்யணும்? யார் கிட்டே பணம் இருக்கோ அவ்ங்களை அந்த பணத்தை நம்ம கிட்டே முதலீடு செய்ய
வெக்கணும். அந்த முதலீட்டிலிருந்து அவங்க வருவாயை எடுத்துக்குவாங்க. நாம வளர்ச்சியை
எடுத்துக்குவோம். நம்ம கிட்டே முதலீடு செய்ய நினைக்கிறவன் என்ன செய்வான்? நீங்க ஒரு
தொழில் தொடங்கணும்னு நினைச்சாலோ, வீடு வாங்கணும்னு நினைச்சாலோ, ஷேர் வாங்கணும்னு நினைச்சாலோ
என்ன செய்வீங்க? எங்கே முதலீடு செஞ்சா நமக்கு லாபமா இருக்கும்? நல்ல விலையேற்றம் இருக்கும்?
இதெல்லாம் யோசிப்பீங்க இல்லே? கடந்த கால ஹிஸ்டரி, எதிர்கால கணிப்புக்கள் எல்லாத்தையும்
யோசிச்சு தானே முதலீடு செய்வோம்? (ஸ்பிளண்டர் பைக் வாங்கு மாப்பிள்ளே. நல்ல ரீசேல்
வேல்யூ இருக்கும் – மாதிரி).
இதே டைப்பில் தான்
இந்தியாவில் முதலீடு செய்யுறதா, இலங்கையிலா, பாகிஸ்தானிலா, பர்மாவிலான்னு யோசிச்சிட்டு
இருக்கிற வெளிநாட்டு நிறுவனங்கள இந்தியாவில் தான் முதலீடு செய்யணும்னு முடிவெடுக்க
வெக்கிறதே சர்வதேச நிதி நிறுவனங்கள் கொடுக்கிற கிரெடிட் ரேட்டிங்கும், முதலீட்டுக்கு
கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்ஸும் தான். அது நம்பிக்கையா இருக்கிற பட்சத்தில் நம்ம நாட்டில்
முதலீடு செய்வாங்க.
ஏன் வெளிநாட்டு
முதலீட்டையே எதிர்பார்க்கணும்? இந்தியாவில் முதலீடு செய்யற அளவுக்கு ஆள் இல்லையா? அரசாங்கத்துக்கிட்டே
பணம் இல்லைன்னா என்ன? தனியாரை முதலீடு செய்ய சொல்லலாம் இல்லே?
இப்ப ஒரு நகரத்தில்
பைப்பாஸ் ரோடு போடணும்னு வெச்சுக்கோங்க. கிட்டத்தட்ட 40 கிமீ நீளம். சும்ம ஜம்முன்னு
நாலு வழி சாலை. சர்வதேச தரத்தில் போடணும்னு வெச்சுக்கோங்க. மொத்த பட்ஜெட் சுமார் 200
கோடின்னு உதாரணத்துக்கு எடுத்துக்கலாம். அரசாங்கத்துக்கிட்டே 70 கோடி தான் இருக்குன்னா
ஒரு தனியாரை கூப்பிட்டு நீ பாக்கி 130 கோடி போட்டு ரோட்டை போடு. அந்த பணத்தை சுங்கவரியா
30 வருஷத்துக்கு வசூல் பண்ணி எடுத்துக்கோன்னு சொல்லுவாங்க. இதை தான் BOOT (Build
Own Operate Transfer) System னு சொல்லுவாங்க. அவங்களே நிர்மாணிச்சு, குறிப்பிட்ட காலம்
வரை சொந்தமாக்கி, அதுக்கான சுங்கம் வசூலிச்சு, பின் அரசாங்கத்துக்கிட்டே திருப்பி கொடுக்கிறது.
இந்த மாதிரி நிறைய சாலைகள் நம்ம தமிழ்நாட்டிலேயே இருக்கு. PPP (Public Private
Partnership) Project மூலமா பல சாலைகள் போட்டிருக்கோம்.
சரி சின்ன புராஜக்ட்களுக்கு
இது ஓகே. மிகப்பெரிய புராஜெக்டுகளுக்கு நிதி உதவி செய்யுற அளவுக்கு இந்திய நிறுவனங்கள்
கிட்டே பணம் இருக்கா? இல்லை. அதனால் தான் வெளிநாட்டு நிறுவனங்களை நாடுறோம். அவங்க பெரிய
அளவில் முதலீடு செஞ்சு வருமானம் பார்க்கிறாங்க. நமக்கு வளர்ச்சியும் கிடைக்குது. இப்படி
வெளிநாட்டிலிருந்து நமக்கு வருகிற முதலீடுகளும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தறதோட,
இந்தியாவின் கடன் தரத்தையும் உயர்த்துது.
நேரடியா முழுமையான
முதலீடு செய்யுற முறை மட்டுமல்லாம கூட்டு தொழில் மூலமா முதலீடு செய்யுற முறையும் இந்த
அந்நிய முதலீட்டில் இருக்கு. ஹீரோ-ஹோண்டா, கவாசாகி-பஜாஜ், எஸ்கார்ட்ஸ்-யமாஹா, டிசிஎம்-டொயோட்டா,
கிர்லோஸ்கர்-டொயோட்டா, டிவிஎஸ்-சுசுகி, மாருதி-சுசுகி மாதிரியான நிறுவனங்கள் இந்திய-வெளிநாட்டு
நிறுவனங்களின் கூட்டு நிறுவனங்களா வாகன துறையில் இயங்கியவை. 49% & 51% பங்கு அடிப்படையில்.
இதன் மூலம் என்ன ஆச்சு, வெறும் ராஜ்தூத், ஜாவா, என்பீல்டு மட்டுமே இருந்த இருசக்கர
வாகனதுறையில் நவீன வாகனங்கள் வர தொடங்கிச்சு. விலையும் குறைவாச்சு. பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு
வேலை வாய்ப்பு கிடைச்சுது. வாழ்க்கை தரம் உயர்ந்தது.
தொலைபேசி, சாலை,
வாகனம், விமான போக்குவரத்து, பெரும் தொழிற்சாலைன்னு பல பல துறைகளில் அந்நிய முதலீடு
வந்து குவியறதால இந்தியாவில் இந்திய அரசாங்கமோ, இந்திய தனியார் நிறுவனங்களோ மட்டுமே
சேர்ந்து செய்தால் கிடைக்கக்கூடிய வளர்ச்சியை விட மிக மிக அதிகமான வளர்ச்சியும் மேம்பாடும்
கிடைச்சுது. இப்படி போட்ட முதலீட்டுக்கு நல்ல ரிட்டர்ன்ஸ் கிடைச்சதால் நிறைய நிறுவனங்கள்
போட்டி போட்டு இந்தியாவில் முதலீடு செய்துச்சு.
ஆக, அந்நிய செலாவணிங்கறது
வேறே. அந்நிய முதலீடுங்கறது வேறேன்னு இப்போ புரிஞ்சிருக்கும். அதே சமயம் அந்நிய முதலீடு
ஒரு வகையில் மறைமுகமா அந்நிய செலாவணிக்கு உதவுதுன்னும் தெரிஞ்சிருக்கும்.
இந்த அந்நிய செலாவணி
தான் இப்போ நம்ம பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியம். அந்த அந்நிய செலாவணியை உயர்த்துறதுக்கான
பல காரணிகளில் அந்நிய முதலீடும் ஒண்ணு. அம்புட்டு தான்!
பங்கு வர்த்தகம்,
முன்பேர வர்த்தகம், கரன்சி வர்த்தகம், கம்மாடிட்டி வர்த்தகம் மாதிரியான செயல்களால்
பொய்யாக உருவகப்படுத்தப்படும் அபரிமிதமான விலை உயர்வும் கூட டாலர் மதிப்பு உயர காரணம்.
கண்ணிலேயே பார்க்காத ஒரு பொருளை மாய உலகமான இண்டெர்நெட்டில் ‘வாங்கி’ கையிருப்பு வெச்சுகிட்டு
விலையை உயர்த்தி ‘விற்று’ லாபம் பார்க்கிற இந்த முன்பேர இணைய வர்த்தக முறையை தடை செய்யணும்னு
பலரும் பலகாலமா போராடிட்டு வர்றாங்க. இந்த முறையால தான் இயல்பான விலையை விட அதிகமான
விலையை வெங்காயம் முதல் தங்கம் வரை எல்லாத்துக்கும் ஏற்றி கிடக்குது.
உற்பத்தி துறை
கிட்டத்தட்ட மொத்தமா முடங்கி கிடக்கிறதால், உள்நாட்டு உற்பத்தி அளவு குறைஞ்சு ஏற்றுமதியும்
மந்தமாயிருச்சு. அதனால் நமக்கு வரக்கூடிய டாலர் வரத்தும் குறைஞ்சிருச்சு. இப்போ உடனடியா
தொழில்துறையை முடுக்கிவிட்டு ஏற்றுமதியை ஒரே மாசத்தில் அதிகரிக்க முடியாதுங்கறது அரசாங்கத்துக்கு
நல்லாவே தெரியும். நீங்களும் நானும் ஒழுங்கா வேலை செய்யாததுக்கு அரசாங்கத்தை குற்றம்
சொல்லி என்ன ஆகப்போகுது? அதனால தான் அரசாங்கம் மாற்று ஏற்பாடுகளை சிந்திக்குது.
நேற்று
(28.08.2013) மதியம் பிரஸ் மீட் நடத்துன நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட அதை தான் சொன்னாரு.
நம்ம மார்க்கெட் குளோஸ்டு மார்க்கெட்டா இருந்து பிரயோசனம் இல்லை. இன்னும் கூடுதலா ஓப்பன்
மார்க்கெட்டா மாறணும். அப்ப தான் பொருளாதாரம் உறுதியாகும்னு சொன்னாரு. அதாவது வெளிநாட்டு
முதலீட்டுக்கு இன்னும் அதிக அளவில் பிற துறைகளை கொண்டு வரணும். முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை
தளர்த்தணும். கவர்ச்சிகரமான ரிட்டர்ன்ஸுக்கு உத்தரவாதம் கொடுக்கணும். இதையெல்லாம் செஞ்சா
அந்நிய முதலீடு அதிகரிக்கும், அதன் பலனா டாலர் வரத்து அதிகரிக்கும், அது நம்முடைய அந்நிய
செலாவணி கையிருப்பை அதிகரிக்கும்.
நேற்று ப.சிதம்பரம்
சொன்ன பத்து திட்டங்களில் இந்த திட்டம் முக்கியமானது. (மற்றொரு முக்கிய திட்டம், தொழில்துறையை
மேம்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் பல சலுகைகள் கொடுக்கப்போறதா சொல்லி இருக்கார்.)
அரசாங்கம் சரியான திசையில் தான் பயணிக்க தொடங்கி இருக்கு. ஆனா ரொம்ப தாமதமா பயணத்தை
தொடங்கி இருக்கு.
அந்நிய செலாவணியை
அதிகரிக்கிறது மட்டும் தான் இப்போதைக்கு இந்திய அரசின் உடனடி நோக்கம். அதுக்காக தான்
அந்நிய முதலீட்டை அதிகரிக்கிறாங்க. இப்போ இந்த ரெண்டுக்குமுள்ள வித்தியாசம் ஓரளவு புரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன்.
இந்திய பொருளாதாரத்தை
இப்போ இருக்கிற நிலையிலிருந்து சீராக்க வெறும் அந்நிய செலாவணி, அந்நிய முதலீடு மட்டும்
போதுமா என்ன? பத்தவே பத்தாது. பொருளாதார சீர்திருத்தம்ங்கறது நீண்ட கால பெரும் திட்டம்.
ஆனா எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்கிற நிலையில் இந்திய மக்களும், சில கட்சிகளும்
இப்போது இல்லை. இது வரை நாம பார்த்தது எல்லாமே பொருளாதார ரீதியான பார்வை. ஆனால், அரசியல்
ரீதியான பார்வையும், நிர்வாக ரீதியான பார்வையும் சிலது இருக்கு. அந்த பிரச்சனைகளையும்
சரி செஞ்சா தான் மொத்த பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். அது என்னென்னன்னு அப்புறம்
பார்க்கலாம்!