நான் முதன் முதலில் ‘ஊழ் வினை துரப்ப’ சென்னை வந்தது 1992 ஆம் ஆண்டு. பின்னர் சில மாதங்கள் வேட்டையாடி ஒரு வழியாக ஒரு வேலை கிடைத்து சம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலில் வந்த ஆசை தனியாக ஊருக்கு பயணிப்பது.
அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தை ஒட்டி திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்துக்கு என ஒரு பேருந்து நிலையமும், ஆந்திரா பகுதிகளுக்கு செல்ல வால்டாக்ஸ் ரோடு அருகில் ஒரு பேருந்து நிலையமும் இருந்தது.
தந்தை பெரியார் போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு என எம்.யூ.சி கிரவுண்டு கொடுக்கப்பட்டிருந்தது. அதே இடத்தில் அவர்களது ‘அதிகாரப்பூர்வமற்ற’ பணிமனையும் செயல்பட்டு வந்தது. பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக வால்டாக்ஸ் ரோடு பேருந்து நிலையத்தையும் எம்.யூ.சி க்கே மாற்றி, திருப்பதி செல்லும் பேருந்துகளுக்கெனே ஒரு அலுவலகமும், பயணிகள் கியூவும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
இதுதவிர, தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கு செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளுக்கெல்லாம் உயர்நீதிமன்றத்தை சுற்றி இருக்கும் சாலைகள் ஒதுக்கப்பட்டது. அவை வரிசையாக உயர்நீதிமன்றத்தை சுற்றி நிற்கும். அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் போலீசார் வந்து அவற்றை விரட்டிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். பஸ்கள் நீதிமன்றத்தை ஒரு முறை சுற்றி வந்து மீண்டும் அதே இடத்தில் நிற்கும். கண்டெக்டர் மட்டும் அங்கேயே இருந்து கூவி கூவி எங்களை அழைத்து பஸ் சுற்றி சுற்றி வரும்போதெல்லாம் நிறுத்தி அதில் அழைத்துக்கொள்வார். இதில் கொடுமை என்னவென்றால், பிராட்வே சாலையில் நடைபாதை பழக்கடைகள் அதிகம். அதனால் அங்கே சுகாதாரமின்றி சேறும் சகதியுமாக இருக்கும். அதில் விழுந்தடித்து கொண்டு தான் பஸ் பிடிக்க ஓடவேண்டும்.
இது எனக்கு மிக விசித்திரமாக பட்டது.
அந்த பஸ்களும் அரசு போக்குவரத்து கழகங்கள் தான். ஆனால் அவற்றுக்கு என பேருந்து நிலையம் இல்லை. பயணிகள் நீதிமன்றத்தை சுற்றி சுற்றி ஓடுவது பார்க்கவே மிக பரிதாபமாக இருக்கும். சில ஆண்டுகள் இப்படி தான் எனது பயணங்களும் அமைந்தது. அத்தனை கஷ்டத்திலும் நான் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் திருவள்ளுவரை புறக்கணித்துவிட்டு ரோட்டோர சேரனை தான் நாடி பயணிப்பேன். சேரனை தவறவிட்டாலோ, சேரனில் இடம் இல்லாவிட்டாலோ தான் திருவள்ளுவரின் வெண்ணிலாவோ டெக்ஸ் சிட்டியோ கிடைக்கிறதோ என முயற்சிப்பேன்..
மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்களில் எல்லாம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்கள் இருக்க, தமிழகத்தின் தலைநகர் என விளங்கும் சென்னையில் ஒரு முறையான பேருந்து நிலையம் இல்லாமல் இருப்பது என்னை உண்மையில் ஆச்சரியப்படவே வைத்தது.
அப்போது முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள், ‘முதலமைச்சர் தனிப்பிரிவு’ எனும் ஒரு முன்னோடி திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக அமைத்திருந்தார். அந்த தனிப்பிரிவுக்கு யார் என்ன மனு அனுப்பினாலும் அது உடனடியாக கவனிக்கப்படு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
அந்த முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நான் 28.04.1994 அன்று இந்த பேருந்து நிலைய அவஸ்தை குறித்து விளக்கமாக கடிதம் எழுதியதுடன், அதில் எம்.யூ.சி கிரவுண்டை மறு சீராய்வு செய்து, வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு திசைகள் நோக்கிசெல்லும் பஸ்களுக்காக, திசைக்கொன்றாக நான்கு நடைமேடைகளுடைய ஒரு பேருந்து நிலையமாக ஆக்கலாம் என்றும் ஒரு ஆலோசனை தெரிவித்து இருந்தேன். ஒவ்வொரு நடைமேடையிலும் அதிகபட்சமாக மூன்று பேருந்துகள் மட்டும் தான் நிறுத்தமுடியும் என்பதால் குறிப்பிட்ட நேர அட்டவணைப்படி பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றி செல்லலாம் எனவும், இதன் மூலம், உயர்நீதிமன்றத்தை சுற்றி வரும் அவஸ்தை இல்லாமல் ஒரே இடத்தில் பயணிகளுக்கு எல்லா பஸ்களும் கிடைக்கும் எனவும் தெரிவித்து இருந்தேன். (இதே முறையிலான திட்டம் பின்னர் பெங்களூரு சாந்தி நகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்டது)
ஒரு ஆர்வக்கோளாரில் அப்படி ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைத்தேனே ஒழிய அது கண்டுகொள்ளப்படும் என்கிற நம்பிக்கை எல்லாம் எனக்கு அப்போது இல்லாமல் இருந்ததால், நானும் என் வேலையுமாய் அப்படியே இருந்துவிட்டேன்.
‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’க்கு நான் கடிதம் அனுப்பிய மூன்று மாதம் கழித்து எனக்கு ‘பல்லவன் போக்குவரத்து கழக பொது மேலாளரிடமிருந்து’ ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதம் தான் நீங்கள் இங்கே பார்ப்பது. கடிதத்தை படித்ததுமே எனக்கு விஷயம் புரிந்துவிட்டது.
எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தது.
இந்த மூன்று மாதங்களில், என் கடிதத்தின் அடிப்படையில் பல பல உயர்நிலை கூட்டங்கள் நடந்திருப்பதை கடிதத்தின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கடிதங்கள் குறித்த குறிப்புகள் எனக்கு உணர்த்தின.
எவ்வளவு விரைவாகவும், அக்கறையாகவும் முக்கியத்துவம் கொடுத்தும் எனது கடித விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்த பொழுது, ஜனநாயகத்தின் வலிமை கண்டு, அரசின் பொறுப்புணர்வு அறிந்து, நான் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்று விட்டேன்.
ரத்தின சுருக்கமாக சொல்கிறேன்.
1. நான் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பியது 28.04.1994.
2. முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது 09.05.1994.
3. பின்னர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தையும் இதில் ஆலோசித்து இருக்கிறார்கள்.
4. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து அதற்கான வரைவு திட்டத்தையும் அரசிடம் சமர்ப்பித்து இருக்கிறார்கள்.
5. இவை எல்லாம் முடிந்து பல்லவன் போக்குவரத்து கழக பொது மேலாளர் மூலமாக எனக்கு கடிதம் அனுப்பட்டது 31.07.1994
இத்தனையும் மூன்று மாத காலங்களுக்குள் நடைபெற்று முடிந்திருக்கிறது என்பதை விட எனக்கு மகிழ்ச்சி அளிப்பது, அப்படி எடுக்கப்பட நடவடிக்கைகளை உடனடியாக முறைப்படி எனக்கு அறிவித்தது தான்.
பின்னர் சில மாதங்கள் கழித்து ‘புறநகர்’ என குறிப்பிடப்பட இடத்துக்காக வண்டலூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக கோயம்பேட்டில் ஒருங்க்கிணைந்த மத்திய பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுத்திருப்பதாக மற்றுமொரு கடிதம் அனுப்பி தெரிவித்து இருந்தார்கள்.
1996 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்தபோது, முந்தைய அதிமுக அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றத்தையும் வருத்தாமல் திட்டமிட்டபடி அதே இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்து அதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
நிகழ்ச்சி நடத்துவதற்காக அங்கே இருந்த முள்ளு காடுகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வந்ததை அந்த வழியே செல்லும்போதெல்லாம் கவனித்து வருவேன். பூமி பூஜை நடைபெற்ற பொழுது, பக்கத்திலிருந்த மெட்ரோ வாட்டர் நீரேற்று நிலைய சுற்று சுவர் மதில்மீது அமர்ந்து தூரத்தே நடந்த அந்த பெரும் நிகழ்வை எட்டி எட்டி பார்த்த தருணத்தில் என் மனதில் பொங்கிய மகிழ்ச்சியின் அளவையும் பெருமிதத்தையும் வார்த்தைகளால் வருணிக்க முடியாது.
இப்போதும் சிலர், கோயம்பேடு பேருந்து நிலையம் திமுகவின் திட்டம் என சொல்லும் பொழுது மெல்ல எனக்குள்ளே நகைத்துக்கொள்வதுண்டு.