Saturday, November 8, 2014

சமூக நீதிக்கு வந்த சோதனை.


சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவையில்லை என்று நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடியான பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதன் தாக்கங்கள் மிக அதிகமாக பாதிக்க போவது நமது தமிழகத்தை தான். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இதுவரையும் எந்த கருத்தையும் நமது அரசியல் கட்சியினர் வெளியிடாமல் இருப்பது ஆச்சரியம்.


2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எலிபி தர்மாராவ் அவர்கள் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், சென்னை வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களது மனுவை விசாரித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. அதாவது, “1933 ஆம் ஆண்டு சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் அடிப்படையில் தான் இதுவரையும் இடஒதுக்கீடும் பிற்பட்டோருக்கான இதர சலுகைகளும், நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வந்தது. எனவே இப்போதைய சூழலை கருத்தில் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான தகவல்களையும் சேகரித்தால் தான் தற்போதைய விகிதாச்சார அடிப்படையில் அவர்களுக்கான சலுகைகளை கூட்டியோ குறைத்தோ வழங்க முடியும்” என்பது தான் கிருஷ்ணமூர்த்தியின் மனுவின் சாராம்சம்.


இந்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி எலிபி தர்மாராவ் அவர்கள், மத்திய அரசு சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என உத்தரவிட்டார்.


அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பொறுப்பு வகித்த மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சாதிவாரியான விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டு, கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் கணக்கெடுப்பு நடந்து வந்தது.


சென்னை உயர்நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு என்னை பொறுத்த வரையில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இதன்படி, இப்போது நாம் ஊகத்தின் அடிப்படையில் வழங்கி வரும் நலத்திட்டங்களும், உதவிகளும், ஒதுக்கீடு விகிதாச்சாரங்களும் சரியானவை தானா என நம்மை நாமே ஆய்வுக்குட்படுத்த இந்த கணக்கெடுப்பு உதவும். இத்தனை காலங்களில் எந்தெந்த இனம் வளர்ந்து விகிதாச்சார மாறுதல்களை அடைந்திருக்கிறது என உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களுக்கான ஒதுக்கீடு, நலத்திட்ட உதவிகளை அதற்கு தக்கவாறு திருத்தி அமைக்க இந்த கணக்கெடுப்பு உதவும். எனவே சமுதாய ஏற்ற தாழ்வு நிலையையும், மாறி வரும் விகிதாச்சாரத்தையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கான முறையான உதவிகள் கிடைக்கும்.


ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் 2010 ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு நேற்று உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக வலிமையானவை, வருத்தம் தரக்கூடியவை.


அதாவது, இந்த அரசின் இப்போதைய கொள்கை முடிவின் படி, சாதிவாரியான கணக்கெடுப்பு தேவை இல்லை என மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறது. அந்த வாதத்தின் அடிப்படையில் நீதிபதிகள் 2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன், மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான விவரங்கள் தேவையில்லை எனவும் தீர்ப்பளித்திருக்கிறது..

இது மிகவும் வருத்தமான விஷயம் தான்.


இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான கருத்தினை கொண்டிருப்பது பா.ஜ.க என்பது அதன் தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக சொல்லி இருக்கிறது. இப்போது விகிதாச்சார விவரங்களை கணக்கெடுக்க தேவையில்லை என சொல்லியிருப்பதன் மூலம், நாம் கடந்த 1933 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படியான விகிதங்களில் தான் தொடர்ந்து இட ஒதுக்கீட்டையும், நல திட்டங்களையும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ள பட்டிருக்கிறோம்.


கடந்த 80 ஆண்டுகளில் பல பல இனங்களில் ஏற்ற தாழ்வுகளும், கலைஞர் கொண்டுவந்த கலப்புமண சட்டத்தின் படியான புதிய இனங்களும் பெருகியும் சிறுகியும் ஆனபின், இப்போது இனங்களின் உண்மையான நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. வகுப்புவாரி கணக்கெடுப்பு நடத்தினால் ஒழிய ஒவ்வொரு இனத்துக்குமான சரிவிகித ஒதுக்கீடும் உதவிகளும் கிடைக்காது என்பது தெளிவு. .

எனவே, வழக்கறிஞர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பை எதிர்த்து செய்யும் மேல் முறையீட்டில் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோருக்காகவும் சமூக நீதிக்காகவும் நெடுங்காலமாக குரல்கொடுத்துவரும் தமிழக அரசியல் கட்சிகள் தங்களையும் இணைத்து கொண்டு, நேற்றைய தீர்ப்பை மறு ஆய்வுக்குட்படுத்தி சென்னை உயர்நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கும், அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களது உத்தரவுக்கும் உரிய அங்க்கீகாரத்தை பெற்று தரவேண்டும் என்பது எனது ஆவல்.

நடக்குமா என்பது தெரியவில்லை.


No comments:

Post a Comment

Printfriendly