Thursday, October 30, 2014

கருப்பு பணம் எனும் ஒரு கலாட்டா காமடி


நேற்றைய தினம் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் 627 பெயர்கள் கொண்ட பட்டியலை சமர்ப்பித்தது தான் இன்றைய தலைப்பு செய்தி.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான திரு ராம் ஜெத் மலானி கருப்பு பணம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தான் மத்திய அரசு இந்த பட்டியலை நேற்று தாக்கல் செய்தது.

ராம் ஜெத் மலானி தீவிர தேசியவாதி என்பதும், ஊழல் கருப்புப்பணம் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையாக போராடியவர் என்பதும், பொதுவாழ்க்கையிலும் அரசிலும் நிர்வாகத்திலும் தூய்மையை வலியுறுத்துபவர் என்பதும் நமக்கெல்லாம் தெரிந்ததே (அதனால் தான் ஜெ. வழக்கில் அவரை வாதாட வைத்து உள்ளே தள்ளியதா அதிமுக? என்றெல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்காம மேல படிங்க)

கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கின்ற இந்தியர்களின் பட்டியலை அந்தந்த நாடுகளிடம் கேட்டும் இதுவரை நமக்கு எந்த பட்டியலும் கிடைக்கவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் திருட்டுத்தனமாக வெளியிட்ட ஒரு பட்டியல் தான் இதுவரையும் நம்மிடம் உள்ள ஒரே பட்டியல். அந்த பட்டியலும் 2006ஆம் ஆண்டில் அந்த வங்கியில் இருந்த கணக்குகளின் பட்டியல். அந்த பட்டியல் உண்மையானதா என்றும் யாருக்கும் தெரியாது. ஏனெனில் அது அதிகாரப்பூர்வமான பட்டியல் அல்ல. எந்த அரசும் நம்மிடம் அதிகாரப்பூர்வமாக தரவில்லை. ஏதோ ஒரு தனிநபர், திருட்டுத்தனமாக வெளியிட்ட ஒரு பட்டியல் தான். அதை அவரே கூட தயாரித்திருக்கலாம் என்கிற ஒரு சந்தேகமும் உள்ளது.

இந்த பட்டியல் இந்தியாவிடம் 2011 ஆம் ஆண்டு கிடைத்தபோது அது ஆதாரமற்ற அதிகாரப்பூர்வமற்ற பட்டியல் என்பதாலேயே சட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு அதனை வெளியிடாமல் அந்த பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து வந்தது. எல்லா நாடுகளுக்கும் இது பற்றி மிக கடுமையாக அப்போது ப. சிதம்பரம் அவர்கள் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், எந்த நாடும் நமக்கும் போதுமான ஒத்துழைப்பை இதுநாள் வரை வழங்கவில்லை.

இந்நிலையில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவந்து இங்குள்ள மக்களுக்கு ஆளுக்கு ரூ.3 லட்சம் இனாமாக தருவோம் என்கிற கவர்ச்சி முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்தது பாஜக.

வழக்கு சூடு பிடித்ததும், உச்ச நீதிமன்றம் போட்ட கிடுக்கி பிடியில் மூன்று பேரின் பட்டியலை முதலில் தாக்கல் செய்தது மத்திய அரசு. (அதில் சிமான்லால் தனக்கு வெளிநாட்டில் அக்கவுண்டே இல்லை என விளக்கம் கொடுத்திருப்பது தனி கதை) அந்த மூன்று பேர் பட்டியலை பார்த்ததும் கடுப்பான உச்ச நீதிமன்றம் 800 பேர் கொண்ட பட்டியலை முழுமையாக வெளியிட வேண்டும்னு கண்டிப்பா மத்திய அரசுக்கு உத்தரவு போட்டது.

மத்திய அரசு முழு பட்டியலையும் வெளியிடவேண்டும் என காங்கிரசும் வலியுறுத்தியது. அவர்கள் வலியுறுத்துவதிலிருந்தே அவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் இந்த பட்டியலில் இல்லை என்பதும், மத்திய அரசு வெளியிட தயங்கியதில் இருந்தே அவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் இருக்க கூடும் என்பதும் பரபரப்பை கூட்டியது. உச்சநீதிமன்றத்தில் எத்தனையோ விளக்கங்கள் சொல்லியும் உச்சநீதிமன்றம் அதை ஏற்று கொள்வதாக இல்லை. 24 மணி நேரத்துக்குள் முழு பட்டியலையும் வெளியிட்டாக்கவேண்டும் என கண்டிப்பாக உத்தரவிட்டது.

அதனடிப்படையில் தான் இந்த 627 பேர் பட்டியலை நேற்று தாக்கல் செய்தது மத்திய அரசு. மீதமுள்ள 173 பேரை எதற்காக காப்பார்ருகிறார்கள் என்பதெல்லாம் உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.

சரி, உச்ச நீதிமன்றம் அந்த பட்டியலை என்ன செய்தது?

அது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அந்த பட்டியலை அனுப்பி வைத்துவிட்டது. இதில் காமெடி என்னவென்றால், இந்த 627 பேர் பட்டியல் பல காலமாக அதே சிறப்பு புலனாய்வு குழுவிடம் இருக்கிறது என்பது தான். இப்போது இன்னொரு காப்பி உச்ச நீதிமன்றம் மூலமாக வந்திருக்கிறது. அவ்வளவு தான்.

சரி. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

காங்கிரஸ் அரசிடம் இருந்த அதே பட்டியலை தான் இப்போதும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

அது அதிகாரப்பூர்வ பட்டியலும் அல்ல. யாரோ ஒரு தனி நபர் கொடுத்த திருட்டு பட்டியல். அந்த பட்டியலும் 2006 ஆம் ஆண்டு கணக்கு வைத்திருந்தவர்களை பற்றியது. அதிலும் 173 பேர் பெயரை மத்திய அரசு காப்பாற்றுகிறது.

ஆக மொத்தம் மத்திய பா.ஜ.க அரசு கருப்பு பண விஷயத்தில் உருப்படியாக எதையுமே செய்யவில்லை என்பதோடு, வெற்று விளம்பர பரபரப்புக்காக எதை எதையோ செய்ய முயன்று கொட்டு வாங்கி விழி பிதுங்கி நிற்கிறது.

இனியும் இந்த வழக்கில் நிறைய சுவாரசியமான காமெடிகள் காத்திருக்கிறது. பொதுவாழ்வில் தூய்மை என்பதை நோக்கி பயணிக்கும் ராம்ஜெத்மலானி அவ்வளவு லேசில் இதை விடமாட்டார் என நம்புவோமாக.1 comment:

  1. ஐயையோ ... நீங்க சொல்றத பார்த்தா அந்த 15 லட்சம் (மோடி அவர்கள் தலைக்கு 15 லட்சம் தானே சொன்னார். உங்கே 3 லட்சம் எங்கே இருந்து வந்தது) என்னக்கு இல்லையா? சொக்கா... சோமநாதா... அய்யய்யோ,, 15 லட்சம்... எனக்கு இல்லை,, எனக்கு இல்லை.,,

    ReplyDelete

Printfriendly