Thursday, December 11, 2014

நகைக்கடையும் இந்திய பொருளாதாரமும்


மீபத்தில் நண்பன் நகை வாங்க துணைக்கு கூப்பிட்டதால் அவனுடன் ஒரு புகழ்பெற்ற நகைக்கடைக்கு போகவேண்டியதாச்சு.

நகை வாங்கியபின் ஒரு சீட்டு கொடுத்தாங்க. அதில் நகையின் எடை, விலை, கூலி, சேதாரம் எல்லாம் கணக்கு போட்டு பணத்தை கட்ட சொன்னாங்க. பில் கிடையாது. பில் போட்டா டேக்ஸ் வரும் அதனால வேண்டாமேன்னு கடைக்காரனே ரொம்ப அக்கறையா சொன்னான். அப்படியும் நம்ம நண்பர் விடாம பரவாயில்லை பில்லே போடுங்கன்னு சொன்னதும் ஒரு பில் பிரிண்ட் அவுட் கொடுத்தாங்க. அது ஆக்சுவல்லா பில்லே அல்ல. ஒரு எஸ்டீமேட். திரும்பவும் பொலைட்டா சொல்லி எங்களுக்கு எஸ்டீமேட் வேண்டாம் டேக்ஸ் பில் கொடுங்கன்னு சொல்லி வாங்கிட்டு வந்தோம்.

இது பத்தின விரிவான விவாதம் அன்னைக்கு ரா முச்சூடும் எங்களுக்குள்ளே ஓடிச்சு. அதன் சில துளிகள் இங்கே.

இன்னைய தேதியில் மளிகைக்கடைகளுக்கு அடுத்தபடியா மிக பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்வதும் கருப்புப்பண பரிவரத்தனை நடப்பதும் நகைக்கடையில் தான்.

மிக அதிக தொகையில் வியாபாரம் ஆனாலும் அதை அரசுக்கு அவங்க கணக்கு காட்டுறது கிடையாது. என்னா ஜஸ்ட் ஒரு துண்டு சீட்டில் கணக்கெழுதி காமிச்சிட்டு காசு வாங்கிடுவாங்க. சிலர் கொஞ்சம் புரஃபஷணலா, பிரிண்ட் செய்த மெமோ சீட்டில் எழுதி தருவாங்க. பெரிய கடைகளில் இன்னும் ஒரு படி மேலே போய், பிரிண்டடு பில் மாதிரியே இருக்கும் எஸ்டீமேட் தருவாங்க. அதில் டாக்சும் போட்டிருப்பாங்க. ஆனா இதை எதுவும் அரசாங்கத்தின் விற்பனை வரி கணக்குக்கு சமர்பிக்க மாட்டாங்க. டாக்ஸ் பில் / டாக்ஸ் இன்வாய்ஸ் போட்டா மட்டும் தான் கணக்கு காட்டி அதுக்கான வரி கட்டனும். டாக்ஸ் இன்வாய்ஸ் போடாம எஸ்டீமெட்டிலேயே வரி வசூலிச்சாலும் அதை அரசுக்கு கட்டமாட்டாங்க. என்னா அது வெறும் எஸ்டீமேட் தான். அந்த வரி அவங்களுக்கு கூடுதல் லாபம்.

தங்கம் இறக்குமதி செய்ய மத்திய அரசு நிறைய கட்டுப்பாடுகளை விதிச்சிருக்கு. அதனால இறக்குமதி குறைவு. அதே சமயம் பல்வேறு வழிகளில் தங்கம் இந்தியாவுக்கு கணக்கில் காட்டாமல் கொண்டு வரப்படுது. இப்படி கொண்டு வரப்படும் தங்கத்தின் அளவு அரசுக்கு தெரியாது. அதனால அதன் மூலமா கிடைக்கக்கூடிய சுங்க வரி அரசுக்கு கிடைக்கறதில்லை.

இப்படி கொண்டு வரப்படும் தங்கம் நகைகளா சிறு சிறு பட்டறைகளில் செய்யப்பட்டு பெரிய நகைக்கடைகளுக்கு விற்கப்படுது. மிக அதிக விலையுள்ள இந்த நகைகளை செய்யும் பட்டறைகள் அதுக்கான சேவை வரியையும் செலுத்தறது கிடையாது. பல பட்டறைகள் முறையா பதிவு கூட செய்யப்படுறதில்லை.

நகை கடைகளை பொருத்தவரைக்கும், கணக்கில் வராமல் கிடைக்கும் தங்கத்தை கணக்கில் காட்டாம தானே வித்தாகனும்? தங்கம் விற்பனைக்கு அரசாங்கம் வரி விதிக்குது. அதனால நகை விற்கும்போது அதுக்கு டேக்ஸ் பில் போட்டு அதுக்குண்டான வரியை அரசாங்கத்துக்கு கட்டணும். அதுல ஒரு சிக்கல் இருக்கு.

கணக்கு காட்டி வாங்கிய நகைகளை விட கணக்கில் காட்டாம வேறு வழிகளில் வாங்கிய நகைகள் அதிகமா இருக்கும் பட்சத்தில், அதை வித்ததா கணக்கு காட்டினாலும் மாட்டிப்பாங்க. அந்த நகை எப்படி கிடைச்சுதுன்னு விளக்கம் சொல்ல முடியாம போகுமே. அதனால் ஒரு சின்ன உபாயம் பண்ணுறாங்க.

முடிஞ்ச வரைக்கும் நகையை பில் இல்லாமல் விற்பது. பில் கேட்டாலும் பில்லுக்கு பதிலா எஸ்டீமேட் மட்டும் போட்டு வித்துடுறது. ரொம்ப விவரம் தெரிஞ்சு வற்புறுத்தி கேக்குறவங்களுக்கு மட்டும் பில் போட்டு தர்றது. இதன் மூலம் கணக்கில் வராத தங்கத்தை கணக்கில் வராமலேயே வித்துர முடியும். கணக்கில் காட்டிய தங்கத்தின் ஸ்டாக்கை அடிப்படையா வெச்சு அது மட்டும் தான் வித்துதுன்னு கணக்கு காட்டி அதுக்கு மட்டும் வரிக்கட்டினா போதும்.

சரி, இதில் நமக்கென்ன பிரச்சனை? ஒண்ணும் இல்லை. அரசாங்கத்துக்கும் இந்திய பொருளாதாரத்துக்கும் தான் பிரச்சனை.

உதாரணத்துக்கு ஒரு கடையில் ஒரு மாசத்துக்கு ரெண்டு கோடிக்கு நகை விற்பனையாகுதுன்னு வெச்சுக்குவோம். இதில் அம்பது லட்ச ரூபாய்க்கான நகை மட்டும் தான் முறைப்படி வாங்கப்பட்டிருந்தா, அந்த அம்பது லட்ச ரூபாய்க்கான நகை விற்பனைக்கு மட்டும் தான் அரசுக்கு கணக்கு காட்டி வரி கட்டுவாங்க. பாக்கியுள்ள ஒன்னரை கோடி ரூபாய் நகைக்கு வெறும் துண்டு சீட்டு / மெமோ / எஸ்டீமேட் போட்டு சமாளிச்சிருப்பாங்க. அதனால் அதுக்கு கணக்கும் காட்டாம வரியும் கட்டாம விட்டிருவாங்க. அதெல்லாம் அவங்களுடைய லாபம். புது புது பிரமாண்ட கடைகள் தொடங்குவதற்கான முதலீடு. நமக்கு அதனால எந்த நஷ்டமும் இல்லை.

ஆனா அரசாங்கத்தின் பார்வையில், அந்த ஒன்னரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வாங்கும்போது செலுத்தி இருக்க வேண்டிய சுங்க வரியும், விற்கும் போது கட்டி இருக்க வேண்டிய விற்பனை வரியும் மொத்தமா நஷ்டம். ரெண்டு கோடி ரூபாய் வியாபாரத்துல அம்பது லட்சத்துக்கான வரி தான் வந்திருக்கு. இது ஜஸ்ட் உதாரணத்துக்கு சொன்னது. அப்படின்னா, நாடு முழுதும் எத்தனை நகை கடை, எத்தனை வியாபாரம், எத்தனை வரி ஏய்ப்பு அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் பெருத்த இழப்பு எல்லாம் எவ்வளவுன்னு நீங்களே யூகமா ஒரு கணக்கு போட்டு பார்த்துக்கோங்க, தங்கம் விலை ஏன் தாறுமாறா ஏறுதுன்னு புரியும்.

சேதாரத்துக்கான தொகை வாங்குறதே தவறுங்கறது மற்றுமொரு பெரிய விஷயம. சேதாரத்துக்கு தொகை வாங்கினா அந்த சேதார தங்கத்தை நம்ம கிட்டே கொடுக்கணும். அப்படி கொடுக்கலைன்னா சேதார தொகை கொடுக்கவேண்டியது இல்லை, என்றாலும் கூட அதுக்கெல்லாம் சண்டை போட்டுட்டு இருக்க நம்ம கவுரவம் இடம் கொடுக்காது என்பதால் பேசாம வந்துடுறோம். இது கடைக்காரங்களுக்கான டபுள் தமாக்கா.

பத்து கிராம் நகை வாங்கி அதில் சேதாரம் 7% னு வெச்சுக்கோங்க, அது கிட்டத்தட்ட 0.7 கிராம். அதுக்கான தொகையை நம்ம கிட்டே வாங்கிருவாங்க. அந்த 0.7 கிராமை நம்ம கிட்டே தரவும் மாட்டாங்க. அந்த 0.7 கிராமை மற்றொரு நகையில் போட்டு அதையும் வித்து காசாக்கிருவாங்க.

விடுங்க. நான் என் நண்பர் கிட்டே சொன்னது இது தான்.

ஜஸ்ட் எப்ப நகை வாங்கினாலும், அல்லது எந்த பொருளை வாங்கினாலும் அதுக்கான முறையான பில்லை போட்டு வரி கட்டி வாங்கு. அதெல்லாமே கணக்கில் வரும். அரசுக்கும் வரி வருவாய் உயரும். கணக்கில் காட்டாத கருப்பு பண பரிமாற்றம் குறையும். ஆட்டோமேட்டிக்கா விலைகள் குறையும். நம்ம பொருளாதாரம் சீர்படும். மறைமுகமா நம்ம வாழ்க்கைத்தரம் உயரும்.

வரி அதிகமெல்லாம் கிடையாது. குறைந்தபட்சம் 1% லருந்து அதிகபட்சம் 14.5% தான். பொருளுக்கு பொருள் மாறுபடும். டாஸ்மாக் சரக்கை 58% வரி கட்டி வாங்க தயாரா இருக்கிற நமக்கு அத்தியாவசிய பொருளுக்கு 14.5% வரி கட்டி வாங்க எந்த தயக்கமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

முதல்வன் படத்துல அர்ஜூன் சொன்ன அதே கருத்து தான். ஆனா, இப்ப பொருளாதார நிலையும் பணவீக்கமும் விலையேற்றமும் உச்சத்தை நோக்கி போயிட்டிருக்கிறதுக்கு நாமளும் முக்கிய காரணம்னு தெரிஞ்சப்பறமும் சுதாரிச்சு திருந்தலைன்னா நல்லாருக்காதுல்ல? டிரை பண்ணி பார்ப்போமே?

அட்லீஸ்ட் சமூக இணைய தளங்களில் விலையேற்றம், பொருளாதார பணவீக்கம், கருப்புப்பணம் பத்தியெல்லாம் அறச்சீற்றம் செய்யும்போது உறுத்தாமலாவது இருக்கும்ல?

2 comments:

  1. அற்புதமான பார்வை மற்றும் பதிவு. வாழ்த்துகள்

    ReplyDelete

Printfriendly