Friday, December 26, 2014

பாஜக - அது வேறே வாய்

போன மே மாசம் பாராளுமன்ற தேர்தல் வந்தப்போ மக்கள் கிட்டே இருந்த ஒரே ஒரு எதிர்பார்ப்பு, நமக்கெல்லாம் இனி விடிவு காலமே வராதாங்கறது தான். அந்த அளவுக்கு காங்கிரஸ் மக்களை நோக்கடிச்சதா பெரிய பிரச்சாரம் எல்லா மீடியாக்கள் மூலமாவும் பரப்பப்பட்டிருந்தது.

வராது வந்த மாமணியா வந்தாரையா நரேந்திர மோடி.


குஜராத்தை முன்னேற்றிய (?) அபரிமிதமான நிர்வாகத்திறமை மிகுந்த மோடி கிட்டே இந்த நாட்டை கொடுக்காம போனா நாடு நாலே மாசத்துல நாசமாயிருங்கற லெவலுக்கு பிரச்சாரம் தூள் பறந்துச்சு.

குஜராத் எனும் மாநிலத்தை கட்டி ஆள்றது வேறே, பரந்துபட்ட இந்தியாவை அதன் சிறப்பு கெடாம ஆள்றது வேறெங்கற அடிப்படை விஷயத்துல கூட கவனம் செலுத்த முடியாத படிக்கு மோடி புகழ் பரப்பல்கள் இருந்தது


ஒருவழியா அறுதிப்பெரும்பான்மையையும் மீறி இமாலைய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைச்சாரு மோடி


ஏற்கனவே அவர் மேலே நிறைய குற்றச்சாட்டு இருந்தாலும், காங்கிரஸ் நமக்கு செஞ்சதா நம்பப்பட்ட துரோகத்துக்கு பழி வாங்கணும்ங்கற வெறியில் இருந்த மக்கள், அள்ளி அள்ளி கொடுத்த வோட்டுக்கான இப்போதைய மரியாதை என்னன்னு லைட்டா ரிவைண்ட் பண்ணி பார்க்கலாமா.


ரெண்டு கொசுவர்த்தியை கண்ணு முன்னாடி சுத்தவுட்டு, பாஜகவின் தேர்தல் பிரச்சார காலத்துக்கு போனா, பிரச்சாரத்தில் கேட்டதிலெல்லாம் தவறாம இடம்பிடிச்சிருந்ததில் இதெல்லாம் இருக்கு:


1. நடுத்தர வர்க்கத்தை சந்தோஷப்படுத்த வருமான வரியை முற்றிலுமா ஒழிப்போம்
2. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணத்தை மீட்டு கொண்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் இனாமா கொடுப்போம்
3. அந்நிய முதலீட்டை தடுப்போம்.
4. சுதேசி திறமைகளை ஊக்குவிப்போம்
5. தொழில் துறையை மேம்படுத்துவோம்
6. பாகிஸ்தானுக்கு பயப்படமாட்டோம். இந்தியாவின் ஒரு உயிர்மீது கைவைத்தாலும் பாகிஸ்தானுடன் போர் புரிவோம்
7. இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவோம்
8. அரசியலில் கிரிமினல்களை அனுமதிக்கமாட்டோம்
9. ஊழலை அடியோடு அகற்றுவோம். ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கரம் கொடுக்கமாட்டோம்.
10. ஸ்பெக்டிரம் நிலக்கரி சுரங்கம் போன்ற பொது ஒதுக்கீடுகளை ஏல முறையில் வெளிப்படையாக விற்போம்
11. திறமையான வெளிப்படையான நிர்வாகத்தை அமைப்போம்.


சூப்பரா இருந்துச்சுல்ல? ஆங்... இதை நம்பித்தான் மொத்த மக்களும் ஓட்டு போட்டாங்க.


இதுல அவங்க கொடுத்த நம்பிக்கை என்னென்னா, இதை எல்லாத்தையும் நூறு நாளுக்குள்ளே நிறைவேத்துவோம்ன்றது தான்.




இப்ப ஆட்சி அமைச்சு இருநூறு நாளுக்கு மேல ஆயிருச்சுல்ல? ரிவியூ என்னன்னு பார்க்கலாமா?



1. வருமான வரியை ஒழிக்க முடியாது. அது நாட்டுக்கு சரிப்படாதுன்னு பட்டவர்த்தனமா சொல்லிட்டாங்க. அட்லீஸ்ட் வருமான வரி உச்ச வரம்பையாவது அஞ்சு லட்சமா உயர்த்துவாங்கன்னு எதிர்பார்த்தா அதுவும் முடியாதுன்னுட்டாங்க. ரிசர்வ் வங்கியின் CRR கொள்கையில் கூட எந்த மாற்றத்தையும் கொண்டு வரலை. கேட்டா, அதெல்லாம் காங்கிரஸ் கொண்டு வந்த கொள்கைகள், அதை மாற்ற விரும்பலைன்னு சொல்லிட்டாங்க.


2. கருப்பு பண மேட்டர்ல அடிச்ச அந்தர் பல்டிகள் தனியா பதிவு எழுதற அளவுக்கு காமெடியானது. உச்ச நீதிமன்றமே கடுப்பாகி கடுமையான உத்தரவு போட்டப்பறம் “எங்க கிட்டே கருப்பு பண லிஸ்டே இல்லை. 2006 ல் HSBC லருந்து திருட்டு தனமா லீக் ஆன அதிகாரப்பூர்வமற்ற லிஸ்ட் மட்டும் தான் இருக்கு. அதுலயும் முக்காவாசி அக்கவுண்ட்ல பத்து பைசா கூட இல்லைன்னு” பவ்யமா சொல்லிருச்சு. அதோட விட்டாங்களா? கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளுடன் போட்டுகிட்ட தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்துலருந்தும் திடீர்னு விலகிட்டாங்க. இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதைச்சாச்சு. இதுபத்தி கேட்டதுக்கு, வெளிநாட்டு கருப்பு பணத்தை விடுங்க. உள்நாட்டுலேயே நிறைய கருப்பு பணம் இருக்கு. அதை முதலில் கண்டுபிடிப்போம்னு பல்டி அடிச்சாங்க. ஆனா பாருங்க, ஊழல் கருப்பு பணத்தை பாதுகாக்க வசதியா இருந்த கிசான் விகாஸ் பத்திரத்தை 2007 ஆம் வருஷம் ரத்து பண்ணினாங்கல்ல, அதை மீண்டும் கொண்டு வந்திருக்காங்க. இது ஊழலையும் அதன்மூலம் கிடைக்கும் கருப்புப்பணத்தையும் ஊக்குவிக்க வசதியான விஷயம்கறதை தெரிஞ்சும் கிசான் விகாஸ் பத்திரத்தை கொண்டுவந்திருக்காங்க. கருப்பு பணத்தை ஒழிக்கப்போறாங்களாம் (!)


3. அந்நிய முதலீட்டு திட்டத்தை காங்கிரஸ் கொண்டுவந்தப்பல்லாம் ஒரு மணிநேரம் கூட பார்லிமெண்டை நடக்கவிடாம முடக்கி வெச்சப்போ பாஜக சொல்லிச்சு, இந்திய தொழில்களை அன்னியருக்கு கொடுக்கக்கூடாது. இந்தியாவை விக்க போறீங்களான்னு கூட கேட்டாங்க. ஆனா காங்கிரசாவது முதலீட்டு தேவைக்காக 25% அனுமதிச்சாங்க. அதிலும் அதிக முக்கியத்துவமில்லாத துறைகளில் தான் அனுமதிச்சாங்க. சில்லறை விற்பனையில் அனுமதிக்கற ஐடியா வந்தப்பவே பாஜக கடுமையா எதிர்த்துச்சு. ஆனா இப்ப என்னடான்னா, மருத்துவம், கல்வி, வியாபாரம்னு எல்லாத்துலயும் அந்நிய முதலீட்டை அனுமதிச்சிருக்காங்க. அதுவும் 100% வரை. இன்னும் ஒரு படி மேலே போய் ராணுவம், ராணுவ தளவாடங்கள், ரயில்வே போன்ற முக்கியமான சென்ஸிடிவான துறைகளில் கூட அந்நிய முதலீடு. சூப்பருல்ல?


4. மேக் இன் இந்தியா மேட் இன் இந்தியான்னு ஒரு வாசகத்தை உருவாக்கி எல்லா முதலீட்டாளர்களையும் ஈர்க்க ஆரம்பிச்சப்போ நான் கூட சந்தோஷப்பட்டேன். இனி சுதேசி இயக்கம் மீண்டும் வலுப்பெரும்னு. ஆனா விசாகப்பட்டிணம் மாஸ்டர் பிளான், டெல்லி சென்னை புல்லட் ரயில் மாதிரி நம்ம ஆளுகளே செய்ய கூடிய திட்டங்களை கூட வெளிநாட்டுகிட்டே ஒப்படைச்சிருக்காங்க. மேக் இன் இந்தியானா இந்தியர்களின் தயாரிப்பு இல்ல. வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் வெச்சு உற்பத்தி செய்யும் பொருட்கள்னு ஒரு புது வியேக்கியானத்தை வேற கொடுத்து நம்மை ஷாக் அடிக்கிறாங்க.


5. இந்த நிமிஷம் வரைக்கும் புதிய பொருளாதார கொள்கையோ, தொழில் கொள்கையோ வெளியிடலை. இந்த அரசின் தொழில் கொள்கை என்னன்னு தொழில் துறைக்கும் தெரியலை, தொழில் துறை அமைச்சருக்கும் தெரியலை. போன காங்கிரஸ் ஆட்சியின் தொழில் கொள்கையே அபாரமா இருக்கரதாலேயோ என்னவோ அதையே இன்னும் தொடர்ந்து பயன்படுத்த சொல்லி உத்தரவும் போட்டிருக்காங்க. 2013 ஆம் வருஷம் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட ‘பொருளாதார மேம்பாட்டுக்கான பத்து கட்டளைகள்’ பக்காவா பலன் கொடுக்க ஆரம்பிச்சிருக்கறதை புரிஞ்சுகிட்ட பாஜக, அதை அப்படியே தீவிரமா அமல்படுத்தி வர்றாங்க. ஆனா இந்த விஷயத்தில் மட்டும் ‘அது காங்கிரஸ் திட்டம்னு’ சொல்லாம மோடியின் திட்டம்னு கிரெடிட் எடுத்துக்காராங்க. என்னமோ போங்க நாடு நல்லா இருந்தா சரி.


6. காங்கிரஸ் ஆட்சியில், பாகிஸ்தான் அத்து மீறி நுழைஞ்சு இந்திய ராணுவ வீரர்கள் ரெண்டு பேர் தலையை வெட்டி எடுத்துட்டு போனப்போ பாஜக கொந்தளிச்சிருச்சு. இதே இந்நேரம் நாங்களா இருந்திருந்தா பாகிஸ்தானை நிர்மூலமாக்கி இருப்போம். காங்கிரஸ் அரசாங்கம் பயந்தாங்கொள்ளி. ஆனா மோடிக்கு 56 இன்ச் மார்பு இருக்கு. அதனால அவர் தான் வீரர். எங்ககிட்டே ஆட்சியை கொடுத்து பாருங்கன்னு சொன்ன பாஜக ஆட்சியில் இப்ப தினம் பீரங்கி தாக்குதல் தான். சாப்பாடு பார்சல் கட்டிட்டு வந்து கண்டிநியூவா அடிக்கிறான். அதை விட கொடுமை ஒரே நாளில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைஞ்சு 23 பேரை கொன்னுட்டு போயிருக்காங்க. இந்தியா என்ன பண்ணுச்சா? கோபமா முறைக்க கூட தெம்பில்லாம ஒரு கடுதாசியை தட்டி விட்டாங்க. காங்கிரஸ் அட்லீஸ்ட் பாக், தூதரை சம்மநனுப்பி கூப்பிட்டு மிரட்டியாவது அனுப்பிச்சாங்க. இவங்க பம்மிட்டு இருக்காங்க. தீவிரவாதிகள் ஊடுருவல் நடக்க வாய்ப்பிருந்தாலே விமானப்படையை உசுப்பேத்தி தயார்ப்படுத்தி எல்லையில் ரோந்து அனுப்பி அவங்களை லைட்டா பயப்படுத்திட்டு இருந்த காங்கிரஸை கிண்டல் பண்ணினவங்க, இப்ப சமீபத்தில் பரூச், ராஜோரி செக்டார்ல அத்து மீற 200 தீவிரவாதிகள் முகாமிட்டிருக்கிற தகவல் தெரிஞ்சதும் அதிரடியா நடவடிக்கை எடுத்தாங்க. எதுக்கு? மக்களை எல்லாம் அங்க்கிருந்து காலி பண்ணி பாதுகாப்பான இடத்துக்கு மாத்தறதுக்கு. இதுக்கு பதிலா, பேசாம போயி ஃபோர்சா மொறைச்சிட்டாவது வந்திருக்கலாம்.


7. சீனா இந்திய பெருங்கடல்ல நிலைகொண்டிருக்கு. இலங்கைல கடற்படை தளம், மாலத்தீவுல பாலங்கள், நேபாலுக்கு ரயில், பாகிஸ்தானுக்கு ரோடுன்னு நம்மளை சுத்தி சுத்தி சிவில் வர்க் பண்ற மாதிரி தன்னுடைய ஆதிக்கத்தை கொண்டு வந்துட்டு இருக்காங்க. இந்த நிலையில் தென் பிராந்தியத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெண்டு கடற்படை கப்பல்களை எக்சிபிஷனா மாத்தி கொல்லத்திலேயும் கோழிக்கோட்டுலயும் கண்காட்சி நடத்திட்டு இருக்காங்க. விமான படையில் ஒரே ஒரு விமானம் ரிப்பேர் ஆனதை அடிப்படையா வெச்சு 200 போர் விமானங்களை பறக்க கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்காங்க. நாமளே போர் விமானங்களை செய்வோம்னு சொல்லி லக்ஷ்யாவுக்கு (இந்தியாவில் தயாரிக்கப்படும் குறைந்த எடை போர் விமானம்) காத்திருக்காங்க. நாம காத்திருக்கலாம். அவன் காத்திருப்பானான்னு தான் தெரியலை. சீனா மெல்ல மெல்ல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தன் காலை வைக்குது. ஆனா அதில் கவலைப்பட எதுவும் இல்லைன்னு இந்திய அரசாங்கம் சொல்லுது. நல்ல லட்ஷனத்தில் இருக்குல்ல இந்திய பாதுகாப்பு?


8. மொத்த அமைச்சரவையில் 36% பேர் கிரிமினல்கள், மொத்த பாஜக எம்பிக்களில் 54% பேர் கிரிமினல்கள்னு புள்ளிவிவரங்களா பறக்குது. வன்முறையில் ஈடுபட்டவங்க மேல நடவடிக்கைகள் எடுத்த காலம் போய், அவங்களை கூப்பிட்டு அமைச்சராக்குற பண்பாடு வந்திருக்கு.


9. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் கருணை காட்டுதுங்கரதெல்லாம் தனி கதை. ஆனா தன்னுடைய கூட்டணி கட்சி செஞ்சதா சொல்லும் ரூ. 6000 கோடி டிரக் ஊழலுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லைன்னு சொல்லி அவங்களை காப்பாத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்காங்க பாஜக. (திமுக செஞ்சதா சொல்லப்படும் 2G ஊழல் குற்றச்சாட்டு வந்தப்ப, கூட்டணி கட்சி ஊழல் செஞ்சா அதுக்கு ஆளும் கட்சியும் தான் பொறுப்புன்னு ஒரு புது வியாக்யானம் சொன்ன அதே கோஷ்டி தான் இது!). ஊழல் வாதிகள் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறவர்கள் எல்லாரும் மன்னிப்பு கேட்டாலே, ‘அதான் மன்னிப்பு கேட்டுட்டாங்கல்ல?? எல்லாம் முடிஞ்சுபோச்சு!! கிளம்புங்க கிளம்புங்க’ டைப் நாட்டாமை தீர்ப்புகள் வேறே இப்ப பிரபலமாகிட்டு வருது.


10. ஸ்பெக்டிரத்தை ஒதுக்கீடு செஞ்சது தவறு. அதை ஏலத்தில் விட்டிருக்கணும்னு அந்த குதி குதிச்சவங்க, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏல முறையில் தான் விடணும்னு வற்புறுத்துனவங்க பாஜக. இத்தனைக்கும் நிலக்கரி சுரங்க விஷயத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முதல் உரிமை கொடுத்து அவங்களுக்கெல்லாம் ஒதுக்கீடு செஞ்சப்பறம் மிச்சம் மீதி இருக்கிற சுரங்கங்களை தான் மத்தவங்களுக்கு ஒதுக்கீடு செஞ்சுது காங்கிரஸ். ஆனா இப்ப பாஜக அரசு போட்டிருக்கிற ஒரு புதிய உத்தரவுப்படி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பொதுவாக நடத்தப்படும். இதில் ‘பொது துறை நிறுவனங்களும் விரும்பினால் பங்கு பெறலாம்’னு ஒரு சுற்றறிக்கை அனுப்பிருக்காங்க. அதாவது பொது துறைக்கு முன்னுரிமை இல்லை. அவங்களுக்கும் பொது போட்டி & ஒதுக்கீடு தான். இதன் மூலம் அருமை நண்பர் ஆதானி வளம்பெறுவார்ங்கறதெல்லாம் நான் சொல்ல விரும்பாத விஷயங்கள். அதான் சொல்லலை.


11. கிசான் டிவின்னு ஒரு திட்டம். பேரை அறிவிச்சாங்க. ஆனா என்ன செய்யுறது அதில்னு தெரியாம, யோசனை கேட்டு விளம்பரம் பண்ணிருக்காங்க. பழைய கிளீன் இந்தியா மூவ்மெண்டை ஹிந்திப்படுத்தி சுவச்பாரத் யோஜனா ஆக்கிட்டாங்க. ஆதார் வேண்டாம்னு சொன்னவங்க 2000 நிரந்தர மையங்கள் ஏற்படுத்த உத்தரவு போட்டிருக்காங்க. ரயில் நிலையங்களை பராமரிக்கிறது அரசாங்க வேலை இல்லைன்னு சொல்லி அதை தனியார் வசம் ஒப்படைக்க போறாங்களாம். ரேஷன்ல மண்ணெண்ணை எல்லாம் மானியத்தில் கொடுக்க முடியாதுன்னு சொல்லீட்டாங்க. டீசல் விலை நிர்ணயத்தையும் ஆயில் கம்பெனிகளுக்கே கொடுக்க போறாங்க. சிம்பிலான ஜி.எஸ்.டி வரி முறையை கூட செம்மையா சோதப்பி குழப்பி வெச்சிருக்காங்க (ஜி.எஸ்.டி பத்தி டீட்டயிலா அப்பாலிக்கா ஒரு ஸ்பெஷல் எடிசன் போடுறேன்!) கூட்டாட்சி தத்துவத்தையே உடைச்சு எறியுர மாதிரி, மாநிலங்கள் இனி மத்திய அரசுகிட்டே இருந்து மானியம் எதிர்பார்க்க கூடாது. அந்தந்த மாநிலங்கள் அவங்கவங்களுக்கு கிடைக்கிற வரி வருவாயை வெச்சு அவங்கவங்க தேவைகளை ஈடு செஞ்சுக்கொங்காண்ணு சொல்லிருக்காங்க. என்னா திறமை என்னா திறமை.. நிர்வாகம்னா இது நிர்வாகம்.


இன்னொருபக்கம், தேர்தல் அறிக்கைல சொன்ன சில விஷயங்களை அட்சரம் பிசகாம செஞ்சிருக்காங்க. கங்கையை சுத்தப்படுத்தறது, மதமாற்ற எதிர்ப்பு, 100% பூரண இந்து நாடு அமைய மத்த மதங்களை ஒழிப்போம்னு சவால் விடுறது, சமஸ்கிருதத்தை பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக்கிறது, ஹிந்தியை வலுக்கட்டாயமா திணிக்கிறது, இட ஒதுக்கீடு முறையை குறைக்கிறதுன்னு அவங்களோட அஜெண்டாக்களை நிறைவேத்த எந்த தயக்கமும் காட்டுறதே இல்லை. மத்த முக்கிய விஷயங்களுக்கு தான் அவங்ககிட்டே நேரம் இல்லாம இருக்கு.


பாஜக எந்த தப்பை செஞ்சாலும் ‘அதுக்கு எதுனா காரணம் இருக்கும்யா. ஏதோ ஐடியாவோட தான் இதெல்லாம் செய்யுராறு. வெயிட் பண்ணி பார்க்கலாம்னு’ நம்பிட்டு இருக்கிற திருவாளர் பொது ஜனம் இருக்கும் வரை அவருக்கு என்ன கவலை. நிஜமாவே நாட்டு மேலயும் வளர்ச்சி மேலயும் அக்கறை இருக்கிறவங்க தானே இதுக்கெல்லாம் கவலைப்படணும்?


இன்னும் நிறைய இருக்கு சொல்ல. இன்னொரு தபா பேசுவோம்.



No comments:

Post a Comment

Printfriendly