ஆஃபீஸ்ல இருந்து ஒருநாள் என்னை கூப்பீட்டு அவசரமா ராஜ்கோட் போகணும்னு சொன்னப்ப
அது வராது வந்த வாய்ப்பா தான் தெரிஞ்சுது எனக்கு.
இதுக்கு முன்னும் பலமுறை குஜராத்
போயிருக்கேன். அஹமதாபாத், வதோதரா, சூரத்
மாதிரி நகரங்கள். குஜராத் என்பது ரொம்ப பிந்தங்கிய மாநிலமா இருந்தது. அதை மோடி
தான் அசுர வளர்ச்சி காண வெச்சார்ன்னும், குஜராத் ஒரு சொர்க்கபுரியா மாறிடிச்சுன்னும் வரும் பல பல கதைகளை கேட்டு
பிரமிச்சிருந்த எனக்கு, அந்த நகரங்கள் எல்லாம் அதை உண்மைனு நிரூபிச்சிருந்தது. வழக்கமா மீடியாவில வர்ற
செய்திகளை மட்டுமே நம்புற கோஷ்டி நாமங்கறதால அதில் ஒண்ணும் பெரிசா வித்தியாசம்
தெரியல. ஆனா சமீபத்தில் ஹைதிராபாத்தில் ஒரு கான்பரன்ஸ்க்கு போனப்போ அங்கே ஒரு
குஜராத்தி நண்பர் குஜராத்தின் மறுபக்கம் பத்தி என்கிட்டே விவரிச்சது குழப்பம்
தந்துது. அதாவது, ஒரு
சில நகரங்கள் மட்டுமே நல்ல வளர்ச்சி கண்டிருக்கு. அதை வெச்சே குஜராத் ஒரு
சொர்க்கபுரின்னு நம்பவெச்சிட்டாரு மோடி. ஆனா உண்மையில் 90% குஜராத் அடிப்படை
வசதிகூட இல்லாம இருக்கு. வந்து பாருங்கன்னு சொல்லிருந்தார். அதனால் ஏற்கனவே, பெருநகரங்கள் அல்லாத
சிறு நகரங்கள்,
கிராமப்புறங்களை சுத்தி பாக்கணும்னு ஒரு ஆசை அடி மனசுல இருந்துச்சு. அப்ப தான்
இந்த வாய்ப்பு. ராஜ்கோட்டுக்கு.
ராஜ்கோட் ஒரு நகரம் தான். ஆனா சுற்றிலும் கிராமங்கள் சூழ்ந்த ஒரு சிறு நகரம்.
ஒப்பீட்டுக்கு சொல்லனும்னா நம்ம விருதுநகர் மாதிரி ஏரியா. இந்த மாதிரி ஒரு நகரத்துல
தான் அந்த மாநிலத்தை சரியா புரிஞ்சுக்க முடியும்னு எனக்கு தோணிச்சு.
டிச 16 ஆம் தேதி பயணம். ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம பயலுக வண்டிங்கறதால
ஸ்பைஸ்ஜெட்ல டிக்கெட் போட்டிருந்தேன். ஆனா என் நேரம், அந்த சமயத்தில்
கார்பரேட் பாலிடிக்ஸ் பட்டைய கிளப்பிட்டு இருந்ததால, ஸ்பைஸ் ஜெட் பல பல சோதனைகளை
சந்திச்சிட்டு இருந்துச்சு. அது கலாநிதி மாறன் கைய விட்டு மீண்டும் பழைய ஓனர்
கைக்கு மாறும் வரைக்கும் இந்த பிரச்சனைகள் தொடரும்னு எல்லாம் அப்போ எனக்கு
தெரியாது. பிளைட் டிலே, டிலேன்னு சொல்லி சொல்லி கடைசியில் கேன்சல் ஆயிருச்சுன்னு மெசேஜ் வந்தப்ப தான்
நான் இருந்த இக்கட்டான நிலைமை புரிஞ்சுது. மறுநாள் காலை 10 மணிக்கு நான் ராஜ்கோட்
எக்ஸைஸ் ஆஃபீஸ்ல இருக்கணும். இப்ப மணி மாலை 4. என்னடா பண்றதுன்னு தெரியாம மீண்டும்
என் டிராவல் டெஸ்க்குக்கு கூப்பிட்டு கேட்டேன். ஆல்டெர்நேட்டிவா, ராத்திரி 7.10 க்கு
மும்பைக்கு ஒரு ஜெட் ஏர்வேஸ் இருக்கு. அதுல ராஜ்கோட் போயிக்கலாம்னு சொன்னாங்க.
அதுபடியே 7.10 க்கு 9W-470 ல மும்பைக்கு ஒரு
டிக்கெட்டையும்,
மும்பைலருந்து ராஜ்கோட்டுக்கு மறுநாள் விடியக்காலை 5.10க்கு ஜெட் ஏர்வேஸ் 9W-7129 லயும் டிக்கெட்டை போட்டாச்சு.
டிக்கெட் பிரிண்ட் எல்லாம் எடுக்க நேரமில்லை. மெசேஜை காட்டி போர்டிங் பாஸ்
வாங்கிக்கலாம்னு கிளம்பியாச்சு.
இப்ப ஜெட் ஏர்வேஸ் ‘ஃபுல் செர்விஸ்’ ஆயிட்டதால ஆன் ஏர் டின்னர் இருக்கு. ஏதாவது சோறு டிபன் தருவாங்கன்னு பார்த்தா, கேக்கும், பிரட்டும் தந்தாங்க. ஏதோ
அதுவாச்சும் கொடுத்தாங்களேன்னு புளகாகிதப்பட்டு சாப்பிட்டாச்சு. ராத்திரி 10 மணி
போல மும்பை சேர்ந்தேன். நைட் அங்கே ஏர்போர்டுக்குள்ளேயே டெண்ட் போட மனசில்லை. என்
லக்கெஜை ஏற்கனவே ராஜ்கோட்டுக்கு புக் பண்ணிட்டதால் மும்பைல லக்கேஜ் எடுத்து
வெக்கவேண்டாம். அது ஆட்டோமேட்டிக்கா நான் போற கணேக்சன் பிளைட்ல வந்திரும். அதனால்
ஹேன்ட் பேக் மட்டும் கைல வெச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் மும்பை ஏர்போர்ட்டை சுத்தி
பார்த்தேன். சில போட்டோஸ் எடுத்தேன். அப்புறம் மெல்ல வெளியே வந்து, ஒரு ட்விட்டர் நண்பர்
கொடுத்த ஐடியா படி ரிக்ஷா பிடிச்சு ஜஸ்ட் ஒரு மினி ரவுண்ட் அப், முடிச்சிட்டு ஒரு மணி
சுமாருக்கு மீண்டும் ஏர்போர்ட் வந்து குட்டி தூக்கம் போட்டுட்டு நாலுமணிக்கெல்லாம்
ரெடியாயிட்டேன். மீண்டும் அடுத்த பறக்காஸ்.
ஆறு மணிக்கு ராஜ்கோட்ல இறங்கினப்ப செம்ம குளிரு. இம்புட்டு குளிரும்னு நான்
நினைக்கவேயில்லை. என் Accuweather அப்ளிகேஷன் ராஜ்கோட்ல 30 டிகிரி டெம்ப்ன்னு சொன்னப்ப
நம்மூரு மாதிரி தான் இருக்கும்னு நினைச்சிட்டேன். இரவில் 13 டிகிரி தானாம். அதை
அது சொல்லவும் இல்லை. நானும் இரவு நேர டெம்ப் என்னன்னு கேக்கவேயில்லை. தப்பு
என்னோடது தான்.
ஒரு ஆட்டோ பிடிச்சு ஹோட்டலுக்கு விட சொன்னேன். ஏற்கனவே ரிசர்வேசன் போட்டு
வெச்சிருந்ததால் பிரச்சனை இல்லை. போற வழியில் குளிர் தாங்கலை. அங்கங்க ரோட்டோரமா
டீக்கடைகள். கும்பலா நின்னு குளிர் காய்ஞ்கிட்டு இருந்தாங்க. யெஸ். எல்லா கடையிலும்
ஒரு புளோயர் வெச்சு கங்கு எரிச்சு தணல் போட்டுருக்காங்க. எல்லாரும் ஸ்வேட்டர், மஃப்ளர், மங்கி குல்லான்னு ஃபுல்
செட் அப்ல இருக்க நான் ரொம்ப கேஷுவலா டிரஸ் பண்ணி இறங்கி டீ சாப்பிட்டதை ஆச்சரியமா
பார்த்தாங்க. உள்ளுக்குள்ள எலும்பு வரக்கும் நடுங்குறதை வெளிக்காட்டிக்காம டீயை
சாப்பிட்டு முடிச்சு ரூமுக்கு போயி ஒரு சின்ன தூக்கம்.
பொதுவா காலைல கடும் குளிர்ங்கரதால ஊரே 10 மணிக்கு மேல தான் விழிக்குது. நமக்கு
நேரத்துலேயே எழுந்து பழகிருச்சுன்னாலும், ரெண்டு விமான பயணம் தந்த அசதி. ஆனாலும் எட்டரைக்கு எல்லாம் குளிச்சு (சுடு
தண்ணிலதான்) ரெடியாயி ஊரை சுத்தி பாக்க கிளம்பிட்டேன். நாமெல்லாம் நிழல் தேடி
ஒதுங்குற மாதிரி அங்கே எல்லோரும் அப்போ வெய்யில் தேடி போய் உக்காந்திருந்தாங்க.
ராஜ்கோட் முனிசிபல் ஆஃபீஸ் பக்கத்துல தான் தங்கி இருந்தேன். ஹார்ட் ஆஃப் தி
சிட்டி. ஆனாலும் ஒரு நல்ல ஹோட்டல் இல்லை.
ஊரை ஒரு ரவுண்ட் அப் வந்தேன். எல்லோரும் சாமானிய மக்கள். பெரிசா இண்டஸ்ட்ரி
எதுவும் இல்லை (ராஜ்கோட்ல). வியாபாரம், சுற்றுலா தான் மெயின் பொழப்பு. ஆட்டோ நல்ல பிசினஸ். பொது போக்குவரத்து
சொல்லிக்கற மாதிரி இல்லைன்றதால் ஆட்டோ தான் எல்லா இடத்துக்கும். சேர் ஆட்டோ, ஜீப் எல்லாத்தையும்
நம்பி தான் அங்கே நகர போக்குவரத்து இயங்குது.
என்னுடைய ஆஃபீஷியல் வேலையின் முதல் கட்டம் முடிஞ்சு லஞ்சுக்கு எங்கே போலாம்னு
யோசிச்சப்ப, நண்பர், சங்கல்ப் ஹோட்டல் பத்தி
சொன்னாரு. இங்கே இருக்கிற ஒரே ஒரு சவுத் இந்தியன் ஹோட்டல் அது தான்னு. பர்சை
செம்மையா பதம் பார்த்திருச்சு. ஆனாலும் நம்மூரு உணவாச்சென்னு பொறுத்துகிட்டு
சாப்பிட்டோம். எல்லா வேலையும் முடிஞ்சு சாயந்தரம் என்ன பண்றதுன்னு யோசிச்சப்ப
லிங்கா ஞாபகம் வந்துச்சு. புக் பண்ணி படத்தை பார்த்துட்டு (தமிழ்லதான்) நைட்
ரூமுக்கு வந்தாச்சு. டின்னருக்கு எந்த ஹோட்டலும் இல்லை. ரோட்டோரமா ஒரு தள்ளுவண்டில
சப்பாத்தி போட்டுட்டு இருந்தாங்க. அப்படியே ஒரு ஓரமா உக்காந்து சாப்பிட்டு
முடிச்சு வந்தாச்சு.
மறுநாள் வாங்க்கனர் (Wankaner) நோக்கி பயணம். 57 கிமீ தான். டிரெயின் இருக்கு. ராஜ்கோட்
ரயில் நிலையத்தில் ரயில்வே கேண்டீன்ல பூரி கிடைச்சுது. வாங்க்கனர் போயிட்டா
தலைகீழா நின்னாலும் நம்மூர் உணவு கிடைக்காதுன்னு மிரட்டி வெச்சிருந்தாங்க. அதனால்
எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவும் இங்கே ராஜ்கோட்லயே சாப்பிட்டிராணும்னு
முடிவுபண்ணிருந்தேன். ஃபுல் கட்டு.
இந்த வாங்க்கனர், வாகசியா & மோர்பி
நகரங்களில் நிறைய டைல்ஸ் கம்பெனிகள் இருக்கு. இங்கிருக்கும் மண் ஸ்பெஷல். அதை
அடிப்படையா வெச்சு அதை உபயோகிச்சு டைல்ஸ் (நம்ம வீட்டில தரைல சுவர்ல போடுறோமே அந்த
டைல்ஸ்) தயாரிக்கும் கம்பெனிகள் நிறைய இருக்கு. கிட்டத்தட்ட 800 கம்பெனிகள்.
வர்த்தமான்,
ஜான்சன், அனுஜ்
மாதிரி பெரிய கம்பெனிகளும், சின்ன சின்ன கம்பெனிகளுமா நிறைஞ்சு கிடக்கு. ஆனா எல்லா இடத்திலும் பீஹார், ஓடிஷா மாதிரி மிக பின்
தங்கிய மாநிலங்களில் இருந்து வந்து கம்பெனியிலேயே தங்கி (டெண்ட் அடிச்சு
கொடுத்திருக்காங்க) சமைச்சு சாப்பிட்டு பொழைச்சு கிடக்கிறவங்க தான். ரொம்ப கடினமான
வேலை. சேறும் சகதியும் ஒரு புறம், அனல் தகிக்கும் ஃபர்நஸ் ஒரு புறம், தயாரான டைல்ஸை காயவைக்கவும், அடுமனையில் சுடவும் எடுத்து சுமந்து செல்லும் கடின பணி ஒரு புறமுமா கஷ்டமான
வேலை தான். குடும்பத்தோட வந்து இருக்காங்க. பெண்கள் குழந்தைகள்னு எல்லோருமே வேலை
செஞ்சிட்டிருக்காங்க. சொற்ப கூலி. ஆனா தங்க திங்க வசதி இருப்பதால் அதுவே பெரிய
சம்பாத்தியம் மாதிரி பேசுறாங்க. ரொம்ப பாவமா இருந்துச்சு.
வாங்க்கனர் ரொம்ப சின்ன ஊர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊர். ஊருக்குள்ள
அஜி நதி ஓடுது. பேருக்கு தான் அது நதி. ஆனா சாக்கடை. அதை சுத்தி சில
குடியிருப்புக்கள். ஒரு மார்க்கெட். அவ்வளவு தான். பருத்தி விவசாயம், வியாபாரம், டைல்ஸ் கம்பெனி வேலை, லோடு வண்டி, சேர் ஆட்டோ இது தான்
இங்கே வாழ்வாதாரங்கள். ராஜ்கோட்லாயாவது கொஞ்சம் பஸ் வசதி இருந்துச்சு. இங்கே
அதுவும் இல்லை. ஷேர் ஆட்டோ மட்டும் தான் கதி. சாயந்தரம் மார்க்கெட் ஒரு விசிட்
அடிச்சேன். இதுக்கு மேல குளிர் தாங்காதுன்னு ஒரு ஸ்வெட்டர் வாங்கினேன். டின்னர்
தான் ரொம்ப கஷ்டம். மதிய சாப்பாடு எனக்கு கம்பெனியிலேயே கிடைச்சிருச்சு. எனக்காக
அரிசி சாதம் செஞ்சு தந்தாங்க. டின்னருக்கு தள்ளு வண்டி தான். சப்பாத்தி, ரொட்டி வித் கறி. உயிர்வாழ்தல்
மிக முக்கியம்னு ஆயிருச்சுன்னா விருப்பு வெறுப்பெல்லாம் பறந்து போயிரும்.
நாலு அஞ்சு நாள் இப்படி போச்சு. இந்த நாட்களில் நான் நிறைய சுத்தி பார்த்தேன்.
விவசாய நிலங்களை பார்க்கணும்னு ஒரு ஆசை. ஒரு ரவுண்ட் அங்கேயும் போனேன். கீரைகள், கத்தரி விவசாயம்
இருக்கு. பருத்தி தான் அதிகம். நல்ல விலை கிடைக்கலைன்னாலும் யாரும் பருத்தியை விட
தயாரா இல்லை. வேளாண் உதவிங்கறது அங்கே சுத்தமா இல்லை. அவ்வளவு பெரிய ஊர்ல வேளாண்
உதவி முகமை கிடையாது. மோர்பி தான். உரம், பூச்சிக்கொல்லி எல்லாம் இங்கேயே கிடைக்குது. ஆனா மண் மாதிரி சோதனை, விதை, மற்ற இடு பொருட்களுக்கு
மோர்பிக்கு தான் போகணும். தண்ணீர் ஒரு பெரிய பிரச்சனை. சுத்தி கடல் இருக்கிற
மாநிலமானாலும், இந்த
பகுதி ரொம்ப வறண்ட தரிசு பகுதி. வண்டல் மண் மாதிரியான மண் தான் இங்கே. களிமண் கிடைக்கும்.
விவசாயத்துக்கு ஏத்த இடமா இல்லைனாலும், அந்த மக்கள் கடுமையா உழைச்சு அதிலேயும் விவசாயம் பண்ணி இருந்தது பிரமிப்பா
இருந்தது.
பருத்தி விவசாயிகள் ரொம்ப மோசமான நிலையில் இருக்காங்க. விவசாய தற்கொலை அதிகம்.
நான் போயிருந்தப்ப கூட அப்படி ஒரு சம்பவம் பேப்பர்ல இருந்துச்சு. வேறு தொழில்
இல்லை. நிறைய தரிசு நிலம் இருக்கு. அதில் நிறைய தொழிற்சாலைகளை தொடங்கலாம். ஆனா
எந்த முயற்சியும் இல்லை. ரோடு, அடிப்படை சுகாதாரம், உள்கட்டமைப்பு எல்லாம் படு மோசம். ஆஸ்பிடல் போகணும்னா கூட 30 கி.மீ தாண்டி மோர்பிக்கு
தான் போகணும். குடிசை கூட இல்லாம அந்த குளிரில் ரோட்டோரம் கிடந்து வாழும் மக்கள்
நிறைய. பொது சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு எதுவும் இல்லாத மக்கள். ஸ்கூலுக்கு போகும் பிள்ளைகள் மிக
மிக அரிது. எங்கெங்கு காணினும் குழந்தை தொழிலாளிகள். எட்டு பத்து வயசு குழந்தைகள்
எல்லாம் கடுமையா வேலை செய்யுறதை பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு.
வாங்க்கனர் மஹாராஜா பத்தி ஏற்கனவே படிச்சிருக்கேன். அதனால அவருடைய அரண்மனையை
பார்க்கணும்னு ஒரு ஆசை. ஒரு ஆட்டோ பிடிச்சு போனேன். அம்பது ரூபா. ஊருக்கு வெளியே
ஒரு மலை மேல இருக்கு அரண்மனை. இப்ப அங்கே யாரும் இல்லைன்னு சொன்னாங்க. விசிட்டர்ஸ்
அல்லோ பண்றதில்லை. காவலுக்கு ரெண்டு பேர். கேட்டுக்கு வெளியே நின்னு அந்த
அரண்மனையை பார்த்துட்டு வந்தேன். பாழடைஞ்சு சிதிலமாகி இருந்தாலும் சில வரலாற்று
நினைவுகளை சுமந்து பிரமாண்டமா நின்னுட்டிருந்தது அரண்மனை. போட்டோ எடுக்க
கூடாதுன்னு சொன்னாங்க. அதனால் சில போட்டோஸ் எடுத்துட்டு வந்தேன்.
இப்படியே சில நாள் போச்சு.
குஜராத் வரைக்கும் வந்தாச்சு. அதுவும் ராஜ்கோட்டுக்கு. அப்புறம் காந்தி
வாழ்ந்த வீட்டை பார்க்கலைன்னா எப்படி? போனேன்.. அது அடுத்த பதிவில்.. வெயிட்டீஸ்..
MEDIA PEOPLE HAVE GIVEN HUGE BUILD-UP ABOUT GUJRAT. THANKYOU
ReplyDeleteVERY MUCH FOR GIVING THE TRUE SITUATION THERE. BIG INDUSTRIAL
PEOPLE WERE GIVEN LAND AT ROCK BOTTOM RATE WHERE POOR
PEOPLE WORK LIKE SLAVES AND TOIL. TAMILNADU IS BETTER
THAN GUJRAT ESP. INFRASTUCTURE AND TRANSPORT SECTORS.
ரொம்ப நல்லா இருந்தது.நான் நேரில் பார்த்த மாதிரியே,ரொம்ப இயல்பா சொல்லி இருக்கீங்க!நன்றி.
ReplyDeleteமாகாத்மா ஊருக்கு பொய் வந்ததை,
தயவு செய்து பட்டுன்னு முடிச்சுடாதீங்க.அதிகமா சொல்லுங்க,போட்டோஸ் மறக்காமல் போடுங்க.
அருமை!
ReplyDelete