கொஞ்ச நாளாவே எல்லா மீடியாலயும் தவறாம இடம் பெறும் ஒரு வார்த்தை மேகதாது.
அது மேகதாதுவா மேகேதாத்துவான்னு (Mekedatu) ஒரு குழப்பம் இன்னும் எனக்கு இருக்கு. அதை விடுங்க. நாம விஷயத்துக்கு வருவோம்
குடகு மலையில் உற்பத்தி ஆகும் காவிரி தமிழகம் நோக்கி ஓடி வரும்போது மைசூர் பக்கத்துல கிருஷ்ணராஜசாகர்னு ஒரு பெரிய டேம் (அதாங்க நம்ம பிருந்தாவனம் கார்டென்ஸ்) கட்டி நீரை தேக்கி வெச்சிருக்காங்க கர்நாடகம். அந்த தண்ணியை மைசூர் நகர குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும், மின்சாரத்துக்கும் பயன்படுத்திக்கறாங்க. அந்த டேம் நிறைஞ்சு மீதமாகுற நீர் தமிழ்நாட்டை நோக்கி ஓடி வருது.
இன்னொருபக்கம், மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா கர்நாடக எல்லையில் மானந்தவாடி பக்கத்துல இருந்து கபினி நதி உற்பத்தி ஆகி அதுவும் தமிழ்நாடு நோக்கி வருது. அப்படி வர்ற கபினியில் பேகூர் கிட்டே கபினி டேம் கட்டி இருக்காங்க. அந்த தண்ணியை வெச்சு தெற்கு கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்திக்கறாங்க. அந்த டேம் நிறைஞ்சு மீதமாகுற நீர் தமிழ்நாட்டை நோக்கி ஓடி வருது.
இப்படி தமிழகத்தை நோக்கி ஓடி வர்ற ரெண்டு நதிகளும் திருமாகடலு நரசிபுராங்கற இடத்துல ஒண்ணா சேர்ந்து தமிழகத்தை நோக்கி வருது. ஷிவனசமுத்ரா தாண்டுனதும் இந்த நதியில் ஷிம்ஷா நதியும் வந்து சேர்ந்துக்குது. எல்லாமுமா தமிழ்நாட்டை நோக்கி வரும்போது முக்குரு காட்டுக்கிட்டே ஆர்காவதி நதியும் வந்து சேர்ந்துக்குது.
இப்ப இதில் கிருஷ்ணராஜசாகர் டேமின் மிச்சம், கபினி டேமின் மிச்சம், ஷின்ஷா நதி, ஆர்காவதி நதின்னு எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு வருது. ரைட்டா?
தமிழகத்துக்கு நுழையறதுக்கு முன்னாடி பில்லிகுண்டலங்கற இடத்தில் தான் ஜீரோ பாயிண்ட். அங்கேயிருந்து தமிழ்நாட்டுக்குள் நுழையுற தண்ணீரின் அளவு கணக்கிடப்படுது. இந்த தண்ணி தான் ஹோகனேக்கல் கடந்து மேட்டூர் வந்து தேக்கி வைக்கப்படுது. அதுக்கப்புறம் அது என்ன ஆகுதுன்றது பத்தி ஏற்கனவே நான் ஒரு தனி பதிவு எழுதிருக்கேன். அது நமக்கு இப்ப இந்த பதிவுக்கு தேவை இல்லாதது.
இப்ப கர்நாடகம் என்ன செய்யுதுன்னா, பில்லிகுண்டல வர்றதுக்கு முன்னாடியே மேகேதாத்துங்கற (Mekedatu) எடத்துல ஒரு டேமை கட்டப்போறாங்க. அந்த டேமும் நிறைஞ்சு மிச்சம் மீதி இருந்தா தான் இனி பில்லிகுண்டலவுக்கே வரும். அப்புறம் தான் தமிழ்நாட்டுக்கு. பிளான் புரிஞ்சுதா?
(மேகேதாத்து - லோக்கேஷன் - ஜூம் செய்து பார்க்கவும்)
இதுக்கு கர்நாடகம் சொல்ற காரணம் நாமெல்லாம் யோசிக்கவேண்டிய விஷயம்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு கர்நாடகம் கொடுக்கவேண்டிய நீரின் அளவு 192 டி.எம்.சி. தமிழகம் கர்நாடகத்துக்கிட்டே கேட்பது 205 டி.எம்.சி. ஆனா போன வருஷம் வரை சராசரியா தமிழ்நாடு 35 டி.எம்.சி தண்ணீரை வீணா கடலுக்கு அனுப்பிருக்குன்னு கர்நாடகம் சொல்லுது. அப்படி வீணடிக்கிறதுக்கு எதுக்கு தண்ணி கொடுக்கணும்? அதை நாமளே தேக்கி சேமிச்சு வெச்சா நல்லது தானேன்னு கர்நாடகம் யோசிக்குது.
கர்நாடக சட்டமன்றத்துல சமீபத்தில் பேசின அமைச்சர் கூட தமிழகத்துக்கு தரவேண்டிய 192 டி.எம்.சியை எந்த சிக்கலும் இல்லாம கொடுத்துடறோம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா அதையும் விட அதிகமா நம்மால தேக்கி வெச்சு உபயோகப்படுத்தப்படாத நீர் கிட்டத்தட்ட 35 டி.எம்.சி தண்ணீரையும் நாம தமிழ்நாட்டுக்கு அனுப்பறோம். அதை அவங்களும் உபயோகிக்கறதில்லை. அதனால அதை நாமளே உபயோகிப்போம்ன்ற ரீதியில் பேசி இருக்காரு.
சரி இதில் என்ன பிரச்சனை?
இப்ப கர்நாடகம் இப்படி சொன்னாலும் இது பின்னாளில் தமிழகத்தை பாலைவனமா மாற்றிவிடும் திட்டம் தான். தமிழகத்துக்குன்னு சொந்தமா ஜீவ நதி இல்லை. ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களை நம்பி தான் நாம இருக்கோம். இதில் வர்ற தண்ணியையும் முடக்கிட்டா மொத்தமா வறண்டு போயிரும்னு தான் தமிழகம் பயப்படுது.
இந்த பிரச்சனையை எதிர்க்கவேண்டிய தமிழக அரசு அமைதியா இருந்ததாலயும், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான தேமுதிகவும் அமைதியா இருந்ததாலயும், டெல்டா மாவட்ட விவசாயிகளே ஒண்ணு கூடி போராட்டம் முழு அடைப்பு எல்லாம் பண்ணி இருக்காங்க. வழக்கம் போல அதுக்கு ஆதரவு அவ்வளவா இல்லை.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டுனு சுதாரிச்சு தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பி மேகேதாத்து அணையை தடுத்து நிறுத்த சொல்லி கோரிக்கை கொடுத்திருக்காரு. அதிசயமா திமுக அதிமுக இரண்டும் ஒண்ணா இணைஞ்சு பிரதமரை சந்திச்சு தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தி இருக்காங்க.
மத்தபடி பொதுமக்களும், ஈழ விஷயம்னா மட்டும் கொதிச்செழும் மாணவர்களும், ஊழல் செஞ்சதுக்கெல்லாம் தண்டனையான்னு வெகுண்டெழுந்த திரை உலகும் இந்த பிரச்சனையை அவ்வளவு சீரியஸா எடுத்துகிட்ட மாதிரி தெரியலை.
இது தமிழக வாழ்வாதார பிரச்சனைன்ற லெவல்ல இல்லாம டெல்டா மாவட்ட விவசாயிகளோட சொந்த பிரச்சனைங்கற ரீதியிலதான் எல்லோருமே இப்ப பார்க்கிறாங்க.
எந்த எதிர்ப்பையும் சட்டப்பூர்வமா சந்திச்சு இந்த அணையை கட்டியே தீருவோம்னு கர்நாடகம் தீவிரமா இருக்கு. வரப்போற பிரச்சனையின் முழு பாதிப்பையும் உணர்ந்து விவசாயிகள் மட்டும் போராடிட்டு இருக்காங்க. மத்த தமிழக தமிழர்கள் எல்லாம் இதை பத்தி கண்டுக்காம இருக்காங்க.
பார்ப்போம்... என்ன நடக்குதுன்னு.