Tuesday, April 14, 2015

நீதிபதி மஞ்சுநாத் விவகாரம்

ழக்கம் போல இன்னைக்கு காலைல எழுந்தபோதும் ஒரு செய்தி என் மொபைல் மெசேஜ் பாக்ஸில் உக்காந்து சிரிச்சிட்டிருந்தது. அதை பார்த்ததும் எனக்கும் சிரிப்பு தான் வந்துச்சு.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியா இருக்கும் வகெலாவை ஓடிஷா நீதி மன்றத்துக்கு தலைமை நீதிபதியா மாத்திருக்காங்களாம். அவருக்கு பதிலா கர்நாடக தலைமை நீதிபதியா திரு மஞ்சுநாத்தை நியமிச்சிருக்காங்களாம்.

Justice Waghela
இதில் சிரிக்க என்ன இருக்குனு கேக்குறீங்களா? சுருக்கமா நான் சில விஷயங்களை மட்டும் இலைமறை காயா சொல்றேன். நீங்களே புரிஞ்சுக்கிட்டா உங்களுக்குள்ளே சிரிச்சுக்கோங்க.

நீதிபதிகளை நியமிக்கற அதிகாரம் இதுவரைக்கும் நீதித்துறை குழுமத்துகிட்டே (கோலாஜியம்) தான் இருந்துச்சு. அதில் சில பிரச்சனைகள் இருப்பதால், மத்திய அரசு நீதிபதிகள் நியமன சட்டம் கொண்டு வந்துச்சு. இதுக்கு நீதித்துறையில் இருந்தே பலத்த எதிர்ப்பு. இது தொடர்பான வழக்கு வரும் ஏப். 15 ஆம் தேதி வெளியாகுது. ஆனா அதுக்கு முன்னாடி நேத்தே (ஏப். 13) மத்திய அரசு இந்த சட்டத்தை அமல் செஞ்சு அரசிதழில் வெளியிட்டிருச்சு. ஆனா அதை விட உஷாரா அதுக்கு சற்று முன்பாக தலைமை நீதிபதி அதிரடியா 22 நீதிபதிகளை மாற்றியும் சில கூடுதல் நீதிபதிகளை நியமிச்சும், சில கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளா பதவி உயர்த்தியும் உத்தரவு போட்டுட்டாரு. மத்திய அரசுக்கும் நீதித்துறைக்குமான பனிப்போர் இப்ப வெளிப்படையா வெடிச்சிருக்கு. அதன் விஸ்வரூபங்களை அடுத்தடுத்த நாட்களில் நாம கண்டு களிக்கலாம். அது ரொம்ப பெரிய விஷயம். நான் சுருக்கமா ஒரு அவுட் லைன் தான் கொடுத்திருக்கேன். நாம இப்ப மஞ்சுநாத் விஷயத்துக்கு வருவோம்.

தலைமை நீதிபதி நேத்து அறிவிச்ச திடீர் உத்தரவில் தான் வகெலாவை ஓடிஷாவுக்கு அனுப்பிட்டு அந்த இடத்தில் மஞ்சுநாத்தை நியமிச்சிருக்கார்.

மஞ்சுநாத் நியமிக்கப்பட்டதில் எனக்கும் நிறைய ஆச்சர்யம் தான். ஏன்னா அவர் மேல நில அபகரிப்பு, ஊழல், வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்துனதுன்னு நிறைய புகார்கள் இருக்கு. கடந்த 2014 ஆம் வருஷம் அவருக்கு தலைமை நீதிபதியா பதவி உயர்வு கொடுத்து பஞ்சாப் ஹரியானா மாநிலத்துக்கு மாற்ற முடிவு எடுத்தப்ப, மத்திய அரசும் சட்ட அமைச்சகமும் அதை கடுமையா எதிர்த்தாங்க. அவர் மேல விசாரணை நடத்தணும்னு கோரிக்கை இருக்கிறப்ப அவருக்கு பதவி உயர்வு கொடுக்கக்கூடாதுன்றது மத்திய அரசின் வாதம். ஆனா அப்போ இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, மஞ்சுனாத்துக்கு பதவி உயர்வு கொடுத்தே ஆகணும்னு பிடிவாதமா இருந்தாரு.

ஆம் ஆத்மி கட்சியினர் மஞ்சுநாத் மீது இம்பீச்மெண்ட் கொண்டுவர கூட முயற்சி செஞ்சாங்க. ஆனா அது நடக்கலை.

ஆமா அவர் அப்படி என்ன முறைகேடு செஞ்சார்ங்கறீங்களா? சாம்பிள் சொல்லட்டா?

2004 ஆம் வருஷம் தன் மகள் சைத்ரா பேரில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினார். அப்ப மார்க்கெட் விலை ச.அடி 1000 ரூபாயா இருந்தாலும் இவருக்கு மட்டும் 125 ரூபாய்னு போட்டு கொடுத்தாங்க. அதுவே தவறுன்னு எல்லாரும் குதிச்சிட்டிருந்தப்ப, அந்த ஹவுசிங்க் சொசைட்டி சம்மந்தப்பட்ட மூன்று வழக்குகளில் 2005, 2007, 2010 ஆம் வருஷங்களில் இவர் அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லி இருக்கார். தன் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கையில் அதன் உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட வழக்கை அவர் விசாரிக்காம இருந்திருக்கணும்ங்கறது எல்லோருடைய எதிர்பார்ப்பு. அந்த தீர்ப்புகள் வந்தபிறகு தான், ஒருவேளை அந்த ஹவுசிங்க் சொஸைட்டிக்கு சாதகமா செயல்படுவதற்காக அவர்கள் விலையை குறைத்து வீட்டை கொடுத்தாங்களோன்னு ஒரு கேள்வி உருவாச்சு. இது வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த ரீதியிலும், ஊழல் / லஞ்சம் ரீதியிலும் கணக்கிட்டு எதிர்க்கட்சிகள் நீதிபதி மஞ்சுனாத்துக்கு எதிரா போராட தொடங்கினாங்க. இது போல இன்னும் சில புகார்கள் அவர் மேலே நிலுவையில் இருந்ததால், போன வருஷம் பஞ்சாப் ஹரியானாவுக்கு அவரை புரமோஷன்ல அனுப்பற ஐடியா டிராப் ஆயிருச்சு.
Justice K L Manjunath

வர்ற ஏப் 20 ஆம் தேதி அவர் ஓய்வு பெற போறார். இந்த நேரத்துலதான் மத்திய அரசின் பலத்த எதிர்ப்பையும் மீறி இந்த அஞ்சே அஞ்சு நாளுக்காக அவரை தலைமை நீதிபதியா புரமோஷன் கொடுத்து அதே கர்நாடக உயர்நீதிமன்றத்துல தலைமை நீதிபதியா நியமிச்சிருக்கு உச்ச நீதிமன்றம். அதுக்கு ஏதுவா ஏற்கனவே தலைமை நீதிபதியா இருக்கும் வகெலாவை ஒடிஷாவுக்கு மாத்திருக்காங்க.

மஞ்சுநாத்துக்காக மிக பெரிய அளவில் லாபி நடந்திருக்கிறது இப்ப உங்களுக்கு ஓரளவுக்கு புரியுதுல்ல? இப்ப அடுத்த விஷயத்துக்கு வர்றேன்.

ஜெ. மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் ஏப். 16 / 17 ஆம் தேதி நீதிபதி குமாரசாமி அவர்கள் தீர்ப்பு சொல்வார் என எதிர்பார்க்கப்படுது. அந்த தீர்ப்பு ஜெ.வுக்கு சாதகமா வரும்னு பலத்த யூகம் இருக்கு. ஒருவேளை அப்படி சாதகமா வந்தா அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தான் முறையீடு செய்யணும். அப்ப வகெலா மாதிரி கடுமையான நீதிபதி இருப்பதை விட மஞ்சுநாத் இருப்பது அந்த மேல் முறையீட்டு மனுவை அனுமதிக்காமல் இருக்க உதவக்கூடும். ஏற்கனவே ஜெ. மீதான வழக்கில் விதிமுறைகளை மீறி பவானி சிங்கை அரசு வழக்கறிஞரா நியமிச்சது இதே மஞ்சுநாத் தான். அப்படி பவானிசிங்கை நியமிச்சது தவறு, உரிய வரைமுறைகளை மஞ்சுநாத் பின்பற்றலைன்னு நீதிபதி வகேலா கண்டிச்சதொட, பவானிசிங்கின் நியமனத்தையும் ரத்து செஞ்சாரு. ஆனா ஜெ உச்சநீதிமன்றத்தில் வகெலாவுக்கு எதிரா முறையிட்டு தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்கிக்கிட்டாரு.

ஏற்கனவே முன்பொருமுறை பதவிக்காலம் முடியுற நேரத்தில் தமிழக ஆளுநராக இருந்த திருமதி ஃபாத்திமா பீவி அவர்கள் பலத்த எதிர்ப்பையும் மீறி ஜெ.வுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துவிட்டு ஊருக்கு போயி செட்டில் ஆனது போல, தனது ஓய்வுக்கு நாலு நாள் முன்னாடி தலைமை நீதிபதியா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பதவிக்கு வந்திருக்கும் மஞ்சுநாத் பற்றியும் நிறைய செய்திகள் அலை அடிக்குது.

ஓய்வு பெறுவதற்கு முன்பாக அவருக்கு தலைமை நீதிபதி அந்தஸ்து தரணும்னு உச்ச நீதிமன்றம் நினைச்சிருக்கலாம். அதனால் தான் பலத்த எதிர்ப்பையும் மீறி அவருக்கு புரமோஷன் கொடுத்திருக்கு. ஆனா அவரை கர்நாடக நீதிமன்றத்தில நியமிச்சது தான் ஆச்சரியம். ஓடிஷாவுக்கு அவரையே நியமிச்சிருக்கலாம். ஆனா, வகெலாவை அங்கே அனுப்பி, இந்த முக்கியமான அஞ்சு நாளில் இவரை இங்கே அப்பாயிண்ட் பண்ணி, ஒரு தடங்கல் இல்லாத சூழலை உருவாக்கி கொடுத்திருக்கு உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்தா அவர்கள், சமீபத்தில் ஜெ.வுக்கு விதிகளை மீறி, ஜாமீன் கொடுத்ததே பலத்த விமர்சனத்துக்கு ஆளாச்சு. எந்தவித உத்தரவாதமும் எழுத்துப்பூர்வமாக வாங்காமல் பாலி நாரிமானின் வாய் மொழி உத்தரவாதத்தை மட்டும் வைத்து விடுதலை செய்தது தவறுன்னு நிறைய ஆர்ட்டிக்கல்ஸ் பறந்திட்டு இருக்கு. அதுவும் ஜெ. விசாரணை கைதி அல்ல. தண்டனை கைதி. அப்படியான சூழலில் ஜஸ்ட் லைக் தட் ஜாமீன் கொடுத்திருக்கக்கூடாது. ஜாமீன் கொடுத்ததுக்கு சொல்லி இருக்கிற காரணங்கள் செம்ம காமடியா இருக்குனு மூத்த வழக்கறிஞர்கள் கூட கருத்து சொல்லி இருக்காங்க. ஜெ.வுக்கு ஏன் அந்த அளவுக்கு வளைஞ்சு கொடுக்கணும்னு எல்லாரும் கேட்டுட்டு இருக்கும்போது தான் பலத்த எதிர்ப்பையும் மீறி, மஞ்சுநாத்தை அஞ்சே அஞ்சு நாளுக்காக தலைமை நீதிபதியா பதவி உயர்த்தி கொடுத்திருக்காரு தத்தா.

இப்போதைக்கு நாம செய்யக்கூடியது வேடிக்கை பார்ப்பதும், விரைவில் விடுதலை பெற்று வந்து முதல்வராக பதவி ஏற்கவிருக்கும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர், பொன்மனசெல்வி, காவிரி தந்த கலைச்செல்வி, இதய தெய்வம், புரட்சி தலைவி அவர்களுக்கு பாராட்டு பத்திரமோ ப்ளெக்ஸ் பேனரோ போஸ்டரோ கவிதையோ எழுதுவதா தான் இருக்கும்.

சத்யமேவ ஜெயதே. ஜெய்ஹிந்த்

******************************

தொடர்புடைய பதிவுகள்:




தொடர்புடைய செய்திகள்:





No comments:

Post a Comment

Printfriendly