Saturday, April 18, 2015

மதுரைக்கு WAP-7


பேப்பர்ல எதேச்சையா தான் அந்த செய்தியை பார்த்தேன். கூடிய விரைவில் மதுரைக்கு ஒரு WAP – 7 எஞ்சினை சதர்ன் ரயில்வே ஒதுக்கப்போகுதாம். அதுக்கான பயிற்சியை திருச்சியில் தந்துட்டு இருக்காங்களாம். இருங்க இருங்க.. திட்டாதீங்க... தெளிவாவே சொல்றேன்.
முதலில் WAP-7 னா என்னான்னு தெரிஞ்சுக்கணும்னா இந்தியன் ரயில்வே பத்தின சில அடிப்படை விஷயங்களை சுருக்கமா தெரிஞ்சுக்கணும். அதனால இந்த முன்கதை சுருக்கம்.


பெங்களூர் - புதுடெல்லி ராஜ்தானி - WAP7 எஞ்சினுடன் 
இந்தியன் ரயில்வேயில் மூணு வகையான வழித்தடம் இருக்கு. அகல ரயில்பாதை, மீட்டர் பாதை, குறுகிய பாதை. இதில் தமிழகத்தில் இருந்த மீட்டர் கேஜை எல்லாம் அகல ரயில்பாதையா மாத்திட்டு வருது தென்னக ரயில்வே. தமிழகத்தில் மட்டும் தான் அதிவேகமா அத்தனை பாதையையும் மாத்திட்டு வர்றாங்க. (இதை சொன்னா மாய உலகத்தில் இருக்கிறவங்க சண்டைக்கு வருவாங்க.)
இரண்டு வகையான ரயில் இன்ஜின் இருக்கு இந்தியாவில். டீசலால் இயங்கும் Diesel Locomotive & மின்சாரத்தால் இயங்கும் Electric Locomotive.
இந்த இன்ஜின்களில் நிறைய வகைகள் இருக்கு. சக்திக்கு ஏற்ற மாதிரி, அது இணைக்கப்படும் ரயில்களின் வகைக்கு ஏற்ற மாதிரி. உதாரணமா சரக்கு ரயில்களுக்கு சக்திவாய்ந்த என்ஜின் வேணும். பயணிகள் ரயிலுக்கு சக்தி குறைவா இருந்தா போதும். எக்ஸ்பிரஸ் இன்னும் கொஞ்சம் சக்தி கூடுதலா வேணும். அதி வேக ரயிலுக்கு இன்னும் கூடுதல் சக்தி உள்ள என்ஜின்.
இப்படியான எஞ்சினை குறியீடுகளால் வகை படுத்தி வெச்சிருக்காங்க. நீங்க எஞ்சின்ல முன்னாடி பார்க்கலாம். WDG2, WAP4, WDM3 னு எழுதிருப்பாங்க. நிறைய வகைகள் இருக்கு. இந்த குறியீடு பத்தி சுருக்கமா விளக்கிடுறேன்.
முதல் எழுத்து எந்த வகையான பாதைன்னு சொல்லும். அதன் படி W – அகல பாதை (Broad Guage), Y – மீட்டர் கேஜ் பாதை (Meter Guage), Z – குறுகிய பாதை (Narrow Guage), N – குறுகிய பாதையில் இயங்கும் பொம்மை ரயில் (Narrow Guage Toy Train)
ரெண்டாவது எழுத்து என்ன வகையான எஞ்சின்னு சொல்லும். அதன் படி D – டீசல் இன்ஜின், A – மின்சார என்ஜின் (இவை தான் இப்ப இந்தியாவில் இருக்கு) இதுக்கு முன்னால CDC கரண்டில் இயங்கும் இன்ஜின், CA – இரண்டு வகையான மின்சாரத்திலும் (அதாவது AC, DC இரண்டு வகை மின்சாரத்திலும்) இயங்கும் இன்ஜின், B – பேட்டரியில் இயங்கும் இன்ஜின் எல்லாம் இருந்தது. இப்ப அவை அதிகமா இல்லை. நாம D & A மட்டும் வெச்சுக்கலாம்.
மூணாவது எழுத்து என்ன வகையான ரயிலுன்னு சொல்லும். அதன் படி G – சரக்கு ரயில், P – பயணிகள் ரயில், M – இரண்டு வகையான ரயிலுக்குமான என்ஜின், S – ஷண்டிங்க் செய்வதற்கு மட்டும் (உதாரணமா சென்னை சென்டிரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு தள்ளிட்டு போக்குதுல்ல, அந்த என்ஜின்), U – மல்டிப்பில் யூனிட்டுக்கான என்ஜின்
நாலாவது எழுத்து அதன் சக்தியை குறிக்கும். அதன் படி 1 – 1000 HP சக்தி, 4 – 4000 HP சக்தி, 5 – 5000 HP சக்தி. சப்போஸ், 3A னு இருந்தா – 3 = 3000 HP, A = 100 HP. மொத்தம் 3,100 HP. இதான் லாஜிக்
இப்ப நீங்க எந்த எஞ்சினை பார்த்தாலும் அந்த குறியீட்டை வெச்சே கண்டுபிடிச்சிர முடியும் தானே? உதாரணம் பார்ப்போமா?
WDG4 – அகல ரயில்பாதையில், டீசலில் இயங்கும், சரக்கு ரயில், 4000 HP சக்தி உள்ள என்ஜின்
WAP5 – அகல ரயில்பாதையில், மின்சாரத்தில் இயங்கும், பயணிகள் ரயில், 5000 HP சக்தி உள்ள என்ஜின்
YDM2 – மீட்டர் கேஜ் பாதையில், டீசலில் இயங்கும், பயணிகள் / சரக்கு ரயில்களை இழுக்கும் 2000 HP சக்தி உள்ள என்ஜின்
புரிஞ்சுதுல்ல?
ஈரோடு பணிமனையின் WAP-4 என்ஜின்

தமிழகத்தை பொறுத்த வரைக்கும், பயணிகள் ரயிலுக்கு பொதுவா WAP4 (ஆரஞ்சு கலர் ஏரோ டைனமிக் ஸ்டைல் என்ஜின்) அல்லது WDP4 தான் உபயோகிப்பாங்க. அதிக வேகம் இல்லை. ஜஸ்ட் 100 கிமீ வேகம் தானே. ஆனா சில அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு WAP5 உபயோகிப்பாங்க.
இந்த WAPல குறைந்த சக்தி என்ஜின்கள் இருந்த காலத்தில் (WAP3) தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ரெண்டு என்ஜின் போட்டு இழுத்துட்டு போவாங்க. ஸ்பீடு கிடைக்க. கிராண்ட் டிரங்க், கேரளா எக்ஸ்பிரஸ் எல்லாம் கூட ரெண்டு இன்ஜின் வெச்சு இழுத்த ரயில்கள் தான்.
இப்ப WAP5 வந்தப்பறம் அது தான் பெஸ்டு இஞ்சினா இருந்துச்சு. ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ எல்லாம் WAP-5 இன்ஜின் வெச்சு தான் இழுத்துட்டிருக்கு.
இதை விட அதிக சக்திவாய்ந்த இன்ஜின் வேணும்னு தேவை இருப்பதால், மேற்கு வங்காளத்திலுள்ள சித்தரஞ்சன் ரயில் என்ஜின் தொழிற்சாலையில் 2010 இல் அதி வேக எஞ்சினான WAP-7 தயாரிச்சாங்க. (இதன் வேகம் கிட்டத்தட்ட மணிக்கு 210 கி.மீ வரை). இந்த WAP-7 தயாரிக்கறதுக்கு முன்னாடியே WAG-9 செஞ்சிருக்காங்க, சரக்கு ரயிலுக்காக. அது வெற்றிகரமா இயங்குனதால, அதன் பயணிகள் ரயில் வெர்ஷன் WAP-7 செஞ்சாங்க, சில மாற்றங்களுடன்.
முதல் இஞ்சினுக்கு நவ்கிரண் னு பேர் வெச்சாங்க. என்ஜின் நம்பர் 30201. அடுத்தடுத்த என்ஜின்கள் நவ் பாரதி’, நவ் சேடக்’, நவ் கட்டின்னு பேர். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 60 எஞ்சினுக்கு மேல செஞ்சாச்சு சித்தரஞ்சன்ல.
மும்பை - புதுடெல்லி ராஜ்தானி WAP-7 - துரந்தோ நிறத்தில்
இந்த எஞ்சினுக்கு பொதுவா வெள்ளை நிறம் தான் கொடுக்கப்படுது (White Livery) ஒரு கிராண்ட் லுக் கிடைக்கும்ங்கறதுக்காக. (ஆனா மும்பை டெல்லி ராஜ்தானிக்கு மட்டும் துரந்தோவின் மல்டி கலர் நிறம்).
இந்த WAP-7 என்ஜின் மிக அதிக சக்தி மட்டுமல்ல. நிறைய நவீன தொழில்நுட்பங்களும் கொண்டது. ஸ்டேஷன்லருந்து எடுக்கும்போதும், ஸ்டேஷனுக்கு வந்து நிக்கும்போதும் அதன் ஸ்மூத் மூவ்மெண்ட்ட அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். அந்த அனுபவுத்துக்காகவே நான் சில முறை WAP-7 பயன்படுத்தும் ரயில்கள தேடி தேடி பயணிச்ச காலம் இருக்கு. அதிவேகம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம், சொகுசுன்னு பல வகைகளில் இந்த WAP-7 என்ஜின் பல பயணிகளின் தேர்வா ஆயிருச்சு. முதலில் ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ மாதிரியான ரயில்களுக்கு மட்டுமிருந்த இந்த என்ஜின் இப்ப எல்லா முக்கிய எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் இணைக்க ஆரம்பிச்சிருக்காங்க.
இந்த WAP-7 இன்ஜின்கள் சில குறிப்பிட்ட டெப்போக்களில் மட்டும் தான் இருக்கு. தென்னக ரயில்வேயில் சென்னை ராயபுரம் டெப்போவில் மட்டும் தான் இருக்கு. ராயபுரம் டெப்போவில் இருக்கும் என்ஜின்கள் பயன்படுத்தப்படும் ரயில்கள்:
சென்னை – கோவை இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ்
சென்னை – கோவை ஷதாப்தி எக்ஸ்பிரஸ்
சென்னை – கோவை கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை – மேட்டுபாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (கோவை வரை)
சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் மெயில்
சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
சென்னை – ஆலப்புழா எக்ஸ்பிரஸ்
சென்னை – பெங்களூரு ஷதாப்தி எக்ஸ்பிரஸ்
சென்னை – பெங்களூரு டபிள் டெக்கர் எக்ஸ்பிரஸ்
சென்னை – புதுடெல்லி கிராண்ட் டிராங்க் எக்ஸ்பிரஸ்
சென்னை – புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
அவ்வளவு தான்.
சென்னையிலிருந்து முழுசா மின்மயமாக்கப்பட்ட அதிவேக ரயில் பாதையில் மட்டும் தான் இந்த இன்ஜின் இயக்கப்படுதுன்றது மேலே உள்ள விவரங்களை பார்த்தாலே தெரியும். மேலும் இந்த ரயிலை பராமரிக்க ராயபுரத்துக்கு வந்தாகணும். அதனால் சென்னையை அடிப்படையா வெச்சு இந்த இன்ஜின்கள் இயக்கப்படுது.
கவுதமி எக்ஸ்பிரஸ் - லல்லாகுடாவின் WAP-7 எஞ்சினுடன்

இப்ப சென்னை – திருச்சி – மதுரை – நெல்லை – திருவனந்தபுரம் பாதையும் முழுசா மின்மயமாக்கப்பட்டாச்சு. எந்த பரபரப்பும் விளம்பரமும் இல்லாம இயல்பா அந்த மின்பாதையை செயல்பாட்டுக்கும் கொண்டுவந்து அதில் மின்சார ரயிலை இயக்கிட்டு இருக்காங்க தென்னக ரயில்வே. அதனால் அந்த ரூட்டிலும் ஒரு என்ஜின் விடலாமேன்னு (யாருடைய கோரிக்கையும் இல்லாமலேயே!) யோசிச்ச தென்னக ரயில்வே முதல்கட்டமா ஒரு சோதனை முயற்சியா குருவாயூர் எக்ஸ்பிரஸ்சில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி வரை இயக்கி பார்த்தாங்க. அது வெற்றிகரமா செயல்பட்டதால், முதல்கட்டமா ரெண்டு எஞ்சின்களை அந்த ரூட்டில் பயன்படுத்த போறாங்க. மதுரை டிவிஷனுக்கு ஒண்ணு, திருச்சி டிவிஷனுக்கு ஒண்ணுன்னு முடிவு பண்ணி, அந்த டிவிஷன்ல இருக்கும் திறமையான என்ஜின் டிரைவர்களை தேர்ந்தெடுத்து திருச்சி பொன்மலையில் (Golden Rock Loco Works) பயிற்சி கொடுத்துட்டு இருக்காங்க இப்ப. ஏன்னா WAP-7 ஏற்கனவே சொன்ன மாதிரி நவீன தொழில்நுட்பங்கள் நிறைஞ்ச இன்ஜின். அதை கையாள தனி திறமை வேணும்ல? அதனால தான் இந்த சிறப்பு பயிற்சி.
மதுரைக்கு ஒரு வழியா WAP-7 வருதுங்கறது ரொம்ப சந்தோஷமான விஷயம் எனக்கு. மதுரைக்கும் எனக்குமுள்ள பந்தம் அப்படி. அது தனி கதை.
இப்ப என் ஆர்வம் எல்லாம், எந்த ரயிலுக்கு அதை பயன்படுத்துவான்கன்றது தான். திருச்சி டிவிஷன்ல அந்த எஞ்சினை பயன்படுத்தக்கூடிய ரயில்னு எதுவும் இருக்கறதா தெரியலை. வேணும்னா, காரைக்குடி – சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ்சில் திருச்சி – சென்னை செக்ஷன்ல இணைக்கலாம்.
ஆனா மதுரைல அப்படி இல்லை. பாண்டியன், வைகை இரண்டுக்குமே அதை இணைக்க முடியும். மதுரை – டெல்லி சம்பர்க் கிரந்திக்கும் இணைக்கலாம். எந்த ரயிலுக்கு அதை இணைக்கப்போறாங்க எனும் ஆர்வம் இன்னும் அடங்கலை. அறிவிப்பு எப்ப வரும்னும் தெரியலை. அதே மாதிரி அந்த எஞ்சினுக்கு என்ன பேரு வெப்பாங்கான்னும் ஒரு ஆர்வ கேள்வி எழுது எனக்கு. இதுவரைக்கும் வந்த எல்லா எஞ்சினுக்கும் ஹிந்தி பேரு தான் இருந்துச்சு. அட்லீஸ்ட் மதுரை எஞ்சினுக்காவது மீனாட்சினு பேரு வெச்சா நல்லா இருக்கும்லனு ஒரு நப்பாசை. பார்ப்போம். 
மதுரைக்காரவிங்க அந்த ரயில் வந்ததும் ஒரு முறை அதில் பயணம் பண்ணி பாருங்க. நான் ஏன் இப்படி லூசு மாதிரி இந்த இஞ்சினுக்கு எல்லாம் எக்ஸைட்டிங் ஆகிறேன்னு உங்களுக்கே புரியும்.

***************

தொடர்புடைய பதிவுகள்

ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் – பாகம் 1
ரயில்வே - தமிழகத்தின் பார்வையில் – பாகம் 2
சேலம் கோட்ட ரயில்வே – தீரா பிரச்சனை
தமிழகமும் ரயில்வே துறையும்!
இனியேனும் திருந்துமா ரயில்வே?
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம்!

5 comments:

 1. Very informative and nicely written, Sathish. I, too, have a great fascination for trains and i enjoyed reading this writeup.

  ReplyDelete
  Replies
  1. Thank you sir. I was once a hard core Rail fanning member. Traveled a lot without any reason, just to experience the journey. I really liked this WAP-7 journey. So that excited. Wish my excitement should also catch others :-)

   Delete
 2. ரயிலைப்பற்றி அற்புதமான தகவல். பயனுள்ளதும் கூட.

  ReplyDelete
 3. மிக்க நன்றி. எனக்கு இது ஒரு புதிய தகவல். இது போன்ற தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன.

  ReplyDelete
 4. Thanks for your information .very useful.,

  ReplyDelete

Printfriendly