Tuesday, January 12, 2016

சபரிமலை – பெண்களுக்கும் வழிபாட்டுரிமை

பரி மலையில் பெண்களை ஏன் தரிசனத்துக்கு அனுமதிக்கக்கூடாதுன்னு உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கு. இதை நான் வரவேற்கிறேன்.

2006 ஆம் வருஷம் தொடரப்பட்ட ஒரு வழக்கில் தான் இந்த முன்னேற்றம்.



பெண்களுக்கும் வழிபாட்டு உரிமையை தரவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. 1965 ஆம் ஆண்டு கேரளா அரசு இயற்றிய தடை ஆணையை எதிர்த்து தான் இந்த வழக்கு நடந்துட்டு இருக்கு. இதில் நீதிபதிகள் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக மிக லாஜிக்கானவை.

1500 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் அந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரம் உள்ளதா? பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதால் என்ன பிரச்சனை வந்துவிடும் என்றெல்லாம் கேட்டிருக்கிறது நீதிமன்றம்.

என்னை பொறுத்தவரை....

இடையில் நுழைக்கப்பட்ட சம்பிரதாயங்களை பெரிதுபடுத்த தேவை இல்லை. பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை கொடுக்கப்படவேண்டும் என்று தான் சொல்வேன்.

41 நாட்கள் விரதம் இருந்து தான் கோவிலுக்கு வரமுடியும். ஆனால் 41 நாட்களுக்கு இடையில் பெண்களுக்கு மாதவிலக்கு வரக்கூடும் என்பதால் அவர்களால் முறையாக முழுமையாக விரதத்தை கடைபிடிக்க முடியாது. அதனால் தான் அனுமதிப்பதில்லை என தேவசுவம் போர்டு கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறது. மலைக்கு செல்லும் எல்லோரும் 41 நாட்கள் விரதம் இருந்து செல்வதில்லை. மூன்று நாள் விரதம் இருந்து கூட பலரும் கோவிலுக்கு வருகிறார்கள். அதை தேவசுவம் போர்டும் ஏற்று கொண்டிருக்கிறது. அதே விதிவிலக்கை பெண்களுக்கும் அளிக்கலாம்.

ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுள் என்பதால் பெண்களை அனுமதிக்கமுடியாது என சொல்வோருக்கு அனுமன் கோவிலில் வழிபட பெண்களுக்கு தடை இல்லை என்பதே சிறந்த பதில்.



மிகுந்த கூட்ட நெரிசலில் பெண்களை பாதுகாப்பது கஷ்டம் என சொல்வதை ஒரு வகையில் ஏற்று கொள்ளலாம். அப்படியானால், அந்த சீசன் காலம் தவிர பிற மாதங்களில் நடை திறக்கும் நாட்களில் பெண்களை வழிபட அனுமதிக்கலாமே?

முன்பெல்லாம் அது காட்டுவழியாக இருந்ததால் பெண்களை பயணிக்கவேண்டாம் என சொன்னார்கள். மேலும் பெருவழிப்பாதை மிக நீண்ட தூரம் என்பதால் பெண்களால் நடக்க முடியாது என்பதும் ஒரு காரணமாக இருந்தது. இப்போது மிக பாதுகாப்பான வழித்தடம் உருவாக்கப்பட்டு பாம்பா வரை வாகனங்கள் செல்லவும் அங்கிருந்து சிறுவழி மூலம் சீக்கிரமாக கோவிலை அடையவும் ஏற்பாடு செய்தபின் அந்த காரணமும் அடிபட்டு போய்விட்டது.

பெண்கள் என்கிற காரணத்துக்காக வழிபாட்டு உரிமையை மறுப்பதை என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி இருக்கிறது நீதிமன்றம். பெண்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு ஏதேனும் ஏற்கதக்க நியாயமான காரணங்கள் இருந்தால் தேவசுவம் போர்டு அதனை சமர்ப்பிக்கலாம். அப்படி லாஜிக்கான காரணங்கள் எதுவும் இல்லை எனில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமையை வழங்க நீதிமன்றம் முன்னெடுப்பு செய்யவேண்டும் என்பதே எனது ஆவல்.

1 comment:

  1. //41 நாட்கள் விரதம் இருந்து தான் கோவிலுக்கு வரமுடியும். ஆனால் 41 நாட்களுக்கு இடையில் பெண்களுக்கு மாதவிலக்கு வரக்கூடும் என்பதால் அவர்களால் முறையாக முழுமையாக விரதத்தை கடைபிடிக்க முடியாது. //


    "Menstruation period" (மாதவிலக்கு என்கிற தமிழாக்கம் ஏற்புடையதாக இல்லை) வந்தால் எப்படி விரதம் ஏற்புடையதாக இல்லாமல் ஆகிவிடும்? விளக்கி கூறுங்கள்.....

    ReplyDelete