Saturday, December 5, 2015

புயல் மழையும் புரட்சி தலைவியும்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க.....

தமிழகத்தில் சமீபகாலமாக இது தான் அடிக்கடி காதில் விழும் வாக்கியம். தமிழகத்தின் இயங்கு சக்தியே அம்மா தான் என்பது இங்கு எழுதப்படாத விதி. மெத்த படித்த ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் கூட தினசரி என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அம்மா தான் என்பதாக உள்ளது நிலைமை.  அரிசி ரேஷனில் இடுவதில் தொடங்கி அணை நிரம்பினால் திறந்துவிடுவது வரை அம்மா ஆணைக்கிணங்கவே இங்கு எதுவும் செயல்பாடு கொள்கிறது.

அதில் தவறொன்றும் இல்லை. முதல்வர் புரட்சி தலைவி முகத்துக்காக தான் கடந்த 2011 ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு விழுந்தது. அவர் ஆட்சி செய்வதற்காக யாரை எந்த பதவியில் அமர்த்தினாலும் அது ஒரு பெரிய பொருட்டல்ல, யாருக்கும். அம்மா முதல்வராக இருந்தாலே போதும், நிர்வாகம் சிறப்பாக இருக்கும். இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகட்டும், தவறுகள் மீது தயவு தாட்சணியம் இன்றி நடவடிக்கை எடுப்பதாக இருக்கட்டும், மக்களுக்கு தாயுள்ளத்துடன் உதவி செய்வதாகட்டும், முற்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதாகட்டும், அதிகார வர்க்கத்தை கட்டுக்குள் வைத்து நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகட்டும்.. எல்லாவற்றிலும் மிளிர்ந்து ஒரு சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர் அம்மா. இவை தான் தமிழகத்தில் அம்மா குறித்தான பிம்பம்.

சமீபத்தில் பெய்த புயல் மழை அந்த பிம்பத்தை மொத்தமாக தகர்த்தெறிந்து புரட்சி தலைவியின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டிவிட்டது தான் தமிழகத்தில் இப்போது திடீரென தோன்றியிருக்கும் பெரும் அதிருப்திக்கான காரணம்.

தமிழகத்தின் மிக பெரும் வெள்ள சேதங்களில் ஒன்றாக சென்னையின் இப்பெருமழைக்காலம் சேர்ந்துகொண்டிருக்கிறது. சோகம் என்னவென்றால் அந்த சேதங்களை முன்கூட்டியே கணித்து நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் திராணியும் இருந்தும் நாம் வாளாவிருந்தது தான். கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.

மத்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம், தமிழகத்தில் கன மழை காணும் என போன மாதமே எச்சரிக்கை விடுத்திருந்தது. மத்திய அரசின் எச்சரிக்கை என்பதால் வழக்கம்போல நாம் அதை அதிகமாக கண்டுகொள்ளவில்லை. பெய்து தீர்த்த மழை தாண்டவமாடிக்கொண்டு இருக்கிறது.. இன்னமும்.

சென்னை மிக சிறந்த வடிகால் அமைப்புக்களை கொண்ட நகரங்களுள் ஒன்று. சுனாமி நேரத்தில் தொடர்ச்சியாக 10 நாட்கள் பெருமழை பெய்தபோதும், நீர் தேங்கி நிற்கவில்லை. அவ்வப்போது 1995, 1998, 2002, 2005, 2006, 2008, ஆகிய வருடங்களில் அபரிமிதமான மழைப்பொழிவு இருந்தபோதும், வெள்ள தேக்கம் என்பது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்ததில்லை. ஆனால் இப்போது மட்டும் என்ன வந்தது சென்னைக்கு?இந்த முறை துல்லியமாக கணித்திருந்தும், பலத்த எச்சரிக்கை வந்திருந்தும், நாம் வாளாவிருந்துவிட்டோம். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக கனமழை எச்சரிக்கை வந்தால், தமிழக அரசு சென்னையை சுற்றி உள்ள எரிகளின் / அணைகளின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை காலி செய்து வைக்கும். அதாவது முன்கூட்டியே சிறுக சிறுக நீரை வெளியேற்றி முக்கால் வாசி ஏரியை/அணையை காலியாக வைத்திருக்கும். பொதுப்பணி துறையினர் இதற்காகவே இரு வாரங்களுக்கு ஒரு முறை வானிலை ஆய்வு மையத்திலிருந்து அறிக்கைகள் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுவார்கள். இப்படி காலி செய்து வைப்பதால், மழை பொழிவின் பொழுது எல்லா நீரும் அணையில்/ஏரியில் சேகரிக்கப்பட்டு மீண்டும் அது முழு கொள்ளளவை எட்டிவிடும். ஒரு வேளை எதிர்பார்த்ததை விட அதிகமாக மழைப்பொழிவு இருந்தால் அதற்கு தக்கபடி சிறுக சிறுக உபரி நீரை வெளியேற்றுவார்கள். இதன்மூலம் ஏரி/அணை நீர் அவற்றிலேயே தேக்கிவைக்கப்படும், உபரி நீர் மட்டுமே வெளியேறும். நகரத்தில் வெறும் மழை நீர் மட்டும் தான் இருக்கும். அது வடிவதற்கான தக்க வடிகால் வசதிகள் சென்னையில் ஏற்கனவே உள்ளது.

இந்த முறை, முன்கூட்டி எந்த ஏரியும் / அணையும் திறந்துவிடப்படவில்லை. மழை தொடங்கும்போது எரிகளும் அணைகளும் கிட்டத்தட்ட நிறைந்திருந்தன. மழை கொட்டி தீர்த்தபோது ஏரியை திறந்துவிட வேண்டியதாயிற்று. அப்படி திறந்துவிடாவிட்டால் ஏரிகள் உடைந்துவிடும் அபாயம். (அப்படியும் காலதாமதமாக சாவதானமாக திறந்து விட முடிவெடுத்து சோதப்பியதில் சில ஏரிகள் உடைத்துக்கொண்டன என்பது தனி கதை). ஏற்கனவே நகரில் தேங்கி இருந்த மழை நீரில் இப்படி திறந்துவிடப்பட்ட ஏரி / அணை நீரும் சேர்ந்துகொள்ள சென்னை வெள்ளக்காடானது. மேலும் ஒரு கொடுமையாக மழை நிற்காமல் பெய்துகொண்டே இருந்ததால் மேலிருந்து வரும் மழை நீரும் இவற்றுடன் சேர்ந்துகொண்டது. சரி.. அப்போ வடிகால்? அது என்ன ஆனது?

சென்னை மெட்ரோ ரயில் சுரங்க பணிகளுக்காக பெரும்பாலான வடிகால்கள் முன்பே தகர்க்கப்பட்டு விட்டன. சுரங்கம் தோண்டுகையில் அதனுள் வெள்ளம் வந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அது செய்யப்பட்டது. அதில் தவறில்லை. ஆனால் அரசு / மாநகராட்சி உடனே அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை.

ஒருபக்கம் அபரிமிதமான வெள்ளம், மறுபுறம் வடிகால் வசதி இல்லாமை. இரண்டும் சேர்ந்து வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்டு கண்டபடி எல்லா இடங்களுக்கும் பாய வைத்துவிட்டது. ஹைவேக்கள், குடியிருப்புக்கள் என எல்லா இடத்தும் வெள்ளம்.

இது தான் தமிழக அரசுக்கான முதல் அடி. முறையாக திட்டமிடாமை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமை. இரண்டும் சேர்ந்து சிறந்த நிர்வாகியான அம்மாவின் நிர்வாகத்திறமையை கேள்வி குறி ஆக்கிவிட்டது.

சரி.. வெள்ளம் வந்துவிட்டது... இனி என்ன செய்யவேண்டும்?

பொதுவாக அரசு வெள்ள பாதிப்பு நேர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அவற்றை தற்காலிக தங்கும் இடமாக அறிவிப்பார்கள். அங்கே தகுவதற்கான ஏற்பாடுகளை செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை அங்கே கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள். அவர்களுக்கான உணவு, உடைகள் விநியோகிக்கப்படும். மழைக்கால தொற்று நோய் பரவாமல் இருக்க அவர்களுக்கு மருந்துகள் மாத்திரைகள் கொடுக்கும். இதெல்லாம் தான் வழக்கமான நடைமுறை.

ஆனால் இந்த முறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு சரி. மற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிட்டத்தட்ட ஏழு நாட்களுக்கு பிறகு தான் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. பதினொரு நாட்களுக்கு பின் தான் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. உணவு, குடிநீர், மருந்துகள் இன்று வரை அரசால் விநியோகிக்கப்படவில்லை.


தீயணைப்பு & மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபடத்தப்படவில்லை. அரக்கோணம் கடற்படை தளத்தில் 6 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருந்தும் அவற்றை இன்று வரை பயன்படுத்தி கொள்ளவில்லை. அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட அனுமதி கொடுக்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. வெள்ள பாதிப்பு நிவாரண ஒருங்கிணைப்புக்கான கட்டுப்பாட்டு அறை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. மாநகராட்சி மண்டல உதவி எண்கள் செயல்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. ஏரியோ அணையோ திறந்துவிடுவதற்கு முன்பாக மனிதாபிமான அடிப்படையில் கூட ஒரு எச்சரிக்கையை மக்களுக்கு கொடுக்கவில்லை.  ஆனால் மத்திய அரசுக்கு நிவாரண நிதி கேட்டு கோரிக்கை கடிதம் மட்டும் உடனடியாக அனுப்பப்பட்டது.

ஆச்சரியகரமாக மக்களுக்காக மக்களே களம் கண்டனர்.

10 இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி, நிவாரண பணிகளை ஒருங்கிணைத்தனர்.

சமூக வலைத்தளங்களின் உதவியோடு, உதவி தேவைப்படுவோரையும், உதவி செய்வோரையும் ஒன்று சேர்த்து சரியான சமயத்தில் உதவிகள் சென்றடைய ஏற்பாடுகள் செய்தனர்.

தமிழகம் முழுவதிலுமிருந்து மக்கள் தங்களால் ஆன எல்லா பொருட்களையும், உணவுகளையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ரேடியோ சிட்டி, ரேடியோ மிர்ச்சி, நியூஸ் 7 போன்ற பல மீடியாக்கள் தங்களில் ஒலி/ஒலிபரப்பு சக்தியால் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்.

சென்னையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் நிவாரண பொருட்களை வீதி வீதியாக கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்று அவர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்டு கேட்டு செய்து கொடுத்தனர். நியாயமாக இவற்றை செய்யவேண்டிய தீயணைப்பு & மீட்பு பணிக்குழுவினரை தெருக்களில் காணவில்லை.

சென்னையில் உள்ள மசூதிகள், சர்ச்கள், ஜெயின் கோவில்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் ஆகிய அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக திறந்துவிடப்பட்டன. அரசு, பள்ளிக்கூடங்களை மக்கள் தங்க ஒதுக்கி தராதபோதும் இவை மக்களுக்கு ஓரளவு உதவின.

திமுக, காங், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சி அலுவலகத்தை பொதுமக்களுக்காக திறந்துவிட்டன. அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டது. எந்த செயல்பாடும் இன்றி முடங்கி கிடக்கும் லாயிட்ஸ் ரோடு கட்சி தலைமை அலுவலகத்தை திறந்து விடவில்லை கருணை தாய்.மதிமுக, திமுக, தேமுதிக, காங், கம்யூ, பாஜக, SDPI, TMMK, RSS, திராவிடர்கழகம், மே 17 இயக்கம் ஆகிய பல பல இயக்கங்கள் ஆங்காங்கே தங்களால் இயன்ற வரை உணவு அளித்துக்கொண்டிருந்தன. வழக்கமாக சாப்பாட்டு பொட்டலங்கள் போடும் அரசு இந்த முறை கைவிட்டாலும் இவை மக்களின் பசியை ஓரளவு நீக்கின. மழை தொடங்கி பதினோராம் நாள் இந்திய விமானப்படையும் உணவு பொட்டலங்களை மாடிகளில் தேங்கி கிடந்தவர்களுக்கு விநியோகித்தது.

மாநிலம் முழுதுமிருந்து குடிநீர், பிஸ்கட், பிரெட், போர்வை, பிரஷ், பேஸ்டு என பல பொருட்களும் பொதுமக்களால் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை இங்குள்ள இளைஞர்களால் கூடுமானவரை விநியோகிக்கப்பட்டன. விற்காமல் தேங்கி கிடக்கும் ஆவின் பால் பவுடரை விநியோகித்து தீர்க்க உத்தரவிட்டது ஒன்று தான் நிவாரப்பணியாக அரசு செய்தது.

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என எதுவும் மக்களுக்கு உதவிகளாக வழங்கப்படாதபோதும் டாஸ்மாக்கை மட்டும் திறந்துவைத்து மக்கள் பணி செய்தது தாயுள்ளம் கொண்ட தமிழக அரசு.

மீனவர்களும் இஸ்லாம் அமைப்புக்களுமாக சேர்ந்து படகுகளை வரவழைத்து வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டெடுத்தனர் இலவசமாக.

தனியார் நிறுவனங்கள் தங்கள் பேருந்துகளை மக்களுக்காக இலவசமாக இயக்கியது. சில ஆம்னி பேருந்துகள் திருச்சி வரையும், ஓசூர் வரையும் இலவசமாக மக்களை அனுப்பி வைத்தது. கால் டாக்சி நிறுவனங்கள் இலவசமாக மக்களை புறநகருக்கு அனுப்பி வைத்தன. சில கொரியர் நிறுவனங்கள் நிவாரண பொருட்களை இலவசமாக சுமந்து சென்று விநியோகித்தன. ஆனால் நான்காம் தேதி மாலை வரையும் தமிழக அரசு மாநகர பெருந்துகளில் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மாண்புமிகு அம்மா அவர்கள் இலவசமாக மாநகர பேருந்தை இயக்க உத்தரவிட்டார்.


ஒரு கட்டத்தில் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைவதையும், பொதுமக்களே பொதுமக்களுக்காக உதவி வருவதையும், அரசு வெட்டியாக இருப்பது வெட்ட வெளிச்சமானதையும் கவனித்த தமிழக அரசு அதிரடியாக மக்களுக்கு உதவ களம் இறங்கியது. அதாவது பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் சேகரித்து சென்னைக்கு அனுப்பும் அனைத்து பொருட்களிலும் மாண்புமிகு அம்மா புரட்சி தலைவி அவர்களின் புகைப்பட ஸ்டிக்கர்களை அச்சடித்து அம்மா அவர்கள் வழங்கிய உதவியாக பிரச்சாரம் செய்தனர். கடலூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால் மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கப்பட்டது. அப்படி ஸ்டிக்கர் ஓட்ட மறுத்தவர்கள் தாக்குதலுக்கு ஆளான கொடுமை எல்லாம் நடந்தேறியது.


1970 களின் அரசியல் முறையை மட்டுமே அறிந்த தலைவர்களுக்கு சமீபத்திய மீடியாவின் பலமும் வீச்சும் புரியாமல் போனது ஆச்சரியமில்லை. அனைத்து நாளிதழ்களிலும் அரசுக்கு எதிரான தகவல்கள் வராமல் பார்த்துக்கொள்ள முடிந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் அரசின் அராஜக செயல்கள் அவ்வப்போது உடனுக்குடனே வெளியாக தொடங்கியது. எந்த செயல் மூலம் மக்களிடம் நல்ல பெயரும் செல்வாக்கும் வாங்கி விடலாம் என கருதியதோ அதே செயலால் மிக பெரும் விமர்சனத்துக்கு ஆளானது தமிழக ஆளும் கட்சியும் அதிகார வர்க்கமும். இந்த ஒரு விஷயத்தில் அதிகார வர்க்கம் கூட அதிமுக கட்சி உறுப்பினர்களை போல செயல்பட்டது தான் கொடுமை. 

அரசுக்கு அவப்பெயர் வருவதை அறிந்ததும், அப்படி "ஸ்டிக்கர்கள் ஒட்ட சொல்லி அதிமுக சொல்லவில்லை.. யாரோ அதீத ஆர்வக்கோளாரில் அப்படி செய்திருக்கலாம்.. அவ்வாறு வற்புறுத்தப்பட்டால் அதிமுக தலைமை நிலையத்துக்கு புகார் அளிக்கலாம்" என்று பல பிரமுகர்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். அதிமுக கட்சி அப்படி அதிகாரப்பூர்வமாக எந்த மறுப்பையும், புகார் தெரிவிக்கும்படியும் சொல்லாவிட்டாலும், அதிமுகவுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என பல முக்கிய பிரமுகர்களும் பத்திரிக்கையாளர்களும் பதறி அடித்து அதிமுக சார்பாக அப்படி ஒரு தகவலை தெரிவித்து அரசை காக்க முயன்றதாகவே எடுத்து கொள்ள வேண்டி இருக்கிறது. 

வெள்ளத்தில் சிக்கி தவித்த என் அதிமுக நண்பரொருவர் கட்சி மீது காட்டிய வெறுப்பும் அருவருப்பும் சொல்லி மாளாது. இது ஒவ்வொரு ரத்தத்தின் ரத்தங்களுக்கும் மனதில் ஏற்பட்ட கோபம். எம்ஜிஆரின் விசுவாசிகளுக்கு மக்களும் அவர்களது துயர் துடைப்பதும் தான் முதன்மை கடமை. ஆனால் இப்போது கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தனது கட்சி நடந்துகொள்வதை அவரால் ஜீரணிக்க முடியவேயில்லை.

கேரளா, கர்நாடகா, பீகார், ஆந்திரா மாநிலங்களின் உதவிகளை மறுதலித்து மத்திய அரசை மட்டுமே எதிர்நோக்கி இருந்தாலும் அதுவும் போதுமான அளவு வந்து சேரவில்லை. அதையே காரணம் காட்டி நிவாரண பணிகளில் மெத்தனம் காட்டியது அரசு. அரசின் மீதான அதிருப்தி உச்ச கட்டத்தை அடைந்ததை அறிந்து நான்காம் தேதி மாலை அமைச்சர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தினர். ஒவ்வொரு அமைச்சரும் எந்த அளவுக்கு விஷய ஞானம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக காட்டியது அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு. பேட்டி பாதியிலேயே நிறுத்திக்கொள்ளப்பட்டது தான் அரசுக்கான அடுத்த தோல்வி.


இந்த புயல் மழை செய்த நல்ல விஷயங்களில் கூவத்தை சுத்தப்படுத்தியதை மட்டுமல்ல, புரட்சி தலைவியின் புனை முகத்தை தகர்த்தையும் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!!3 comments:

  1. hope T N people (if they even have half a brain) will throw this dictatorship at the next election.

    ReplyDelete
  2. எந்த தொலைநோக்கு திட்டமும் செய்ய திறமை இல்லாமல் வெறும் வாய் சவடால் பேசி ஆட்சி செய்து வருகிறார்கள். பல்லாயிரம் கோடி கடன் வாங்கி என்ன? அடுத்தவர் பெரும் திட்டம் தீட்டி செயல் படுத்தினால் அதையும் எப்படியும் நிறுத்தவோ, அழித்தோ விடுவார்கள். ..அதை விட பெரிதாக செய்ய எந்த திறமையோ, முனைப்போ இல்லை.நான்கு வருடமும் தூக்கம் . பின் எதற்கு ஆட்சி வேண்டும் என்று அலைவது? அமைச்சர்களோ நாட்டு மக்களுக்கு ஊழியம் செய்வதை விட ,மானமிழந்து நடப்பது வருமானம் தரும் என்று எவ்வளவு கூனி குறுக முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள். எதாவது செய்திருந்தால் இந்த இடர் நேரத்தில் எப்படி செயல் புரிவது என்று தெரிந்திருக்கும். ..வேதனை.. இவர்களின் நிர்வாக திறமை எது தானோ?.

    ReplyDelete
  3. இன்னும் எத்தினி நாளு மழ பேஞ்சாலும் அம்மாவோட கார் நனையாது என்று ஒரு ர.ர. பெருமைப்பட்டுக் கொண்டார்.

    ReplyDelete

Printfriendly