Wednesday, May 4, 2016

பிரச்சாரத்தில் சொதப்பும் ஜெ; தேர்தலில் சரியும் அதிமுக

தேர்தல் களம் 2016 பல பல அதிசய திருப்புமுனைகளை கண்டு வருகிறது. 

தேர்தல் அறிவிக்கப்படும் நாளில் தமிழகத்தின் அசைக்கமுடியாத மாபெரும் இயக்கமாக அதிமுக தான் இருந்தது. ஆனால் இப்போது இந்த மூன்று வாரங்களில் அதிமுகவின் நிலை மிக மிக பரிதாபகரமானதாக மாறிவிட்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் எனக்கு தெரிந்து இரண்டே பேர்தான். ஒன்று சரியாக திட்டமிடாத, சுதாரிப்பற்ற ஜெ. இரண்டு கள நிலவரமோ மக்கள் மனநிலையோ புரிந்துகொள்ளாமல் ஜெவுக்கு பிரச்சார உரை எழுதி தரும் அந்த புலவர் பிரகஸ்பதி.

ஜெயலலிதா தமிழக அரசியலில் முன்னிலைக்கு வந்ததே அவரது சாதுரியமான பேச்சாற்றலால் தான். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தமிழகம் முழுவதும் கிராமம் கிராமாக சென்று கொடியேற்றி உரை நிகழ்த்தி தான் தனது தனிப்பட்ட செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கையில் சிறந்த பார்லிமெண்டேரியன் என்று விருதுகள் வாங்கி தனது பேச்சாற்றலால் இந்திரா காந்தி மட்டுமல்லாமல் பல தேசிய தலைவர்களின் அபிமானத்தையும் பெற்றார்.

அப்படிபட்ட ஜெ. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அளவுக்கு சொதப்புவார் என அவரது இயக்க ரத்தத்தின் ரத்தங்கள் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.

தேர்தல் அறிவிக்கப்பட்டபொழுது எதை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என்பதில் எந்த கட்சிக்கும் தெளிவான கண்ணோட்டம் இல்லை. ஆட்சி மீது அப்போதைய நிலையில் சொல்லிக்கொள்ளும் படியான பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை. திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் நடத்திய தமிழக சுற்றுப்பயணத்தில் தனக்கு மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து, தொகுதி வாரியாக உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்போம் என்கிற வாக்குறுதியை கொடுத்து தான் களம் இறங்கியது. அதிமுகவை பொறுத்தவரை தனது தனிப்பட்ட செல்வாக்கு, ஆட்சியின் மேன்மையை மட்டுமே நம்பி களம் இறங்கியது. ஆனால் சென்னையில் நடந்த முதல் பிரச்சார கூட்டத்திலேயே ஜெ. சொதப்பிய சொதப்பல் எதிர்க்கட்சிகளுக்கு மணி மணியாக பாயிண்ட்ஸ் எடுத்து கொடுத்து பிரச்சார களத்தை சூடு பிடிக்க வைத்தது.

சென்னை பிரச்சார கூட்டத்தில் தனது ஆட்சியின் சாதனையாக ஜெ. சொன்னது, சென்னை வெள்ள நிவாரணம், தொழில் முதலீடு, சென்னை மெட்ரோ ரயில் ஆகியவை தான். இதையே பிள்ளையார் சுழி ஆக்கி ஒவ்வொன்றாக பதிலளிக்க தொடங்கியது திமுக. வெள்ள நிவாரணம் பற்றி ஜெ பேசியதற்கு வெள்ள சேதம் எதனால் ஏற்பட்டது என்பதை பற்றி விலாவாரியாக விளக்க தொடங்கியது எதிர்கட்சி பிரச்சாரங்கள். தொழில் வளர்ச்சி பற்றி ஜெ. சொன்னதற்கு தொழில் துறையை முடக்கி வைத்ததை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் புட்டு புட்டு வைக்கிறார்கள் மற்றவர்கள். சென்னை மெட்ரோ ரயில் தனது சாதனை என ஜெ. சொன்னதற்கு ஜெ. அந்த திட்டத்தை எப்படி எல்லாம் முடக்கி வைத்தார் அதன் பின் நீதிமன்றம் தலையிட்டு தான் அந்த திட்டத்தை செயல்படுத்தியது என்பதை செய்திகளோடு விளக்கியது எதிர்கட்சி முகாம்.

சென்னை பிரச்சாரம் சொதப்பியபோதே கொஞ்சம் சுதாரித்திருக்கலாம் ஜெ. ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு கூட்டத்திலும் கூடுதல் சொதப்பல்களை அள்ளி தெளித்ததன் பயனாக அதற்கான பதிலடிகளை ஆதாரபூர்வமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் மத்தியில் எடுத்து எடுத்து வைக்க வைக்க, அதிமுக மீதான பிரம்மாண்ட பிம்பம் மெல்ல மெல்ல மக்கள் மனதிலிருந்து சரிய தொடங்கியது.

ஜெ.வுக்கு பிரச்சாரம் எழுதி கொடுப்பவராவது மக்கள் மனநிலையை புரிந்து கொண்டிருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஜெ. பேசவிருக்கும் பகுதியின் உண்மையான பிரச்சனைகளை பற்றியாவது தெரிந்து வைத்திருக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் எண்ணற்ற தகவல்களை தினசரி அறிந்து வருவதால் அதிகமாக பொய்மொழிகள் இல்லாத வகையிலாவது ஜெ. பிரச்சார உரையை தயாரித்திருக்கவேண்டும். ஆனால் ஏதோ ஒரு கனவு லோகத்தில் இருக்கும் அதிமுகவினர் தமிழகம் பொற்காலமாக இருப்பது போன்ற ஒரு மாயையில் இருந்து இன்னமும் மீளாததால் யதார்த்தத்துக்கு சற்றும் சம்மந்தமில்லாத பிரச்சார உரையை எழுதி கொடுத்து, அதை ஜெ.வை படிக்க வைத்து, உள்ள கொஞ்ச நஞ்ச அபிமானத்தையும் மக்கள் மத்தியில் இருந்து நீக்கி கொண்டார்கள்.


இப்படித்தான் கோவை பொதுக்கூட்டமும் அமைந்தது. ஏற்கனவே சேலம் பிரச்சார கூட்டத்தில் சேலம் மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த (!) ஜெ. மீண்டும் ஒரு முறை கோவை மாவட்ட மக்களுக்கு கோவை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். (குறைந்த பட்சம் எங்கே பேசுகிறோம், யாரை பற்றி பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்கிற சிந்தனையாவது இருந்திருந்தால் இப்படியான சமந்தா சம்மந்தம் இல்லாத ஊர்களில் சம்மந்தமற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசும் காமெடியை தவிர்த்திருக்கலாம்)

அதிமுக இதுவரை தேர்தல் அறிக்கை எதையும் வெளியிடவில்லை. திமுக, பாமக, ம.ந.கூ ஆகியவை தங்களது செயல் விளக்கங்களை தேர்தல் அறிக்கையாக வெளியீட்டு இருக்கிறார்கள். அதிமுகவோ மக்களின் குறைகள் என்ன? தமிழகத்துக்கு என்ன திட்டங்கள் தேவை என்பதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள கூட முயற்சிக்காததால் இன்று வரை தேர்தல் அறிக்கையோ செயல் திட்டங்களோ வெளியிடவில்லை. பொத்தாம் பொதுவாக, நான் உங்களுக்கு தேவையானதை செய்வேன், நீங்கள் கனவிலும் நினைக்காததையும் செய்வேன், நான் சொல்லாததையும் செய்வேன் என சொல்கிறாரே தவிர இன்னின்ன பிரச்சனைகளை இன்னின்ன வகையில் தீர்ப்பேன், இன்னின்ன திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்துவேன் என சொல்லவே இல்லை. நிறைவேற்றுகிறாரோ இல்லையோ, இதை இதை செய்வேன் என்கிற வாக்குறுதியாவது கொடுத்திருக்கலாம். ஆனால் அதை கூட அவரால் செய்ய முடியவில்லை. எனது அதிமுக நண்பர்களை கேட்டால் ரொம்ப வருத்தப்பட்டு சொல்கிறார்கள். அம்மாவுக்கு எங்கே என்ன பிரச்சனை இருக்கிறது, என்ன வாக்கு கொடுக்கவேண்டும் என்று கூட யாரும் எடுத்து சொல்வதில்லை என. இரண்டாம் கட்ட தலைவர்கள் என யாரையும் வளர்த்தாமல் இருப்பதன் பலனை இப்போது அனுபவிக்கிறது அதிமுக.

கோவை பொதுக்கூட்டத்திலும் அது தான் நடந்தது. தொழில் துறையில் மிகப்பெரிய சாதனைகள் நடத்தி இருப்பதாகவும், 4,509 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி இருப்பதாகவும்(!), தொழிலாளர்கள் எல்லோரும் தனது ஆட்சியில் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பெருமிதத்தோடு அவர் பேசியதை கேட்ட எனது அதிமுக நண்பர்களே ஆடித்தான் போய் விட்டார்களாம்.  அதில் பலரும் சொந்தமாக தொழிற்சாலைகள் வைத்து நடத்தி நசிந்து கொண்டு இருப்பவர்கள். தொழில் வளர்ச்சி முடங்கி போய் வேறு மாநிலங்களுக்கு செல்லலாமா என யோசித்து கொண்டிருப்பவரும் அதில் அடக்கம். இப்படியான நிலையை அறிந்து தான் கர்நாடக முதல்வர் கூட கோவையிலே கூட்டம் நடத்தி ஏன் தமிழகத்தில் இருந்து இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகருக்கு வாருங்கள். உங்களுக்கு தொழில் நடத்த எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன் என பகிரங்கமாக வந்து அழைப்பு விடுத்து போனார். சில தொழிற்சாலைகளும் கோவையிலிருந்து கர்நாடகம் சென்று விட்டது. அப்படியான சூழல் தான் கோவையிலே நிலவி வருகிறது என்பதை கூட தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெ. அறிந்திருக்கவில்லை.

கோவை என்றாலே டெக்ஸ்டைல் சிட்டி, தொழில் நகரம் என்பதெல்லாம் பழங்கதை. ஒரு காலத்தில் ஓஹோவென ஓடிக்கொண்டிருந்த மில்களும், மோல்டிங் கம்பெனிகளும், மோட்டோர் கம்பெனிகளும், நெசவு தறி இயக்குவோரும், பம்பு செட், கிரைண்டர் உற்பத்தியாளர்களும் தொழில்கள் நசிந்து, இப்போது, கிடைத்த கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு அவலமான நிலை தான் கோவையிலே இருக்கிறது. இந்த யதார்த்தத்தை கூட புரிந்து கொள்ளாமல் வெற்று பெருமித பேச்சுக்களை எழுதிக்கொடுத்து அதை அப்படியே பேசி சொந்த கட்சிக்காரர்களும் மக்களும் கேலி செய்யும் அளவுக்கு ஜெ.ஆளானது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான். ஜெ. அப்படி பட்ட ஆள் எல்லாம் இல்லை. பொய்யாகவாவது நசிந்து கிடக்கும் மில்களை புனரமைத்து இயங்க செய்வேன், நெசவாளர்களுக்கு சலுகைகள் வழங்குவேன், பம்ப், மோட்டோர் தொழிற்பூங்கா அமைப்பேன் என பொய் வாக்குறுதியாவது கொடுத்து செல்வது தான் அவரது வழக்கம். இப்படி அப்பட்டமாக தனக்கு யதார்த்த நிலை எதுவுமே தெரியாது என மக்கள் உணரும் வகையில் அப்பட்டமாக பிரச்சாரம் செய்து சென்றிருக்கமாட்டார்.


கோவை மாவட்டம் அதிமுகவின் அசைக்கமுடியாத பெரும் கோட்டை என்பது எல்லாம் மே 1 ஆம் தேதி ஜெ பிரச்சாரம் செய்தது வரைக்கும் தான். இப்போது சொந்த கட்சிக்காரர்களும், மக்களும் (அவர்களிலும் தொழிலாளிகளும், கூலி வேலைகாரர்களும், சிறு/குறு தொழில் முனைவோரும் இருக்கிறார்களே?) எல்லோருமே அதிமுகவை விமர்சிக்க தொடங்கி இருப்பதை ஜெ சீரியசாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. இந்த தேர்தலில் கோவை பகுதி அதிமுகவுக்கு மிகப்பெரிய பதிலடியை கொடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் அங்குள்ளவர்களின் பேச்சில் தெரிகிறது.

மக்களால் நெருங்கமுடியாத ஜெ. இப்போது வேட்பாளர்களாலும் நெருங்கமுடியாதவராக மாறி போனதை அதிமுகவினரே ரசிக்கவில்லை. தனித்தனி மேடை அமைத்து அங்கே ஜெ உட்கார்ந்திருக்கிறார் என்கிற உருவாக்கத்தை மட்டுமே மக்களுக்கு கொடுத்து, பிரச்சார உரையை வாசித்து செல்லும் வழக்கத்தை ஜெ கை கொண்டிருப்பது அவரை மக்களிடம் இருந்தும், தொண்டர்களிடம் இருந்தும், ஏன் வேட்பாளர்களிடம் இருந்துமே வெகு தூரம் விலக்கி வைத்திருக்கிறது.

மக்களுக்காக நான், மக்களால் நான் என ஒரு பஞ்ச் டயலாக்கை எல்லா பொதுக்கூட்டத்திலும் பேசும் ஜெ ஒருபோதும் மக்களோடு நான் என சொல்லியதில்லை. அதனால் தானோ என்னவோ மக்களுக்காக நான் (எதையும் செய்யமாட்டேன்); மக்களால் நான் (எல்லா வளங்களையும் அனுபவிப்பேன்) என்கிற ரீதியிலேயே அவரது அந்த பஞ்ச் டயலாக் பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது.

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் அதிமுகவினரே அதிக அளவில் பணம் பதுக்கி வைத்திருப்பது வெளியாவதும், யதார்த்தம் சிறிதும் இல்லாத பிரச்சார உத்தியும், மக்கள் பிரச்சனைகளை பற்றிய எந்த உணர்வும் இல்லாத ஜெ. பேச்சும், அதிமுகவின் வெற்றி சதவிகிதத்தை குறைத்து வருவதை அவர் உணர்ந்து கொள்வது நல்லது.

முறையாக பிரச்சாரம் செய்து, பொய்யாகவேனும் மக்களின் பிரச்சனைகளை அறிந்துவைத்து அதை தீர்த்து வைப்பதாக பொய் வாக்குறுதியேனும் கொடுத்து இருந்தால் அதிமுக மீதான மக்களின் நம்பிக்கை அப்படியே இருந்திருக்கும். தனது பிரச்சார சொதப்பல்களால் தனது எதிர்காலத்தையும் கட்சியின் எதிர்காலத்தையும் ஒரு சேர கெடுத்துக்கொண்டு வருகிறார் மாண்புமிகு அம்மா. இது தமிழகத்துக்கு நல்லதா கெட்டதா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.


2 comments:

Printfriendly