Friday, April 15, 2016

தேஜாவூவும் சில கனவுகளும்

தேஜாவுங்கறதுக்கு தேஜாவுன்றதுதான் பேருன்றது எனக்கு பலகாலமா தெரியாது. அதை ஒரு காட்சிப்பிழை கண்ணோட்டத்தில் தான் புரிதலா வெச்சிருந்தேன்.

முதன் முதல் இப்படியான ஒரு நிகழ்வு கோவை பாப்பநாயக்கன் பாளயத்தில் நடந்தது. அப்போ நானும் என் நண்பனும் சைக்கிளில் போயிட்டிருக்கோம். நண்பன் சைக்கிளின் முன்புற பாரில் உட்கார்ந்திருந்தான். நான் வண்டி ஒட்டிட்டு இருந்தேன். வழியில் ஒரு ஐஸ்கார அண்ணன்ட்ட சேமியா ஐஸ் வாங்கி சாப்பிட்டுட்டே சைக்கிள் ஒட்டிட்டு இருந்தோம். எங்க வீட்டுக்கு பக்கத்தில் வந்ததும் எங்களுக்கு தெரிஞ்ச ஒரு அக்கா தண்ணி குடம் எடுத்துட்டு ரோட்டை கிராஸ் பண்ணினாங்க. அப்படி கிராஸ் பன்னும்போது கல் தடுக்கி ரோட்டிலேயே இடறி விழுந்தாங்க.. கையில் இருந்த சில்வர் குடம் ரோட்டில் உருள மொத்த தண்ணியும் ரோட்டை சேறாக்கிட்டு ஓடிச்சு.


இதை பார்த்து சிரிச்ச என் நண்பன், டேய்.. சதீ.. இவங்களுக்கு இதே வேலை தாண்டா.. அன்னைக்கும் ஒரு நாள் இப்படித்தான் இதே மாதிரி இந்த இடத்துல தண்ணிக்கொடத்தோட விழுந்தாங்க... இந்தா திரும்பவும் இப்ப விழுறாங்க, அப்பவும் நாம இதே மாதிரி ஐஸ் சாப்பிட்டுட்டே தான் வந்தோம்.. ஞாபகமிருக்கா?’ன்னு கேட்டு சிரிச்சான்.

இதை கேட்ட அந்த அக்கா.. டென்ஷன் ஆயிட்டாங்க.. அடேய்.. நான் இப்ப தான் முதல் முதல் இப்படி விழுறேன்.. சும்மா கதை கட்டாதே. கனவு கினவு கண்டிருப்பேன்னு அவனை கிண்டலா கலாய்ச்சிட்டு போயிட்டாங்க.  

நானும் என் பங்குக்கு, டேய்.. நாம இப்ப தான் இப்படி சேமியா ஐஸ் சாப்பிட்டுட்டு இந்த ரோட்ல வரோம்.. இதுக்கு முன்னாடி இப்படி நாம வரலையேடான்னு குழப்பமா கேட்க.. பையன் ஒருமாதிரி கன்பீஸ் ஆயிடாப்டி.

ரெண்டு நாள் சரியாவே எங்ககூட விளையாட வரலை.

மூணாவது நாள் வந்தான். டேய் சாத்தியமா சொல்றேன்.. அவங்க அன்னைக்கு விழும்போது அவங்க ஏற்கனவே அதே மாதிரி விழுந்தது ஞாபகம் வந்துச்சு. அதை விட முக்கியம் அவங்க அப்படி விழப்போற சில செகண்டுக்கு முன்னாடி அவங்க அப்படி தான் விழப்போறாங்கன்னு எனக்கு தெரிஞ்சுது.. ஆனா சொல்ல முடியலை. அதுக்குள்ளே எல்லாம் நடந்துச்சு.. என்னை நம்புடான்னு ஒரு மாதிரியா ஃபீல் ஆயி பேசுனான்.

சரி விடுறான்னு அவனை அப்படி இப்படி சமாதானம் பண்ணிட்டு போயிட்டேன்.

அதுக்கப்புறம் 1992 ஆம் வருஷம். பத்தாப்பு ரிசல்ட் வர்ற சமயம். ரிசல்டு பாக்க நானும் நண்பர்களும் கோவை தினத்தந்தி ஆபீஸ் முன்னாடி கூடி இருந்தோம். பத்து மணிக்கு தான் ரிசல்டு வரும்னு வாட்ச் மேன் சொன்னாரு. அப்படி அவர் சொல்லிட்டு இருக்கும்போதே.. எனக்கு அடுத்து அவர் இப்ப மணி என்ன தம்பின்னு” கேப்பாரு நானும் சுவத்துல இருக்கிற கையை லைட்டா திருப்பி மணி பாத்து பத்தேகால் ஆச்சுனு சொல்லுவேன், அப்படி திரும்பும்போது பக்கத்துல ஒரு நண்பன் மேல லைட்டா இடிச்சுக்குவேன்னு எல்லாம் அடுத்தடுத்து நினைவுக்கு வந்துட்டே இருக்கு... ஆனா அதை எல்லாம் உள்வாங்கி என்னன்னு உணர்ந்து புரிஞ்சுக்கறதுக்குள்ளே அதெல்லாம் அப்படி அப்படியே நடந்துட்டு இருக்கு. என்ன நடக்க போகுதுன்றது.. நடக்கறதுக்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்னாடியே எனக்கு தெரிய வந்துச்சு.

இந்த நிகழ்வு நடந்தப்போ சில வருஷங்களுக்கு முன் (மேலே நான் சொன்ன) என் நண்பனின் நிகழ்வும், அப்போ அவனுக்கு இதே மாதிரி தான் இருந்திருக்கும்லன்ற நினைப்பும் வந்துச்சு.

*****

1993இல் சென்னை வந்தப்பறம், கன்னிமாரா லைப்ரரி போகும்போதெல்லாம் இதை பத்தின புக்ஸ் தேடி எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்தில் நமக்கு ESP (Extra Sensory Power) வந்திருச்சு.  இனி நாம எதிர்காலத்தை துல்லியமா கணிச்சிரலாம்ன்ற அளவுக்கெல்லாம் நானே நம்ப ஆரம்பிச்சிட்டேன். அந்த அளவுக்கு பல பல புக்ஸை ரெஃபர் பண்ணி, கனவுகள், காட்சி பிழைகள், யூக கற்பனைகள், எதிர்கால கணிப்புகள்னு கண்டதெல்லாம் படிச்சு நானும் ஒரு மாதிரி குழம்பிட்டேன்.

ரொம்ப குழம்புனா சரிவராதேன்னு நானே என்னை சமாதானம் பண்ணிக்கறதுக்காக இது ஜஸ்ட் காட்சி பிழைதான்னு எனக்கு நானே ஒரு முடிவுக்கு வந்துட்டு, அப்படியே விட்டுட்டேன்.

ஆனால், அதற்கு பிறகும் பல ஆண்டுகளில் பல பல நிகழ்வுகளில் இதே மாதிரியான உணர்வுகள் வர ஆரம்பிச்சுது. பல சம்பவங்கள் நடந்த பொழுது அது குறித்த நினைவுகள் முன்கூட்டியே அறிய முடிஞ்சுது. சில அபூர்வ நிகழ்வுகளில் அப்படி முன்கூட்டியே அறிய முடிஞ்சு என்னை நான் சுதாரிச்சு தற்காத்துக்கொண்ட நிகழ்வுகளும் இருக்கு.


உதாரணமா ஒரு ஆக்ஸிடெண்டை சொல்லலாம்.

அம்பத்தூர் எஸ்டேட்ல வேலை செஞ்சிட்டு இருந்த சமையம். எனக்கு ஹோட்டல் சாப்பாடு அவ்வளவா ஒத்துக்காது. அதனால் மதியம் சாப்பிட எப்படியும் வீட்டுக்கு வந்துடுவேன். அப்படி ஒரு நாள் மதிய லஞ்சுக்கு வீட்டுக்கு வந்திட்டு இருக்கும்போது, கிராம்ப்டன் கிரிவ்ஸ் கம்பெனி பக்கத்து ரோட்ல வேகமா பைக்ல வந்துட்டு இருந்தேன். எதிர்ல ஒரு தண்ணி லாரி மெல்லமா, ரொம்ப ரொம்ப மெல்லமா ஊர்ந்து ஊர்ந்து வந்திட்டு இருக்கு. இன்னொரு பக்கம் என் ரோட்டுக்கு இடது பக்க ரோட்லருந்து ஒரு சின்ன பையன் சைக்கிள்ல வந்துட்டு இருந்தான். எனக்கு அந்த செகண்டே தெரிஞ்சுருச்சு. அவன் நெர்வஸ் ஆகி என் மேல இடிப்பான்.. நான் நிலை தடுமாறி லாரி மேல போயி நச்சுனு மோதுவேன்னு எல்லாமே தெரிஞ்சுது.. அப்படி தெரிஞ்சு புரிய தொடங்கிய அடுத்தடுத்த செகண்ட்ஸ்ல அதே மாதிரி எல்லாமே நடக்க தொடங்கிச்சு. ஆனா நான் லாரி மேல தான் மோதுவேன்னு ஏற்கனவே தெரிஞ்சதால (இத்தனைக்கும் லாரி எனக்கு இடது ஓரமா எதிர்ல வருது.. நான் ரோட்டோட வலது ஓரமா போறேன்.. ஆனாலும் லாரி மேல தான் மோதுவேன்னு தெரிஞ்சுது) கையை லாரிக்கு காட்டி நிறுத்த சொன்னேன்.. எதுக்கு நான் அப்படி சொல்றேன்னு லாரி காரனுக்கே தெரியலை.. கன்பீஸ் ஆயிட்டான்.. ஆனாலும் நிறுத்தீட்டான்.

நான் அப்படி கையை காட்டி நிறுத்த சொல்ல.. அடுத்த செகண்ட் சைக்கிள் என் மேல மோத.. நான் தடுமாறி துள்ள.. அதில் பேலன்ஸ் தவறிய பைக் வலதுபுறம் திரும்பி லாரியை நோக்கி போக.. கரெக்டா லாரியும் பிரேக் அடிச்சு நிறுத்திவிட.. நான் விழுந்து தரையில் தரைச்சபடி சறுக்கிட்டே போயி லாரி டயர் மேல மோதி நின்னேன். முதுகிலும், கையிலும் சிராய்ப்பு தவிர பெருசா ஒண்ணும் அடி இல்லை.

என்ன நடக்கவேண்டியதுன்னா நான் நேரா லாரியில் போயி மோதிருக்க வேண்டியது.. மோதி இருந்தா ரிவர்சில் தெறிச்சிருப்பேன்.. அப்படி தான் எனக்கு சம்பவம் நடக்க போறதா நினைவு வந்துச்சு (கவனிங்க இந்த நினைவு வரும்போது நான் பைக்கில் கேசுவலா வந்துட்டு இருக்கேன்.. அப்படி ஆக்ஸிடெண்ட் ஆகக்கூடிய சாத்தியமே இல்லாத நிமிஷம் அது) அந்த நினைவு வந்ததால் தான் லாரியை நிறுத்த சொல்லி.. நான் வாகா சாஞ்சு விழுந்து தரையோடு தரையா தரைச்சபடி போயி சேஃபா இடிச்சு நிக்க முடிஞ்சுது.

இந்த சம்பவம் என் குழப்பத்தை இன்னும் கூடுதல் ஆக்கிருச்சு. அப்போ.. என்ன நடக்கபோகுதுன்றதை தெரிஞ்சுக்க முடியறதோட என்னால் அதுக்கு தக்கபடி தற்காப்பு நடவடிக்கையும் எடுக்க முடியும். அடடே! நாம பெரிய தீர்க்கதரிசன ஸ்வாமிகள் ஆயிடுவோம் போலிருக்கேன்னு நினைச்சேன்.

அதன் பின்னும் பல பல நிகழ்வுகளில் இது மாதிரி முன்கூட்டிய தகவல்கள் நினைவுக்கு வந்து அப்படி இப்படி சமாளிச்சு இருக்கேன். ஏதோ எனக்குள்ளே ஒரு அமானுஷ்ய சக்தி வந்து உக்காந்திருக்கறதா நினைச்சுப்பேன்.



அப்படி இருக்க, ஒரு நாள் அதே கன்னிமாரா லைப்ரரியில் ஒரு புஸ்தகத்தில் தான் தேஜாவூ பத்தி படிச்சேன். சுவாரசியம் தாங்கலை. என் வாழ்வில் நடந்த பல விஷயங்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு படிச்சிட்டு வந்தேன். நிறைய விஷயங்கள் மெல்ல மெல்ல புரிய ஆரம்பிச்சுது.

இந்த சூழலில் தான் ஒரு முறை மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரும்போது, ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு சுவாரசியமான புத்தகம் பார்த்தேன். கனவுகள் பற்றிய புத்தகம் அது.

அந்த புத்தகத்தை படிச்சப்பறம், இந்த குழப்பம் இன்னொரு பரிணாமத்துக்கு போச்சு. அதாவது அந்த புக் என்ன சொல்ல வருதுன்னா.. நாம் பல்வேறு தருணங்களில் பார்த்த கனவுகள் நம் ஆழ் மன நினைவறைகளில் தங்கிரும். பல நாள், பல மாதங்கள் ஏன் பல வருஷங்களுக்கு அப்புறம் கூட அந்த நிகழ்வுகள் நடக்கும் போது சட்டுனு நம்ம நினைவறைகளிலிருந்து அந்த நிகழ்வுகள் நம் ஞாபகத்துக்கு வந்து நம்மை அலார்ட் ஆக்கும்.

இந்த புத்தகத்தில் இப்படி சொன்னதும் நான் செஞ்ச காரியத்தை சொன்னா சிரிக்கக்கூடாது.

அழகா ஒரு லாங் சைஸ் ரூல்டு நோட் புக் வாங்கி ஒவ்வொரு நாளும் நான் கண்ட கனவுகளை அதில் டேட் போட்டு குறிச்சிட்டே வந்தேன். ஏதாவது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தா அதை பத்தி எப்பவாவது கனவுகள் கண்டிருக்கேனான்னு எடுத்து தேடி பாப்பேன். ம்ஹூம்.. அப்படி எதுவும் எந்த கனவோடும் டேலி ஆகவேயில்லை. ஒரு மூணு வருஷம் எழுதிருப்பேன்.. அப்பறம் நிறுத்திட்டேன்.. அதுக்குள்ளே அது 4 நோட் புக் ஆயிருந்தது. அந்த நோட்டெல்லாம் ஒரு சுபயோக சுபதினத்தில் பரணில் தூக்கி போடப்பட்டது.

இப்படி எழுதறதை நிறுத்தி சில வருஷம் கழிச்சு சில நிகழ்வுகள் நடந்தது. பின்னொரு தருணம் வீட்டுக்கு பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும்போது அந்த பழைய நோட்டுகள் தட்டுப்பட்டுச்சு. அதை பரண்லருந்து இறக்கி.. அந்த கனவுகளை (அதாவது கிட்டத்தட்ட 5 வருஷம் முன்பு பார்த்து எழுதி வெச்சா கனவுகளை) படிச்சு பார்த்தப்போ... அட இதெல்லாம் இப்ப போன வருஷம் நடந்துச்சே.. இது போன மாசம் நடந்துச்சே.. ன்னு ஆச்சரியமா சொல்லி சொல்லி சிலாகிச்சிட்டு இருந்தேன்.

அதன் விளைவா.. என் முடிவுகள் மீண்டும் மறு வரையறைக்குள்ளாச்சு.

அதாவது.. எப்போதோ நாம் கண்ட கனவுகள் பிறிதொரு நாளில் நிஜத்தில் நிகழ நேரும்போது நம் பழைய கனவுகள் நினைவுக்கு வந்து அடுத்து என்ன நடக்கப்போக்குதுன்றதை நமக்கு உணர்த்தும். ஆனாலும் நம்மால் அவற்றை தவிர்க்க முடியாது.

இன்னொரு வரையறை உருவாகும் வரை இது தான் என் இப்போதைய நிலைப்பாடு.

இதை எல்லாம் ஏன் நான் இப்ப சொல்ல வரேன்னா..  நேத்து ஒரு கனவு கண்டேன்.. ஒரு கெட்ட கனவு.. கொடூரமான கனவும் கூட.... அது ஒரு வேளை பலிச்சு தொலைச்சிருமோன்னு  பயந்து பயந்து வருது. அது எப்போ நடக்குமோ? அதுக்குள்ளே நான் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் சரியா செஞ்சிட முடியுமா? ன்னு எல்லாம் படபடப்பா வருது.

யான் பெற்ற அச்சம் பெறுக இவ்வையகம்!


1 comment:

  1. நிறைய.. நிறைய.. மீடியமாக இருந்ததால் கனவுகள் உள்ளுணர்வுகளின் எச்சரிக்கை என நிறைய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.
    பல பிரச்சினைகளுக்கு தீர்வே கனவின் மூலம்தான் கிடைத்துள்ளன என்பது தனி டிபார்ட்மெண்ட் போலும்.

    ReplyDelete

Printfriendly