Monday, May 30, 2016

நேர் நிரை – கூவிளம்

மாராணி மிஸ். 

கோவை சித்தாபுதூர் ஸ்கூலில் இவங்க தான் என்னுடைய தமிழாசான்.. ச்சே.. தமிழாசிரியை. மிக மிக அருமையா தமிழை, தமிழ் இலக்கணத்தை யாப்பை, யாப்பின் கட்டுக்களை எளிமையா புரியமாதிரி எனக்கு சொல்லி கொடுத்தவங்க.
 
Thanks: PaddathumSuddathum.blogspot.com

யாப்பிலக்கணத்தின் அடிப்படையே சொல்லின் ஒலி குறிப்புத்தானே? நெடில் – நேர்; குறில் – நேர்; நெடில் நெடில் – நேர் நேர்; குறில் நெடில் – நிரை நேர்; நெடில் குறில் – நேர் நிரை; குறில் குறில் நிரை நிரை. அவ்வளவு தான் யாப்பு. இதில் இரட்டை & மூன்று ஒலிக்குறிப்புக்கும் இன்னொரு அடுக்கு 'கோடு வேர்டு' இருக்கு. நேர் நேர் – தேமா; நிரை நேர் – புளிமா; நேர் நிரை – கூவிளம்; நிரை நிரை – கருவிளம். இதெல்லாம் இரட்டை ஒலிக்குறிப்புக்கள். இதுக்கு அடுத்தபடியா மூணாவது சொல் நேர்னு வந்தா காய்; நிறைனு வந்தா கனி. இவ்வளவு சிம்பிளா யாப்பை சொல்லிக்கொடுத்ததோட, அவங்க சொல்ற சொல் என்ன ஒலிக்குறிப்பு அதுக்கு என்ன கோடு வேர்டுனு கேள்வி கேட்டு கேட்டு தினம் கொஞ்ச நேரம் விளையாடுவாங்க. இது மிக அற்புதமான பயிற்சியா அமைஞ்சு இன்னை வரைக்கும் யாப்பை மறக்கவிடாம செஞ்சிருக்கு.

வைரமுத்துவின் இதுவரை நான் படிச்சப்ப அவர் இதே மாதிரி யாப்பை முதல் முதலா படிச்சு புரிஞ்சுகிட்டபோது திருக்குறளின் 1330 குறளையும் பகுத்து பார்த்தார்னு எழுதி இருக்கிறதை படிச்சேன். அதனால தான் அவர் கவிப்பேரரசர். நான் அந்த அளவுக்கெல்லாம் யோசிக்கலை. தினம் அப்பா வீட்டில் வாங்கும் தினத்தந்தியின் தலைப்பு செய்திகளை பகுத்து பார்த்து அதை சின்ன தாளில் எழுதி எடுத்துட்டு போயி உமாராணி மிஸ் கிட்டே காட்டுவேன். சரியா பகுத்திருக்கேனான்னு என்னை நானே அப்ரைசல் செஞ்சுக்க.

உதாரணமா இந்த பிளாக்கின் தலைப்பை எடுத்துகோங்க. மனவுரை ம-குறில்; ன – குறில்; வு – குறில்; ரை – குறில். எல்லாமே குறில் தான். அதை சேர்த்தா.. குறில் குறில் – நிரை; நிரை நிரை – கருவிளம். சுருக்கமா மனவுரை = நிரை நிரை = கருவிளம். சொல்லி பாருங்க மூணு வார்த்தையும் ஒரே மாதிரி தான் உச்சரிக்கும்.

இது தவிர வேற்றுமை உருபு, குற்றியலுகரம், குற்றியலிகரம் அது இதுன்னு அந்த ரெண்டு வருஷத்தில் (9th & 10th) ஆல்மோஸ்ட் இலக்கணத்தில் மொத்த பேசிக்கையும் சொல்லி கொடுத்துட்டாங்க.

Thanks: Ponkarthikeyan.wordpress.com

எனது பிற்கால யாத்திரைகளில் இந்த யாப்பு ஒலிக்குறிப்பு இன்னொரு தேடலுக்கு வழி வகுத்துச்சு. அது தான்.. இதெல்லாம் என்ன காய் கனி? தேமா – தேன் மாங்கா; புளிமா – புளிமாங்கா புரிஞ்சுது.. ஆனா இந்த கூவிளம் & கருவிளம்??

எனக்கொரு மதுரைக்கார தோழி உண்டு. அவர் தான் விளம் என்பது விளாம்பழம் / விளாங்காய் என்பதை குறிக்கும்னு சொன்னார். மதுரைக்கு போயிருந்தபோது விளாங்குடி கூட்டிட்டு போனார். நான் கூட சுத்து முத்தும் விளா மரமா தோப்பு தோப்பா இருக்கும்னு ஆசையா எதிர்பார்த்து போனேன். ஆனா அது ஒரு வழக்கமான நகர பகுதியா தான் இருந்துச்சு.

******  *******

சென்னை கன்னிமாரா நூலகம் எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர்களில் பல வகையினர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், சொற்பொழிவாளர்கள்வைரமுத்து விழாக்களில் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சொல்லாடலை கண்டு சொக்கி போயிருந்த காலங்கள் அவை.

மெல்ல மெல்ல மனம் லக்ஷ்மி, வாஸந்தி, அகிலன், சாண்டில்யன், கல்கி, அசோகமித்த்ரன், லா.ச.ரா, ஜெயகாந்தன், பாலகுமாரன், தமிழ்வாணன் மாதிரியானவர்களிடமிருந்து விலகி தமிழ் கவிஞர்களின் அதிலும் மரபு கவிஞர்களின் படைப்புக்கள் பக்கமாக ஒதுங்க தொடங்கினேன். மாயவநாதன், சுரதா, மருதகாசி, பாரதிதாசன் மாதிரியான ஹேரிடெஜ் கவிஞர்களில் இருந்து, வைரமுத்து, முத்தையா, வாணிதாசன், பாவலர் தேவகி மாதிரியான கவிஞர்களின் படைப்புகள் வரை எல்லோரது எழுத்துக்களும் வசீகரித்தன. 

மாயவநாதன் பத்தி சொல்லும்போது அந்த வானம்பாடி படத்தின் காகித ஓடம் கடலலை மீது பாடலை சொல்லாமல் இருக்கமுடியாது. (ஏற்கனவே பலரும் பல தடவை சொன்னது தான். நானும் ஒரு தடவை சொல்லிக்கறேனே).

காகித (நேர் நிரை) ஓடம் (நேர் நேர்) கடலலை (நிரை நிரை) மேலே (நேர் நேர்).  இந்த பாடலை எழுதுநது என்னவோ கலைஞர் தான். ஆனா உண்மையிலேயே இந்த டியூன் மாயவநாதனுக்கு தான் கொடுக்கப்பட்டது. அதுவும் ஒரு கோபத்தில் மகாதேவன் கொடுத்த டியூன் அது. ரொம்ப நாளா டியூனு டியூனுனு நச்சு பண்ணிட்டு இருந்த மாயவநாதன்கிட்டே கடுப்பாகி மகாதேவன் சொன்னாராம்.. என்னய்யா டியூனு பெரிய டியூனு? மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் இதான் டியூனு முடிஞ்சா எழுதிக்கொன்னு சொன்னாராம். மாயவநாதன் அந்த டியூனுக்கு பாட்டு எதையும் எழுதலை. ஆனா விஷயத்தை கேள்விப்பட கலைஞர் அந்த 'மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்' டியூனையே அடிப்படையா வெச்சு காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்னு எழுதுனாரு. அதுமட்டுமல்ல. அந்த பாடல் முழுக்கவே இந்த ஒரே டியூன் தான்.

இதுக்கு அடிப்படையும் யாப்பு தான். அந்த மாயவநாதன்ற வார்த்தையின் ஒலிக்குறிப்பு மா(நேர்) யவ(நிரை) நா(நேர்) தன்(நேர்) – நேர் நிரை நேர் நேர். இதை பேசிக்கா வெச்சு தான் கா(நேர்) கித(நிரை) ஓ(நேர்) டம்(நேர்) னு எழுதி இருப்பார் கலைஞர். நீங்க அந்த வார்த்தைகளை சொல்லிப்பாருங்க. மாயவ நாதன், நேர்நிரை நேர்நேர், காகித ஓடம்... ஒரே மாதிரி உச்சரிப்பு வருதுல்ல?

மொத்த பாடலின் அத்தனை வரியையும் மாயவநாதன் மாயவனாதாண்ணே போட்டு பாடினாலும் கரெக்டா வரும். அத்தனை எடத்திலேயும் அதுக்கு தகுந்த மாதிரி யாப்பு தப்பாம வார்த்தைகளை போட்டு ஒரு உருக்கமான பாட்டை எழுதிருப்பாரு கலைஞர்.

“கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்”

மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்
மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன்”

பாடி பாருங்க. சேம் டியூன் யூ நோ.

இந்த செய்தியை படிச்சப்பறம் திரைப்பாடல்களை கூட சந்தம் பிரிக்க ஆரம்பிச்சேன். எங்கெல்லாம் தளை தட்டுது எங்கெல்லாம் வார்த்தைகள் தப்பு தப்பா வருதுன்னு எல்லாம் ஈஸியா புரிய ஆரம்பிச்சுது. பல பல பாடல்களை கண்ணதாசனே தப்பா எழுதி இருக்காரு. ஆனா பிரபலமான கவிஞர்கள் தப்பு செஞ்சா அது தப்பு லிஸ்ட்ல வராதுன்றதால விட்டுடலாம்.

பிற்காலத்தில் பாட்டுப்போட்டி, கவிதை போட்டில எல்லாம் கலந்துக்கும்போது இந்த யாப்பு இலக்கணம் எனக்கு நிறையவே கை கொடுத்துச்சு. பாரதியார் கவிதைகளை பாடலா பாடும்போது வார்த்தைகள் தவறாமல் இருக்க இந்த எதுகை மோனையும், தாள சந்த யாப்பு மரபும் உதவின மாதிரி வேற எதுவும் உதவலை.

'காற்று வெளியிடை கண்ணம்மா' என்னுடைய ரொம்ப ரொம்ப பேவரைட் பாட்டு. பல தருணங்களில் அதை பாடி இருக்கேன். நீயெனதின்னுயிர் கண்ணம்மா வரிக்கு அடுத்த வரி திக்கும்போதெல்லாம் யெ எதுகை தான் கை கொடுத்து, போயின போயின துன்பங்கள்... வாயினிலே அமுதூறுதே... தீயினிலே வரும் ஜோதியே... னு அடுத்தடுத்த வரிகளை நிஜாபகப்படுத்திட்டே இருக்கும். எல்லாமே அந்த யெ, யி எதுகையை வெச்சும், நேர் நிரை நேர் நிரை தாள சந்தமும் தான் கை கொடுத்துச்சு.

யாப்பு படிக்காம கவிதை எழுதரவங்க ஒரு பக்கம் அதை புதுக்கவிதைன்னு எழுதிட்டு இருந்தாலும், அது என்னவோ ஸ்பிலிட் செஞ்சு உடைச்சு போட்ட உரைநடை மாதிரி தான் தோணுது.

இப்போதைக்கு பேஸ்புக்கில் நிறைய மரபு கவிஞர்களை பார்க்க முடியுது. சந்தோஷம். நா.சொக்கன் எல்லாம் மகான். ரொம்ப ரொம்ப கேசுவலான விஷயத்துக்கு எல்லாம் அசால்டா வெண்பா எழுதுராறு. அலட்டிக்கறதே இல்லை. தூய சங்ககால செந்தமிழ் தான் வேணும்னு இல்லை.. பேச்சு மொழி, பிற மொழி சொல்லை கூட அழகா பொருத்தி அட்டகாசமான வெண்பாவை ஜஸ்ட் லைக் தத் அடிச்சு விட்டு அசர வைக்கிறாரு. மிகப்பெரிய ஆச்சரிய போதை இருந்தும் அவரை சந்துச்சு பேசிய அந்த அபூர்வமான அற்புதமான அரை மணி நேரத்தில் எதையும் சொல்ல தோணாமல் அவரை சந்திச்ச ஆச்சரிய பிரமிப்பிலேயே கழிஞ்சு போனது.

இனி வரும் தலைமுறைக்கு தமிழையும் தமிழ் இலக்கணத்தையும் யாப்பின் அடிப்படையையும் தெளிவா சொல்லிக்கொடுத்து தமிழை வளர்க்க எல்லோரும் உதவலாம். ஆனா அதுக்கு நமக்கு முதலில் யாப்பு தெரிஞ்சிருக்கணும். யாப்பு தெரிஞ்சா நாமே தமிழை அவ்வளவு ஈடுபாட்டோட ரசிக்க ஆரம்பிச்சிருவோம்.

மெல்ல தமிழ் இனி சாகும்னு இனியும் பிரகடன படுத்திட்டு இருக்காம, யாப்பிலக்கணத்தை ஜஸ்ட் 10 மார்க் விஷயமா மட்டும் பார்த்து சாய்ஸில் விடாம, தமிழ் பாடத்தில் கட்டாய பகுதியா அது இருக்கணும்ன்றது என்னுடைய ஆசை.

நாமெல்லாம் ஆசை மட்டும் தான் பட முடியும்.


4 comments:

  1. அட சதீஷிடம் இருந்து வித்தியாசமான பதிவு.யாப்பு இலக்கணம் எப்போதுமே சுவாரசியம் அதன் வரையறுக்குள் பாடலை கொண்டு வருவது ஒரு சவால்.ஓசையே அடிப்படை என்பதால் நீங்கள் சொன்னது போல அதனை நன்கு உள்வாங்கிக் கண்டால் எளிதில் ஓரளவிற்கு எழுத முடியும் வேன்பமாஸ்ரியப்பா, அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம் இவற்றை ஓசை மற்றும் சீர்களின் அடிப்படையில்தான் நானும்முயற்சி செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. யாப்பை சுவாரஸ்யமாக நீங்களும் சொல்லி கொடுக்கிறீர்கள்! அருமையான பதிவு!

    ReplyDelete
  3. மிக மிக நல்ல பதிவு., உண்மையில் நானெல்லாம் மார்க்குக்காக மட்டுமே இதையெல்லாம் அப்போது படித்தேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

Printfriendly