Saturday, August 6, 2016

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 3

ன் முந்தைய பதிவுகளில் சொன்னது போல எல்லா சிக்கல்களையும் கடந்து ஜி.எஸ்.டி அமல் படுத்தப்படும்பொழுது எப்படி இருக்கும்?

ஜி.எஸ்.டி என்பது முதலில் ஒரு முனை வரியாக கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டு இப்போது மும்முனை வரியாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இப்போது இருக்கும் பல பல வரிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரே வரி விகிதம் ஆனால் மூன்று வகைகளில் விதிக்கப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு CGST (இப்போதிருக்கும் சென்டிரல் எக்ஸைஸ் போல) மாநிலங்களுக்குள்ளே நடக்கும் பரிமாற்றங்களுக்கு SGST (இப்போதிருக்கும் VAT போல) மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்களுக்கு IGST (இப்போதிருக்கும் CST போல) கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் எல்லோரும் சிலாகிக்கின்ற அளவுக்கு என்ன பெரிய சீர் திருத்தம் இருக்க போகிறது? ஜஸ்ட் பெயர் மாற்றம் தானே செய்திருக்கிறார்கள் என பல பல பொருளாதார அதிகாரிகளே கூட என்னிடம் கேட்டதுண்டு. ஆனால் இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. இது மிக பெரிய அளவிலான வரி சீர் திருத்தம் தான். அதுமட்டுமல்லாமல் அரசுக்கான வருவாய் வரும்படிக்கான அமுத சுரபியும் கூட. (ஒழுங்காக செயல்படுத்தப்பட்டால்)

இப்போது இருக்கும் முறைப்படி ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு வரி விகிதம் இருக்கிறது. அதாவது எக்ஸைஸ் 12.5%; வாட் (பொதுவாக) 5% & 14.5%; CST (பொதுவாக) 5% & 14.5%; CST (C Form அடிப்படையிலான வியாபாரங்களுக்கு) 2% என இருக்கிறது. இனிமேல் இவை எல்லாவற்றுக்கும் ஒரே வரி விகிதம். அதாவது காங்கிரஸ் கேட்டபடி 18% அல்லது ஜெட்லி சொல்வது போல 27%. எல்லா பரிமாற்றத்துக்கும் ஒரே வரி தான்.

எதற்காக 18% வரி என ஒரு கேள்வி வருதுல்ல? இப்போதிருக்கும் எக்ஸைஸ் 12.5% & வாட் 5% சேர்த்து வரும் 17.5% வரியை ரவுண்ட் ஆக்கி தான் 18% வரி நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் 12.5% + 14.5% சேர்த்து 27% வரை வரி விதிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மேலோட்டமாக பார்க்கையில் வரி விகிதத்தை எக்கச்சக்கச்சக்கமாக ஏற்றி இருப்பது போல தோற்றம் அளித்து இந்தியாவை திவாலாக்க முனைவது போல தெரிந்தாலும், இது உண்மையில் அந்த அளவுக்கு பயப்படக்கூடிய வரி உயர்வு அல்ல. எப்படி?

இப்போதிருக்கும் எக்ஸைஸ் & வாட் வரியை இப்போது செட் ஆஃப் செய்து கொள்ளலாம். அதாவது பொருளை விற்றதற்காக செலுத்த வேண்டிய வரியில் அந்த பொருளை வாங்கும்போது செலுத்திய வரியை கழித்து விட்டு வெறும் லாபத்துக்கு உரிய வரியை மட்டும் கட்டினால் போதும். ஆனால் CST வரிக்கு அப்படியான செட் ஆஃப் வசதி இல்லை.



இனி புதிய GST விதிகளின் படி, CST க்கு இணையான CGST விற்பனைக்கான வரியையும் செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். ஆனாலும் விலை ஏற்றம் இருக்கும். வியாபாரிகள் தங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட முனைந்தால் அரசு திவாலாக வாய்ப்பு இருக்க தான் செய்கிறது. ஒரு சின்ன சாம்பிள் சொல்லட்டா?

நீங்கள் ஒரு வியாபாரி என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொருளை வேறொரு மாநிலத்தில் உற்பத்தி செய்பவரிடம் இருந்து வாங்கி இன்னொரு டீலருக்கு விற்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்:


இப்போதைய CST முறை
புதிய IGST முறை-1
புதிய IGST முறை-2
பொருளின் விலை (வாங்கும்போது)
100.00
100.00
100.00
CST வரி விகிதம்
2%
18%
18%
வரி தொகை     (A)
2.00
18.00
18.00
நாம் கொடுக்கும் தொகை
102.00
118.00
118.00
நமது லாபம்    
10.00
10.00
10.00
பொருளை விலை (விற்கும்போது)
112.00
128.00
110.00
CST வரி விகிதம்          
2%
18%
18%
வரி தொகை   (B)    
2.24
23.04
19.08
விற்பனை விலை
114.24
151.04
129.08
அரசுக்கு செலுத்தவேண்டிய வரி
2.24
5.04
1.08

பொருளாதார நிபுணர்கள் புதிய முறை 1 இல் சொல்லியிருப்பது போல அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். அதே சமையம் பொருளின் விலை இப்போதிருக்கும் 114.24 இலிருந்து 151.04 ஆக உயரும். இது பொருளாதாரத்தை நசித்து விடும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அரசோ வரி வருவாய் 2.24 க்கு பதிலாக 5.04 கிடைக்கும் என்கிறது (வரி B யில் ஏற்கனவே செலுத்திய வரி A வை கழித்து வரும் தொகை). அதனால் தான் இவ்வளவு மும்முரமாக இதில் இறங்கி இருக்கிறார்கள்.

ஆனால் இதில் இன்னொரு வாதம் இருக்கிறது. அதாவது புதிய முறை 2 இல் சொல்லியிருப்பது போல வியாபாரிகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அரசுக்கு நஷ்டம் வரும். அதாவது வாங்கும்போது செலுத்திய வரி A எப்படியும் செட் ஆஃப் செய்துவிட முடியும் என்பதால் அதை கணக்கில் எடுக்காமல் விற்பனை விலையை குறைத்து விற்பனை செய்தால் 151.04 க்கு பதில் 129.08 க்கு பொருளை விற்பனை செய்ய முடியும். தன்னுடைய லாபம் 10.00 எந்த விட இழப்பும் இன்றி அப்படியே கிடைத்து விடும். அரசுக்கு சட்டப்படி செலுத்தக்கூடிய தொகையை செலுத்தியாக முடியும். அப்படியான நிலைப்பாட்டை வியாபாரிகள் எடுத்தால் வரி B யில் வரி A வை கழித்து பார்த்தால் 5.04 க்கு பதில் அரசுக்கு வெறும் 1.08 தான் வருவாயாக கிடைக்கும். அது இப்போது கிடைத்துக்கொண்டு இருக்கும் 2.24 ஐ விட குறைவு. இது தான் பல மாநிலங்களின் அச்சம். இந்த இழப்பை யார் ஈடு செய்வது என்கிற விவாதம் தான் இன்னமும் முடிவு தெரியாமல் நீண்டு கொண்டு இருக்கிறது.

இதில் இன்னொரு சுவாரசியம் இருக்கிறது. அதாவது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இப்படி செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள், கடைசி நிலை உபயோகிப்பாளர்கள் (End users) ஆகியோர் இப்படி செட் ஆஃப் செய்து கொள்ள முடியாது. அவர்கள் மொத்த வரியையும் சேர்த்து கட்டவேண்டி இருக்கும். இது சில்லறை வர்த்தக பற்றாக்குறையை (Retail inflation) அதிகரித்து நாட்டை நாசமாக்கி விடும் என்பதும் சிலரது அச்சம்.

இது போன்ற வரி தொடர்பான சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் பல நல்ல விஷயங்களும் இருக்கிறது.

இப்போது போல வரி ஏய்ப்பு செய்ய முடியாது. காரணம் இப்போது கொள்முதல் விற்பனை இரண்டையும் ஒரே நபர் தான் அரசுக்கு தெரியப்படுத்துகிறார். எனவே அவர் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் பொருட்களை கணக்கில் இல்லாமல் விற்றுவிட முடியும். அதை நியாயப்படுத்த ஜஸ்ட் டம்மி பில்களை வாங்கி அதை வைத்து கணக்கை தாக்கல் செய்ய முடியும். (சென்னையில் கூட இப்படி டம்மி பில்கள் தரும் ஏஜெண்டுகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பில் விலையில் 1% கமிஷன் தான் அவர்களுக்கு)  ஆனால் புதிய முறை அப்படி அல்ல. விற்பனை விபரத்தை மட்டும் தான் நாம் தெரிவிக்க முடியும். கொள்முதல் விபரத்தை நமக்கு பொருளை விற்றவர்கள் இணைய தளத்தில் பதிந்து இருப்பார்கள். அதில் நமது பில் இருந்தால் தான் அது பட்டியலாக்கும். அதே போல நாம் விற்பனை செய்த பொருளுக்கான பில்லை நாம் பட்டியல் இட விட்டுப்போனால் அதன் வரி பலனை பொருளை நம்மிடமிருந்தௌ வாங்கியவர் பெற முடியாது. ஆக எல்லா விற்பனையும் முறைப்படுத்தப்பட்டு ஒரே இணைய தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். விற்றவர் வாங்கியவர் இருவருமே ஒரே மாதிரி தான் கணக்கு காட்ட முடியும். வரி ஏய்ப்பு என்பது குறைந்து விட வாய்ப்பு உள்ளது.

பதிவு செய்யப்பட நிறுவனங்கள் நேர்மையான முறையில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை சிக்கல்கள் எதுவும் பாதிப்பு இல்லை. கணக்கில் காட்டாமல் வியாபாரம் செய்பவர்கள் (மளிகை கடை, ஜூவல்லரி போன்றவை...) தான் சங்கடப்படவேண்டும். இனி அவர்கள் எல்லா கொள்முதலையும், விற்பனையையும் கணக்கில் காட்டி ஆக வேண்டும். இல்லாவிட்டால் வரி சலுகை கிடைக்காது.

PAN அடிப்படையிலான 15 இலக்க பதிவு எண், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதன் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக கொடுக்கப்படுகிறது. அதன் முதல் 2 எழுத்துக்கள் மாநிலத்தையும் அடுத்த 11 எழுத்துக்கள் PAN எண்ணையும் அடுத்த இலக்கங்கள் அதன் கிளைகளையும் குறிக்கும். இதன் படி, ஒரு PAN வைத்திருக்கும் நபருக்கு என்னென்ன தொழில்கள் எத்தனை எத்தனை கிளைகள் இருக்கிறது என துல்லியமாக கணக்கிடப்பட்டு அவரது ஒட்டுமொத்த வருவாயையும் அளந்து அதற்கு தக்க வருமான வரி விதிக்க முடியும்.

ரிடர்ன் தாக்கல் செய்யும் முறை இப்போது இருக்கும் ஒரே நாள் என்பது மாறி மூன்று முறை என மாற்றப்படுகிறது. அதாவது 10 ஆம் தேதிக்குள் நாம் விற்பனை விபரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். 15 ஆம் தேதி நமது கொள்முதல் விவரங்களை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். அதாவது நமக்கு பொருளை விற்றவர்கள் 10 ஆம் தேதி தங்களது விற்பனையை பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அது 15 ஆம் தேதி நமது கணக்கில் ஆட்டோமேட்டிக்காக லிஸ்ட் ஆகி விடும். அதை நாம் சரிபார்த்தால் போதுமானது. மற்றபடி நாம் புதிதாக எந்த இடைச்செருகலையும் செய்ய முடியாது. 20 ஆம் தேதிக்குள் வரி செலுத்தி ரிடர்னை தாக்கல் செய்து விட வேண்டும்.

இந்த மொத்த நடைமுறைகள் பற்றியும் மத்திய அரசு சமீபத்தில் மாடல் லா (Model Law) என விரிவாக ஒரு செயல் திட்ட அறிக்கையை வெளியீட்டு இருந்தது. அதை முழுமையாக படித்துப்பார்த்தபோது எனக்கு தோன்றியது என்னவென்றால்.. எதற்காக மெனக்கெட்டு இந்த அரசு இப்படி ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தை கொண்டு வருகிறது? இப்போதிருக்கும் சட்டங்களிலேயே சிறு சிறு மாற்றங்கள் செய்தால் போதுமானதாச்சே என்று தான் தோன்றியது. ஜஸ்ட் இப்போதிருக்கும் CST வரிக்கு செட்ஆஃப் அறிவித்தால் போதும். மற்ற வரி முறைகளில் மாற்றம் இல்லை. வரி விகிதத்தை கவுன்சில் கூடி ஒரே வரி விகிதத்தை நாடு முழுதும் நிர்ணயித்தால் போச்சு. அதே மாதிரி கொள்முதல் கணக்கை இப்போதிருக்கும் வணிக வரி இணையதளத்திலேயே செயல்படுத்தலாம். இன்னமும் கூட எதற்காக ஒரு தனி சட்டம் என்பது புரியவில்லை.

அவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பது யாருக்கு தெரியும்? விடுங்கள்.

வரி தாக்கல் செய்வோரை பொறுத்தவரை... இந்த புதிய GST முறையில்  இனி அனைத்து பரிமாற்றங்களுக்கும் முறையாக கணக்கு வழக்குகளை வைத்து கொள்ளவேண்டும். அதை முறையாக ஒவ்வொரு மாதமும் இணைய தளம் வழியாக பதிவும் செய்தாக வேண்டும். அது ஒன்று தான் சிக்கல். F Form, C Form, H Form, I Form என எந்த தலைவலியும் இனி இல்லை. எல்லா ஸ்டாக்கும் தெளிவாக கணக்கீட்டு வைத்திருக்க வேண்டும்.

எக்ஸைஸ், சர்வீஸ் டாக்ஸ்,  CST VAT என தனித்தனியாக ரிட்டர்ன் தாக்கல் செய்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அலுவலரை கண்டு அதை தாக்கல் செய்து அவர்கள் கேட்கும் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் நோட்டீஸ்களுக்கும் பதிலளித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. ஒரே ரிட்டர்ன், ஒரே அலுவலகம், ஒரே கேள்வி, ஒரே பதில். அம்புட்டு தேன். அந்த வகையில் அது ஒரு பெரிய ஆறுதல்.

சுருக்கமாக பார்த்தால் நேர்மையாக வியாபாரம் செய்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு எல்லாம் கணக்கு காட்டாமல் கருப்பு பண வியாபாரம் செய்வோருக்கு தான். எப்படியும் விலைகள் உயரும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் வரிகள் செட் ஆஃப் செய்துகொண்டே இருக்கும்போது மெல்ல மெல்ல விலை வீழ்ச்சி அடைந்து இயல்பான நிலைக்கு திரும்பும். அரசு விற்பனை விலைக்கு ஒரு செக் பாயிண்ட் வைத்தாக வேண்டும். அதாவது வாங்கும் விலைக்கு குறையாமல் விற்பனை விலை இருக்கவேண்டும் என நிர்ணயித்தாக வேண்டும்.  இல்லையென்றால் அரசுக்கான வரி வருவாய் மிக மிக குறைந்து விடும்.


இனி மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள், தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் என சில மாநிலங்கள் ஏன் இந்த சட்டத்தி எதிர்க்கிறது என்பதை பற்றி எல்லாம் அடுத்த பதிவில்... 

3 comments:

  1. இன்று மக்களவையில் பேசிய அருண்ஜெட்லி india is a union of state not a confederation of states என கூறியுள்ளார். இதற்கான விளக்கம் என்ன? தயவு செய்து எனக்கு உடனடியாக பதில் அனுப்பி வையுங்கள்
    நன்றி
    எனது மெயில் id - ibrahasani@gmail.com
    முடிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் அளியுங்கள். ph: 9444800828

    ReplyDelete
  2. நல்ல அலசல்.விளக்கமாக பதிவுசெய்திருக்கிறீர்கள். நிச்சயமாக பத்திரிகையில் வரவேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.

    ReplyDelete

Printfriendly