Wednesday, September 7, 2016

சிறுவாணி

சூப்பர் ஸ்டார் நடிச்ச அதிசய பிறவி படத்துல வரும் தானந்தன கும்மி கொட்டி பாட்டுல ஒரு வரி வரும்.. “சிறுவாணி கெண்டைய போல சொக்குது கண் ராசி”ன்னு.. ஆனா இப்ப சமீபகாலமா சிறுவாணி கெண்டையை விட சிறுவாணி சண்டை தான் ஃபேமசு ஆயிருச்சு.  இது இன்னைக்கு நேத்து சண்டை இல்லை.. கால காலமான சண்டை..

வீட்டுல கொசுவர்த்தி சுருள் இருந்தா எடுத்து உங்க முகத்துக்கு முன்னாடி பிடிச்சுக்கோங்க.. நாம இப்ப சிறுவாணியின் ஃபிளாஷ் பேக் கதைக்கு போறோம்.

ஃபிளாஷ் பேக்

அது 1889 ஆம் ஆண்டு. கோவையை சேர்ந்த திரு S.Pசிம்முலு நாய்டு ஒரு காங்கிரஸ்காரர். பத்திரிகையாளரும் கூட. அவர் அடிக்கடி வெள்ளியங்கிரி மலைக்கு அங்கிருக்கும் கோவிலுக்கு போகும் வழக்கம் உடையவர். யானை, சிறுத்தை, அட்டைப்பூச்சி என பல பல இம்சைகள் இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாம ரெகுலரா மலைக்கு போய் வரும் வழக்கம் உடையவர். அந்த வெள்ளியங்கிரி மலை மேல நின்னு பார்க்கும்போதெல்லாம் தூரத்தில் தெரியும் முத்திக்குளம் அருவியை பார்த்துட்டே இருப்பது அவரது வழக்கம். வருஷம் பூரா எல்லா சீசனிலேயும் ஆர்ப்பரித்து கொட்டும் அந்த அருவி அவருக்கு ஆச்சரியமா இருந்தது. அந்த தண்ணியை மட்டும் கோவைக்கு கொண்டு வர முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு அவர் பல தடவை நினைச்சிருக்காரு. அப்படி எல்லா சீசனிலேயும் தண்ணீர் வருதான்னு தெரிஞ்சுக்கறதுக்காகவே வருஷத்தில் பல முறை அவர் வெள்ளியங்கிரி மலைக்கு போயிட்டு வந்தாராம் .
 
Mukthi Falls (Thanks: The Hindu)
1889 ஆம் வருஷம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முக்திக்குளம் அருவியிலிருந்து கோவைக்கு நீர் கொண்டு வருவதை பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்தி அவர் ஐடியாவை விளக்கினாரு. அந்த முக்திக்குளம் அருவி நீருடன், பாம்பாறு, பாட்டியாறு ஆகிய நதிகளின் நீரும் சேர்ந்து தான் சிறுவாணி நதியா அங்கே ஒடிட்டு இருந்தது. அந்த நதியில் இருந்து நீரை எப்படியாவது மலைகளை குடைஞ்சு இங்கிட்டு கொண்டு வந்து நொய்யல் நதியோட சேர்த்து விடணும்ன்றது தான் ஐடியா.

ஆனா நிதி பற்றாக்குறை காரணமா அந்த திட்டம் அப்போது தொடங்கப்படலை.  திட்டம் பெண்டிங்.

1913 ஆம் வருஷம்.

கோவையின் மாநகராட்சி கவுன்சிலராகவும் பின்னர் சேர்மேனாகவும் இருந்த திரு C.S ரத்தின சபாபதி முதலியார் (இவர் பெயரில் தான் இப்போது R S புரம் பகுதிக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது – ரத்தின சபாபதி புரம்) சிறுவாணி திட்டத்தை தன் கையில் எடுத்தாரு. அந்த தண்ணீரை கோவைக்கு கொண்டு வருவதற்காக ‘The South Indian Railway Company’ எனும் நிறுவனத்துக்கிட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனா அவங்க என்ன காரணத்தாலோ அந்த திட்டத்தை கைவிட்டு, நீலகிரி மாவட்டத்துல இப்போதிருக்கும் குந்தா பைக்காரா நீர் மின் திட்டங்களை செயல்படுத்த போயிட்டாங்க. மீண்டும் திட்டம் பெண்டிங்.

ஆனா ரத்தின சபாபதி முதலியாரின் இடை விடா முயற்சியால், 1929 ஆம் வருஷம் ஏப்ரல் 26 ஆம் தேதி சிறுவாணி நீர் கோவைக்கு குடிநீரா சப்ளை செய்யப்பட்டது. மொத்தம் 110 குடிநீர் குழாய்கள் தான் அப்போது இருந்தது.

1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்கு பின் 1956 ஆம் வருஷம் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அதுவரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணமா இருந்த பகுதி, தமிழகம் கேரளம் ஆந்திரம் கருநாடகம் என பிரிந்ததில், சிறுவாணி நதி முழுமையாக கேரளத்திடம் சேர்ந்துவிட்டது. அதோடு கோவைக்கான நீர் ஆதாரம் பணால்.

1973 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வரா இருந்த கலைஞர் அவர்கள் கோவையின் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் சிறுவாணி நீரை கோவைக்கு கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து அப்போதைய கேரள முதல்வருடன் பேசி சிறுவாணியில் ஒரு சின்ன செக் டேம் கட்டுவது எனவும் அதன் மூலம் நீரை கோவைக்கு கொண்டு வருவது எனவும் முடிவானது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், சட்டப்படியும் புவியியல் படியும் சிறுவாணி நதி முழுக்க முழுக்க கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அப்போதைய தமிழக கேரள அரசின் சுமூகமான உறவின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர சம்மதித்ததோடு, அதற்கு வசதியாக சிறுவாணியில் புதியதாக ஒரு அணையையும் கட்டி நீர் தேக்கி அதன் மூலம் கோவைக்கு தண்ணீர் வசதி கொடுத்தார்கள்.
 
Siruvani Check Dam
திமுக அரசின் இந்த முயற்சிக்கு அதன் பின்னர் வந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அரசும் தொடர்ந்து ஆதரவு அளித்து 1984 ஆம் வருஷம் சிறுவாணி அணை திறக்கப்பட்டது. இந்த அணையை கட்டியது கேரள பொதுப்பணி துறை. அணையை நிர்வகித்து வருவதும் அவர்களே. கேரளாவில் உற்பத்தியாகி, கேரளாவிலேயே ஓடி, கேரளாவில் முடியும் சிறுவாணி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொடுக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் இந்த அணை கட்டப்பட்டது. இது ரொம்ப முக்கியமான விஷயம்.. பின்னர் நாம் விவாதிக்க இருக்கும் விஷயங்களுக்கு எல்லாம் இதை மனதில் வைத்து வாசிக்க வேண்டி இருக்கும்.

இப்போதைய பிரச்சனை:

சரி.. இப்போ என்ன திடீர் பிரச்சனைன்னு தானே அடுத்த கேள்வி? அதையும் பார்க்கலாம்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் 218 tmc நீரை திறந்துவிட்டு அதன் மூலம் தமிழகத்துக்கு 205 tmc நீரும், புதுவை மாநிலத்துக்கு 7 tmc நீரும் கேரள மாநிலத்துக்கு 6 tmc நீரும் கொடுக்கணும். அந்த தீர்ப்பை கர்நாடகம் மதிக்கலைன்னு தமிழகம் புதுவை மாநிலங்கள் பல காலமா  போராடிட்டு வருது என்பது நமக்கு தெரியும். அதன் ஒரு பகுதியா தான் கேரளா இந்த அணை கட்டுது. என்ன கொழப்பமா இருக்கா?

தமிழகம் கர்நாடகாவில் இருந்து கிடைக்கும் நீரில் இதுவரை கேரளாவுக்கு உரிய பங்கை கொடுக்கலை. இது தொடர்பா கேரளம் எழுதிய பல கடிதங்களுக்கு தமிழகத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால், கேரளாவின் 6 tmc நீரை தமிழகத்திடமிருந்து எடுத்துக்கலாம்னு நடுவர் மன்றம் மூலமா அனுமதி வாங்கிட்டாங்க. அதாவது காவிரியின் நீர் வரத்தில் பவானியின் பங்கும் உள்ளது. அதே மாதிரி பவானியின் நீர் வரத்தில் கேரளாவின் பங்கும் உள்ளது. அதனால் மேல் பவானி நீர்ப்பிடிப்பு பகுதியின் அருகிலுள்ள சோலையூர் & அகழி பகுதிகளில் சிறுவாணிக்கு குறுக்கே ஒரு சின்ன செக் டேமை கட்டி 6 tmc நீரை எடுத்துக்கறது தான் கேரளாவின் திட்டம். இதன் மூலம் கேரளாவின் அட்டப்பாடி அகழி சோலையூர் மன்னார்க்காடு பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும். (இப்போ அந்த பகுதிகள் வறட்சியான பகுதிகளா இருக்கு. அதிலும் அட்டப்பாடி மக்களின் வாழ்க்கை நிலை. கொடுமையிலும் பெரும் கொடுமை..! அதெல்லாம் தனியா இன்னொரு பதிவு எழுத வேண்டிய அளவுக்கு விஷயம் உள்ள கட்டுரை).

இந்த சின்ன செக் டேம் மூலம் பவானிக்கு போகும் நீரில் 6 tmc தடுக்க முடியும், அதாவது பவானி மூலம் காவிரிக்கு போகும் 6 tmc. அப்படியாக காவிரியிலிருந்து கேரளாவிற்கு சட்டப்படியா கிடைக்க வேண்டிய நீர் கிடைச்சிரும். இது தான் ஐடியாவின் சுருக்கம். இது சட்டப்படியும், நியாயப்படியும், காவிரி நடுவர் மன்றத்தின் படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் சரி தான். இதை எதிர்க்க எந்த நியாயமும் இல்லை.

கேரளா அணை கட்டுவதா சொல்லப்படும் இடம் என்பது கேரள பகுதிக்குள்ளேயே தான், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்திடம் அணை கட்ட அனுமதி கேட்கனும்ன்றது கட்டாயமில்லை. (இருமாநிலத்துக்கு இடையிலான நதியான பவானியில் நாம் சில அணைகள் கட்டி இருக்கிறோம், எதற்கும் கேரளாவின் அனுமதி கேட்கவில்லை என்பதை ஒரு ஓரமா நினைவில் வெச்சுக்கோங்க). 

என்றாலும் கூட, அணை கட்டும் பகுதி தமிழக எல்லையில் இருந்து 5 கி.மீ சுற்றளவுக்குள் இருப்பதால், தார்மீக அடிப்படையில் தானாக முன்வந்து தமிழகத்துக்கு கடிதம் எழுதி நாங்க இப்படி அணை கட்ட போறோம். இதில் உங்களுக்கு எதுனா ஆட்சேபனை இருக்கான்னு கேட்டுச்சு கேரளா.

உங்களுக்கே தெரியுமே? தமிழகத்தில் அரசு செம்ம தூக்கத்தில் இருப்பதால் அதற்கு பதில் எதுவும் கொடுக்கலை. பல நினைவூட்டல் கடிதங்கள் (அதாங்க ரிமைண்டர்) அனுப்பியும்  எந்த பதிலும் வரலை. இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு போச்சு கேரளா. மத்திய அரசும் பல கடிதங்கள் அனுப்பிச்சுச்சு. அதுக்கும் பதில் இல்லை.

கடைசியா, கடந்த மே மாசம் 4 ஆம் தேதி கேரள கூடுதல் முதன்மை செயலாளர் தமிழகத்துக்கு கடிதம் எழுதி, ஜூலை மாசத்துக்குள் பதில் வேணும்னு கேட்டாரு. ம்ஹூம்.. நாம எந்த பதிலையும் கொடுக்கலையே.

ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் மத்திய நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான நிபுணர் குழு கூட்டம் கூடிச்சு. சிறுவாணி விவகாரத்தில் உள்ள தற்போதைய நிலைமைய ஆராய்ந்து, தமிழகம் இத்தனை நாளா பதில் அனுப்பலைன்னா அவங்களுக்கு அங்கே அணை கட்டுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு அர்த்தம்னு சொல்லி (யெஸ்... தட் மௌனம் சம்மதம் மொமெண்ட்) கேரளா அங்கே அணை கட்டிக்கலாம்னு அனுமதி கொடுத்துச்சு.

அப்பவும் தமிழக அரசு சைலன்ட் மோடில் தான் இருந்துச்சு.

விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் விஷயத்தை கையில் எடுத்து போராட தொடங்கினப்பத்தான் (அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் வருவதும் சட்டுனு ஞாபகத்துக்கு வந்து?) தமிழக அரசு மத்திய அரசுக்கு திடீர்னு ஒரு கடிதம் அனுப்பி இருக்கு. அணை கட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கன்னு.


நமக்கு ஆட்சேபனை இருக்குனு ஒரு கடிதத்தை ஜூன் மாசமே அனுப்பி இருந்தால் அணை கட்ட மத்திய அரசு அனுமதியே கொடுத்திருக்க மாட்டாங்களேன்னு லாஜிக்கா சிந்திக்கிற திறன் நமக்கு இல்லாததால், எல்லோரையும் போல மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் அதிரடி கடிதத்தை ஆராதிச்சபடி ஒவ்வொரு நாளையும் கழிச்சுட்டு இருக்க வேண்டியது தான். நான் அப்படி தான் இருக்கிறேன். நீங்க?

Reference:
No comments:

Post a Comment

Printfriendly