Thursday, October 6, 2016

வதந்தி எனப்படுவது யாதெனின்

மூக வலை தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கைது நடவடிக்கை என தமிழக போலீஸ் அதிகாரிகளில் சிலர் அறிவித்து இருப்பது தான் ரெண்டு நாளா ஹாட் டாபிக்.. அதே சமூக வலைத்தளங்களில்.

மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் (hereinafter referred as “அம்மா அவர்கள்”) உடல்நலம் குன்றி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து பலவாறாக கிளம்பிவரும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் போலீஸ் இதை அறிவித்து இருக்கிறது. இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 1 வெளிநாட்டு வாழ் இந்தியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சிலர் மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 50க்கும் மேற்பட்டோரின் சமூக வலை தள நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது என தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.

முதலில் வதந்தி என்பது என்ன?

வதந்தி என்பதற்கு இந்திய சட்டத்தில் தெளிவான வரைமுறை எதுவும் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தமிழக போலீஸ் கூட, கலவரத்தை தூண்டுதல், வன்முறையை விதைத்தல் என்றெல்லாம் வழக்கை பதிவு செய்கிறது என்று நினைக்கிறேன்.

அதிகாரப்பூரவமற்ற தகவல்கள் எல்லாமே வதந்தி தான் என்பது இப்போதைய தமிழக அரசின் நிலைப்பாடாக தெரிகிறது. அது யூகங்களாகவே இருந்தாலும் அது வதந்தி என்றே வகைப்படுத்தப்படுகிறது. யூகத்துக்கும் வதந்திக்கும் என்ன வித்தியாசம்? ஒரு சின்ன சாம்பிள் பார்ப்போமா?

மேகம் கருக்குது, சில்லுனு காத்து அடிக்குது, வானம் இருண்டுட்டு வருது... இதை எல்லாம் வெச்சு இன்னைக்கு மழை வரும்னு நினைக்கிறேன்னு நீங்க சொன்னா அது யூகம். அதுவே.. அந்தப்பக்கம் எங்கேயோ பேய் மழை பிச்சு உதறுது.. அதனால் தான் இங்கே இப்படின்னு சொன்னீங்கன்னா அது வதந்தி. ஏனெனில் அந்த பக்கம் எங்கேயோ பேய் மழை பிச்சு உதறுதுன்றது உங்களுக்கு அதிகாரப்பூர்வமா தெரியாது. இதையே, பேய் மழை பிச்சு உதறிட்டிருக்கும்னு நினைக்கிறேன்னா அது யூகம்.  வதந்திக்கும் யூகத்துக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு தான்.

இந்த வரைமுறை படி பார்த்தா வானிலை அறிக்கை, ஷேர் மார்க்கெட் டிப்ஸ், ரயில்வே அறிவிப்புக்கள், என பல பல அரசு தகவல்களே கூட ஒரு வகையில் வதந்திகள் தான். கட்டாயமா தெரியாத ஒரு விஷயத்தை பகிர்வது வதந்தின்னு சொன்னா எல்லா கோர்ட்டில் நடக்கும் குற்ற வழக்கு விசாரணைகளுமே வதந்தி தான், யார் குற்றவாளின்னு அதிகாரப்பூர்வமா தெரியுற வரைக்கும். காவல் துறை சந்தேகத்தின் பேரில் செய்யும் கைதுகளும் வதந்தி லிஸ்டில் தான் வரும். அவங்களுக்கும் அதிகாரப்பூர்வமா தெரியாது.

வீட்டில் அன்றாடம் நடக்கும் பல நிகழ்வுகளும், பக்கத்து வீட்டு விஷயங்கள் பற்றிய பொரணி பேசுவதும், இன்னைக்கு பாஸ் இன்னும் வரலையே ஒரு வேளை லீவோன்னு நீங்க நினைக்கிறதும் என எல்லாமும் வதந்தி தான். சர்வம் வதந்தி மயம் ஜகத்.

சரி இப்போ அப்படி திடீர்னு வதந்திகளை கட்டுப்படுத்த என்ன அவசியம்?முதல்வருக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துட்டு வர்றாங்க. ஆனா என்ன உடம்புக்கு? என்ன சிகிச்சை எதுவும் யாருக்கும் அதிகாரப்பூர்வமா தெளிவா சொல்லலை. ஹாஸ்பிடல் வழங்கும் தினசரி அப்டேட்ஸ் கூட முதலில் ஜுரம்னு தான் சொல்லிச்சு. ஆனா அடுத்தடுத்த பரிமாணங்கள் தான் பல யூகங்களை கிளப்பி விட்டுச்சு. அதாவது ஜுரம் & நீரிழப்புக்கு சிகிச்சைன்னு சொன்னவங்க ரெண்டே நாளில் ஜுரம் குறைஞ்சிடிச்சு, வழக்கமான உணவை உட்கொண்டார், ஓய்வில் இருக்கிறார்னு சொன்னாங்க. அதோட பிரச்சனை முடிஞ்சுது. சிம்பிள். எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்க போயிட்டாங்க.  அதுக்கடுத்து சில நாட்களிலேயே அதே ஹாஸ்பிடல் அதிகாரப்பூர்வமாகவே செப்சிஸ் நிபுணர் லண்டன்லருந்து வந்து பரிசோதிச்சார், ரெஸ்பிரெட்டரி சப்போர்ட்டில் இருக்காங்கன்னு எல்லாம் அதிகாரப்பூர்வமாகவே அறிவிச்சதும் இயல்பாகவே மக்கள் மனதில், பல வித கவலைகள் தோன்றும். அந்த கவலைகளை வெளிப்படுத்துவது தான் வதந்தின்னு இப்போ போலீஸ் அதிகாரிகளில் சிலர் சொல்வதாக செய்தி வருகிறது.  ஆக, இந்த வதந்திகளின் ஊற்றுக்கண் அப்போலோ அறிக்கை அன்றி யாதொன்றும் இல்லை.

யூகங்களின் அடர்த்தியை அதிகரிக்க வைத்ததிலும் ஹாஸ்பிடலுக்கு பெரும் பங்கு உள்ளது. இன்ஃபெக்ஷன் வராமல் இருப்பதற்காக தான் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை என சொல்வது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று தான். ஆனா அது மாநிலத்தின் தலைவரான ஆளுநருக்கும் பொருந்தும் என்பது தான் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் என பலரையும் சந்திக்க அனுமதிக்கவேயில்லை.  அவ்வளவு ஏன், தமிழக அரசின் சுகாதார அமைச்சர், கட்சியிலேயே இருக்கும் பல மருத்துவ நிபுணர்கள் என யாரையாவது கூட அனுமதித்து இருக்கலாம். அவர்கள் மருத்துவர்கள் என்பதால் எப்படி அங்கே நடந்துகொள்ள வேண்டும் என தெரிந்து இருக்கும். அதுவும் இல்லை.   

ஆனால் அதே சமயத்தில் அரசு அதிகாரப்பூர்வமாகவே முதல்வர் நலமுடன் இருக்கிறார், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தினார், அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்தார், 50 பேருந்து நிலையங்களில் வைஃபி சேவைகளை தொடங்கினார்ன்னு எல்லாம் செய்திகள் வெளியிட்டது (ஃபோட்டோ இல்லாம தான்). இன்னொரு பக்கம் இதற்கு நேரெதிர் நிலைப்பாடாக முழு ஓய்வில் இருக்கிறார், ரெஸ்பிரெட்டரி சப்போர்ட்டில் இருக்கிறார், யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என ஹாஸ்பிடல் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.  இப்படி இரண்டு வெவ்வேறு அதிகாரப்பூர்வ செய்திகள் வந்தது தான் அத்தனை குழப்பத்துக்கும் காரணம்.  இதில் அரசு சொன்னது உண்மை என்றால் ஹாஸ்பிடல் சொன்னது வதந்தி. ஹாஸ்பிடல் சொன்னது உண்மை என்றால் அரசு சொன்னது வதந்தி. இந்த இரண்டு வதந்திகளின் பக்கமாக மக்கள் இரு வேறு பிரிவுகளில் பிரிந்து நிற்கிறார்கள். ஆக வதந்தியின் ஊற்றுக்கண் அரசும் ஹாஸ்பிடலும் தான். அரசோ ஹாஸ்பிடலோ ஒரே குரலில் இது தான் உண்மை என சொல்லிவிட்டால் வழக்கம் போல மக்கள் அவரவர் வேலையை பார்த்துவிட்டு போய்விடுவார்கள்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்திய அரசியல் சாசனப்படி இப்போது அரசை இயக்கி கொண்டு இருப்பது யார் என்பதை தெரிவிக்கவேண்டிய கடமை அரசின் தலைமை செயலாளருக்கு உள்ளது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை அரசு அறிவிப்பாக வரவில்லை. ஆளுநரும் இதுவரை யாரையும் பொறுப்பு முதல்வராகவோ மாற்று முதல்வராகவோ நியமிக்கவில்லை. எனவே அம்மா அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஜஸ்ட் ஓய்வில் தான் இருக்கிறார் என்பதை எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் அதற்கு நேரெதிராக தமிழக போலீஸ் இப்போது லாஜீக் இல்லாமல் விடும் மிரட்டல் அறிவிப்புக்கள் தான் முக்கியமான விவாத பொருள்.

சமூக வலைத்தளங்களில் அம்மா அவர்களின் உடல்நிலை பற்றி விவாதித்தால் கைது என்கிற அந்த அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது. அது இருபுறமும் கூரான கத்தி போன்றது. அம்மா அவர்கள் பூரண நலமுடன் இருந்தால் ஹாஸ்பிடல் முன்பு நின்று கொண்டிருக்கும் மொத்த கட்சி தொண்டர்களுமே தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்துவதாக சொல்லி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அம்மா அவர்களுக்கு ஒருவேளை உடல் நிலை முழுமையாக குணமடையாமல் இருந்தால் ஆலோசனை நடத்தினார், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்றெல்லாம் தவறான தகவல்களை வெளியிட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மீது நடவடிக்கை எடுக்க முடியும். இப்படி பார்த்தாலும் வதந்திகளின் ஊற்றுக்கண் அரசும் கட்சியும் தான். இந்த நிகழ்வுகளை விவாதிக்கும் ஒரு தளமாக மட்டுமே சமூக வலை தளங்கள் இருக்கின்றன என்பது சுய சிந்தனை உள்ள எல்லோருக்கும் எளிதாக புரிவது தான்.

சமூக வலைத்தளங்களில் என்னை போன்ற சாமானியர்கள் மட்டுமல்லாமல் மெத்த படித்த அறிவாளிகளும், பல துறை வல்லுனர்களும் இருப்பதால், ஹாஸ்பிடல் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் சாராம்சத்தை அவர்கள் விரிவாக மொழிபெயர்த்து எங்களை போன்றோருக்கெல்லாம் புரியும்படி சொல்கிறார்கள். உதாரணமாக செப்சிஸ் நிபுணர் வந்து பரிசோதித்தார் என ஹாஸ்பிடல் சொன்னால், செப்சிஸ் என்பது என்ன என்பதை சமூக வலை தளம் வாயிலாக நிபுணர்கள் புரிய வைக்கிறார்கள். இதற்கு புரியவைப்பவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு முதல் தகவல்களை வெளியிடுவோரிடம் கொஞ்சம் கவனமாக அறிக்கைகளை வெளியிட சொல்லியிருக்கவேண்டும். அது தான் பொறுப்பான அரசும் போலீசும் செய்திருக்கக்கூடிய ஆகச்சிறந்த நடவடிக்கை.

அம்மா அவர்கள் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்கள் என சொல்வது எந்த அளவுக்கு வதந்தியோ அதே அளவு வதந்தி தான் அம்மா அவர்கள் மிக்க நலமுடன் இயல்பாக இருக்கிறார்கள் என்பதும். இரண்டுமே அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்கள் அல்ல. சமூக வலைத்தளங்களில் வரும் யூகங்களும், அதிமுக கட்சி நிர்வாகிகளே வெளியிடும் தகவல்களும், அரசு அதிகாரிகள் சொல்லும் செய்திகளும், ஹாஸ்பிடலின் தினசரி அறிக்கைகளும் அந்த குழப்பத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. அதனால் தான் பல கட்சி தலைவர்களும் கூட முதல்வர் உடல்நிலை குறித்து நம்பகமான தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.

மற்றபடி கைது நடவடிக்கை எல்லாம், மேலே சொன்ன காரணங்களால் சட்டப்படி செல்லாது. ஏனெனில் அதிமுக கட்சியினருக்கு கூட அம்மா அவர்களின் இப்போதைய நிலை என்ன என்பது தெளிவாக தெரியாது. வேறு வழியில்லாமல் தான் அவர்களும் எல்லோரையும் மிரட்டி பணியவைக்கவேண்டி இருக்கிறதே தவிர, தீவிர அம்மா விசுவாசி கூட எல்லோரிடமும் என்ன விவாதித்து கொண்டு இருக்கிறானோ அதே தான் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

சமூக வலைத்தளம் என்பது அஃப்டர் ஆல் ஒரு டிஸ்கஷன் ஏரியா தானே?

நல்லவேளையாக உயர்நீதிமன்றம் இன்றைக்கு இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.

அம்மா அவர்களின் உடல் நிலை குறித்த அறிக்கையையும், அரசு நிர்வாகம் குறித்த அறிக்கையையும் இன்றைக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அரசு அந்த அறிக்கைகளை இன்று தாக்கல் செய்யும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக இது தான் விஷயம் என தெரியவந்துவிட்டால் வந்தந்திகள் / யூகங்கள் / ஆதாரப்பூர்வமற்ற செய்திகள் உடனடியாக நின்று விடும். இதை முன்பே தமிழக அரசும் அதிமுகவும் செய்திருக்கவேண்டும். ஏனோ இதுவரை செய்யவில்லை. இன்று அதை நீதிமன்றம் செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

விரைவில் அம்மா அவர்கள் நலம் பெற்று குணமடைந்து தமிழகம் இப்போதிருக்கும் சில இக்கட்டான நிலைகளை (காவிரி, ஜி.எஸ்.டி...) விரைவில் சரிசெய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து மாநிலத்தை இயல்பான நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது தான் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மன வேண்டுதல். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சி தலைவர்களும் (கலைஞர் உட்பட) கூட அவர் நலம் பெற்று விரைவில் வரவேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார்கள்.

ஆகவே அவர் நல்லபடியாக வரவேண்டும் என்பதில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலாக தான் இருக்கிறது. அரசும் ஹாஸ்பிடலும் விடும் முரண்பாடான அறிக்கைகளால் தான் மக்கள் இருவேறு குழப்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அரசும் உயர்நீதிமன்றமும் தக்க நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறேன்.1 comment:

Printfriendly