Saturday, September 30, 2017

ஆயுத பூஜை – கலாச்சார மாற்றம்

ப்போதெல்லாம் தொழிற்சாலைகளில் நடத்தப்படும் ஆயுத பூஜை என்பது அதன் உண்மையான தாத்பரியத்தில் இருந்து சற்றே விலகி முழுமையாக தெய்வ வழிபாடாகவே மாறிவிட்டது.

வழக்கமாக ஆயுத பூஜை என்பது நமது பணியிடங்களில் உள்ள கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு நடத்தப்படுவது. ஆண்டு முழுதும் இயங்கும் அவற்றை, அந்த வாரத்தில் முழுமையாக செப்பனிட்டு (Maintenance) சுத்தப்படுத்தி பெயிண்ட் அடித்து பக்காவாக ஓடுகிறதா என்றெல்லாம் முழுமையாக பரிசோதித்து விடுவார்கள். இதை பயன்படுத்தி அந்த இயந்திரங்களில் உள்ள அனைத்து சிறு பெரு பழுதுகளும் செப்பனிடப்பட்டு இயந்திரம் நல்ல முறையில் நீண்ட நாள் இயங்கும் அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

பூஜை நாள் அன்று, கம்பெனிகளில் உள்ள அனைத்து கருவிகளுக்கும், இயந்திரங்களுக்கும் பூஜை நடக்கும். அந்தந்த இயந்திரங்களை இயக்குவோர் தான் அந்தந்த இயந்திரங்களுக்கு பூஜை செய்வார்கள். உதாரணமாக ஒரு சீட் மெட்டல் பேப்ரிகேஷன் கம்பெனி என வைத்துக்கொண்டால் அங்கே இருக்கும் கட்டிங் மெஷின், ரோலிங்க் மெஷின், வெல்டிங் மெஷின், டிரில்லிங்க் மெஷின், லேத், மில்லிங்க் மெஷின், பிரஸ், கட்டர் என அனைத்து மெஷிங்களும் புதுப்பிக்கப்பட்டு எல்லாவற்றுக்கும் பெயிண்ட் அடித்து அதற்கெல்லாம் பூ, பொட்டு, வாழைமரம், கரும்பு வைத்து ரெடி செய்து கொள்வார்கள்.



கம்பெனியின் மூத்த தொழிலாளி முன்னிலையில் அந்தந்த மெஷின் ஆபரேட்டர்கள் தங்கள் இயந்திரங்களுக்கு சின்ன சின்னதாக பூஜைகள் செய்வார்கள். எல்லா இயந்திரங்களுக்கும் பூஜைகள் நடந்தபின் தான் மெயின் பூஜை நடக்கும்.

இந்த மெயின் பூஜை என்பது, கம்பெனியின் மிக முக்கியமான இயந்திரம் அல்லது அலுவலக அறை ஆகிய ஏதேனும் ஒன்றில் நடக்கும். இதில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த பூஜையை செய்வார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

அந்தந்த இயந்தரங்களால் வேலைவாய்ப்பும் அதன் மூலமாக வாழ்வாதாரமும் பெறும் தொழிலாளிகள் முதலில் தங்கள் இயந்திரங்களுக்கு பூஜை செய்துவிட்டு தான் மெயின் பூஜைக்கு வருகிறார்கள். இது அவர்களது தொழில் மீது ஒரு தனிப்பட்ட அந்தரங்கமான பக்தியை கொண்டு தருகிறது.

மெயின் பூஜையில் அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து நின்று பூஜை செய்வது அவர்களுக்கு மற்றுமொரு தன்னம்பிக்கையை தருகிறது.

ஒரே நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் தனித்தனி மெயின் பூஜைகள் செய்யப்படாது.

மெயின் பூஜை முடிந்த பின்னால் அனைவரும் அவரவர் இயந்திரங்களுக்கு சென்று அதை ஒரு முறை இயக்கி பார்ப்பார்கள். இதற்காகவே, பூஜைக்கு பின் செய்யவேண்டியவை என சின்ன சின்ன வேலைகளை தேர்ந்தெடுத்து அதற்கான எல்லாவற்றையும் தயாராக வைத்திருப்பார்கள். உதாரணமாக ஒரு லேத் எனில், பூஜை முடிந்ததும் ஒரு ரோட்டரை கடைந்து பார்ப்பார்கள். இதற்காக ரோட்டரை சக்கில் (Chuck) ஏற்கனவே பொருத்தி அதற்கான டூல் எல்லாம் செட் செய்து தயாராக வைத்து அதன் பின் தான் பூஜையே செய்திருப்பார்கள்.

இப்படி இயக்கப்படும் போது எந்த தடங்களும் பிரச்சனைகளும் இன்றி நல்லபடியாக அவை நடக்கவேண்டும் என்பது அவரவர் செண்டிமெண்ட்.

இதுவே வாகனங்கள் எனில், அதன் டிரைவர்கள் அவற்றுக்கு பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் எல்லா சக்கரங்களிலும் எலுமிச்சம்பழம் வைத்து அதன் மீது வாகனத்தை ஏற்றி அப்படியே ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்து நிறுத்துவார்கள்.

பூஜை முடிந்தபின் பார்த்தால் கம்பெனி கிரவுண்ட், ஆர்.டி.ஓ சோதனை செய்யும் டெஸ்ட் கிரவுண்ட் மாதிரி இருக்கும். எல்லோரும் ஒரே நேரத்தில் வண்டிகளை எடுத்து ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்து வைப்பார்கள்.

குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், இதில் தெய்வ படங்களுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் இல்லை. இயந்திரங்கள், அதை சார்ந்த கருவிகள், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றுக்கு தான் பூஜை நடக்கும். அப்படி தீபாராதனை காட்டப்பட்டு செல்லும் போது வழியில் சாமி படங்கள் இருந்தால், நமக்குள் இருக்கும் இயல்பான பக்தியின் அடிப்படையில் அதற்கும் காட்டப்படும். அவ்வளவு தான்.

நான் பல ஆண்டுகள் முன்பு வேலை ஒரு நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றிய இசுலாமிய தோழர்கள் தாங்கள் பணி செய்யும் லேத், பிளாஸ்மா கட்டர். ஸ்பாட் வெல்டிங் மெஷின் போன்றவற்றுக்கெல்லாம் ஆத்மார்த்தமாக தீபாராதனை காட்டி பூஜை செய்வதை பார்த்திருக்கிறேன். அவர்களுடன் அந்த பூஜைக்கான சுத்தப்படுத்துதல் பெயிண்டிங் ஆகியவையும் செய்திருக்கிறேன். அவ்வளவு பக்தியாக செய்வார்கள்.

இந்த பூஜையை பொறுத்தவரை செய்யும் முறை இந்து சமய அடிப்படையிலான பூ, பழம், தேங்காய், தீபாராதனை என்றெல்லாம் இருந்தாலும் கூட இதன் நோக்கம் என்பது நமக்கு வாழ்வு தரும் கருவிகளுக்கான வழிபாடு என்கிற அளவிலே தான் நான் கண்டு வந்திருக்கிறேன்.

ஆனால் இப்போதெல்லாம் வழக்கங்கள் முழுமையாக மாறிவிட்டது.



பல நிறுவனங்களில் இயந்திரங்களுக்கான தனித்தனி வழிபாடுகள் இல்லை. மூத்த தொழிலாளியை கொண்டு நடத்தப்படும் பூஜைகள் இல்லை. மாறாக எல்லா தெய்வ பாடங்களையும், சில கம்பெனிகளில் சிலைகளையும் வைத்து பண்டிதர்கள், புரோகிதர்களை கொண்டு யாக பூஜைகளே பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. ஆயுதங்களுக்கான பூஜை என்பது முற்றிலுமாக ஒழிந்து, தெய்வங்களுக்கான பூஜை என்கிற நிலைக்கு இது மாறிவிட்டது.

அதிலும், தொழிலாளர்கள், அந்த நிறுவனங்களை இதுவரையும் உயர்த்தி வந்தவர்கள் எல்லாம் பின்னில் எங்கோ நிற்க, புரோகிதர்களும் பண்டிதர்களும் புகைமண்டலத்துக்குள் அமர்ந்து புரியாத பாஷையில் பூஜை செய்து கொண்டிருப்பதெல்லாம், ஆயுத பூஜை என்கிற கலாச்சார வழக்கத்தையும், அதன் நோக்கத்தையும் முற்றிலுமாக அழித்து விட்டன.

மெல்ல மெல்ல நம்மை அறியாமல் எத்தனையோ விஷயங்கள் நமது இயல்பை மாற்றி அமைத்து விட்டன. அதில் ஒன்றாக இந்த ஆயுத பூஜையும் சேர்ந்து கொண்டதிலும், அது தான் நமக்கு பெருமை என அதை ஏற்றுக்கொண்டதிலும் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை.


ஏன்னா, நம்ம டிசைன் அப்படி!

1 comment:

  1. neenga munnadi sonna madirithan engoloda rice mill la ayudha pooja pannom , homam kalacharam andha niruvanthil panipuriyum kuripitta samugathinarinal thinikka pattadhu , MNC kkalil homam oru mandatory iconic event aaga irukkiradhu ,

    ReplyDelete

Printfriendly