Friday, August 30, 2019

வங்கிகள் இணைப்பு சரியா?

இன்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நடத்திய ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்

அதாவது இப்போது இருக்கும் 27 பொதுத்துறை வங்கிகளில் சில வங்கிகளை இணைப்பதன் மூலம் 12 வங்கிகளாக குறைக்க அரசு முடிவு எடுத்து இருக்கிறது என்பது தான் அந்த முடிவு

எந்தெந்த வங்கிகள் எப்படி இணைக்கப்படுகிறது என்பதை இந்த படம் விளக்கும்



இந்த முடிவு சரியா?

என்னை பொறுத்த வரையில் இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு தான்.

அரசு துறை வங்கிகள் 12 என்பதே கூட அதிகம் தான். அதன் ஒரு படியாகக் கூட 27 வங்கிகள் என்கிற நிலையில் இருந்து 12 ஆக குறைக்க அரசு முடிவு எடுத்து இருக்கலாம்.

நிர்வாக செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் லாபமாக செயல்பட இது போன்ற இணைப்புக்கள் அவசியம் ஆகின்றன. தெளிவான கட்டுப்பாடுகளை கண்காணிக்கவும் இந்த இணைப்பு உதவும்

இதனால் ஆட்குறைப்பு இருக்குமா?

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளால், வங்கிக்கு சென்று செய்ய வேண்டிய பணிகள் வெகுவாக குறைந்து விட்டது என்பதை நாம் அறிவோம்.

உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு பல்கலை கழகத்தில் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால், வங்கிக்கு சென்று டிடி எடுப்பது வழக்கம்.

அதற்கு கேஷியர், அதற்கான அப்ரூவர், டிடி பிரிண்ட் எடுப்பவர், அதை கையெழுத்து இட்டு அப்ரூவல் கொடுப்பவர் என குறைந்தது 3 அலுவலர்கள் தேவையாக இருந்தது.

இப்போது நாமே நாம் இருக்கும் இடத்தில் இருந்தே இணையம் வழி இந்த கட்டணத்தை செலுத்த முடியும். அந்த 3 அலுவலர் அவசியம் இல்லாமல் போய்விட்டது.

டிடி மட்டும் அல்ல, வைப்பு நிதி, சேமிப்பு கணக்கு, காப்பீடு என அனைத்து வகையான வங்கி பரிவர்த்தனைகள் இப்போது அவரவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது.

கிட்டத்தட்ட 60% வங்கி பரிமாற்றங்கள் வங்கிக்கு வெளியே நிகழ்வதால், வங்கி ஊழியர் எண்ணிக்கை என்பது அளவுக்கு அதிகமாகவே உள்ளது

இந்த வங்கிகள் இணைப்பு காரணமாக ஊழியர்கள் ஒருங கிணைக்க வழி பிறக்கும்.

ஒவ்வொரு வங்கி கிளையிலும் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறையாது, ஆனால் உயர் அதிகாரிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

ஒரே நகரில் இருக்கும் வெவ்வேறு வங்கி கிளைகள் ஒவ்வொரு தலைமை அலுவலகம், அதிகாரிகளின கீழ் இயங்கிய நிலை மாறி அத்தனை வங்கி கிளைகளும் சில அதிகாரிகளின கண்காணிப்பில் வரும். எனவே உயர் பதவிகளில் ஆட்கள் குறைய வாய்ப்பு உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டில் இப்போது 27 வங்கி உயர் அதிகாரிகள் இருக்கும் நிலை மாறி இனி 12 அதிகாரிகள் போதும். இதுவே தான் அவர்களின் கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கும்.

அதுவும் அரசு ஆட்குறைப்பு செய்யும் என நான் நினைக்கவில்லை. அதற்கு பதிலாக காலியாகும் பதவிகளுக்கு, அதாவது ஓய்வு பெற்று செல்வோர், ராஜினாமா செய்வோர் ஆகிய பதவிகளுக்கு, புதிய ஆட்களை தேர்வு செய்வது குறையலாம். இருக்கும் அலுவலர்க ளை வெவ்வேறு பதவிகளுக்கு மாற்றி இயஙக முடியும்.

இது வங்கி நிர்வாகத்தின் செலவுகளை குறைப்ப தோடு, தெளிவான கண்காணிப்பு செய்யவும் உதவும்

வங்கி இணைப்பால் மக்களுக்கு என்ன பயன்?

நகர மக்களுக்கு பெரிய அளவில் பயன் இல்லை. ஆனால் கிராமப்புற மக்களுக்கு பல வகைகளில் இது உதவும்.

ஒரே ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்.

ஒரு வங்கியில் கண்க்கு வைத்து இருப்பவர்கள் வேறொரு வங்கி ATM மூலம் பணம் எடுக்க இப்போது கட்டுப்பாடுகள் இருக்கிறது. இப்போது இணைக்கப்பட்ட வங்கிகளில் எடுக்க கட்டுப்பாடு இருக்காது.

சிற்சில ஊர்களில் 2 அல்லது 3 ATM மட்டுமே இருக்கும் நிலையில் அவை வெவ்வேறு வங்கி ATM ஆக இருந்தால் வரும் சிரமங களை எல்லோரும அறிவீர்கள். நமது வங்கியில் பணம் இல்லாத நிலையில் வேறு ATM மூலம் ₹200 பணம் எடுக்க ₹50 கட்டணம் கொடுக்க மனம் இல்லாமல் கொடுக்க வழி இல்லாமல் தவித்த நிலை நான் அனுபவித்து இருக்கிறேன்.

வங்கி கடன், கணக்குகள் என பலவற்றை இப்போது அந்தந்த வங்கிகள் கொஞ்சம் அதிகமாகவே தீர்மானிக்க முடியும்

மொத்த வங்கி பரிமாற்ற அளவு அதிகரிப்பதால், சில சலுகைகளை, சேமிப்புக்கு வட்டி உயர்வை வங்கிகளால் தாராளமாக கொடுக்க முடியும்

இது போல பல நல்ல விஷயங்கள் இந்த இணைப்பு மூலம் கிடைக்க வாய்ப்பு உள்ளது

இந்த இனைப்பால் பொருளாதாரத்துக்கு என்ன பலன்?

இப்போது இந்தியா ஒரு பொருளாதார மந்த நிலையில் இருந்து பொருளாதார சிக்கலை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தம், செலவு குறைப்பு ஆகியவை தேவை படுகிறது. தொலைபேசி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், என பலவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டு இருப்பதும் அதனால் தான். அதை போலவே வங்கிகளும் இணைக்கப்படுகின்றன.

இது வங்கி கடனை அதிகமாக வெளியிட்டு, மக்கள் செலவிடும் சக்தியை அதிகரிக்கும். அது பொருட்களின் விற்பனையை கூட்டி அதன் பயனாக உற்பத்தி துறைக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும்.

கொஞ்சம் நீண்ட கால திட்டம் தான். ஆனால் இதை விட இதை செய்ய நல்ல தருணம் வேறு இல்லை.

பொறுத்து இருந்து பார்ப்போம்.





Tuesday, August 6, 2019

காஷ்மீர் சட்ட திருத்தம்

பின் கதை சுருக்கம்:

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பொது இந்தியாவில் 526 சமஸ்தானங்கள் இருந்தன. அவை எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு தான் இந்தியா எனும் ஒரு நாடு உருவாக்கப்பட்டது.

இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் தனி நாடாக உதயமான பொழுது, காஷ்மீரின் அரசரான ராஜா ஹரி சிங், தனது அரசு தனித்து இயங்கும் எனவும் பாகிஸ்தானுடனோ இந்தியாவுடனோ சேராது எனவும் அறிவித்தார். அவ்வாறே காஷ்மீர் தனித்து இயங்கும் வகையில் நாடு பிரிக்கப்பட்டது

ஆனால் அதே ஆண்டு ஆக்டொபர் மாத இறுதியில் பாகிஸ்தான் காஷமீர் பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க முனைந்ததால், ராஜா ஹரி சிங், இந்தியாவின் உதவியை நாடினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடிவெடுத்து, அவ்வாறே ராஜா ஹரி சிங்கிடம் இருந்து எழுதியும் வாங்கி கொண்டது இந்தியா.
அந்த அடிப்படையில்1947 ஆம் ஆண்டு ஆக்டொபர் மாதம் 27 ஆம் தேதி காஷ்மீர் இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் சில நிபந்தனைகளுடன்.



ராஜா ஹரி சிங்

ராஜா ஹரி சிங் இந்தியாவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஒரு IoA (Instrument  of  Accession ) வரையறை செய்யப்பட்டது. அதில் சொல்லப்பட்ட நிகழ்வுகளுக்கு  எல்லாம் காஷ்மீரின் ஆலோசனை இல்லாமல் காஷ்மீர் கட்டுப்பட வேண்டியது இல்லை. அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவானாலும் அதற்கு காஷ்மீரின் ஒப்புதல் தேவை.

இந்த நிபந்தனைகள் அடிப்படையில் 1950  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமலான இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு தனி அலகு 370  இணைக்கப்பட்டு, 'இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், காஷமீர் மாநிலத்தை பொறுத்தவரை அந்த மாநில சட்டமன்றத்தின் முடிவின் படியே அது அங்கு ஏற்புடையதாகும்' என தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

மேலும், அந்த சிறப்பு அந்தஸ்தின் படி, காஷ்மீர் மாநிலத்துக்கு என தனி கொடி வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் நிலம் வாங்குவதும் தடை செய்யப்பட்டது.



இதே போன்ற சிறப்பு அந்தஸ்துக்கள் பிற மாநிலங்களுக்கும் தரப்பட்டது. அவை அலகு 371A முதல் 371I வரை விவரிக்கப்பட்ட உள்ளன. அவை நமது கட்டுரைக்கு அவசியம் இல்லாதது.

ராஜா ஹரி சிங் எழுதி கொடுத்த IoA வில் Clause 5 & Clause 7 ஆகியவை முக்கியமானது. அவற்றின் படி, ராஜா ஹரி சிங் அல்லது அவருக்கு பிந்தையவர்கள் சம்மதம் இல்லாமல் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாது.  இந்தியா தன்னிச்சையாக எடுக்கும் எந்த முடிவுகளும் காஷ்மீரை கட்டுப்படுத்தாது.

Article 370 அமலான போதும் இந்த சலுகை அப்படியே சேர்த்துக்கொள்ளப்பட்டது. அதாவது காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக இந்தியா எடுக்காது என லார்டு மவுண்ட் பேட்டன் அவர்களும் ஜவஹர்லால் நேரு அவர்களும் வாக்குறுதி கொடுத்து இருந்தார்கள்.

மேலும் காஷ்மீர் மாநில பிரதமர் திரு ஷேக் அப்துல்லா அவர்கள் (அப்போது முதல்வர் பதவி இல்லை, பிரதமர் தான்) 1949  ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் காரணமாக, சர்தார் வல்லபாய் படேல் அவர்களும், இந்திய அரசியல் சாசனத்தை வரையறை செய்த திரு N கோபாலசாமி அய்யங்கார் அவர்களும் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ஜவஹர்லால் நேரு கொடுத்த மற்றுமொரு வாக்குறுதியில், காஷமீர் மாநிலத்தை பொறுத்தவரை, அந்த மாநில மக்களின் முடிவே இறுதியானது என்பது முடிவு செய்யப்படட ஒன்று என வாக்கு கொடுத்து இருந்தார்.

அந்த வாக்குறுதி அடிப்படையில் இந்தியாவுடன் 1950 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும் ஒரு மாநிலமாக காஷ்மீர் இருந்து வருகிறது.

மற்ற எல்லா மாநிலங்களையும் போலவே அங்கும் இந்திய தேர்தல் ஆணையம் தான் தேர்தல் நடத்தும், இந்தியாவின் சட்டங்கள் எல்லாம் அங்கேயும் செல்லுபடியாகும். ஆனால் அப்படி செல்லு படி ஆகும் முன்பாக காஷமீர் மாநில சட்டமன்றம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

இப்போதைய நிகழ்வு:

நேற்றைய தினம் நாடாளுமன்ற மேலவையில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் ஒரு அரசியல் சாசன திருத்த மசோதாவை கொண்டுவந்து, அரசியல் சாசன பிரிவு 370 ஐ நீக்குவதாக அறிவித்தார்.

இதன் படி இந்தியாவுடன் காஷ்மீர் முழுமையாக இணைத்து கொள்ளப்படுவதாக அறிவித்து இருக்கிறார். அதாவது 1950 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவுடன இணைந்து இருக்கும் காஷ்மீரை மீண்டும் இப்போது இணைத்து கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.

இதை திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்து பேசின. மற்றும் ஒரு கிழக்கு தைமூராக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வைகோ அவர்களும் எச்சரித்தார்.

ஆனால் எல்லா எதிர்ப்பையும் மீறி அந்த சட்ட திருத்தம் நேற்று நாடாளுமன்ற மேலவையில் நிறைவேறி உள்ளது

இது சட்டப்படி சரியா?

Article 370 வரையறை செய்யப்பட்டபோது மிக மிக புத்திசாலித்தனமாக வரையறை செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரிவின் படி, இந்திய நாடாளுமன்றம் எந்த முடிவை எடுத்தாலும் அது காஷ்மீர் மாநில அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே காஷ்மீரில் செல்லுபடி ஆகும்.

Article 370 நீக்கப்பட வேண்டும் என்றாலும் கூட, காஷமீர் மாநில மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அதன் அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரவே முடியும்.

இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல், அரசியல் சாசன பிரிவு 368 சொல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்ட திருத்தம், காஷ்மீரை கட்டுப்படுத்தும் என்பதை உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சாசன பென்ச் தான் தீர்மானிக்கும்.

இந்த 70  ஆண்டு கால இந்திய வரலாற்றில் எத்தனையோ அரசுகள் வலுவாக இருந்தும் இந்த முடிவை எடுக்க தயங்கின. காரணம், நாடாளுமன்றத்தில் வலுவாக இருக்கும் கடைசி காஷ்மீர் மாநிலத்தில் வலுவாக இல்லாத நிலையே இருந்து வந்தது.

இதுவரையும் இருந்த அரசுகள் எல்லாம் இந்திய அரசியல் சாசனத்தையும் இந்திய சட்டங்களையும் உயர்வாக மதித்த காரணத்தால், காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பரிந்துரை இல்லாமல் அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வர தயங்கின. சட்டம் அனுமதிக்காத ஒன்றை, சட்டப்படி செல்லுபடி ஆகுமா என்கிற சந்தேகத்தில் உள்ள ஒரு நடவடிக்கையை எடுக்க சட்டத்தை மதித்த எந்த அரசும் எடுக்கவில்லை. அது மொரார்ஜி தேசாய் அவர்களின் ஜனதா அரசானாலும் சரி, வாஜ்பாயி அவர்களின் பாரதிய ஜனதா அரசானாலும் சரி, யாரும் அடைய முடியாத மிகப்பெரிய பலம் பெற்றிருந்த ராஜீவ் காந்தி அவர்களின் காங்கிரஸ் அரசானாலும் சரி, இப்படி ஒரு சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையை எடுக்கவில்லை.

ஆனால் சட்ட நெறி முறைகள் எதையும் கண்டு கொள்ளாமல், நேற்றைய தினம் மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்து உள்ளது.

பார்ப்போம், இது சட்டத்தின் முன் நின்று வெல்கிறதா அல்லது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா என்பதை.

அதுவரையும், காஷ்மீர் மக்களுக்கு எல்லா விதமான பாதுகாப்பையும் தரும் கடமை நமது அரசுக்கு உள்ளது.

.

Printfriendly