Wednesday, May 27, 2020

வேதா இல்லம் தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இல்லமான வேதா இல்லம் யாருக்கு எனும் வழக்கில் இன்று தீர்ப்பு வந்து இருக்கிறது.

இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் எனக்கும் எல்லோரைப்போலவே ஆர்வம் தானாக தொற்றிக்கொண்டதில் வியப்பு இல்லை.
ஜெயலலிதாவின் அண்ணன் மக்களான தீபா & தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் தங்களுக்கு தான் தரவேண்டும் எனவும், ஜெயலலிதா செலுத்தவேண்டிய அபராத தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் சொல்லி இருந்தனர்

ஜெயலலிதாவுடன் கூடவே இருந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்களும் அந்த சொத்துக்கள் மீது முன்பு உரிமை கோரி இருந்தனர். ஆனால் இப்போது இந்த வழக்கில் அவர்கள் தங்களை இணைத்து கொண்டதாக தெரியவில்லை

அதிமுக கட்சி சார்பில் கொடுத்துள்ள மனுவில், ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க அரசு சார்பில் நிர்வாகியை நியமிக்க வேண்டும் என கேட்டு இருந்தனர்

வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா சொத்துக்கள் ஏற்கனவே கோர்ட்டால் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன

வருமான வரித்துறை & கர்நடக சிறப்பு நீதிமன்றம் ஆகியவை ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலித்து தருமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளது

இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து அதன் மூலம் வேதா இல்லத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அதை ஜெயலலிதா அவர்களின் நினைவில்லமாக மாற்றவும் உத்தரவு இட்டது

இன்று ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு. கிருபாகரன் & திரு.அப்துல் குத்தோஸ் ஆகியோர் முன்பு தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது

இன்று அவர்கள் வழங்கிய தீர்ப்பின்படி

வேதா இல்லம் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா & தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும்

தீபா & தீபக் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதை பரமாரிக்க வேண்டும் 

என சொல்லி இருப்பதாக தெரிகிறது

இதற்கு நேர் எதிராக.. அந்த வீட்டை தமிழக அரசின் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றவும், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றவும் பரிசீலிக்கும்படி ஆலோசனையும் கொடுத்து உள்ளது

அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்து விட்டது நீதிமன்றம்

ஒன்றுக்கொன்று முரணான இரு வேறு விஷயங்களை தீர்ப்பாக சொல்லி மீண்டும் குழப்பத்தில் கொண்டு போய் விட்டுள்ளது நீதிமன்றம்

அதாவது தீபா & தீபக் வசம் ஒப்படைத்தால் அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லமாக மாற்ற முடியாது

அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லமாக மாற்றப்பட்டால் தீபா & தீபக்குக்கு அது உரிமை உள்ள வீடாக இருக்காது

எனவே இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்படும்.. அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்து விளக்கம் கேட்கப்படும் என்று யூகிக்கிறேன்

இதில் ஆறுதலான விஷயம்.. சசிகலா & அவர்களது உறவினர்களுக்கு எந்த வகையிலும அந்த வீட்டில் உரிமை இல்லை என தெளிவுபடுத்தப்பட்டது தான்

தீபா & தீபக்கை பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றி. சந்தேகமில்லை.
இதை வைத்தே ஜெயலலிதாவின் மற்ற சொத்துக்களை தங்கள் வசப்படுத்தவும் முடியும்.

இதை வைத்து சாதுர்யமாக பிரச்சாரம் செய்தால் ஜெயலலிதாவின் வாரிசு தான் தான் என்று அரசியலில் வலம் வரவும் முடியும்.

ஏற்கனவே தீபாவுக்கு ஆதரவு கொடுத்து பின்னர் ரிவர்ஸ் அடித்த ஓ.பி.எஸ். மீண்டும் தீபாவை ஆதரிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை

அடுத்த ஆண்டு தேர்தல் உள்ளதால் தீபா இப்போதிருந்து கவனமாக காய்கள் நகர்த்தி ஓரளவு தனது செல்வாக்கை உருவாக்கிக் கொள்ள முடியும்

ஒரு வேளை நீதிமன்ற ஆலோசனையை தமிழக அரசு ஏற்று, முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றினால்.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இனி வேதா நிலையத்தில் இருந்து செயல்படலாம்.

அடுத்த தேர்தலில் திமுக வென்று ஸ்டாலின் முதல்வர் ஆனால் அவரும் வேதா நிலையத்தில் இருந்து இயங்கலாம்.

தமிழகத்தில் முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் என்று ஒன்று இல்லை. 

எம்.ஜி.ஆர், ஜானகி, கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் அவர்களது சொந்த வீட்டில் இருந்தே இயங்கி வந்தனர்

ஓ.பன்னீர் செல்வம் & எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட கிரீன்வேஸ் ரோடு அரசு இல்லத்தில் இருந்தே இயங்கி வந்தனர்

இது வரை தமிழக முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் எனும் ஒரு தேவை தமிழகத்தில் ஏற்பட்டது இல்லை.

இந்த வழக்கிலும் யாரும் அப்படி ஒரு கோரிக்கை வைக்கவில்லை

அப்படி இருக்க நீதிபதிகள் என்ன காரணத்துக்காக தேவை இல்லாமல் இப்படி ஒரு ஆலோசனையை முன்வைத்து விஷயத்தை மேலும் சிக்கலாக்கினார்கள் என்பது உண்மையிலேயே புரியவில்லை

எது எப்படி இருந்தாலும் ஜெயலலிதா அவர்களுக்கு நினைவில்லம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது

அவரது நினைவிடம் அருகிலேயே அதற்கான கட்டுமானங்களும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பார்ப்போம் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என.. அவசர சட்டம் என்ன ஆகிறது என.. சசிகலா அவர்களின் நிலைப்பாடு என்ன என.. 

வேதா நிலையம் இன்னும் என்னென்னவெல்லாம் சந்திக்கப்போகிறது என தெரியவில்லை.

No comments:

Post a Comment

Printfriendly