Monday, May 4, 2020

தமிழகத்தில் லாக்டவுன் தளர்வு சரியா?

மார்ச் 25 தொடங்கிய லாக்டவுன், இப்போது 40 ஆம் நாளை தொட்டு நீண்டு கொண்டு இருக்கிறது. மே 17 வரை இப்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சில தளர்வுகள் மே 4 முதல் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் சரி என்றும் தவறு என்றும் வெவ்வேறு விவாதங்கள் இணையத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன.

தளர்வு சரியா? சுருக்கமாக அலசலாம்

மத்திய அரசின் உள் துறை, என்னென்ன தளர்வுகளை மாநிலங்கள் கொடுக்கலாம் என விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்து உள்ளது. அதன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டை தளர்த்த அதிகாரம் இல்லை. வேண்டுமானால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து கொள்ளலாம்
இதன் அடிப்படையில் தமிழக அரசு விவாதித்து, வல்லுனர்கள் குழுவுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்துக்கான தளர்வுகளை அறிவித்து உள்ளனர்.

சுருக்கமாக சொல்வதானால் மத்திய அரசின் தளர்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தமிழகம் சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது

உதாரணமாக சொல்வதானால்

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களாக மத்திய அரசு பிரித்து தளர்வுகள் அறிவித்தது. தமிழக அரசோ, சென்னை & சென்னை தவிர்த்த இதர பகுதிகள் என இரண்டாக பிரித்து, இதர பகுதிகளில் கூடுமானவரை சிவப்பு மண்டலத்துக்கு உரிய கட்டுப்பாடுகளையே விதித்து உள்ளது

பச்சை மண்டலத்தில் பஸ் போக்குவரத்தை மத்திய அரசு அனுமதித்தது.. தமிழக அரசு அனுமதிக்கவில்லை

தொழிற்சாலைகள் 100% பணியாளர்களுடன் இயங்க மத்திய அரசு அனுமதித்தது. தமிழக அரசு 50% பணியாளர் மட்டும் தான் என கட்டுப்பாடு விதித்து உள்ளது. சென்னை பகுதியில் 25% தான் அனுமதி

அத்தியாவசிய பொருட்கள் அல்லாத கடைகள் மத்திய அரசு அனுமதித்தது. தமிழக அரசோ அதிலும் சிலவற்றை தடை செய்து உள்ளது

லாக்டவுன் இன்னும் முடிவடையவில்லை. மே 17 வரை நீடிக்கிறது. அதற்கிடையில் மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கான தளர்வுகள் மட்டுமே கொஞ்சமாக கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே இதுக்கு ஏன் கொடுக்கல? அதுக்கு ஏன் கொடுக்கணும்? போன்ற கேள்விகள் அபத்தமானவை

இந்த தளர்வுகள் அவசியமா? நோய் தொற்று குறையாத நிலையில் லாக்டவுனை தொடரலாமே என பலரும் கேட்கிறார்கள்

இந்திய பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்காது. மக்களுக்கு அன்றாட தேவைகள் உள்ளன. உணவு பொருள் மட்டுமே அல்லாமல் வேறு சில பொருட்களின் தேவைகளும் மக்களுக்கு உள்ளன. சேவைகளும் தேவை. எனவே அத்தியாவசிய பொருள் அல்லாதவையும் இப்போது திறக்க வழி செய்யப்பட்டு உள்ளது.
சில தொழிற்சாலையில் தொடர்ந்து நீண்ட நாள் இயங்காமல் வைத்து இருப்பது பெரிய அளவில் பின்னர் பிரச்சனை தரக்கூடும். எனவே அதை இயக்க அனுமதி வேண்டும் என தொழில்துறை கோரிக்கை வைத்தனர்.

எனவே அவர்களுக்காக அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் குறைந்த தொழிலாளர்கள் வைத்து அத்தியாவசிய இயக்கங்கள் மட்டும் செய்து தொழிற்சாலைகள் இயங்கத் தேவையான உத்தரவு மட்டுமே. முழு உற்பத்திக்கு எல்லாம் அனுமதி கொடுக்கவில்லை. அதற்கு தேவையான பணியாளர்களை அழைத்து வருவது எல்லாம் தொழிற்சாலைகள் பொறுப்பு

அதாவது, அரசை பொறுத்தவரை முழுமையான லாக்டவுன் தான். ஆனால் தொழிற்சாலை நலனுக்காக சில இயக்கங்கள் தேவை எனில் உங்கள் பொறுப்பில் தொழிலாளர்கள் அழைத்து வந்து குறைந்த அளவில் இயக்கி கொள்ளுங்கள் என்கிற அளவில் தான் தளர்வு

இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் லாஜிக்கலான தளர்வாகவே தமிழகம் கொடுத்து உள்ளது.

நோய்த்தொற்று நீடிக்கையில் தளர்வு சரியா?

மருத்துவர்களும் உலக சுகாதார நிறுவனமும் சொன்னது என்னவெனில், இந்த நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் 14 நாட்களுக்குள் தெரியத் துவங்கிவிடும். 14 நாள் வரை அறிகுறிகள் இல்லை எனில் பயப்பட ஏதும் இல்லை என்பதே

இதை அடிப்படையாக வைத்தே லாக்டவுன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும் மருத்துவர்கள், குறிபிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டும் சோதனை செய்தால் போதும் என்று இன்னொரு முடிவும் எடுத்து இருந்தனர். அதனால் அறிகுறி இல்லாதவர்களுக்கு சோதனை செய்வதை தவிர்த்து வந்தார்கள்.

ஆனால் இப்போது, 25 நாட்களுக்கு பின்னரும் அறிகுறிகள் இன்றி பாசிடிவ் ஆகிக் கொண்டு இருக்கிறது இந்தியாவில். இது தொடர்பான திருத்தப்பட்ட வரையறை எதுவும் வெளியிடப்படவில்லை. சோதனைக்கான வழிகாட்டி நெறிமுறையும் மாற்றப்படவில்லை. அறிகுறிகள் இருந்தால் மட்டும் டெஸ்ட் செய்தால் போதும் என தினந்தோறும் இணையத்தில் வாதாடிக் கொண்டு இருந்த மருத்துவ நண்பர்களும் இப்போது அமைதி காக்கிறார்கள்.

இந்நிலையில், இன்னும் எத்தனை நாள் லாக் டவுன் தேவை என்பது தீர்மானிக்க முடியாததாக ஆகி விட்டது. யாரிடமும் அதறகான பதில் இல்லை. 

எதிர்பார்த்த நாட்கள் கடந்து இனி பயமில்லை என ஆசுவாசப்படுத்திக் கொள்ள எத்தனிக்கையில் அதிகமாக நோய் தொற்று கண்டறியப்பட்டு தீவிர லாக்டவுனுக்கான தேவையை கொண்டு வந்து இருக்கிறது

இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியோ, இந்தியா கால காலமாக கடைபிடிக்கும் தடுப்பூசி கொள்கையோ, தட்ப வெப்பமோ.. ஏதோ ஒன்று நோய் தொற்றை நீண்ட நாளுக்கு தடுத்தே வந்து உள்ளது. நீண்ட காலம் கடந்த நோய் தொற்று அறிகுறிகள் கூட குறைவான நபர்களுக்கே வந்து உள்ளது.

இது குறித்த விரிவான ஆய்வோ, மறு வரையறையோ மருத்துவர்கள் தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை

இந்நிலையில், 40 நாட்களை கடந்த லாக்டவுன், பொருளாதார தொய்வு, மக்களிடம் போதுமான பணம்/பொருளின்மை, பிற சேவைகளின் தேவைகள், அரசின் வரி வருவாய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வு தருவதா

அல்லது, நோய் தொற்று நீண்ட நாள் அறிகுறிகள் இன்றி இருப்பது, அறிகுறிகள் இல்லாத நிலையிலும் மற்றவர்களுக்கு பரவுவது, சரியான வழிகாட்டுதல் மருத்துவர்கள் தரப்பில் இருந்து இல்லாதது, சுகாதார வல்லுனர்களாலும் நோய் தொற்று குறித்து தெளிவாக விளக்க முடியாதது ஆகிய காரணங்களால் லாக்டவுனை கடுமை ஆக்குவதா 

எனும் இரு கேள்விகளுக்கு இடையில் தான் அரசு உள்ளது

எனவே லாக்டவுனை தொடர்ந்து கொண்டே சிற்சில தளர்வு அறிவிப்பது மட்டுமே இப்போது இருக்கும் ஒரே வழி. அதையே அரசு செய்து இருப்பதாக கருதுகிறேன்.


No comments:

Post a Comment

Printfriendly