Thursday, August 20, 2020

தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகர்

மீண்டும் கிளம்பி இருக்கிறது, தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகரம் தேவை எனும் விவாதம்.

அதிமுக அமைச்சர்கள் சிலரே மதுரையை இரண்டாம் தலைநகரம் ஆக்க வேண்டும் என கருத்து சொன்னதோடு இந்த விவாதம் மேலும் வலுப்பெற தொடங்கி உள்ளது.

ஏற்கனவே 80 களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி காலத்திலேயே இப்படி ஒரு யோசனை முன்வைக்கப்பட்டு திருச்சியை தலைநகர் ஆக்க வேண்டும் என அதற்கான பணிகள் துவக்கப்பட்டது. 
திருச்சியை தலைநகரம் ஆக்கவெண்டும் என சொல்லப்பட்டதற்கு அது மாநிலத்தில் நடுநாயகமாக இருப்பதும் ஒரு காரணம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அரசு பணிகளுக்காக ஒருவர் சென்னை வரவேண்டும் என்றால் ஒரு வழி பயணமே 15 மணி நேரம் எடுத்தது (1980 ஆம் ஆண்டுகளில்)

ஒரு சாதாரண வேலைக்காக மூன்று நாட்கள் தேவைப்பட்டது.

எனவே திருச்சி என்றால் தூரம் குறையும். வடக்கே சென்னை, தெற்கே குமரி, மேற்கே கோவை, கிழக்கே நாகை என எந்த பகுதியில் இருந்தும் ஏழு மணி நேரத்தில் திருச்சியை அடையலாம் என்பது அதன் பிளஸ் பாய்ண்ட்.

ஆனால், என்ன காரணத்தாலோ, இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

இப்போது மீண்டும் துவங்கி இருக்கும் இரண்டாம் தலைநகர் விவாதம் திருச்சியை அல்லாமல் மதுரையை மையமாக வைத்து துவங்கி இருக்கிறது.
சமீபத்தில் அதிமுகவில் இரு அணிகளுக்காக மறைமுக பலப்பரீட்சை பனிப்போர் ஏற்பட்டதில் ஒரு அணியினர் தாங்கள் பலமாக இருக்கும் மதுரையை தலைநகரம் ஆக்கவேண்டும் என ஆரம்பித்து, அதனால் இந்த விவாதம் மீண்டும் கிளப்பியதாக சொல்கிறார்கள்.

ஆனால் தமிழகத்துக்கு உண்மையிலேயே இரண்டாம் தலைநகரம் தேவையா?

சென்னையில் அரசு துறை அலுவலகங்கள் பல்வேறு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன.

தலைமை செயலகம் காமராஜர் சாலையில் இருக்கிறது. சில அரசு துறைகள் ஓமந்தூரார் தோட்டத்தில். சிப்காட் கிண்டியில். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எழும்பூரில். நெடுஞ்சாலை துறை அடையாறில். இவை போல பல

இதனால் தொழில் ரீதியாக அரசு அலுவலகங்களுக்கு வருவோர் சென்னை முழுவதும் அங்கும் இங்குமாக அலைய வேண்டிய அல்லல் உள்ளது.

எனவே இதை தீர்க்கும் விதமாக, 

சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னைக்கு அருகில் துணை நகரம் ஏற்படுத்தி அங்கே அரசு அலுவலகங்கள் எல்லாம் அமைக்கலாம் என ஒரு யோசனை சொல்லப்பட்டது.

பின்னர் அந்த துணை நகர திட்டம் அரசு அலுவலகங்களுக்கு என்று அல்லாமல் பொதுவாகக் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த துணை நகரமாக மாற்றி வடிவமைக்கப்பட்டது.

கூடுவாஞ்சேரி, ஒரகடம், திருமழிசை, திருப்பெரும்புதூர் என பல இடங்கள் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் திருமழிசை முடிவானது. ஆனால் இன்னமும் பணிகள் தொடங்கவில்லை.

எல்லா அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைய வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்ற சமையத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அந்த கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்து, அதன் மினியேச்சர் வெர்ஷனாக, மாவட்ட அரசு அலுவலகங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

மாவட்ட தலைநகரில் இயங்கி வந்த அரசு அலுவலகங்களை நகருக்கு சற்று வெளியே எல்லா துறைகளுக்கும் ஒரே இடத்தில் அலுவலகங்கள் அமைத்து மாவட்ட நிர்வாகம் முழுவதையும் ஒரே இடத்தில் கொண்டு வந்தார்.

திருவள்ளூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இந்த "ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம்" எனும் முறை கொண்டு வரப்பட்டது. புதிய கட்டிடங்கள், நவீன தகவல் தொழில்நுட்ப ஏற்பாடுகள், மாநாட்டு கூடம் என அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தது என்பதால் மாவட்ட நிர்வாகம் விரைவாக முடிவுகள் எடுக்க முடிந்தது.

அரசின் தேவைகளுக்காக வரும் பொது மக்களுக்கும் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருப்பது வேலையை சீக்கிரம் முடிக்க உதவியது. அலைச்சலும் இல்லை.

இதன் அடுத்த வடிவம் தான் மாநிலத்துக்கு இரண்டாம் தலைநகர் கோரிக்கை. சென்னையில் நெரிசல் அதிகம் இருப்பதாலும், அரசு அலுவலகங்கள் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடப்பதாலும் வேறொரு நகரில், ஒரு புதிய தலைநகர் ஏற்படுத்தலாம் என்கிற யோசனை இப்போது கிளம்பி உள்ளது.
இது இப்போது அவசியமும் கூட. சென்னைக்கு வரும் மக்களில் தினசரி தேவைகளுக்காக வந்து செல்பவர்கள் தான் அதிகம். ஒரு நாளைக்கு 20 லட்சம் பேர் வரை அலுவலக விஷயமாக வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள். 

எனவே மதுரையில் அல்லது திருச்சியில் தலைநகர் கட்டமைப்பை ஏற்படுத்துவது நல்ல பலனை தரும்.

ஏற்கனவே உள்ள நகரத்தில் தலைநகரை ஏற்படுத்துவதை விட புதிதாக ஒரு இடத்தில் ஏற்படுத்துவது இன்னமும் நல்ல பலனை தரும் என்பது என்னுடைய கருத்து.

சமீபத்தில் ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி என ஒரு புதிய நகரமே நிர்மாணிக்க முடிவெடுத்தது போல, திருச்சி அருகில், உதாரணமாக பெரம்பலூர் பகுதியில் அல்லது விராலிமலை பகுதியில் ஒரு புதிய சிறு நகரமே ஏற்படுத்தி அங்கே அனைத்து அரசு அலுவலகங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புக்கள், அவர்களது பிள்ளைகளுக்கான கல்வி கூடங்கள் என அனைத்தும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைக்கலாம்.

மாநிலத்தில் உள்ள பிற நகரங்களில் இருந்து இணைப்பு சாலைகளும் அமைத்தால், சென்னை நெரிசலும் குறையும், தென்கோடி மக்கள் அரசு பணிகளை 6 மணி நேரத்துக்குள் வந்து முடிக்க முடியும், அனைத்து சேவைகளும் ஒருங்கே ஒரே இடத்தில் கிடைக்கவும் வழி செய்யும். அந்த பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கும் இது உதவும்.

தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகரம் என்பது அவசியமான யோசனை தான். ஆனால் அது எங்கே எப்படி செயல்படுத்த படுகிறது என்பதை பொறுத்தே அதன் பயன் இருக்கும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.








Friday, August 7, 2020

தமிழக ஈ-பாஸ் குழப்பங்கள்

கொரோனா பரவ ஆரம்பித்த நேரத்தில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டதால், மத்திய அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணிக்க ஈ-பாஸ் முறையை அறிமுகம் செய்தது.

அந்தந்த மாநிலத்தில் தனித்தனியாக அதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டு யார் யாருக்கு பயணிக்க தகுதி உள்ளதோ அவர்களுக்கு மட்டும் இணைய வழியே பாஸ் வழங்கப்பட்டு வருகிறது

ஈ-பாஸ் ஏன் வழங்கப்படுகிறது?

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இது தான் பொதுவான விதி. ஆனால் பின்னர் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பொழுது, அத்தியாவசிய தேவைகள், மருத்துவ அவசரம், திருமணம், மரணம், தொழில் என பல்வேறு காரணங்களுக்காக பலரும் மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க வேண்டி உள்ளது. அப்படி பயணிப்போர் மூலமாக அந்த இடத்தில் தொற்று பரவாமல் இருக்க, அல்லது அந்த இடத்தில் இருந்து, பயணிப்பவருக்கு தொற்று பரவாமல் இருக்க, அவரை கண்காணிக்க இந்த பாஸ் அவசியம் ஆகிறது.

யார் எங்கே இருந்து எங்கே என்ன காரணத்துக்காக சென்றார்கள் என்பதை வைத்து அவர்களை கண்டுபிடிப்பதும், எச்சரிப்பதும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. அதற்காக, பயணிப்பவரின் மொபைல் எண், அடையாள அட்டை ஈ-பாஸ் வாங்க கட்டாயமாக்கப்பட்டது.

இவை தவிர பிறர் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க அனுமதி இல்லை. 

யார் யாரெல்லாம் பயணிக்கலாம் என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அது அந்தந்த மாநிலத்தின் நோய் தொற்று பரவல், மாநிலத்தின் சமூக பொருளாதார நிலை ஆகியவை கவனத்தில் கொண்டு அந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளும்.

தமிழகத்தை பொறுத்தவரை, ஈ-பாஸ் வழங்க கொடுக்கப்பட்டு இருக்கும் தகுதிகளின் படி

நெருங்கிய உறவினர்களின் மரணம் - மரண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை

மருத்துவ அவசர சிகிச்சை - இதற்கு மருத்துவரின் பரிந்துரை, மருத்துவ ஆவணம் போன்றவற்றை நாம் இணைக்க வேண்டும். அவை அவசர சிகிச்சை எனில், உள்ளூரில் அந்த சிகிச்சை இல்லை குறிப்பிட்ட மருத்துவமனைக்கு தான் செல்லவேண்டும் எனில் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மாவட்டம் பயணிக்க வேண்டும் என்பதற்காக, சாதரண மருத்துவ பரிந்துரை ஆவணத்தை வைத்து அனுமதி கேட்பது போன்றவற்றுக்கு அனுமதி தருவதில்லை.

நெருங்கிய உறவினர் திருமணம் - திருமணத்தில் கலந்து கொள்ள 50 பேருக்கு அனுமதி உள்ளதால், அதற்காக வரும் நெருங்கிய உறவினர்களுக்கு ஈ-பாஸ் கொடுக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க திருமண அழைப்பிதழ் இணைக்க வேண்டும். நண்பர்கள், தூரத்து உறவினர்கள் போன்றோருக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை.  அதே போல சமையல், மேடை அலங்காரம், ஃபோட்டோகிராபர், இசைக்கச்சேரி செய்பவர் போன்ற திருமணம் தொடர்பான தொழில்கள் செய்வோர் திருமண பத்திரிகையை இணைத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கேட்டாலும் கொடுப்பதில்லை. 50 பேருக்கு மேல் ஆட்கள் கூட அனுமதி இல்லை என்பதாலும், இந்த தொழில்கள் உள்ளூர் மாவட்டத்திலேயே கிடைக்கும் சேவைகள் என்பதாலும் வெளிமாவட்ட ஆட்களுக்கு அனுமதி கொடுப்பதில்லை.

பத்திரப்பதிவு செய்ய உள்ளவர்கள் - பிறமாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டி இருந்தால், அதற்கான நேர ஒதுக்கீடடு அனுமதி கடிதம் இணைத்தால் ஈ-பாஸ் கிடைக்கும்

அரசு பணிகளுக்கு டெண்டர் எடுத்து அந்த பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தால், அந்த பணியை மேற்பார்வையிட செல்லும் நபர்களுக்கு அனுமதி உண்டு

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்தால் அவர்கள் வேலைக்கு வந்து செல்ல தொழிற்சாலை / தொழில் நிறுவனம் மூலமாக விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி உண்டு. தொழிலாளர்கள் நேரடியாக விண்ணப்பிப்பது பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டு விடுகிறது.

வேறொரு ஊரில் இருப்போர் சொந்த ஊருக்கு செல்ல - அடையாள அட்டைையில் குறிப்பிடப்பட்டு உள்ள விலாசத்துக்கு போவதற்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். அதாவது, அடையாள அட்டைப்படி தூத்துக்குடி விலாசம். சென்னையில் வேலை. சொந்த ஊருக்கு சென்று 'தங்க' Stranded Passengers Return முறையில் விண்ணப்பித்தால் கிடைக்கும். சென்னை விலாசம் கொண்ட அட்டையை வைத்து தூத்துக்குடி செல்ல இந்த காரணத்தை வைத்து விண்ணப்பித்தால் கிடைக்காது. மேலும் மேலே சொன்னபடி சென்னையில் இருந்து தூத்துக்குடி விலாசத்துக்கு முறையாக பாஸ் வாங்கி சென்ற ஒருவர், சில நாட்களில் மீண்டும் அங்கிருந்து சென்னைக்கோ வேறொரு ஊருக்கோ செல்ல விண்ணப்பித்தாலும் கிடைக்காது. ஏனெனில் Stranded Passenger Return மூலம் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வர மட்டுமே அனுமதி. 

விமானப்பயணம் செய்வோருக்கு உறுதியான விமான பயணச்சீட்டு இணைத்தால் பாஸ் வழங்கப்படும்.

இவை தான் தமிழகத்தை பொறுத்த வரை அனுமதிக்கப்பட்ட பயணங்கள்.  இந்த பாஸ் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதி உடைய விண்ணப்பங்கள் அங்கீகரிக்க ஒவ்வொரு மாவட்ட அட்சியர் அலுவலகத்திலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் விண்ணப்பங்களை பரிசீலித்து அனுமதி கொடுப்பார். 

முன்பு எந்த மாவட்டத்தில் இருந்து புறப்படுகிறீர்களோ அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தான் அனுமதி கொடுத்து வந்தது. ஆனால் அதில் சில முறைகேடுகள், பலரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் போய் அதிகாரியை அணுகி தகுதியற்ற விண்ணப்பங்களுக்குக் கூட அனுமதி வாங்கிய நிகழ்வுகள் நடந்ததாக சொல்லப்பட்டதை தொடர்ந்து, பாஸ் வழங்கும் அதிகாரம் சேரும் ஊரின் ஆட்சியர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.

இதன் மூலம் பாஸ்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.

உதாரணமாக மதுரை மாவட்டத்தில் ஒரு திருமணம் என வைத்து கொள்வோம். வேலூர், கோவை, நெல்லை, சேலம் மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தால் முன்பு அந்தந்த மாவட்டங்களில் அனுமதி கொடுத்ததால் எல்லோருக்கும் கிடைத்தது. இப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தான் அனுமதி கொடுக்கும் என்பதால் எல்லா விண்ணப்பமும் ஒரே அதிகாரி பரிசீலித்து 50 பேர் எண்ணிக்கை, நெருங்கிய உறவினர் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அனுமதி கொடுப்பார். குறிப்பிட்ட திருமண நிகழ்வுக்கு எத்தனை பேர் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள் என்பது ஒரே இடத்தில் டிராக் செய்யப்படும். 

திருமணம் என்பது உதாரணத்துக்கு சொன்னது, எல்லா காரணங்களுக்கும் சேருமிடத்து ஆட்சியர் அலுவலகம் முடிவு எடுப்பதால் அவர்களால் தெளிவாக எதை அனுமதிக்கலாம் எதை நிராகரிக்கலாம் என முடிவு எடுக்க முடிகிறது

இவை தவிர விண்ணப்பத்தில் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் இருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மத்திய அரசின் உத்தரவுப்படி 10 வயதுக்கு குறைவான குழந்த்கைகள் வீட்டை விட்டு (மருத்துவ காரணங்கள் தவிர) வெளியே வர அனுமதி இல்லை.

வாகன அடிப்படையிலும் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகம் நிராகரிக்கிறது. சிறிய கார் எனில் 3 பேர், பெரிய கார் எனில் 5 பேர் தான் அனுமதி. அதை விட கூடுதலாக ஆட்கள் இருந்தால், அல்லது பயணகளில் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர் இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், காவல் துறை, அரசு அதிகாரிகள் போன்றோருக்கு பாஸ் தேவை இல்லை. அவர்களுக்கு சிறப்பு விதி விலக்குகள் உள்ளன. நோய் தொற்று நடவடிக்கை, பொது மக்களுடனான சந்திப்பு, மீட்பு நடவடிக்கைகள் ஆகிய காரணங்களுக்காக அவர்கள் தினசரி மாநிலம் முழுவதும் பயணிக்க அவசியம் இருப்பதால் இந்த விலக்கு.

இதற்கிடையில் சில தனியார் வாகன ஓட்டுனர்கள், தரகர்கள் ஆகியோர் பாஸ் வாங்கி கொடுப்பதாக பணம் வசூலிப்பதும் நடைபெற்றது. அப்படி விளம்பரம் செய்த சிலர் கைதும் செய்யப்பட்டு உள்ளார்கள். 

நாமாக விண்ணப்பிக்கும் பொழுது நம்மை அறியாமல் நிகழும் தவறுகள், மேலும் பலருக்கு விண்ணப்பிக்க தெரியாதது ஆகிய காரணங்களால் ஏஜெண்டுகள் விண்ணப்பித்து கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் விண்ணப்பித்தால் மட்டும் தான் கிடைக்கும் என்பது உண்மை அல்ல.

சராசரியாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தினசரி 2000 பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் 3000 பாஸ்கள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பாஸ்கள் எல்லாம் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பெறப்படுபவை. விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் உள்ள ஏஜெண்டுகள் வாகன ஓட்டுனர்கள் எல்லோரும் இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பததை
 அங்கீகரிக்க வைக்கிறார்கள் என்பதோ, ஒரு மாவட்டத்தில் உள்ள ஏஜெண்டுகள், வாகன ஓட்டுனர்கள் எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தலையிட்டு பாஸ் வாங்குகின்றனர் என்பதோ நடைமுறையில் சாத்தியமற்றது என்பது சற்றே யோசித்து பார்த்தால் தெரியும். அங்கொன்றம்
 இங்கொன்றுமாக சில நடந்து இருக்கலாம். அவ்வளவே. மற்றபடி ஒரு மாவட்டத்தில் 500 வாகன ஓட்டிகள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் எல்லா மாவட்டத்திலும் பாஸ் வாங்க ஆட்கள் வைத்து சாதிக்க முடியும் என்பது எதார்த்தம் அல்ல.

சமீபத்தில் சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னைக்கு வருவதற்கும், சென்னையில் இருந்து போவதற்கும் அத்தியாவசிய காரணங்கள் இல்லாத விண்ணப்பங்களை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது. நோய் தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை. 

பிற மாவட்ட பயணங்களை பொறுத்தவரை, உதாரணமாக கோவை - நெல்லை, திருவண்ணாமலை - தூத்துக்குடி பொன்றவை, மேலே சொன்ன அனுமதிக்க பட்ட காரணங்களுக்காக கேட்கும் பாஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளுக்கு செல்ல அனுமதி இல்லை.

இப்போது ஈ-பாஸ் முறை தேவையா?

கடந்த 29.06.2020 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது மக்கள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது எனவும் ஈ-பாஸ் முறை தேவை இல்லை எனவும் மாநிலங்களுக்கு உத்தரவு இட்டிருந்தது.

ஆனாலும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் அதை அமல் செய்யவில்லை.
மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் 29.07.2020 அன்று அதே உத்தரவை வலியுறுத்தியது. இதன் பின் சில மாநிலங்கள் ஈ-பாஸ் முறையை நீக்கி விட்டன என்றாலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஈ-பாஸ் முறை தொடர்கிறது.

தினசரி 5000 க்கும் மேல் புதிய நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், மாவட்ட அளவில் மக்களை கட்டுப்படுத்தி வைப்பது இப்போது அவசியம் என்பதாலும், அத்தியாவசிய தேவைக்கான சிலர் மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்பதாலும் இந்த பாஸ் முறை தமிழகத்தில் தொடர்கிறது.

இது ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான், எனினும் சில தளர்வுகளை அளிக்கலாம் என பலரும் வேண்டுகோள் வைத்து உள்ளார்கள்

உதாரணமாக தொழில் துறையினர் தங்கள் தொழில் காரணமாக பொருட்கள் வாங்க, இயந்திரங்கள் பரிசோதிக்க, செர்வீஸ் செய்ய, கிளையண்ட் கம்பெனிகளை ஆய்வு செய்ய என பல விஷயங்களுக்கு பயணிக்க வெண்டி உள்ளது. இவை எல்லாம் ஒன்றிரண்டு நாள் பயணங்கள் தான்.

எனவே கேரளாவில் உள்ளதை போல Short Visit / Regular Visit பாஸ்களை தமிழகமும் அனுமதிக்கலாம். 

அதாவது சிவகங்கையிலிருந்து தொழில் நிமித்தமாக திருச்சி வந்து செல்வோர், ஈரோட்டில் இருந்து கோவைக்கு கொள்முதல் செய்ய வந்து செல்வோர் போன்றவர்களுக்கு அந்த நாளே திரும்ப வர பாஸ் தரலாம். 

கேரளாவிற்கு 8 நாட்கள் வரை சென்று தங்கி திரும்பி வர ஷார்ட் விசிட் பாஸ் உள்ளது. அது போல தமிழகத்திலும் மாவட்டம் விட்டு மாவட்டம் குறைந்தது 4 நாட்கள் தங்கி வர பாஸ் வழங்கலம்
.
தினசரி ஒரே ரூட்டில் சென்று வருவோருக்கு ரெகுலர் பாஸ் வழங்கலாம் என்று எல்லாம் கோரிக்கைகள் உள்ளன.

ஆனால் மக்கள் (பாஸ் வாங்கியும், பாஸ் இல்லாமலும்) பயணித்து கொண்டே இருப்பதால் தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அரசு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்குமா என்று தெரியவில்லை.

அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுனர்கள் தமிழகத்தின் நோய்த்தொற்று நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதித்தாலும், பொருளாதார சமூக தொழில் நிலைமைகளை கருத்தில் கொண்டு சில தளர்வுகளை கொடுப்பதில் தவறு இல்லை என்றே நினைக்கிறேன்.

Monday, August 3, 2020

புதிய தேசிய கல்வி கொள்கை

த்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் கொடுத்த நிமிடத்தில் இருந்து தொடங்கியது வாதப்பிரதி வாத யுத்தம்.

இந்த கொள்கையை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என தமிழக எதிர் கட்சிகளும், ஆதரிக்க வேண்டும் என பாஜக ஆதரவு இயக்கங்களும் குரல் கொடுத்து கொண்டு இருக்க, தமிழக அரசோ வழக்கம் போல மௌனம் காத்து வந்தது.

இன்றைக்கு தமிழக அரசு கூட்டிய ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் எனவும் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் எனவும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எல்லா எதிர்கட்சிகளும் பாராட்டை தெரிவித்தன.

இதோடு நில்லாமல், புதிய தேசிய கல்வி கொள்கையை விரிவாக ஆராய ஒரு குழு அமைக்கப்படும் எனவும், அவர்களது பரிந்துரையின் பேரில், தமிழக அரசு மற்ற விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதில் யோசிக்க எதுவுமில்லை. உடனடியாக புதிய தேசிய கல்வி கொள்கையை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். குழு அமைத்து ஆராய்வது எல்லாம் காலம் கடத்தும் வேலை என்கிற விமர்சனமும் எழ தொடங்கி உள்ளது.

உண்மையில் அந்த கொள்கை முற்றிலுமாக எதிர்க்கப்பட வேண்டியதா? ஆதரிக்க வேண்டிய ஒன்றா?

அரசியல் நிலைப்பாடுகளை எல்லாம் புறம் தள்ளி வைத்து மாணவர்கள் நலன் என்கிற பார்வையில் இதை நான் பார்க்க விரும்புகிறேன்.

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கி வருகிறது. மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கு தேவையான உதவிகள், எளிய சிறப்பான பாட திட்டம், செயல் வழி கற்றல், பள்ளிகளில் உட்கட்டமைப்பு, கிராமங்கள் வரை பள்ளிகளின் வீச்சு, தாலுக்கா தோறும் கல்லூரிகள் என பலமான வலை பின்னலையும், சமூக நல திட்டங்களையும் கொண்டு கல்வியில் நம் மாணவர்களை முன்னேற செய்கிறோம்.

தமிழகத்தில் GER 49% ஆக இருக்க கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசு எடுத்து வந்த பல்வேறு திட்டங்கள் தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

இன்னொரு புறம் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் போதுமான கல்வி கட்டமைப்பை ஏற்படுத்தாத காரணத்தால், அங்குள்ள மாணவர்கள் சரியான கல்வியை கற்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி என்பது இப்போதும் எட்டா கனி தான்.

இந்த நிலையை மாற்றி எல்லா மாநிலத்திலும் எல்லா மாணவர்களுக்கும் சரியான கல்வி, எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவக்கூடிய கல்வி கொடுப்பதற்கான கொள்கையை வகுக்க குழு அமைக்கப்பட்டு, எல்லா மாநிலத்திலும் இப்போது உள்ள கல்வி முறையையும் உலகின் மற்ற நாடுகளில் உள்ள கல்வி முறையையும் ஆராய்ந்து, இந்திய சூழலுக்கு, நம் நாட்டின் பொருளாதார சமூக கட்டமைப்புக்கு உகந்த முறையில் கல்வியை கொடுப்பதற்கான கொள்கை வகுக்கப்பட்டது.

அப்படி வகுக்கப்பட்ட கொள்கையின் வரைவு மாதிரியை கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்டது அரசு. அதில் உள்ள நிறை குறைகளை தேசம் முழுவதும் உள்ள வல்லுனர்கள் ஆராய்ந்து அவர்களது கருத்துக்களை திருத்தங்களை எல்லாம் அரசுக்கு அனுப்பினார்கள். பல அரசியல் தலைவர்கள் கூட தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இவைகளை எல்லாம் மீண்டும் ஆராய்ந்து, திருத்தப்பட்ட கொள்கை 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போதும் பெரும் விவாதம் நடந்து மீண்டும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி கொள்கை கடந்த மாதம் வெளியானது.

மத்திய அரசு அந்த கொள்கையை ஏற்றுக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தது.

62 பக்க கொள்கை விளக்க அறிக்கை அரசு இணைய தளத்திலும் வெளியிடப் பட்டது.

இதிலே ஏற்கனவே சொன்னது போல கல்வியை பரவலாக்க, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேண, எதிர்காலத்தில் தொழில் தொடர்பான அறிவை பெற என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தின் வெற்றிகரமான திட்டங்களான மதிய உணவு & காலை உணவு திட்டத்தை, ஓராசியர் பள்ளி முறையை, செயல் வழி கற்றல் திட்டம் போன்றவற்றை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவு செய்வது இதில் பரிந்துரைக்க பட்டு உள்ளது.

இது தவிர கல்வி சுமையை குறைக்கும் நோக்கில், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழி / பிராந்திய மொழி வழி கல்வி கற்பிக்க வேண்டும் எனவும் ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்து உள்ளது.

குழந்தைகள் மழலையில் வேறொரு மொழியை கற்க தொடங்குவதில் உள்ள சிரமம், கிராமப்புற ஏழை பெற்றோரால் ஆங்கிலம் கற்பித்து கொடுக்க முடியாமல் இருக்கக் கூடிய சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டால், தாய்மொழி வழிக் கல்வியை அவர்களால் கற்று கொடுக்க முடியும் என்பதையும் மனதில் வைத்து பார்த்தால் இது நல்ல விஷயமாக எனக்கு படுகிறது.

அதற்காக ஆங்கிலம் இல்லாமல் போகாது. ஆங்கிலம் ஒரு மொழி பாடமாக ஆரம்பத்தில் இருந்தே இருக்கும். ஆனால் அடிப்படை விஷயங்கள் தாய் மொழி / பிராந்திய மொழியில் இருக்கும். இதனால் குழந்தைகள் பாடத்தை படிப்பது / புரிந்து கொள்வது எளிமையாக இருக்கக்கூடும்.

மேலும் தாய்மொழி வழி கல்வியில் அறிவியல் கணிதம் ஆகியவை படிக்கும்போது குழ்ஹந்தைகளுக்கு குழப்பம் வராமல் இருப்பதற்காக Bi-Lingual பாடம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது, நம்ம சுஜாதா அவர்க்ள் சொன்னதை போல கலைஞர் அவர்கள் சொன்னதை போல, எல்லாவற்றையும் தமிழாக்கம் செய்யாமல் சிலவற்றை ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்கிறது புதிய கொள்கை. 

Sulphuric Acid என்பதை கந்தகிஜ அமிலம் என படிக்காமல் Sulphuric Acid என்றே படிக்க வைப்பது மாணவர்களுக்கு எளிமையாக புரிய வைக்கும்.

நான் அதிகம் மகிழ்ந்தது, சைகை மொழி (ISL) இப்போது வெவ்வேறு வகைகளில் உள்ளதை மாற்றி நாடு முழுமைக்கும் ஒரே மாதிரி சைகை மொழி கல்வி கொண்டு வரப்படுகிறது. இது மிகப்பெரிய சீர் திருத்தம்.

ஆறாம் வகுப்புக்கு மேல் ஆங்கில வழி கல்வி, கணினி கல்வி, தொழிற்கல்வி ஆகியவையும் கற்பிக்கப்படும்.

மும்மொழி கொள்கை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதாவது பிராந்திய மொழி, ஆங்கிலம், அதனுடன் இந்தி / சமஸ்கிருதம். அதாவது இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் இந்தி மூன்றாம் மொழியாகவும், இந்தி தாய்மொழி ஆக உள்ள மாநிலங்களில் இந்தி & ஆங்கிலத்துக்கு அடுத்த படியாக சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாகவும் இருக்கும்.

இந்த மும்மொழி கொள்கையை தான் தமிழக அரசு இன்றைக்கு ஏற்க முடியாது என சொல்லி இருக்கிறது.

தமிழகத்தில் எப்போதும் போல தமிழ் & ஆங்கிலம் ஆகிய இரு மொழி கொள்கையே தொடரும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

புதிய கல்வி கொள்கை, இந்த மும்மொழி திட்டம் தவிர தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளில் இரண்டை எல்லா மாநிலத்திலும் துணை மொழியாக பரிந்துரை செய்து உள்ளது. அதாவது எல்லா மாணவர்களும் ஏதேனும் ஒரு இந்திய செம்மொழி அறிந்து இருக்க வேண்டும். இது தமிழை, தமிழ் பொன்ற பிற செம்மொழிகளை மேலும் பல மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கும் வழியாக நான் பார்க்கிறேன். 

முறையான பள்ளிக்கூட கட்டமைப்பு இல்லாத கிராமங்களில் புறநகர் பகுதிகளில் ஆசிரியரிடம் சென்று பாடம் கற்கும் "குருகுல" கல்வி முறை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பரவலாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கும் குருகுல முறை போலல்லாமல், தமிழகம் முன்பு அமல் செய்த "ஓராசிரியர்" பள்ளி முறை போல இது இயங்கும் என நான் கருதுகிறேன். (குரு=ஆசிரியர், குலம்=வீடு)

ஒரு சிறு கிராமத்தில் குறைந்த அளவில் மாணவர்கள் இருந்து அனைவரும் வெவ்வேறு வகுப்பில் கல்வி கற்பவர் ஆக இருந்தால், அங்கே பள்ளிக்கூடம் எனும் கட்டமைப்பு இல்லாவிட்டால், இது போல ஓராசிரியர் பள்ளி முறையில் எல்லோருக்கும் பாடம் சொல்லி தந்து கல்வியை புகட்டலாம் என்பது கூட இதன் நோக்கமாக இருக்க கூடும்.

பள்ளிக்கூடத்தில் நவீன தொழில் நுட்ப உதவியுடன், செயல் முறை மூலமான கல்வி கற்பிக்க பரிந்துரைத்து உள்ளது இந்த கொள்கை. ஆறாம் வகுப்பில் இருந்தே கணினி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார காரணங்களுக்காக கல்வியை இடையிலே விட்டு விட கூடாது என்பதற்காக சிறப்பு ஊக்க தொகை திட்டம், நிதி உதவி திட்டம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

மிக மிக முக்கியமாக ஏழை மாணவர்கள் எல்லோரும கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்டு உள்ளது.

இவை எல்லாம் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் எதிர்காலத்தில் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாக்கக் கூடும்.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த கல்வி தகுதி இருக்க வேண்டும் என வரையறை செய்யப்பட்டு உள்ளது. இப்போது ஆரம்ப பாட சாலைகளில் போதுமான கல்வி தகுதி அல்லது பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் வைத்து பாடம் நடத்தும் முறையை இதன் மூலம் தவிர்க்கலாம்.

உடற்கல்வி, விளையாட்டு என நிறைய விஷயங்களை இந்த கல்வி கொள்கை முன்வைக்கிறது.

இவை எல்லாமே வெறும் கொள்கைகள் தான். 
இந்த கொள்கைகளில் எதை ஏற்பது, எதை புறக்கணிப்பது என்பதை மாநிலங்கள் தீர்மானிக்கும். பாடங்கள் முடிவு செய்வது, புத்தகங்கள் தயாரிப்பது என அனைத்தும் மாநிலங்கள தான் செய்யும். ஆனால் அவை இந்த புதிய கல்வி கொள்கையின் படி இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

அதாவது என்ன பாடம் என்பதை மாநிலம் முடிவு செய்யும். ஆனால் அது செயல்வழி கல்வி, நவீன தொழில்நுட்ப வழியிலான கற்பித்தல், போன்ற கொள்கைகளின் அடிப்படையில் சொல்லி தரப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் தமிழக அரசு இன்றைக்கு, முதல் விஷயமாக, மும்மொழி கொள்கையை ஏற்பதில்லை. இரு மொழி கொள்கை தொடரும் என சொல்லி உள்ளது. மற்ற விஷயங்களில் எதை ஏற்பது எதை மறுப்பது என்பது வல்லுநர் குழு ஆராய்ந்து முடிவு செய்யும்.

இந்த கல்வி கொள்கையில் பல பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் பல தவறான பரிந்துரைகளும் உள்ளன.

மறைமுகமாக திணிக்கப்படும் இந்தி/சமஸ்கிருத மொழிகள், குலக்கல்வி போர்வையில் உள் நுழையும் மனு தர்மம், மூன்றாம் வகுப்பு குழந்தைக்கு பொது தேர்வு, உயர் கல்விக்கு நுழைவு தேர்வு என நாம் எதிர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய  இருக்கின்றன.

தமிழக அரசு அமைக்கும் வல்லுநர் குழு இவை எல்லாம் பற்றி விரிவாக ஆராய்ந்து முடிவை சொல்லும் என நினைக்கிறேன்.

எப்படி ஆயினும் இந்த கொள்கை அமல் ஆக 2025 ஆம் ஆண்டு ஆகலாம். 2030 ஆம் ஆண்டு கல்வி எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கு நோக்கி இது அமலாகும்

கொள்கை அறிவிப்பின் கடைசியில் இதை அமல் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் விரிவாக சொல்லப்பட்டு உள்ளன. அதன் படி இது அமலாக்க குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்

அதற்கு முன்பாக நாம் இதை விரிவாக ஆராய்ந்து தமிழகத்தில் எது தேவை எது தேவை இல்லை என முடிவு செய்து கொள்ள முடியும்

தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்கள், குறிப்பாக வட மாநிலங்கள் இந்த புதிய கல்வி கொள்கையால் நிச்சயம் நல்ல பலன் அடையும் என நம்புகிறேன். எல்லா ஊரிலும், மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்க இது வழி செய்யும்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என.

Printfriendly