Tuesday, February 2, 2021

பட்ஜெட் 2021 - GST திருத்தங்கள்

இந்திய அரசின் பட்ஜெட் 2021 நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் GST தொடர்பான சில சட்ட திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான திருத்தங்களை குறித்து சுருக்கமாக பார்ப்போம்

Section 16(2)(aa)

இந்த புதிய விதிப்படி, பொருளை விற்பனை செய்த / சேவையை வழங்கிய நிறுவனம் தனது பில்லை GST இணைய தளத்தில் GSTR 1 ரிட்டர்ன் தாக்கல் செய்து அது வாங்கியவரின் GSTR 2A படிவத்தில் வெளியானால் மட்டுமே வாங்கியவர் Input Tax Credit (ITC) எடுக்க முடியும்

இது வரை, அப்படி GSTR 2A வில் வராவிட்டாலும் அவரது கொள்முதல் படிவம் (Purchase Register) அடிப்படையில் ITC எடுத்து வந்தனர்.

பின்னர் Rule 36(4) எனும் புது விதி கொண்டு வரப்பட்டு GSTR 2A வில் உள்ள ITC உடன் கூடுதலாக 5% ITC எடுத்து கொள்ள அனுமதிக்கப் பட்டு இருந்தது

இனி மேல் GSTR 2A வில் இருந்தால் மட்டுமே ITC எடுக்க முடியும்
இது வாங்கியவர் மீது கூடுதல் சுமையை ஏற்றும். விற்பனை செய்தவர் ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் வாங்கியவர் ITC எடுக்க முடியாது. தன்னிடம் சட்டப் பூர்வமாக அனைத்து ஆவணங்கள் இருந்தாலும் ITC எடுக்க முடியாமல் பணமாக வரியை கட்ட வேண்டி வரும். அவரது Working Capital அடி வாங்கும்

மேலும் இருக்கிற வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து, தனக்கு விற்பனை செய்தவர் ரிட்டர்ன் தாக்கல் செய்து விட்டாரா இல்லையா என தினமும் கண்காணித்து வரவேண்டும். அவரை ரிட்டர்ன் தாக்கல் செய்ய சொல்லி நினைவுறுத்தும் கடிதங்கள் அனுப்ப வேண்டும். இப்படி எல்லாம் மெனக்கெட்டு அவர் ரிட்டர்ன் தாக்கல் செய்தால் தான் ITC கிடைக்கும். அவர் தாக்கல் செய்ய தாமதிக்கும் காலம் வரை வாங்கியவர்களுக்கு சிக்கல் தான்.

ஒரு நிறுவனத்துக்கு 50 பேர்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் வாங்கினால் அந்த 50 பேரையும் கண்காணிக்க வேண்டும்

பெரு நிறுவனங்கள் நிலை இதை விட மோசம். அவர்கள் ஆயிரக்கணக்கான நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் பெறுகிறார்கள். அத்தனை பேரின் ரிட்டர்ன் தாக்கல் நிலவரத்தை இனி கண்காணிக்க வேண்டும்.

முறையாக ரிட்டர்ன் தாக்கல் செய்யாத விற்பனையாளர்கள் மேற்கொண்டு தங்களுக்கு வியாபாரம் நடக்காது என்கிற நிலைக்கு வரக்கூடும். பெரு நிறுவனங்கள் அப்படி பட்ட வரி தாக்கல் தாமதிக்கும் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் / சேவைகள் பெறுவதை நிறுத்தி கொள்ள கூடும்

சிறு நிறுவனங்கள், ஒரு மாதத்தில் விற்பனை செய்த அனைத்து பொருட்களுக்கும் உரிய வரியை 20 நாளுக்குள் அரசிடம் கட்ட வேண்டும் என்கிற நிலையை பார்த்தால் நிதி பற்றாக்குறை, விற்பனை செய்யப்பட்டதற்கான தொகை 60 நாட்களுக்கு பிறகு கிடைப்பது, அதனால் வரி கட்ட வாங்க வேண்டிய கடன் என தொழிலின் முக்கிய தேவையான உற்பத்திக்கு தேவையான working capital கிடைக்காமல் வரியை மட்டுமே கட்டி கொண்டு இருக்க நேரும். 

எந்த ஒரு நிறுவனம், தனது வாடிக்கையாளர் பணம் தரும் வரை தனது சொந்த காசை போட்டு வரி கட்டி வரும் அளவுக்கு நிதி நிலை ஆதாரம் கொண்டு இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே இனி தாக்கு பிடிக்க முடியும்.

Section 35(5) நீக்கம் & Section 44 திருத்தம்

இதன் படி ஒவ்வொரு ஆண்டும் Annual Return ஐ ஆடிட்டர்களிடம் கொடுத்து certify செய்து வாங்கி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இனி இல்லை. 

அவரவர் கணக்கை அவரவர்களே சரிபார்த்து Self Assessment முறையில் தாக்கல் செய்தால் போதும்

இது மிக மிக நல்ல முடிவு. ஆடிட்டர்களின் தேவையற்ற கெடுபிடிகள், வியாபாரத்தை / உற்பத்தியை சரிவர புரிந்து கொள்ளாமல் ஆடிட்டர்கள் அவர்களாக கற்பிதம் செய்து கொண்டு கேட்கும் கேள்விகளுக்கான விடை தேடல்கள், ஆடிட்டர்களுக்கு கொடுக்கவேண்டிய மிக அதிகமான கட்டணம் ஆகிய அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை

அவரவர் தொழிலை நன்றாக புரிந்து வைத்து இருப்பதால் அது குறித்த தகவல்களை அவர்களே இனி தாக்கல் செய்யலாம் 

Section 50 திருத்தம்

இது வரை வட்டி கட்டும் போது மொத்த தொகைக்கும் வட்டி கட்ட வேண்டும் என்று இருந்ததை திருத்தி இனி நிகர தொகைக்கு மட்டும் வட்டி காட்டினால் போதும் என்று மாற்றப்பட்டு உள்ளது. இதுவும் நல்ல முடிவே

உதாரணமாக:

கட்ட வேண்டிய வரி ₹1,000/-
ITC இருப்பு ₹800
பாக்கி ₹200

என இருந்தால் இதுவரை ₹1,000/- க்கு வட்டி வாங்கி வந்தார்கள். இனிமேல் ₹200/- க்கு கட்டினால் போதும்

Section 107(6)

வாகனங்களை விடுவிக்க தொடுக்கும் வழக்கு அப்பீல் செய்யும் போது இனி பெனால்டி தொகையில் 25% முன்பணமாக கட்டினால் தான் அப்பீல் செய்ய முடியும்

Section 129 திருத்தம்

வாகனங்களை அரசு சோதனைக்காக நிறுத்தி அதில் குறைகள் இருப்பதாக நோட்டீஸ் கொடுத்தால், நாம் அடைக்கவேண்டிய வரியுடன் 200% கூடுதல் பெனால்டி சேர்த்து அடைத்தால் தான் இனி வாகனத்தை விடுவிக்க முடியும்.

உதாரணம்:

வாகனத்தில் உள்ள பொருளின் மதிப்பு - ₹10,00,000/- எனில்

அந்த பொருளுக்கான 18% வரி - 1,80,000/-
பெனால்டி (வரியின் 200%) - 3,60,000/-

என மொத்தமாக ₹3,60,000/- செலுத்தினால் தான் வண்டி விடுவிக்கப்படும்.

அதிலும் முன்னெல்லாம் ₹3,60,000/- க்கு Bank Guarantee கொடுத்தால் போதும். ஆனால் இப்போது ₹3,60,000/- மொத்தமாக வங்கியில் செலுத்தி சலாண் காட்ட வேண்டும். அப்போது தான் விடுவிக்கப்படும்.

ஒரு வேளை 7 நாட்களுக்குள் நாம் பெனால்டி அடைக்க முன் வராவிட்டால்

பொருளின் மதிப்பில் 50% - ₹5,00,000/-
அல்லது
வரியின் மதிப்பில் 200% - ₹3,60,000/-
இதில் எது அதிகமோ அதை செலுத்தினால் தான் (₹5,00,000/-) வண்டி விடுவிக்கப்படும்

சிறு பிழைகள், கணக்கீடுகள் ஏற்படும் சிறு தவறுகள் ஆகியவை கூட இப்படியான பெரும் தொகையை கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படும்.
EWB எனப்படும் வழி கடவு சீட்டு காலாவதி ஆனால் கூட பெனால்டி அடைக்க வேண்டும்.

எல்லா டாக்குமெண்ட் சரியா இருந்தாலும் EWB தயாரிக்கும் போது சிறு பிழைகள் ஏற்பட்டால் கூட இந்த அளவு பெனால்டி அடைக்க வேண்டி இருக்கும்

எனவே டாகுமெண்ட் தயாரிக்கும் போதும், அதில் கையெழுத்து இட்டு கொடுத்து அனுப்பும் போதும் முழுமையாக சரி பார்த்து விடுவது நல்லது.

Section 130 திருத்தம்

நிறுத்தி வைக்கப்பட்ட வண்டிக்கு 7 நாட்களுக்குள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், அந்த நோட்டீஸ் கொடுத்த 7 நாட்களுக்குள் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று நேர வரையறை செய்யப்பட்டு உள்ளது. இது வரை பல நாட்கள் எந்த நடவடிக்கையும் இல்லாமல் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.

மேலும், நோட்டீஸ் கொடுத்து 15 நாட்கள் வரை பொருளின் உரிமையாளர் பெனால்டி கட்டவில்லை என்றால் அந்த பொருளை விற்று பெனால்டி தொகையை எடுத்து கொள்ள அரசுக்கு இப்போது அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

வண்டியை 15 நாள் கழித்து விடுவித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு லாரி உரிமையாளர் ₹1 லட்சம் வரை செலுத்த வேண்டும்.

அதாவது பொருளின் உரிமையாளர் தவறு செய்தாலோ, அரசு அதிகாரி தனது தவறான புரிதல்கள் காரணமாகவோ வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டால், பொருளின் உரிமையாளர் பெனால்டி கட்டாத பட்சத்தில் லாரி உரிமையாளர் ₹1 லட்சம் கட்டி தான் வண்டியை எடுக்க முடியும். அதுவும் 22 நாட்கள் கழித்து.

இது லாரி தொழிலை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

IGST Section 16 திருத்தம்

SEZ எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் '0%' வரி என்று இருந்ததை திருத்தி அந்த SEZ நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட உற்பத்திக்கு தேவையான பொருட்களுக்கு மட்டுமே இனி Zero Rated Supply செய்ய முடியும். 

இனி SEZ க்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள், தாங்கள் சப்ளை செய்யும் பொருட்கள் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்திக்கு தான் போகிறதா என பார்த்து போகிறது என்றால் 0% வரியிலும் இல்லை என்றால் முழு வரியிலும் விற்பனை செய்ய வேண்டும்

இது SEZ க்கு supply செய்யும் ஆர்வத்தை குறித்து விடும். 

ஏற்கனவே SEZ நிறுவனங்களுக்கு கிடைத்து வந்த வருமான வரி சலுகை பரிக்கபப்ட்ட நிலையில் இது போன்ற கெடுபிடிகளும் சேர்ந்தால் SEZ அமைப்பதே வீண் என்று ஆகி விடும்.

****

மறைமுக வரிகள் எனப்படும் Indirect Taxes ஐ பொறுத்த வரை இந்த பட்ஜெட் ஓரளவு நல்ல பட்ஜெட் என்றே நினைக்கிறேன்.

பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் அவை எல்லாம் வரி செலுத்தும் வழக்கத்தை முறைப்படுத்தும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்

இப்போதைய திருத்தங்கள் விற்பனை செய்வோர் முறையாக வரி செலுத்தவும் வாங்குவோர் அதை கண்காணித்து ITC எடுக்கவும் பொருட்களை அனுப்பும் பொது கொடுக்கப்படும் ஆவணங்கள் பிழை இல்லாமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட முயற்சி என்றே நான் பார்க்கிறேன்

ஒரு Honest Tax Paying Culture உருவாக்க இப்படியான கடுமையான சட்ட திருத்தங்கள் தேவை என்றாலும், நமது அரசு அதிகாரிகளின் மன நிலை, நோக்கம் என்ன என்பதை கால காலமாக புரிந்த நமக்கு அவர்கள் இதை வைத்து இன்னும் என்னென்ன வகையில் தொழில் துறையினரை அவதிக்கு உள்ளாக்குவார்கள் என்று யோசிக்கும் போது அச்சமாக தான் இருக்கிறது

தொழில் முனைவோர் எல்லோரும் தவறு செய்பவர்கள், அரசு அதிகாரிகள் எல்லோரும் அதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக நியமனம் ஆகி உள்ளவர்கள் என்கிற மன நிலை அரசு அதிகாரிகளிடம் இருக்கும் வரையில் இப்படியான சட்ட திருத்தங்கள் அதன் உண்மையான நோக்கத்தை அடைவது கஷ்டமே.




No comments:

Post a Comment

Printfriendly