நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் தொடங்குவதாக அறிவித்தது சரி தான்.
மற்ற மாநிலத்தில் தேர்தல் வாக்கு பதிவு இன்னமும் மிச்சம் இருக்கும் போது இன்னொரு மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியானால் அது மிச்சம் இருக்கும் வாக்கு பதிவை மக்களின் மன நிலையை மாற்றும் என்பதால் எல்லா வாக்கு பதிவுகளும் முடிந்த பிறகு ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இது கால காலமாக நடக்கும் ஒன்றே.
ஆனால் இது போன்ற சமயங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் மாநிலத்தில் வாக்குப்பதிவை முதலில் நடத்தாமல் இறுதி கட்டத்தில் நடத்தினால் காத்திருக்கும் நேரம் குறைவாகும். அதாவது மற்ற மாநிலங்களில் இறுதி கட்ட வாக்கு பதிவு நடக்கும் நாளில் தமிழ் நாட்டில் வாக்கு பதிவு வைத்து இருந்து இருக்கலாம்.
தேர்தல் ஆணையம் அது போல செய்யாமல் முதலில் தமிழகத்தில் வைத்து காத்திருக்க வைப்பது தேவையற்றது.
***
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
கிராம சபை கூட்டங்கள் வாயிலாக திமுக கிட்டத்தட்ட அனைத்து மாவட்டஙகளிலும் ஒரு சுற்று பிரச்சாரத்தை முடித்து விட்டது. திமுக தரப்பில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, என பலரும் சுற்று பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தனர்
அதிமுகவின் ஒரே பிரச்சாரகர் ஆக உள்ள முதல்வர் எடப்பாடி அவர்களும் தமிழகம் முழுவதும் முதல் சுற்று பிரச்சாரத்தை முடித்து விட்டார்.
இப்போதைய நிலையில் திமுக தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என்பது மக்களின் மனதிலும் மீடியாக்கள் பார்வையிலும் மிக தெளிவாக பதிவாகி விட்ட ஒன்று
திமுகவை எதிர்த்து நிற்கவோ, திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்தவோ தகுந்த எதிர் அணி என எதுவும் இப்போது இல்லை. அதிமுக கூட்டணியில் அதிமுக மட்டுமே ஓட்டு வாங்கும் கட்சி. பாஜகவுக்கு என தனியான ஓட்டு வங்கி இல்லை. அதிமுகவின் தொண்டர்கள் உழைத்து அதிமுக ஆதரவாளர்கள் போடும் ஓட்டுகளை நம்பியே பாஜக இருப்பதால், மற்ற மாநிலங்களை போல அதிகாரம் செலுத்தும் நிலையிலோ தேர்தல் வியூகத்தை வகுக்கும் நிலையிலோ பாஜக தமிழகத்தில் இல்லை.
எனவே அதிமுக மட்டுமே திமுகவுக்கு எதிராக நிற்கிறது. பிற உதிரி கட்சிகள் எல்லாம் ஒற்றை இலக்க இடங்களை வெல்வதற்கே வாய்ப்பு இல்லாத கட்சிகளாக இருக்கின்றன.
அதிமுகவின் நிலையும் மோசமாகவே உள்ளது. மக்களை சந்தித்து ஆதரவை கேட்டு பெறும் அளவுக்கு மக்களை ஈர்க்க கூடிய தலைவரோ, மக்களிடம் சொல்ல கூடிய அளவுக்கு சாதனைகளோ இல்லாமல் திமுக மீதான அவதூறுகளை சொல்லியே பிரச்சாரம் செய்ய வேண்டிய கையறு நிலையில் தான் அதிமுக உள்ளது.
மேலும் இப்போது சசிகலா விடுதலை ஆகி தனது பொது செயலாளர் பதவிக்காக நீதிமன்றத்தை நாடி உள்ள நிலையில், அதிமுகவின் மற்ற தலைவர்கள் அமைச்சர்கள் எல்லோரும் என்ன செய்வது என தெரியாமல் அமைதி காப்பதால், எவருடைய துணையும் கிடைக்காமல் முதல்வர் ஒருவர் மட்டுமே பிரச்சாரம் செய்து ஆக வேண்டிய சூழல்.
சசிகலா கைக்கு அதிமுக போகுமா? போனால் கூட்டணியில் மாற்றம் வருமா? என்பது எல்லாம் தெரியாத நிலையில் அதிமுகவின் பிரச்சாரம் அடக்கியே வாசிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மறு பக்கம், மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு செய்து வரும் துரோகங்கள், அதிமுக பாஜகவிடம் விட்டுக்கொடுத்து உள்ள மாநில உரிமைகள், தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகள், ஊழல்கள் என எல்லா குறைகளையும் திமுக தரப்பு பொது மக்களிடம் விரிவாக பட்டியலிட்டு புரியவைத்து இருக்கிறது.
இன்னும் சொல்ல போனால், இந்த முறை தேர்தல் பிரச்சாரம் வழக்கமான பிரச்சாரமாக இல்லாமல், ஒரு இடத்தில் மக்களை எல்லாம் அழைத்து அமர்ந்து நீண்ட நேரம் கலந்துரையாடல் போல சகஜமாக பேசி, இயல்பான மொழியில் அவர்களுடன் கருத்துக்களை பகிர்ந்து அவர்களுக்கு கொஞ்சம் நெருக்கமாக நடந்து கொள்வது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. மட்டும் அல்ல மேடை போட்டு அடுக்கு மொழியில் பேசி புரிய வைக்க முடியாத பல விஷயங்களை, இப்படி கலந்துரையாடலில் இயல்பாக பேசி புரிய வைக்க முடிந்து இருக்கிறது.
*****
மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் இதை எல்லாம் உணர்ந்து இருப்பார் என நினைக்கிறேன்.
திமுக தலைவர் அறிவிக்கும் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை தனதாக்கி கொள்ள அதே திட்டத்தை தமிழக அரசும் உடனே உடனே அறிவித்தது அதற்கான சான்று.
அடுத்த ஆட்சி திமுக தான் என உறுதி ஆனா நிலையில் கஜானாவை சுத்தமாக காலி செய்து ₹5.70 லட்சம் கோடி கடனையும் வைத்து செல்கிறது அதிமுக அரசு.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இந்த ஆண்டு யாரும் ஓய்வு பெறாமல் பார்த்து கொண்டது. இதன் மூலம் இப்போது பணி கொடை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிமுகவுக்கு இல்லை. ஆனால் எதிர்வரும் திமுக ஆட்சியில் முதல் இரண்டு வருடங்களுக்குள் அதை கொடுப்பதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டி இருக்கும்
அதே போல பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும் வராத திட்டங்கள் எல்லாம் ஆட்சியை விட்டு இறங்க போகும் கடைசி ஓரிரு தினங்களில் வெறும் அறிவிப்பாக வெளியிட்டு அதற்கான நிதி ஆதாரம் எதையும் ஏற்படுத்தாமல் வெற்று அறிவிப்பாக விட்டு செல்கிறது அதிமுக அரசு.
கூட்டுறவு கடன் தள்ளுபடி, சுய உதவி குழு கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி என அரசுக்கான வருவாய் அனைத்தும் தள்ளுபடி செய்வது என்பது புதிய ஆட்சி வந்து நிதி ஆதாரத்தை உருவாக்கி பின்னர் செய்ய வேண்டியவை.
ஆனால் அதை எல்லாம் கூட ஆட்சியில் இருந்து இறங்கி செல்லும் கடைசி நாட்களில் அறிவித்து விட்டு வெளியேறுவது.. அடுத்து வரும் திமுக ஆட்சிக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்
மிகப்பெரும் சவாலான நிதி மேலாண்மையை அடுத்து வரும் அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பது மிகப்பெரிய கேள்வி
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகைகளை கேட்பதற்கு எந்த உறுதியான முயற்சியும் எடுக்க தயங்கும் அதிமுக அரசு, இப்படி கையில் உள்ள நிதி ஆதாரங்களையும் மொத்தமாக காலி செய்வது சிறு பிள்ளை தனமான ஒன்று.
அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை நன்கு உணர்ந்து திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகவே கஜானா காலியாக்கும் நிகழ்வை பார்க்கிறேன்.
தேர்தல் முடிவு என்ன என்பது ஓரளவு தமிழகத்தில் எல்லோரும் ஊகித்து வைத்து உள்ளனர்.
தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து அவர்கள் எப்படி தமிழகத்தை வழி நடத்தி செல்ல போகிறார்கள் என்பதை காணவே எல்லோரையும் போல நானும் ஆவலாக உள்ளேன்
வாருங்கள்.. காத்திருப்போம்
No comments:
Post a Comment