Friday, June 18, 2021

தங்கத்துக்கு ஹால்மார்க் கட்டாயம் - விரிவான தகவல்கள்

நேற்று இந்திய அரசு எடுத்த முடிவின் படி, இனிமேல் நகைக் கடைகள் விற்கும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் (Hallmark) தர முத்திரை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி 16 ஆம் தேதி அமல் ஆக வேண்டிய இந்த கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது அமல் ஆகி உள்ளது.

இந்தியாவில் தங்கம் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. தங்க நகைகளின் மீதான ஆர்வம் இந்தியர்களுக்கு மிக அதிகம்.

மொத்த தங்கத்தில் 49% இந்தியர்களின் வீடுகளில் உள்ளன. 22% கோவில்களிலும். மற்றவை பார்கள், காயின்களாக உள்ளவை.

வீடுகளிலும் கோவில்களிலும் உள்ள நகைகள் பெரும்பாலும் ஹால்மார்க் முத்திரை இல்லாத பழைய நகைகள். 

2000 ஆண்டு முதல் தான் BIS (Bureau of Indian Standards) இந்திய தர நிர்ணய அமைப்பு, Hallmark முத்திரையை தங்க நகைகளுக்கு வழங்கும் முறையை கொண்டு வந்தது. தங்கத்தின் சுத்தத்தன்மை பரிசோதிக்கப்பட்டு இந்த சான்றிதழ் வழங்கப்படும். 0.916 கிராம் சுத்தமான தங்கம் கொண்ட நகைகள் என்கிற உறுதியை இது வழங்கும். (1 கிராம் தங்க நகையில் 0.916 கிராம் தங்கமும், 0.084 கிராம் இதர உலோகங்களும் கொண்டவை என்கிற உறுதி சான்றிதழ்)

Hallmark இல்லாத நகைகளில் பிற உலோகங்களின் கலப்பு மிக அதிகமாக இருக்கும். அவை சுத்தமான தங்கம் அல்ல என்பது BIS நிறுவனத்தின் முடிவு.

பொதுமக்கள் இது போன்ற ஏமாற்றங்களை தவிர்த்து அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஈடான சுத்தமான நம்பகமான தங்க நகைகளை வாங்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.

இதன் படி, எந்த ஒரு நகை கடையும் இன்று முதல் (18.06.2021) பொது மக்களுக்கு விற்கும் நகைகள் கட்டாயமாக Hallmark முத்திரை கொண்டதாகவும், 6 இலக்க குறியீடு கொண்டதாகவும், BIS தர நிறுவனம் கொடுத்த சான்றிதழ் உள்ளதாகவும் இருக்க வேண்டும்
Hallmark இல்லாத நகைகளை விற்பனை செய்தால் நகையின் விலையை போல ஐந்து மடங்கு அபராதமும் ஓராண்டு சிறையும் தண்டனையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில விதி விலக்குகள் இதில் உள்ளன.

ஆண்டுக்கு ₹40 லட்சம் வரையே விற்பனை உள்ள நகை கடைகளும், ஜாப் வர்க் முறையில் நகைகளை செய்து கொடுக்கும் நிறுவனங்களும் இந்த விதிகளின் கீழ் வராது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 256 மாவட்டங்களில் (தங்க நகை பரிசோதனை நிலையங்கள் உள்ள மாவட்டங்கள்) கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களும் விரைவில் இந்த விதி முறையின் கீழ் கொண்டு வரப்படும்.

பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்க விரும்பினால் அதை நகை கடைகள் வாங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதி வரை அதற்கு எந்த அபராதமும் தண்டனையும் கிடையாது என்று ஒரு விதி விலக்கும் அளிக்கப் பட்டு உள்ளது.

இப்போது நாம எதார்த்த விஷயத்துக்கு வருவோம்.

வீடுகளில் உள்ள பழைய தங்க நகைகளை ஆகஸ்டு மாதம் வரை வழக்கம் போலவே நகை கடைகளில் கொடுத்து புதிய Hallmark நகைகளாக மாற்றி வாங்கிக் கொள்ளலாம். வித்தியாச தொகை மட்டும் கட்டினால் போதும்

ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு நகைக் கடைகள் பழைய நகைகளை வாங்குவார்களா என தெரியாது. வாங்கினால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது நடக்கும். பொது மக்கள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு விற்கும் பழைய நகைகளுக்கு உரிய மதிப்பு மிக மிக குறைவாகவே கிடைக்கும். எனவே மாற்ற விரும்புபவர்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் மாற்றி விடுவது லாபம்.
இப்போது இருக்கும் சூழலில் நகைகளை மாற்றவும் செலவு செய்ய வேண்டி இருக்கும் (வித்தியாச தொகை). பலரது பழைய நகைகள் அடமானத்தில் இருக்கும். அதை மீட்டு மறு அடகு வைக்க வேண்டும் என்றாலும் பணம் வேண்டும்.

திடீர் என்று இத்தனை பணத்துக்கு பொது மக்கள் எங்கே போவார்கள் என அரசு யோசித்தது மாதிரி தெரியவில்லை.

தங்க கடத்தல் அதிகம் நடப்பது ஜாப் வர்க் முறையில் நகைகளை செய்து கொடுக்கும் நபர்கள் & சிறு நகை கடைகள் மூலம் தான் என்பது தெரிந்தும் ஏன் அவர்களுக்கு மட்டும் இந்த விதிகளில் விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் புரியவில்லை.

பெரிய கடைகள் தாங்கள் கைவசம் வைத்து இருக்கும் நகைகளுக்கு கட்டாயம் purchase details வைத்து இருக்க வேண்டும். பொது மக்களிடம் இருந்து பழைய நகைகளை வாங்கினாலும் அவர்களிடம் இருந்து declaration வாங்கி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சிறு சிறு கடைகள் மூலம் தான், எங்கிருந்து வாங்கப்பட்டது என்கிற விவரங்கள் இல்லாத தங்கம், வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், கணக்கில் வராத தங்கம், ஆகியவை நகைகளாக மாற்றப்பட்டு மறு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கூட வருமான வரித்துறை நடத்திய ரெய்டுகளில் சம்மந்தப்பட்ட நகை விற்பனையாளர்கள் அதிகமாக தெரியாத பிரபலம் அல்லாத நிறுவனங்கள் தான்.

எனவே அவர்களுக்கான விலக்கு யோசிக்க வைக்கிறது.

எது எப்படியோ.. இந்த முடிவு உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று.

இனி தங்கம் வாங்குவதாக இருந்தால் பெரிய கடைகளில் சென்று தர சான்றும் Hallmark குறியீடும் கொண்ட நம்பகமான சுத்தமான தங்க நகைகளை மட்டுமே வாங்குங்கள். எல்லா கடைகளிலும் தங்கத்தின் விலை ஒன்று தான். சிறிய கடைகளில் சென்று Hallmark இல்லாத நகைகளை வாங்கி ஏமாற வேண்டாம்

கைவசம் பழைய நகைகள் இருந்தால் எவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்றி கொள்வது நஷ்டத்தை குறைக்கும். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு பழைய நகை வாங்க கடைகள் யோசிக்கக் கூடும். அப்படியே வாங்கினாலும் மிக குறைந்த தொகையே மதிப்பீடு செய்து கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

அரசு Hallmark கட்டாயம் என அறிவித்த செய்தி குறிப்பு இங்கே காணலாம்.


1 comment:

  1. 14,18,22 கேரட் என்று மூன்று தரங்களில் ஹால்மார்க் முத்திரை பதியலாம் ஏற்கனவே 9,14,17,18,22 என்று இருந்தது சிறு நகைக்கடைகள் மற்றும் ஜாப் ஒர்க் செய்பவர்களால் கள்ளத்தங்கம் விற்பனை செய்வதில்லை நீங்கள் பெரிய நகைக்கடைகள் என்று கூறுகிறீர்களே அவர்களால் தான் கள்ளத்தங்கம் விற்கப்படுகிறது கூலி சேதம் இல்லை என்கிற விளம்பரத்துடன்
    தங்கநகை சார்ந்த எந்த கேள்விக்கும் பதில் தர நான் தயார் 9952269691

    ReplyDelete

Printfriendly