Thursday, July 8, 2021

எழுவர் விடுதலையும் அதன் அரசியலும்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு உடைய எழுவர் விடுதலை தொடர்பாக இப்போது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

சமீபத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பு ஏற்று உள்ள திமுக, அந்த எழுவரில் ஒருவரான திரு. பேரறிவாளன் அவர்களுக்கு சட்ட விதிகளை தளர்த்தி சிறப்பு விடுமுறை கொடுத்து வெளியே அனுப்பியது. அந்த விடுமுறை மீண்டும் நீட்டிக்கப் பட்டு உள்ளது. இப்படியே அந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமற்ற விடுதலையாக அது மாறும் வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சி.

மீதம் உள்ள ஆறு பேரின் (முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்) விடுதலைக்காகவும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 

இணையத்தில், இந்த எழுவர் விடுதலை என்பது "ஈழ மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்பு" என்கிற கருத்துருவாக்கம் இன்னொரு புறம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

ஈழ மக்களுக்காக நாம் செய்ய கூடிய செய்தே ஆக வேண்டிய மிக மிக முக்கியமான விஷயமாக இந்த எழுவர் விடுதலை முன்வைக்கப் பட்டு வருகிறது.

அநேகமாக இப்போது எடுக்கும் வேகமான நடவடிக்கைகளை பார்த்தால் அடுத்த ஓராண்டு காலத்துக்குள் அவர்கள் விடுதலை ஆவதற்கான வாய்ப்புக்கள் தெரிகின்றன. 

இவை எல்லாம் இப்போது நடைபெற்று வருபவை.

எழுவர் விடுதலை என்பது எந்த வகையில் ஈழ மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை என்பது மட்டும் இங்கே பலருக்கும் புரியவில்லை. அப்படியானால் ராஜீவ் கொலை என்பது ஈழ மக்கள் நலன் சார்ந்த ஒன்றா என்பதையும் யாரும் இன்னமும் தெளிவு படுத்தவில்லை.

ராஜீவ் கொலை என்பது வெறும் ராஜீவ் கொலை மட்டுமல்ல. அது அந்த வழக்கின் தீர்ப்பிலேயே விவரிக்கப்பட்டது போல "மிக மிக அரிதிலும் அரிதான திட்டமிட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல்".

ராஜீவ் கொலைக்கு இந்த வெடிகுண்டு தாக்குதல் முறையை தேர்ந்தெடுத்தவர்கள், அந்த பொது கூட்டத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினால் பல அப்பாவி பொதுமக்களும் இறந்து போவார்கள் என நன்றாக தெரிந்தவர்கள் தான். அது தெரிந்தும், தமிழக தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை என திட்டமிட்டு செயல்படுத்திய பயங்கரவாத தாக்குதல் அது.

அப்பாவி பொது மக்கள், தமிழ் நாட்டு தமிழர்கள் 15 பேர் வரை பலியான நிகழ்வு அது. 40 பேருக்கு மேல் மிக கடுமையாக காயம்பட்டு உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வாதாரம் நொடிந்து போனது எல்லாம் தனி கதை.

தமிழ் நாட்டு தமிழர்கள் மீது, அவர்களுக்கான உதவிகள் மீது அக்கறை கொண்டு, உயிர் இழந்தவர்களுக்கு, படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்காக போராட வேண்டிய தமிழ் நாட்டு இயக்கங்கள், அதில் போதுமான கவனம் செலுத்தாமல், அந்த பயங்கரவாத நிகழ்வுக்கு துணை நின்றவர்களை பாதுகாப்பதில் காட்டும் அரசியல் தான் முப்பது ஆண்டுகளாக இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

****
முப்பது ஆண்டுகள் சிறையில் அவர்கள் தண்டனை பெற்று வந்தார்கள் என்கிற பரிதாபமான குரல்களும் இப்போது அதிகமாக கேட்க தொடங்கி இருக்கின்றன.

பயங்கரவாத தடுப்பு சட்டப்படி, பயங்கரவாத நிகழ்வு நடக்கப் போவது குறித்த தகவல் தெரிந்தாலே அரசிடம் அதை சொல்ல வேண்டும். தகவல் தெரிந்து அரசிடம் சொல்லாமல் இருப்பதே தண்டனைக்கு உரிய குற்றம். 

இந்நிலையில் அந்த பயங்கரவாத செயல் நிகழ்த்த தேவைப்படும் உதவிகள் செய்து, அந்த பயங்கரவாதிகளை அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வைத்தது எல்லாம் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாக TADA & POTA சட்டங்கள் வரையறை செய்து உள்ளது.

அந்த வகையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உச்ச பட்ச தண்டனையை, குறைப்பதற்கான மேல் முறையீடு, கருணை மனு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான கால அவகாசம் வரை அவர்களுக்கான தண்டனை தள்ளி வைக்கப்பட்டது. ஆதனால் முப்பது ஆண்டு காலம் "தண்டனை" என்பதை விட அவர்களுக்கான சலுகை பெறுவதற்கான கால அவகாசம் என்றே சட்டம் பார்க்கும்.

அவர்களுக்கான தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படவே பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த பதினைந்து ஆண்டுகளும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தள்ளி வைக்கப்பட்டு தண்டனை குறைபுக்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை.

இதில் இன்னொரு புறம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் தண்டனையை பற்றி புரியாமல் சாதாரண குற்றவியல் தண்டனை சட்ட விதிமுறைகளின் படி நினைத்து பேசும் பெரும் தலைவர்களின், அவர்தம் தொண்டர் அடிபொடிகளின் விவாதங்கள் வேறு ஆச்சர்யம் தருகின்றன.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கொடுக்கப் பட்ட தண்டனை ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில் (remission) இன்னும் ஒரு தண்டனை குறைப்பு (second remission) சாத்தியமா என்பது போக போக தான் தெரியும்.

ஆனால் இந்தியாவில் சட்டத்தை விட அரசியல் தானே சக்தி வாய்ந்தது? 

தேவைப்பட்டால் சட்டத்தையே கூட திருத்தி முன் தேதி இட்டு வெளியிட செய்தாலும் ஆச்சர்யம் இல்லை.

****

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், பேருந்தை எரிப்பது தான் நோக்கம், ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மூன்று மாணவிகளும் பலியானார்கள் என்கிற வாதத்தை நாமெல்லாம் எந்த அளவுக்கு கடுமையாக எதிர்த்தோம் என்பது தெரியும். 

ஆனால் ராஜீவ் கொலையின் போது உடன் இறந்த அப்பாவி தமிழர்கள் பற்றி எந்த கவலையும் இன்றி கொலைக்கு உதவி செய்தவர்களை காப்பாற்றும் முனைப்பில் மட்டுமே தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இயங்கி கொண்டு இருப்பது வியப்பு தான்.

ஈழ மக்கள் நலன் என்கிற ஒற்றை புள்ளியில் நாம் நமது மக்களை சமரசம் செய்து கொள்கிறோமோ என தோன்றுகிறது.

எனினும் நான் முன்பே சொன்னது போல, ராஜீவ் கொலைக்கான பயங்கரவாத நிகழ்வு நடைபெற உதவியவர்களை காப்பாற்றுவது என்பது எந்த வகையில் ஈழ மக்களின் நலனுக்கு உதவும் என்பதை யாராவது விளக்கினால் நல்லது.

ஈழ மக்களின் நலம் என்பது எழுவர் விடுதலையில் தான் இருக்கிறது என்கிற கட்டமைப்பு எதற்காக உருவாக்கப்படுகிறது என்பதையும் விளக்கினால் மேலும் நல்லது.

என்னை போன்ற சாமானியர்கள் அதன் தொடர்பை, அதன் பின்னுள்ள அரசியலை பற்றி புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

யாரேனும் விளக்குவார்களா?


3 comments:

  1. நன்றாக அலசி ஆராய்ந்து சொல்லியிருக்கீங்க. நிச்சயமாக இந்த எழுவரின் விடுதலை ஈழ நலனுக்கு எவ்விதத்திலும் உதவாது. ஆனாலும் செய்கிறார்கள் என்றால் அது சும்மா திசைதிருப்பும் செயலாகத்தான் படுகிறது.
    அப்புறம் , இக்கொலை சம்பவத்தில் விபு கைக்கூலிகளே இதன் பின்னனியில் எதோ ஒரு சர்வதேச சதி இருப்பதாக ஒரு நியூஸ் ஓடிச்சே. சுப்ரமணிசாமிக்கும் சந்திரா சாமிக்கும் முன்னமே செய்தி தெரிய்ம்னுட்டு கூட ஒரு செய்தி சுற்றியது அப்போ

    ReplyDelete
  2. Lucky Club Casino Site
    Lucky Club Casino is a UK-based, top-notch destination for online gambling. With over 3 million people playing slots online and mobile  Rating: 5 · ‎6 votes luckyclub.live

    ReplyDelete
  3. Harrah's Cherokee Casino Resort - Mapyro
    Welcome to Harrah's Cherokee Casino 광양 출장마사지 Resort, 군산 출장안마 your home 대구광역 출장샵 for entertainment, 진주 출장샵 dining and gaming. Plan your visit today!‎Entertainment · ‎Casino · ‎Rooms & 충청남도 출장샵 Suites · ‎Casino Rooms

    ReplyDelete

Printfriendly