Wednesday, July 21, 2021

GST வரி வசூலும் மாநில உரிமைகளும்

சமீப காலங்களாக இணையத்தில் பெரும் விவாதம் ஆன விஷயங்களில் ஒன்று GST வரி வசூல் குறித்தது.

ஒன்றிய அரசு எல்லா வரியையும் வசூலித்து மாநிலங்களுக்கு தராமல் ஏமாற்றுவதாக ஒரு கருத்து உள்ளது.
மாநிலங்களுக்கு வரி பங்கு முறையாக ஒன்றிய அரசு தரவில்லை என்பது உண்மை தான். ஆனால் ஒட்டுமொத்தமாக மாநிலங்களுக்கு வரி வசூல் எதுவுமே கிடைக்கவில்லை என்பது சரியல்ல.

விளக்கமாக சொல்கிறேன்.

GST வருவதற்கு முன்னர், உற்பத்தி நிறுவனஙகள் Excise வரி செலுத்த வேண்டும். சேவை நிறுவனங்கள Service Tax செலுத்த வேண்டும். இந்த இரண்டும் ஒன்றிய அரசின் கணக்குக்கு போகும்.

விற்பனையை பொறுத்த வரை, மாநிலத்துக்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு VAT வரியும் மாநிலத்துக்கு வெளியே நடைபெறும் விற்பனைக்கு CST வரியும் அந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.

இதில் VAT வரி மாநில அரசுக்கும், CST வரி ஒன்றிய அரசுக்கும் போகும்.

அதாவது Excise, Service Tax, CST ஆகியவை ஒன்றிய அரசுக்கும், VAT வரி மட்டும் மாநில அரசுக்கும் கிடைக்கும்.

GST யிலும் இதே முறை தான் சற்றே மாறுதலுடன் அமல் படுத்தப்பட்டது.

Excise Service Tax ஆகியவை ஒழிக்கப்பட்டு, GST யின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மாநிலத்துக்கு உள்ளே நடைபெறும் விற்பனைக்கு SGST & CGST ஆகியவையும், மாநிலத்துக்கு வெளியே நடைபெறும் விற்பனைக்கு IGST வரியும் இப்போது நிறுவனங்கள் கட்ட வேண்டும்

இதில் SGST நேரடியாக முழுமையாக மாநில அரசுக்கு கிடைத்து விடும்.

CGST முழுமையாக ஒன்றிய அரசின் கைக்கு போகும்

IGST வரியில் தான் மாநிலங்களுக்கு உரிய பங்கு பகிர்ந்து அளிக்கப் படும்.

இவை தவிர CESS வரி என்று ஒன்று ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் வரியை மாநிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையாக (Compensation CESS) ஆக கொடுக்கப் படுகிறது. இந்த CESS பற்றி பிறகு சொல்கிறேன்.
இதில் இருந்து VAT வரி போலவே SGST வரியும் மாநிலங்களுக்கு நேரடியாக கிடைக்கிறது என்பது புரியும்.

GST என்பது மாநிலங்களின் உரிமையை மனதில் வைத்து இயற்றப் பட்ட சட்டம் என்பதால், சேவைகளுக்கும், உற்பத்திக்கும் கூட GST வரி அமல் ஆனது. இதன் மூலம் GST க்கு முன்பு கிடைக்காத வரிகளும் மாநிலத்துக்கு கிடைக்கத் தொடங்கி உள்ளது

உதாரணமாக ஒரு சேவை நிறுவனம் (service Industry) எடுத்து கொள்வோம். Contract Labour Supply செய்யும் நிறுவனத்தை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

அவர்களுக்கு ஆபீஸ் சென்னையில் உள்ளது. கோவையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கும், பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கும் அவர்கள் ஆட்களை அனுப்பி வைக்கிறார்கள் என்றால் அவர்களின் பில் இப்படி இருக்கும்

கோவை நிறுவனத்துக்கு - SGST 9% & CGST 9% என வரி விதித்து கட்டுவார்கள். இதில் SGST மாநிலத்துக்கு நேரடியாக கிடைக்கும்.

பெங்களூர் நிறுவனத்துக்கு - IGST 18% என வரி விதித்து கட்டுவார்கள். இதில் மாநிலத்தின் பங்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

GST வருவதற்கு முன்பு இந்த மாதிரி அல்லாமல் மொத்தமாக Service Tax 14.50% வரி கட்டி அது மொத்தமும் ஒன்றிய அரசுக்கு மட்டுமே போகும். மாநிலத்துக்கு உள்ளே நடந்தாலும் மாநிலத்துக்கு வெளியே நடந்தாலும் எல்லா வரியும் ஒன்றிய அரசுக்கு தான் போய் கொண்டு இருந்தது.

GST அதை மாற்றி, மாநிலத்தில் நடைபெறும் சேவையில் பாதி வரி நேரடியாக மாநிலத்துக்கு கிடைக்க வழி செய்து உள்ளது. 

இது தவிர முன்பு மாநிலத்துக்கு உள்ளே விற்பனை ஆகும் பொருளுக்கு VAT வரி 5% என்று இருந்தது. ஆனால் GST சட்டம் மூலம் அதற்கு சராசரியாக 18% வரி விதிக்கப்பட்டு அதில் பாதியான 9% வரி மாநிலத்துக்கு கிடைக்கிறது. இது முன்னர் கிடைத்த 5% வரியை விட 4% அதிகம் ஆகும்.

இதனால் மாநில வரி வருவாய் உயரும் என்பது தான் நோக்கம்.

முன்னர் Excise வரி செலுத்தும் உற்பத்தி நிறுவனங்களின் வரி முழுமையும் ஒன்றிய அரசுக்கு தான் போகும். இப்போது அதுவும் GST மூலம் மாநிலத்துக்கு உரிய வரி நேரடியாக கிடைக்க வழி செய்யப்பட்டு உள்ளது.
இவை எல்லாம் வைத்து பார்த்தால் மாநிலங்கள் வரி வருவாயில் அதிக லாபம் அடைவதை போல தோன்றும்.

ஆனால் சட்டம் சரியாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் ஒன்றிய அரசு அதை முறையாக செய்யாமல் இருப்பதால் தான் மாநிலங்கள் கஷ்டப்படுகின்றன.

மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் இருப்பதால் மாநிலங்கள் கடன் வாங்கி சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

GST செய்த முக்கியமான மற்றும் ஒரு மாற்றம், பொருள் சென்று சேரும் இடம் எதுவோ அந்த மாநிலத்துக்கு தான் பங்கு என மாற்றியது. (Consumption based tax)

இதனால் உற்பத்தி மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, கர்நாடக, குஜராத் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு, பொருட்களை பெறும் மாநிலங்களான பீகார் அசாம் போன்ற மாநிலங்களுக்கு வரி பங்கு அதிகம் கிடைக்க தொடங்கி உள்ளது.

இது வளர்ச்சியை நோக்கி திட்டங்கள் தீட்டும் மாநிலங்களுக்கான தண்டனையாக அமைந்து விட்டது

மாநில உரிமையின் அடிப்படையில், வளர்ச்சி திட்டங்களை செய்யும் மாநிலங்களுக்கு வரி பங்கு கிடைக்குமாறு சட்டத்தை மாற்ற வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை யாரும் இதுவரை செய்யவில்லை.

முறையாக வரி பங்கீட்டை மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். அதையும் மாநிலங்கள் செய்யவில்லை. அல்லது வலியுறுத்தியும் அது நடைபெறவில்லை.

இவைகளால் தான் மாநில பொருளாதாரம் சிக்கலுக்கு ஆளாகிறது.

இனி CESS விஷயத்துக்கு வருகிறேன்.

GST வருவதற்கு முன்பு மாநிலங்களுக்கு கிடைத்த வரியையும், GST வந்த பிறகு மாநிலங்களுக்கு கிடைக்கும் வரியையும் ஒப்பிட்டு GST காரணமாக வரி வருவாய் குறைந்து இருந்தால் அதை ஈடு கட்ட உருவாக்கப்பட்டது தான் இந்த Compensation CESS. இதுவும் 5 ஆண்டு காலத்துக்கு தான் தர முடியும் என சட்டம் சொல்கிறது. அதற்கு பிறகு அந்தந்த மாநிலங்கள் அவர்களாகவே சமாளித்து கொள்ள வேண்டும்.

இது மாநில உரிமைக்கு எதிரானது.

ஏற்கனவே சொன்னது போல, நாம் உற்பத்தி செய்து பின் தங்கிய மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் அதற்கான பலன் பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் செல்லும் எனில், நமக்கான வரி இழப்பை எப்படி ஈடு கட்டுவது?

CESS பங்கீடு ஒழுங்காக செய்யப்படவில்லை என்கிற குறை ஒருபுறம் இருந்தாலும், CESS பங்கீடு அடுத்த ஆண்டு முடிவுக்கு வந்து விட்டால், அதன் பிறகு எந்த இழப்பீடும் இல்லாமல் மாநிலங்கள் எப்படி சமாளிக்கும் என்பது தான் முக்கியமான கேள்வி

ஆனால், இது குறித்து கூட பெரிதாக எந்த மாநிலங்களும் அக்கறை காட்டியதாக தெரியவில்லை.

கவுன்சில் கூட்டத்தில் வாக்கு சதவீதம் குறைவு போன்ற முக்கியமல்லாத விஷயங்களை விவாதிப்பதை விடவும் அவசியமானது Consumption Based Taxing முறையை மாற்றுவது என்பதை யாரும் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

அடுத்த ஆண்டு CESS முடிவுக்கு வந்தால் ஒவ்வொரு மாநிலமும் இழப்பை நோக்கி செல்கையிலாவது சுதாரித்து கொள்கிறார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்



No comments:

Post a Comment

Printfriendly