Sunday, March 16, 2025

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை

தமிழ்நாட்டில் இப்போது மிக பரபரப்பாக இருக்கும் விஷயம் மும்மொழியா இருமொழியா என்கிற விவாதம். இப்போது இதை தொடங்கி வைத்தது, புதிய கல்விக் கொள்கையை அமல் செய்யாவிட்டால் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதி விடுவிக்கப்படாது என்கிற ஒன்றிய அரசின் நிபந்தனையும் அதை தொடர்ந்து இந்த பிரச்சனையை திசை திருப்ப பாஜக அதை மடை மாற்றி, தமிழ்நாடு இந்தியை எதிர்க்கிறது அதனால் தான் புதிய கல்வி கொள்கையை மறுக்கிறது என்கிற பிரச்சாரமும்.
முதலில் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்ன? எதற்காக இந்தியை எதிர்க்கிறோம் என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை:

தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது. 

இங்கே கொள்கை என்பது அரசின் கொள்கை என்பதை கவனத்தில் வைக்கவும். தனியார் பள்ளிகள் அவரவர் விருப்பப்படி பயிற்று மொழிகளை வைத்து கொள்ளலாம். மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம். மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் CBSE பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை தமிழ் ஒரு பாடமாக இருக்கலாம். 

எனவே அரசின் கொள்கை என்பது அரசு பள்ளிகளுக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் மட்டுமே பொருந்தும்.

இரு மொழி என தமிழ்நாடு முடிவு செய்ய காரணம் சிந்தனையை துண்ட தாய்மொழி மற்றும் உலகோடு இணைந்து செயலாற்ற ஆங்கிலம் என்பது. இவை இரண்டும் மொழிப் பாடங்கள்.

இவை தவிர வாழ்க்கைக்கு அடிப்படை தேவையான அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு ஆகியவை இதர பாடங்கள்.

அடிப்படை பாடங்கள் 3, மொழிப்பாடங்கள் 2 என்பது தான் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாட திட்டம்.

மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை கூடுதலாக பயிற்றுவிக்க படுகிறது.

இந்த பாட திட்டத்தில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் பிறகு அவரவர்க்கு விருப்பமுள்ள மொழிகளை கற்றுக்கொள்ளலாம். 

ஒரு அரசு தன் பிள்ளைகளுக்கு "அடிப்படை கல்வியை" கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பது அரசியல் சாசன கட்டளை. அதை தமிழ்நாடு சிறப்பாக செய்கிறது. கூடுதல் மொழிகள் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. சிலருக்கு ஜெர்மன், ஜப்பான், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ் போன்ற அயல்நாட்டு மொழிகள் மீது ஆர்வம் இருக்கும். இன்னும் சிலருக்கு ஹிந்தி சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகள் மீது ஆர்வம் இருக்கும்.

ஒரே வகுப்பில் உள்ள 30 மாணவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழி மீது ஆர்வம் இருக்கலாம். அத்தனையும் ஈடு செய்ய எல்லா பள்ளிகளிலும் எல்லா வகுப்பும் வெவ்வேறு மொழிப் பாட ஆசிரியர்களை நியமிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். ஆசிரியர்கள் கிடைப்பதை பொறுத்து அவை மெல்ல மெல்ல சுருங்கி குறிப்பிட்ட ஒரு சில மொழிகள் மட்டுமே கற்றுத் தரும் நிலைக்கு தள்ளப்படும்.

அதைவிட.. மொழியின் தேவை அவசியமாகும் நேரத்தில், உயர்கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக, அவரவர்க்கு தேவைப்படும் மொழியை அவர்கள் கற்றுக் கொள்வது தான் எதார்த்தமான தீர்வாக இருக்க முடியும்.

வெளிநாடு செல்ல விரும்புவோர் அந்த நாட்டு மொழியையும் அதற்கான தேர்வுகளையும் (TOEFL போன்றவை) அப்போது படித்து கொள்ளலாம். போலவே டெல்லி மும்பை போன்ற நகரங்களுக்கு வேலைக்கு போகிறவர்கள் ஹிந்தி மொழியை கற்கலாம். ஆந்திராவில் வேலைக்கு போகிறவர்கள் தெலுங்கு, பெங்களூருக்கு வேலைக்கு போகிறவர்கள் கன்னடம் என அப்போதைய தேவைகளை பொறுத்து மொழிகளை கற்றுக் கொள்ளலாம்.

எனவே மக்களின் வரிப்பணத்தில் இருந்து பள்ளிகளை நடத்தும் அரசு அடிப்படை கல்வியை மாணவர்களுக்கு கற்று கொடுப்பது தான் கடமை. அதற்கு பின் அந்த அடிப்படை கல்வியை வைத்து மாணவர்கள் அவர்களுக்கு ஆர்வமுள்ள இதர பாடங்களை, மொழிகளை கற்றுக்கொள்வது என்பது தனிப்பட்ட விருப்பம்.

இது தான் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையாக இருந்து வருகிறது.

இப்போதைய பிரச்சனை:

காலகாலமாக தமிழ்நாட்டில் அடிப்படை கல்வி கற்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்கல்வி வேலைவாய்ப்பு பெற்று பெரிய பதவிகளை பலரும் வகித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் கல்வித் தரம் சிறப்பு வாய்ந்தது என எல்லா ஆய்வுகளும் சொல்லி வருகின்றன. தமிழக மாணவர்கள் மிகப் பரவலாக நல்ல வேலை வாய்ப்பை பெற்று இருப்பதை தினசரி பல செய்திகள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

இச்சூழலில், மத்திய அரசு தனது புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டிய கல்விக்கான நிதியின் பங்கை விடுவிப்போம் என மத்திய அரசு புதிதாக ஒரு நிபந்தனையை விதித்து இருக்கிறது. 

தமிழ்நாடு, புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது என திட்டவட்டமாக சொல்லி விட்டது. புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அரசும் உறுதியாக இருக்கிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ரூ. 2,100 கோடி நிதி தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. அந்த நிதியை வைத்து தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகளை செய்ய முடியவில்லை.

புதிய கல்விக் கொள்கையை எதற்காக தமிழ்நாடு எதிர்க்கிறது?

புதிய கல்வி கொள்கை நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் பல நல்ல விஷயங்கள், நவீன காலத்துக்கு ஏற்ப மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டிய பாடங்கள் குறித்து எல்லாம் பல நல்ல வழிகாட்டுதல்கள் உள்ளன. அதன் கூடவே, மும்மொழி கொள்கை கட்டாயம், குலத்தொழில்க்கல்வியை நோக்கிய பாட திட்டம் போன்ற பிற்போக்குத்தனமான பரிந்துரைகளும் உள்ளன.

குலத்தொழில்க்கல்வி என்பது அவரவர் குலம் சார்ந்த, இனம் சார்ந்த தொழில்களை பற்றிய முறையான கல்வியை வழங்கும் என சொல்லப்பட்டாலும், இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லா கல்வியும் கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு கொண்டு இருக்கும் தமிழ்நாடு அரசு, எல்லா மக்களுக்கும் அவரவர் விரும்பும் கல்வியை கொடுத்து சமூகப் படி நிலைகளில் அவர்களை உயர்த்தி கொண்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் இந்த முற்போக்கான செயல் தடைபடும்.

மும்மொழி கொள்கை என பொதுவாக சொன்னாலும், அதன் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்து பார்த்தால் அது இந்தி மொழியை கற்பிப்பதில் மட்டுமே வந்து நிற்கும்.

இந்திய மொழிகள் எதை வேண்டுமானாலும் கற்கலாம் என புதிய கல்வி கொள்கையில் சொல்லப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள 37,000+ அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வெவ்வேறு மொழிப்பாட ஆசிரியர்கள் நியமிப்பதில், ஒரே வகுப்பில் வெவ்வேறு மொழிகளை கற்பிக்க பல்வேறு ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும், அத்தனை ஆசிரியர்கள் கிடைப்பார்களா என்கிற எதார்த்தையும் கவனித்தால் கடைசியில் ஹிந்தி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளார்கள் அதனால் ஹிந்தி மட்டுமே படியுங்கள் என சொல்லக் கூடிய நிலைக்கு கொண்டு வந்து விடும் அபாயம் உள்ளது.

அடிப்படை கல்வி கற்கும் நேரத்தில், கூடுதலாக ஒரு மொழி, அதுவும் நாம் விருப்பப்படாத ஒரு மொழியை கற்பதில் செலவிடப்படும் நேரம் என்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை கல்வியை முறையாக முழுமையாக கற்க முடியாத நிலைக்கு கொண்டு தள்ளும்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் மாணவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுத்துவிடக் கூடாது என்று தான் தமிழ்நாடு அரசு மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது.

இனி அடுத்து என்னவாக இருக்கும்?

இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு என்று சில உரிமைகளை தந்து இருக்கிறது. மத்திய அரசு எந்த கொள்கையை சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநிலங்கள் விரும்பாவிட்டால் அதை அமல் செய்ய முடியாது. மாநிலங்களுக்கு என்றுள்ள தனிப்பட்ட அதிகாரம் அது.

புதிய கல்வி கொள்கையை 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தாலும் இன்று வரை தமிழ்நாடு அதை அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதிக்காத தமிழ்நாடு மீது மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. காரணம் அனுமதிப்பதா வேண்டாமா என தீர்மானிப்பது மாநிலத்தின் உரிமை.

மத்திய அரசு மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கலாம்.. நிதி ஒதுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கலாம்.. அதற்கு மேல் எதுவும் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.

எனவே தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ள திருத்தங்களை கொண்டு வந்தால் மட்டுமே புதிய கல்வி கொள்கை தமிழ்நாட்டில் அமலாகும் என நினைக்கிறேன். அதில் முக்கியமான திருத்தம் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கை. 

ஒன்று தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை அமலாகாது

அல்லது மத்திய அரசு தமிழ்நாடு குறிப்பிட்ட திருத்தங்களை கொண்டு வந்து அமல் செய்யும்.

எதுவானாலும் தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை முன்னிறுத்தியே தமிழ்நாடு அரசு செயல்படும் என நான் திடமாக நம்புகிறேன்.









No comments:

Post a Comment