Friday, February 19, 2010

சிபில் அட்டகாசம்!

சிபில்....இந்த வார்த்தை தான் இப்போதைக்கு மிக மிக பயங்கரமாக காட்சி தருகிறது  ஒவ்வொரு  சராசரி நடுத்தர  இந்தியனுக்கும்!
வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற வாழ்க்கை சூழலில் எல்லோருமே கடன் வாங்கியோ, கடன் அட்டை தேய்த்தோ தான் காலத்தை ஒட்டி தொலைக்க வேண்டி இருக்கிறது.... கலங்கி தவித்ததெல்லாம் இலங்கை வேந்தன் காலத்தோடு முடிந்துவிட்டது... இன்றைய தேதியில் கடன் இல்லாத கொடீஸ்வரனே இல்லாதபோது.. சராசரி இந்தியன் எம்மாத்திரம்!

இப்படியாக ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்கியவன் பாடு என்னவெல்லாம் ஆகிறது என்பதை சமீபத்தில் கண்கூடாக கண்டேன்.

கடன் வாங்குவதற்கு முன்பே கடன் பத்திரத்தில் (படித்து பார்க்காமல் / படித்து பார்க்க முடியாமல்) கையெழுத்துக்களை வாரி வாரி இறைக்கவேண்டும்.  (இதில் இன்னொரு சுவாரசியமான கூத்தும் இருக்கிறது... நீங்கள் இங்கிலீஷில் கையெழுத்து போடாவிட்டால் 'வெர்நாக்குளர் படிவம்' என்ற ஒன்றை நிரப்பி தரவேண்டும்.  அதாவது... எனக்கு எழுத படிக்க தெரியாது... இந்த விண்ணப்பத்தில் இருக்கும் விவரங்களை வங்கி அலுவலர் படித்து காண்பித்தார்.. நான் புரிந்து கொண்டேன் என்கிற மாதிரி...  நீங்கள் இங்கிலீஷில் மிக பெரும் புலமை கொண்டிருந்தாலும், கையெழுத்தை தாய்மொழியில் போட்டால் நீங்கள் படிக்காதவர் என்பது வங்கிகளின் விதி... இதில் அரசு வங்கிகளும் அடக்கம்)

அதோடு எட்டு அல்லது பத்து செக் கையெழுத்து இட்டு மொட்டையாக கொடுக்கவேண்டும். அப்போது தான் நமது அப்பிளிகேஷனையே லாக் ஆன் செய்வார்கள்!  (ஒருவேளை லோன் அப்ரூவ் ஆகவில்லை என்றால் அந்த செக்குகள் திரும்ப தரப்படாது.. வங்கியே அவற்றை கிழித்து போட்டுவிடும் என்று சொல்கிறார்கள்... ஆனால் அப்படி கிழிக்கிறார்களா என்பது தெரியாது யாருக்கும்... இதற்கிடையில் செக்குகள் வங்கிக்கு வராமல் போவதால் நாம் கணக்கு வைத்து இருக்கும் வங்கி நமக்கு மேற்கொண்டு செக் தர யோசிக்கும் ஆபத்தும் உண்டு)

ஒரு வழியாக கடன் அப்ரூவ் ஆகிவிட்டால், அதற்கான பிராசசிங் பீஸ் அது இது என்று ஆரம்பத்திலேயே கணிசமான தொகை பிடித்தம் செய்து தான் நமக்கு தருவார்கள்.   அதே போல ஒப்பந்தப்படியான வட்டி விகிதத்தை மூன்றாக பிரித்து, முதல் ஒன்பது மாதங்களில் பெரும்பாலான வட்டியை முழுமையாக பிடித்தம் செய்து விடுவார்கள்.  பிற்காலங்களில் குறைந்த வட்டி.  இந்த ரீதியில் போகும்போது முதல் ஒன்பது மாதங்களில் நாம் கட்டிய தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட பிரின்சிபல் தொகையில் கழியாது!  எல்லாமே வட்டிக்கு என்று எடுத்து விடுவார்கள்...

ஆறு மாதம் கழித்து ஒரு ஆரணங்கு அன்பாக (?) போன் செய்து சார் உங்கள் லோனுக்கு டாப் அப் லோன் தர்றேன் எடுத்துக்கறீங்களா என்று எதோ தன்னையே தருவது போல குழைந்து குழைந்து கேட்பாள்.  அங்கே விழுந்தால், 'பிரீ குளோசிங்' சார்ஜ் என்று மீண்டும் ஒரு கணிசமான தொகையை வெட்ட வேண்டி இருக்கும்..  அதுபோக புதிய கடனில் பிராசசிங் பீஸ், மீண்டும் முதலில் இருந்து மூன்றில் இரு பங்கு வட்டி என்று நம் சம்பாத்தியம் எல்லாமே வங்கிக்கு தான்.

இதில் ஏதேனும் ஒரு மாதம் நீங்கள் தவணை செலுத்த தவறினால், போன் மிரட்டல், ஆட்களை வீட்டுக்கனுப்பி மிரட்டுதல் போன்ற 'இயல்பான' விஷயங்கள் தவிர்த்து இப்போது புதிதாக வங்கிக்கு கிடைத்து இருக்கும் அதி அற்புத ஆயுதம் தான் சிபில்.

இந்த சிபில் (CIBIL - Credit Information Beureu of India Limited) என்பது வங்கிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு.  எந்த வங்கியில் நீங்கள் கடன் வாங்கி இருந்தாலும், அது பற்றிய விவரங்களை, உங்களின் திருப்பி செலுத்தும் வரலாறை எல்லாம் சேகரித்து பட்டியல் இட்டு வைப்பது இவர்கள் வேலை.  நீங்கள் சந்தர்ப்பவசத்தால் ஏதேனும் ஒரு வங்கியின் கடனில் ஒரே ஒரு தவணை பாக்கி வைத்தாலும் உங்கள் பெயர் சிபிலின் பட்டியலில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.  

இதன் விளைவுகள்???  நீங்கள் மேற்கொண்டு வேறு ஒரு வங்கியில் கடன் வாங்க சென்றாலோ, கடன் அட்டை கேட்டாலோ, இந்த 'முன்கதை சுருக்கத்தின்' பேரில் கடன் நிராகரிக்கின்ற வாய்ப்பு உண்டு! 

அதாவது அவசர தேவைக்காக ஐம்பதாயிரம் தனிநபர் கடன் வாங்குகிறீர்கள்... மாதம் இரண்டாயிரத்து சொச்சம் தவணையை ஒன்றரை ஆண்டுகாலம் ஒழுங்காக கட்டி வருகிறீர்கள்... திடீரென்று ஒரு மாதம் உங்களால் கட்ட முடியவில்லை என்றாலும் உங்களுக்கு சிபில் லிஸ்டில் ஈசியாக அட்மிஷன் கிடைத்துவிடும்.  அதற்கு அப்புறம் நீங்கள் அந்த தவணைகளை ஒழுங்காக செலுத்தி இருந்தாலும், முறையான(!) கோரிக்கை / விண்ணப்பம் / கட்டணம் இல்ல்லாமல் உங்கள் பெயர் சிபில் பட்டியலில் இருந்து இறங்காது!  இது தெரியாமல் நீங்கள் உங்கள் மகள் கல்யாணத்துக்கு என்று இன்னொரு பெரிய தொகை லோன் வாங்க சென்றால் இந்த சப்பை காரணத்தை கூறி உங்களுக்கு ஒரு பெரிய நோ சொல்வார்கள்.   சொல்வது மட்டும் அல்ல, நம்மை எதோ மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தாவை பார்க்கிற மாதிரி பார்ப்பார்கள்.. அது தான் கொடுமை!

சரி, வங்கிக்கு என்று வங்கிகளின் நன்மைக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதே, நமக்கு என்று, நுகர்வோருக்கு என்று இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்றால் இல்லை.  வங்கி என்ன சொல்கிறதோ அதற்கு நாம் கட்டுப்படவேண்டும்.  அவர்கள் கூடுதல் வட்டியை பிடித்தாலும் நாம் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது.  வரி மற்றும் பிராசசிங் பீஸில் தவறு செய்த வங்கிக்கு நாம் கேள்விகள் கேட்டாலோ, வழக்கு தாக்கல் செய்தாலோ நமக்கு சிபிலில் கரும்புள்ளி குத்தி வைத்து விடுவார்கள்... ஜென்மத்துக்கும் அவசர தேவைக்கு கடன் கிடைக்காமல் அல்லாடி கொண்டு தான் இருக்கவேண்டும்.. ஒரு வங்கியும் நமக்கு லோன் தராது.

கிட்டத்தட்ட, வங்கிகளின் கூட்டமைப்புக்கு அடிமையாக இருந்தால், எதிர்த்து எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்.

இந்திய அரசில் நிதி துறை என்று ஒன்று இருக்கிறது... அந்த அமைச்சரவை இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் கொள்வதில்லை... இப்படி கடன் வாங்கியோரை வங்கிகள் படுத்தும் பாடு பற்றி கிஞ்சிற்றும் பதர்றப்படுவதில்லை... மாறாக, புது புது விதிகளை உருவாக்கி சாமானியர்கள் கடன் வாங்குவதை கடினமாக்குவதும், வங்கிகளின் வருவாயை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதுமாக மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது!

(கடன் அட்டை கதை இன்னும் சுவாரசியமான கதை... அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்)

ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை கொண்டவர்களின் ராஜ்ஜியம் என்பதை வைத்து பார்த்தால் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு..  வாழ்க ஜனநாயகம்!

11 comments:

  1. There are few forums and yahoo, google groups are there where lot of customers have shared their bad experiences with ICICI, HDFC banks on credit card, home loans

    ReplyDelete
  2. வாவ்! கூடிய மட்டும் வங்கிகளிடம் கை நீட்டாமல் இருப்பது நல்லது என்று சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  3. nalla anubavam. yorum pattikkaamal thaan kadan vangkukirom neengkal solluvathu pol ithai thamilil padiththu kaattinaarkal enru kotukkapokum panaththai ninaiththu kaiyeluththu idukirom.

    ReplyDelete
  4. democracy is where 51% of people take away the rights of 49%

    ReplyDelete
  5. மிகக் கொடுமையான அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது சதீஷ்...!! நானும் விரைவில் எழுதுகிறேன்..!!!

    ReplyDelete
  6. ஜனநாயகம் என்பது சகிப்புத்தன்மை கொண்டவர்களின் ராஜ்ஜியம் என்பதை வைத்து பார்த்தால் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.. வாழ்க ஜனநாயகம்!
    .............

    ஹ ஹா

    ReplyDelete
  7. Kuppan.. Yahoo!

    Please give me the links so that I could also learn many things from them!

    ReplyDelete
  8. Madurai Saravanan!
    Yaarum Padikkaamal alla.. Padikka vidamaattaarkal... athai padikkavum mudiyaathu...

    ReplyDelete

Printfriendly