Monday, February 22, 2010

தலை போல வருமா?

இன்னைக்கு தேதிக்கு அரசியல் துறையிலாகட்டும், சினிமா துறையில் ஆகட்டும் ரொம்ப பரபரப்பான விஷயம் முதல்வர் விழாவில் அஜித்தின் பேச்சு தான்!

அது சரியா தவறா என்கிற விவாதம் ஒருபுறம்... அது சரியாகவே இருந்தாலும் அவர் பதிலளிக்க தேர்ந்தெடுத்த களம் சரியா என்பது இன்னொரு புறம் என்று விவாதங்கள் பட்டையை கிளப்புகின்றன.

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் சினிமா விழாக்களுக்கு சினிமா பிரபலங்களை கட்டாயப்படுத்தி கலந்துகொள்ள வைக்க கூடாது என்பது அஜீத்தின் வேண்டுகோள்.  அதனை அத்தனை பட்டவர்த்தனமாக அந்த மேடையிலேயே போட்டு உடைப்பார் என்று யாருமே நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள்.

சினிமா துறைக்கு முதல்வர் சலுகைகள் கொடுப்பது, அதை காரணம் காட்டி அவருக்கு பாராட்டு விழா எடுப்பது, அந்த விழாவில் இன்னும் சில கோரிக்கைகள் வைப்பது, அதை முதல்வர் நிறைவேற்றுவது, மீண்டும் அதற்கு இன்னொரு பாராட்டு விழா எடுப்பது என்பது இப்போது ஒரு தொடர் வழக்கமாக ஆகிவிட்டது! 

இன்னும் சொல்லப்போனால், ஏதேனும் கோரிக்கையை அரசிடம் வைக்கவேண்டும் என்றால் பாராட்டு விழா எடுக்கவேண்டும் என்கிற நிலை வந்துவிட்டதாக தோன்றுகிறது!  அரசு ஊழியர் சம்மேளனம் கூட சில காலம் முன்பு அவருக்கு பாராட்டு விழா எடுத்து தான் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்!  வணிகர் சங்க பேரவையும் அப்படியே. 

ஆனால் தொடர்ச்சியாக பாராட்டு விழாக்கள் வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளுவது சினிமா துறை தான்.

அப்படியான நிகழ்வுகளுக்கு சினிமா பிரபலங்கள் கட்டாயமாக வருகை தரவேண்டும் என்று வற்புறுத்துவது, அப்படி வராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, தடை விதிப்பது போன்ற மிரட்டல்களால் ஆடி தான் போயிருக்கிறார்கள் எல்லோரும்.  ஆனாலும் என்ன செய்ய?  அப்படி வற்புருத்துவோர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவோ அரசுக்கு வேண்டப்பட்டவர்களாகவோ இருந்து தொலைப்பதால் பகைத்துகொள்ளவும் முடியாமல், சகித்துக்கொள்ளவும் முடியாமல் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டி இருக்கிறது!

இப்படியான நிலையில் தான் வந்து விழுந்திருக்கிறது வெந்த வார்த்தைகள் அஜீத்தின் உள்ளத்தில் இருந்து. 

அவரது கருத்து ஆயிரம் சதம் அங்கீகரிக்கப்படவேண்டியது என்பது எனது கருத்து! 

யாரையும் வற்புறுத்தி ஒரு விழாவில் கலந்துகொள்ள செய்வதோ, ஒருவரை பாராட்ட சொல்லுவதோ, அப்படி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுப்பதோ கண்டிப்புக்குறியது.  அவரவர் தொழிலை அவரவர் பார்க்கையில், அனாவசியமான வற்புறுத்தல்கள் இருக்கக்கூடாது.

மேலும், அரசிடம் ஒரு கோரிக்கை வைத்து அது நிறைவேறும் பட்சத்தில் அதற்கு கட்டாயமாக விழா எடுக்கவேண்டும் என்பதே கேலிக்கூத்து.  தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை என்பதை கூட உணரமுடியாமல், அரசின் செயல்களுக்கு அரசியல் சாயம் பூசி பார்க்கும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.  காரணம் இங்கே தான் அரசியலும் சினிமாவும் ஈருடல் ஓருயிராக இணைந்து இருக்கின்றன.

சினிமாவில் கால்வைத்தாலே சிலருக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது.  அவர்கள் அரசியலை தங்கள் சுய நலத்துக்காக வளைக்கும்பொழுது, அரசியல் வாதிகளும் அவர்களை தங்கள் சுய நலத்துக்காக வாளைக்கிரார்கள்.. இதிலென்ன தவறு? என்று கேட்போரும் உண்டு!

அஜீத், இந்த உள்ள குமுறலை பத்திரிகை பேட்டி வாயிலாகவோ, அல்லது முதல்வரை நேரடியாக சந்தித்தோ சொல்லி இருந்திருக்கலாம், விழாவை புறக்கணித்து இருக்கலாம், அதை விடுத்து இப்படி மேடையில் கொட்டி இருக்க தேவையில்லை என்றும் சில கருத்துக்கள் உண்டு!

அஜீத் பேசியது அஜீத்துக்காக மட்டும் அல்ல.  யாராலும் சொல்ல முடியாத அவஸ்த்தையை தான் அஜீத் அங்கே இறக்கி வைத்து இருக்கிறார்!  அதனால் தான் அவர் அதை கொட்டி தீர்த்தபோது கரகோஷம் விண்ணை பிளந்தது!

மேலும், பேட்டி, முதல்வர் சந்திப்பு போன்றவற்றில் அதை சொல்லி இருந்தால் அது மற்றும் ஒரு நிகழ்வாகவே மறைந்து போயிருக்கும். இப்போது இந்த விஷயத்துக்கு கிடைத்த முக்கியத்துவம் அப்போது கிடைத்து இருக்குமா என்பதும் சந்தேகமே! 

எனவே, சரியான இடத்தில், சரியான வேளையில், சரியான விஷயத்தை தான் அஜீத் செய்து இருக்கிறார்!

பொதுவாகவே அஜீத் துணிச்சலானவர் என்றும் மனதில் பட்டதை பட்டதுபோலவே பேசுபவர் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்!  அதை இந்த பேச்சின் பொது ஆணித்தரமாக உறுதி படுத்தி இருக்கிறார்!  யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்!

அரசியல் காரணங்களுக்காக வழிந்து குழைந்து பேசி பாராட்டி பேர் வாங்கும் பல புரட்சியாளர்கள், சிகரங்கள் எல்லாம் இருக்கையில் எந்த வித அனுகூலமும் எதிர்பார்க்கமால், பொது நோக்கத்துக்காக குரல் கொடுத்த அஜீத், என் மனதில்  எங்கேயோ உயரத்தில் போய்விட்டார்.

இனியாவது அரசியல் காரணங்களுக்காக சினிமா பிரபலங்களை வற்புறுத்துவது, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துவது, போன்றவை குறையவேண்டும்.. அதைவிட இந்த விழா எடுக்கும் வழக்கம் குறையவேண்டும்.

ஆனால், மாறாக சினிமா பிரபலங்களை அரசியல் பின்புலம் கொண்டோர் மிரட்டுவது, பகிரங்கமாக ஏசுவது போன்றவை தான் இப்போது நடந்து வருகிறது.  இதை எல்லாம் கண்டித்து தடுக்க வேண்டிய முதல்வர், சும்மா இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது! 

5 comments:

 1. அய்யா ஈழத் தமிழர்களுக்காக நடத்தும் போராட்டம் அரசியல் பிரச்சினையா??? காவிரிப் பிரச்சனைக்காக நடத்தும் போராட்டம் அரசியல் பிரச்சனையா>?>> இவரை பொறுத்தவரை சினிமா தவிர மற்ற எல்லாம் அரசியல் பிரச்சனை போலும்!!! என்ன தான் இருந்தாலும் இவர் தமிழன் இல்லைதானே!

  இவனை மாதிரி ஆளுகெல்லாம் வாழ்வது தமிழனை சுரண்டி.....இவன் படத்தை (மொக்க்கை) பார்க்க தமிழன் வேண்டும், இவன் சம்பாதிக்க தமிழன் வேண்டும்.......அதே தமிழனுக்கு ஏதேனும் பிரச்சனை வாருங்கள் என்றால் "நான் ஏன் வரணூம்" அப்படின்னு கேட்கிறான்.................

  அது சரி தப்பை எல்லாம் மக்கள் செய்திருக்கும் போது யாரை சொல்லி என்ன புண்ணியம்!

  ReplyDelete
 2. எந்த பிரச்சனை ஆனாலும் சரி, போராட்டத்தில் கலந்து கொள்ளுவதும் தவிர்ப்பதும் அவரவர் இஷ்டம். வருந்தி, வற்புறுத்தி இன்னாரை வைத்து தான் போராட்டம் நடத்தவேண்டும் என்று ஆசைப்படுவது முட்டாள்த்தனம். போராட்டம் என்பது பொது நோக்கில் இருந்தால், யார் வந்தாலும் வராவிட்டாலும் அந்த போராட்டம் வெற்றி பெற்றே தீரும். இவர் வந்தால் தான் போராட்டம் வெற்றி பெரும் என்று சொல்லுவது கேலிக்குரியது!

  மேலும், காவிரி, ஈழம் போன்ற போராட்டமல்ல அங்கே நடந்தது... சுய விளம்பரத்துக்கான ஒரு அரசியல் விழா.. அதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பது நியாயமான செயலே!

  காவிரி, ஈழம் போன்ற பிரச்சனைகளே ஆனாலும், அதில் யார் கலந்துகொள்ளவேண்டும் என நினைப்பது போராட்டத்தை ஏற்பாடுகள் செய்பவர்கள் அல்லர்... கலந்து கொள்ளுபவர்களே! இவரை வைத்து தான் அது போன்ற போராடவேண்டும் என்று சொல்லுவதை விட அந்த போராட்டத்தை கேவலப்படுத்திவிட முடியாது.

  இன்றைக்கு தமிழகத்தில் ஈழ போராட்டம் இழிவாகி போனதற்கு, சிலர் அந்த போராட்டங்களை வைத்து தங்களை தாங்களே விளம்பரப்படுத்தி கொள்ள முயன்றது தான் என்பது தாங்கள் அறிந்ததே!

  ReplyDelete
 3. சினிமாகாரங்களுக்கு தமிழ் உணர்வு ஒன்னும் கிடையாது. வரி விளக்கு குடுத்த அப்புறம் தான் தமிழையே பேர் வக்கரங்க. அவ்வளவு தமிழ் உணர்வு இவங்களுக்கு. இதுல தமிழன், பச்ச தமிழன் கத உட்ரங்க

  ReplyDelete
 4. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete
 5. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete

Printfriendly