Saturday, April 21, 2012

இட ஒதுக்கீடு அவசியமா? இல்லையா?

இட ஒதுக்கீடு – சமீப காலங்களில் என் நண்பர்களுடன் விவாதிக்கையிலெல்லாம் தவறாது இடம் பிடிக்கும் விஷயங்களுள் ஒன்று.




இட ஒதுக்கீட்டுக்கான அவசியம்!



முந்தைய காலங்களில், சாதீய ஆதிக்கம் அதிகமாக இருந்த கால கட்டத்தில், ஆதிக்க மனப்பான்மை கொண்ட சாதியினரால் ஒடுக்கப்பட்ட பிற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு (இனி நாம் பொதுவக பிற்படுத்தப்பட்டவர்கள் என்றே குறிப்பிடுவோம் – வசதிக்காக!) எந்த விதமான அடிப்படை உரிமைகளும் கிடைக்காமல் மறுக்கப்பட்டு வந்தது. கொத்தடிமை போன்று பணியாளர்களாக, வம்சாவழியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் படிக்கும் அதே பள்ளிக்கூடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பிள்ளைகளும் சரிசமமாக கல்வி பயிலுவதை பலரும் விரும்பவில்லை.அதனால் பிற்பட்டவர்களுக்கு அடிப்படை கல்வி மறுக்கப்பட்டு வந்தது.

ஆதிக்க சமூகத்தினரை பகைத்துக்கொள்ள விரும்பாத பலரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்து பிள்ளைகளை பள்ளிகளில் அனுமதிக்க தயங்கி வந்தனர். பெரும்பாலான பள்ளிகளின் கொடையாளிகளாக ஆதிக்க சமூகத்தினர் இருந்து வந்தது ஒரு காரணம்.

ஒரு சமூகம் முன்னேறுவதற்கான முக்கிய தேவை கல்வி அறிவு தான். ஆனால் அதை கூட பெற முடியாதபடிக்கு ஆதிக்க சமூகத்தின் கட்டுப்பாடுகள் இருந்ததால், அரசு தலையிடவேண்டியதாயிற்று. அப்போதைய நீதிகட்சி, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வகுப்புவாரி விகிதாச்சார பிரதிநிதித்துவ சட்டம் என ஒன்றை கொண்டு வந்தது. அது தான் சமூக நீதிக்காக வித்திடப்பட்ட முதல் விதை.

பள்ளிகளில் குறிப்பிட்ட இடங்களை கட்டாயமாக பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என சட்டம் இயற்றியது அரசு. இதன் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கிடைக்க துவங்கியது. இப்படி தான் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.



இட ஒதுக்கீடு – இப்பொழுது!



அடிப்படை கல்வியில் துவங்கிய இட ஒதுக்கீடு, உயர் கல்வி, வேலை வாய்ப்பு என எல்லா இடங்களிலும் அமலாக்கப்பட்டது. அவ்வப்போது ஆட்சியிலிருந்தவர்களின் கொள்கைகளை அனுசரித்து மெல்ல மெல்ல விரிவாக்கப்பட்டு இப்பொழுது 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் உள்ளது. இது குறித்தான் போராட்டங்கள், சட்ட சர்ச்சைகள், கட்சிகளின் நிலைப்பாடுகள் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. நாம், சுருக்கமாக, மிக சுருக்கமாக, இட ஒதுக்கீட்டின் தாக்கத்தை பற்றி விவாதிப்போம்!



தன் பிள்ளை படிக்கும் இடத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்து பிள்ளை சரி சமமாக கல்வி பயில்வதை விரும்பாத ஆதிக்க சமூகத்தினரின் எதேச்சதிகாரத்தினை கட்டுப்படுத்தி, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கும் உரிய கல்வி உரிமையை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இட ஒதுக்கீடு முறை. இதன் பின் விளைவாக பலரும் தங்கள் சாதியை மறைத்து பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறையின் பலனை அனுபவிப்பதற்காக, போலி சாதி சான்றிதழ் பெறுவது வாடிக்கை ஆனது. இது உண்மையான இட ஒதுக்கீட்டு உரிமைதாரர்களுக்கு பாதிப்பை உருவாக்கியதில் வியப்பில்லை. மேலும், சலுகை கிடைப்பதால், அதை அனுபவிக்க அனைவரும் ஆசைப்பட்டதால், கால காலத்துக்கும் அவர்கள் சாதி சான்றிதழை கைகொண்டிருக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. சாதி தவிர்க்கமுடியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டது. கல்வி சாலைகளில் குழந்தைகளை சேர்க்கும் பொழுதே, சலுகைகளை அனுபவிக்க விரும்புபவர்கள் சாதி குறிப்பிடவேண்டியதாயிற்று.



இன்னொரு புறம், என் பிள்ளை சரியாக படிக்க மாட்டார், அதனால் அவனுக்கு சலுகை இடம் தேவையாயிருக்கிறது, அதனால் சாதி அடிப்படையில் அவனுக்கு முன்னுரிமை வேண்டும் என்கிற நோக்கில் சாதியை உயர்த்திப்பிடிப்பதும், இட ஒதுக்கீட்டு முறையை நீட்டித்துக்கொண்டிருப்பதுமான ஒரு நிலை தோன்றிவிட்டது.



எனவே, இட ஒதுக்கீடு சலுகைகளை அனுபவிப்பதற்காக சாதியும், சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபடாதிருப்பதால் இட ஒதுக்கீடு முறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆதாரமாக நிலைத்துவிட்டது.



இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்றொரு கோரிக்கை விடப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளவும் பட்டது. பொது துறை பணிகளில் மட்டுமன்றி, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறை வேண்டும் எனவும் ஒரு கோரிக்கை உள்ளது. சில இடங்களில் அது அமலாகவும் செய்யப்பட்டது.



திறமை, அறிவு, தனிப்பட்ட குணநலன் போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டிய பதவியமர்த்தல்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டதின் விளைவுகள் கொடூரமானவை. அதனால் பாதிக்கப்பட்ட பல நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை கூட முடக்கி இருக்கின்றன.



இன்னொரு பக்கம், சமூகத்தின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை கணக்கில் கொள்ளாமல் விட்டதால், மற்றொரு விபரீத நிலைப்பாடும் ஏற்பட்டது.



முன்னேறிய வகுப்பினர் என்பதாலேய பல உரிமைகளும் கிடைக்காமல், அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத ஏழ்மை நிலையில் பரிதவிக்கும் முன்னேறிய வகுப்பினரையும், பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தும், பிற்பட்டோருக்கான சலுகைகளை மேலும் மேலும் அனுபவித்து சொகுசு வாழ்வு வாழும் படாடோப பிற்பட்டோரையும் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறது, இந்த இட ஒதுக்கீட்டு முறை.



இதை முன்பே உணர்ந்து தான், மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், இட ஒதுக்கீடு முறையை சாதீய அடிப்படையில் அல்லாமல் பொருளாதார அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



ஆதிக்க சாதியின் அடக்குமுறை இப்போது பெரும்பாலான அளவில் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதாலும், அரசு பல்வேறு பள்ளிகளும், கல்லூரிகளும் ஏற்படுத்தி அனைத்து சமூகத்தினருக்கும் தயக்கமின்றி கல்வி பயிலும் உரிமையை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாலும், சாதிய அடிப்படையிலான கல்வி உரிமை என்பது அவசியமற்றது என அவர் கருதினார்.



மற்றொரு பக்கம், பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினரின் குழந்தைகள், போதிய கல்வி பெற முடியாமல் தவிப்பதையும், வசதி படைத்த பிற்படுத்தப்பட்ட சமூக குழந்தைகள், சலுகை அடிப்படையில் கல்வியை அனுபவித்து வருவதையும் அவர் கண்டார்.



அதனால் தான், பொருளாதார ரீதியாக பிந்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொன்னார். ஆனால், பல்வேறு காரணங்களால், அது நிறைவேற்றப்படாமலேயே போய்விட்டது.



இட ஒதுக்கீடு – எனது பார்வையில்!



கல்வி தான் ஒருவனின் வளர்ச்சிக்கான ஆதார அடிப்படை. அது கிடைப்பதற்கான தடையாக சாதி அடக்குமுறை இருந்ததால் தான் இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது!



ஒருவனுக்கு கல்வி என்பது கைவரப்பெற்று, சுயமாக சிந்திக்கும் திறன் வந்துவிட்டால், தனது வாழ்வை தீர்மானித்து சரியான திசையில் தன்னை பயணித்து கொள்வதில் அவனுக்கு எந்த சிரமும் இருக்காது.



எனவே, கல்வியில் இட ஒதுக்கீடு முறை என்பது இருந்தாக வேண்டிய நிலை இன்னமும் இருக்கிறது. அது சாதீய அடிப்படையிலா, பொருளாதார அடிப்படையிலா, அல்லது சாதீய அடிப்படையில் கிரீமி லேயர் பகுப்புக்களை புகுத்தியா என்பது விவாதத்துக்குரிய விஷயம் எனினும், இட ஒதுக்கீடு முறை என்பது தற்போதைய சமூக சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று.



ஆனால், அதே நேரத்தில், உயர்கல்வி, பணியிடம் போன்றவற்றில் இட ஒதுக்கீடு முறை அவசியமற்றது என கருதுகிறேன். பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிபெற்ற அனைவரும் ஒரே தகுதியுடையவர்களாக கருதி, அதற்கு மேற்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் பொதுவாக போட்டியிடுவது தான் அவர்களது தகுதியை சீராக்குவதாகவும், உயர்கல்வி தரம், பணியிட வெளிப்பாடு தரம் ஆகியவை மேம்படவும் உதவும்.



நமக்கு நாமே, பிற்படுத்தப்பட்டவர்களால், இவ்வளவு தான் மதிப்பெண் வாங்க முடியும், இவ்வளவு தான் திறமை இருக்கும் என குறைத்து மதிப்பிட்டு, அவர்களை கட்டுப்படுத்தி வைப்பது, தரத்தை குறைப்பதோடு, அவர்களது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடக்கூடும்.



அடிப்படை கல்விக்கு மட்டும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி, அவர்களுக்கு உரிய தரமான கல்வியை போதித்து, எல்லா சமூகத்தினருடனும் சரி சமமான கல்வியறிவை பெறுவதற்கான வழி செய்யும் வரை மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் எனவும், அதற்கு மேலான நிலைகளில், அது உயர்கல்வியாகட்டும், வேலை வாய்ப்பு ஆகட்டும், ஒரே நிலையிலான போட்டியின் அடிப்படையில் போட்டியிட வாய்ப்பினை வழங்கி அவர்களது தன்னம்பிக்கையையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பது தான் எனது கருத்தாகும்.

















3 comments:

  1. ஒருவன் இடஒதுக்கீடு முறையில் கல்வி கற்று விட்டதாலயே அவனின் சமூக நிலைவுயரும் என்பது இல்லை. தானே புயலால் பாதிக்கபட்ட முந்திரி செடி நட்டால் மட்டும் வுயர்வுஇல்லை, அதற்கு 25 வருடம் காத்திருக்க வேண்டும் பயன்கிடைக்க.
    2000 ஆண்டுகளால் அடக்கப் பட்ட சமூகம் இந்த 50 வருடங்களில் தான் ஆங்காங்கே தலைஎடுக்கிறது
    கல்வியோடு கூடிய பொருளாதார சுதந்திரம் இன்னும் பல இடங்களில் அரும்பவே இல்லை. ஐஐடி பொறுத்தவரை இன்னும் கல்வியே முழு அளவில் எல்லாருக்கும் கிடைக்கவில்லை

    ReplyDelete
  2. @vijay: Were Devars, Vanniyars and Gounders suppressed for 2000 years ? I totally agree to giving reservation to Dalits (or let us leave that aside), but there is not an iota of rightness in giving reservations for the three castes that I mentioned on the basis of suppression.

    ReplyDelete
  3. நன்றி சகோ. அருமையா அலசி பார்த்து நடைமுறை சிக்கல்களையும் தீர்வும் சொல்லியிருக்கிறீர்கள் . நானும் இதையே 100 % ஆதரிக்கிறேன். வாழ்த்துகள்

    ReplyDelete

Printfriendly