Wednesday, November 11, 2015

இந்திய பொருளாதாரம் – தேறுமா?

செக்யூலரிசம், மாட்டுக்கறி, சோட்டாராஜன், சிறுபான்மையினர் நசுக்கல், கருத்து சுதந்திரம், சாகித்ய அகாடமி, பீஹார் தேர்தல் போன்ற பிற பிற செய்திகளால் நம்ம கவனம் சிதறி சிக்குண்டு கிடந்ததில் கவனத்தில் இருந்து கழன்று போன ஒரு விஷயம் இந்திய பொருளாதாரம்.

இந்திய பொருளாதாரத்துக்கு என்ன? நல்லாத்தானே இருந்தது? உலகம் முழுதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில் கூட இந்திய பொருளாதாரம் தெளிவாகவும் உறுதியாகவும் வளர்ச்சியான நிலையிலும் தானே இருந்தது? இப்போதோ, உலக பொருளாதாரத்தில் எந்த சிக்கலும் இல்லை. மந்த நிலை கூட இல்லை. அப்படி இருக்க என்ன பிரச்சனை என கேட்பவர்களுக்கான ஒரே பதில், அப்போது இந்திய பொருளாதாரம் இருந்தது பொருளாதாரத்தில் சிறந்த மன்மோஹன் & சிதம்பரம் ஆகிய மேதைகளின் கைகளில் என்பது தான். இப்போதைய நிலைமை வேறு.

பாஜக அரசு பதவி ஏற்று இந்த 16 மாதங்களில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளோ, பொருளாதார கொள்கைகளோ, அவ்வளவு ஏன், பொருளாதாரத்துக்கான அமைச்சரவையை கூட்டுவதோ அப்படி கூட்டி பொருளாதார நிலையை ஆய்வு செய்து முடிவெடுப்பதோ எதுவுமே நடைபெறவில்லை. இதன் பலன்

 • தொடர்ந்து பத்தாவது மாதமாக ஏற்றுமதி குறைந்திருக்கிறது
 • ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தை விட சராசரியாக 20% ஏற்றுமதி குறைவு
 • உள்நாட்டு சில்லறை பணவீக்கம் அபரிமிதமாக உயர்ந்திருக்கிறது.
 • மூடீஸ், ரிசர்வ் வங்கி, போன்றவை பொருளாதார அபாயத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருப்பதாக எச்சரித்தும் அது பற்றிய தீவிரமான விவாதமோ தடுப்பு நடவடிக்கையோ எதுவும் இல்லை.
 • அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது
 • சேவை வரி, பெட்ரோலுக்கான உற்பத்தி வரி ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைத்து உப பொருட்களின் விலையும் கூடி இருக்கிறது.
 • உள்கட்டமைப்பு திட்டங்கள் முதலீடுகள் எதுவும் இல்லை.
 • புதிய தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு திட்டங்கள் இல்லை.
 • நீண்டகால நிலுவையில் இருக்கும் ஜி.எஸ்.டி குறித்த இறுதி வரைவு அறிக்கை கூட இதுவரை இல்லை.
 • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற்று கொண்டு வருவதை தடுக்கும் வழிமுறைகள் காணப்படவில்லை
 • தொழில் செய்வதற்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய முன்வரவில்லை.
 • வங்கிகளின் வராக்கடன் வசூலுக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
 • ஏற்கனவே வங்க்கிகளை ஏமாற்றிய கடந்தாரர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்கும் நடவடிக்கை தடுக்கப்படவில்லை.


இவற்றால் என்னவாகும்?சுருக்கமாக சொன்னால்

அரசு மக்களிடம் இருந்து அபரிமிதமாக வரியை வசூலிக்கிறது
அந்த பணத்தை முதலீட்டு திட்டங்களுக்கு, சமூக நல திட்டங்களுக்கு  பயன்படுத்தாமல் செலவு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது.
தொழிலதிபர்களுக்கு சலுகைகளும் கடன் தள்ளுபடிகளும் மேலும் கடன்களும் தருகிறது.
பிற நாடுகளுக்கு நீண்டகால அடிப்படையில் கடன் தருகிறது.
அதாவது நம்மிடம் அதிகமாக வசூலித்து தொழிலதிபர்களையும் பிற நாடுகளையும் வாழவைக்கிறது. நமக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.

அப்படியும் பணம் போதாததால், பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை பெற்று அதை விற்று காசாக்கி அதையும் தொழிலதிபர்களுக்கு கொடுப்பதற்கான கோல்டு மானிடைசிங் ஸ்கீம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த தங்கத்துக்கான விலையை சில ஆண்டுகள் கழித்து நமக்கு கொடுப்பார்களாம். அதாவது ஆசை ஆசையாக நீங்கள் வாங்கிய நகைகளை அரசிடம் ஒப்படைத்தால் அதை வைத்து அவர்கள் திட்டங்களை செயல்படுத்தி கொள்வார்களாம்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பொருளாதார மந்த நிலை வந்தபோதும், மக்களிடமிருந்து வசூலித்து பொருளாதாரத்தை சமாளிப்பது என்கிற அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கவேயில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். இப்போதோ நிர்வாக திறமையும் பொருளாதார அறிவும் இல்லாத ஒரு அமைச்சரவை நிதி நிர்வாக சிக்கலை சமாளிக்க பொதுமக்களின் சொந்த தங்கத்தை கேட்கிறது.

இந்த நிலைமை நம் தொழில்வளர்ச்சி, விவசாயம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு ஆகியவற்றை சீர்குலைத்துப்போட்டதுடன், வேலையின்மையையும் அதிகரித்துவிட்டது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என்பது தான் பலரது அச்சம்.

ஏன் இதை கணிக்கவோ தடுக்கவோ அரசு முன்வரவில்லை என்று கேட்டால், அவர்களுக்கு அது பற்றி தெரியாது அதனால் அக்கறை கொள்ளவில்லை என்று சொல்லலாம். அமைச்சருக்கும் பிரதமருக்கும் பொருளாதாரம் புரியவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட இப்படியான ஒரு அபாயகரமான சூழல் இருப்பதாக பொருளாதார மேதைகள் சொல்லும்போது அதை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட துறை வல்லுனர்களை கூட்டி விவாதித்து ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் பொருளாதார மேதைகள் சொல்லுவதை காதில் போட்டு கொல்லாததுடன், அவர்கள் எதிர்க்கட்சிகள் அதனால் அப்படி சொல்லுகிறார்கள் என்று கேலி செய்து கொண்டிருக்கிறது அரசு.

இப்போது சிறிய குறியீடுகள் மட்டும் தெரிகின்றன. ஆனால் அடுத்த சில மாதங்க்களில் சீர் செய்யமுடியாத அளவுக்கு மிக பெரிய பொருளாதார சரிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

நாம் செய்யக்கூடியது என்பது, பணத்தை சிக்கனமாக செலவு செய்வது, வேலையை எப்பாடுபட்டாவது தக்கவைத்துக்கொள்ளுவது  என்பது மட்டும் தான்.


தயாராகிக்கொள்ளுங்கள் தோழர்களே!

No comments:

Post a Comment

Printfriendly