Thursday, November 26, 2015

அண்டர்ஸ்டாண்டிங் அமீர்கான்

ந்த வாரம் எல்லோருடைய கையிலும் சிக்கின ஆடு அமீர் கான் தான். “இப்போ இந்தியாவுல நடக்குற விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது இந்தியாவை விட்டு போயிடலாமான்னு என் மனைவி கூட என்கிட்டே கேட்டாங்க”ன்னு அவர் பேசுனது தான் பரபரப்புக்கு காரணம். அமீர் கான் நாட்டை விட்டு போகணும்னு பலரும் கொடி புடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சிலர் இங்கே தானே சம்பாதிச்சாரு? அப்பல்லாம் இந்த நாடு நல்ல நாடுன்னு தெரிஞ்சுச்சா அவருக்குன்னு குதர்க்கமா கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.

அமீர் கான் என்ன பேசினார், என்பதை தெளிவா தெரிஞ்சவங்க எல்லாரும் அவரை ஆதரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானும் அதை ஆமோதிச்சிருக்கார். அப்படி என்ன தான் பேசினாரு அமீர்? ஏன் இந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்?


பத்திரிக்கை துறையில் சிறந்த சேவை செய்தவர்களுக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா நடந்துச்சு. அதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் கலந்துந்துகிட்டு இருந்தார். அங்கே அவர் முன்னிலையில் தான் அமீர் பேசினார். அமீரின் துணிவும், தேச பக்தியும் எல்லோரும் அறிந்ததே. ஒரு சாதாரண இந்தியனா அவர் தனது உணர்வுகளை அங்கே வெளிப்படுத்தினார்.

“ஒரு சாதாரண மனிதனா, இந்தியா குடிமகனா, இப்போது இந்தியாவில் நடைபெறும் சில சம்பவங்களின் செய்திகளை படிக்கும்போது ரொம்ப கவலையா இருக்கு. ஒன்று இரண்டல்ல நாடு முழுவதும் நிறைய சம்பவங்கள் அது மாதிரி நடப்பது அதிர்ச்சி அளிக்க கூடியதா இருக்கு.

வீட்டில் மனைவிக்கிட்டே பேசிட்டிருக்கும்போது அவரும் கூட இந்த சம்பவங்களின் கவலையை வெளிப்படுத்தினாரு. குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி நாம இந்தியாவை விட்டு போயிடலாமான்னு கூட அவர் என் கிட்டே கேட்டிருக்காரு.

சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே வருவது ஏன் நமக்கு கவலையை தருதுன்றது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உள்ளத்துக்கும் நல்லாவே தெரியும். தினசரி செய்தித்தாள்களை திறக்கவே பயமா இருக்கிற ஒரு சூழல் உருவாகிட்டு இருக்கு.

மக்கள் அரசை தேர்ந்தெடுப்பது தங்களை பாதுகாப்பாக வாழவைப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தான். அது மாநில அரசோ மத்திய அரசோ, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நம்மை அந்த அரசு காப்பாற்றும்ன்ற அந்த நம்பிக்கையை மக்கள் அரசின் மீது வெச்சிருக்காங்க. அதை அரசு உணர்ந்து நடந்து, தக்க நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்கினால் தான் அந்த பாதுகாப்பு உணர்வு மக்களுக்கு கிடைக்கும்”

இதான் அவர் பேசியதின் சாராம்சம். இதில் எந்த தவறும் இருப்பதா எனக்கு தெரியலை. 

இத்தனை வருஷமும் இப்படி ஒரு சம்பவம் நடக்கலையா? 2008 ஜிகாதி தாக்குதல், 2002 குஜராத் வன்முறை, 1992 பாப்ரீ மசூதி சம்பவம்னு பலதும் நடந்த போது அமீர் என்ன செஞ்சிட்டு இருந்தாருன்னெல்லாம் ரொம்ப புத்திசாலி தனமா கேள்விகள் கேட்டுட்டு இருக்காங்க சிலர். 

இதில் எனது பார்வையை நான் இப்படி வைக்க விரும்புறேன்:

ஒரு ஜனநாயக அரசு என்று ஒன்று இருந்தால் அது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எல்லோரையும் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கு.

எல்லா காலகட்டத்திலும் எல்லா அரசிலும் இப்படியான சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் நடந்துட்டு தான் இருக்கு. ஆனா அப்போதெல்லாம் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, கண்டிப்பது, எச்சரித்து அறிக்கை விடுவது ஆகியன இருக்கும்.

தமிழகத்திலேயே கூட அதிமுகவினர் ஒரு வன்முறையில் ஈடுபட்டாலோ, தகாத முறையில் பேசினாலோ உடனே ஜெயலலிதா அதை கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்னு ஒரு அறிக்கை விடுவார். சில சம்பவங்களில் அப்படி சொந்த கட்சியினர் மீதே நடவடிக்கை எடுத்து கைதும் செய்திருக்கிறார். சொந்த கட்சி காரங்க என்பதற்காக அவர்களை கண்டுகொள்ளாமல் விட்ட சம்பவங்கள் மிக மிக குறைவு. இப்படியான நடவடிக்கைகள் பெயரளவுக்கு இருந்தாலும் கூட போதும். அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு நமக்கு துணையாக இருக்கிறது. தப்பு செஞ்சவனுக்கு தண்டனை கிடைக்கும். நம்மை பாதுகாக்க அரசு இருக்குனு ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கும். அப்பாலிக்கா கட்சி காரங்களை விடுதலை செஞ்சுருவாங்கன்றது வேற விஷயம். ஆனாலும் மக்களுக்கு அரசின் மீது ஒரு நம்பிக்கை வரும்.

ஆனா சமீபத்திய நிகழ்வுகளில் நாடு முழுதும் பல பல சம்பவங்கள் நடந்த போதும், மத்திய அரசோ பிரதமரோ அதை கண்டிக்கவோ, எச்சரிக்கவோ இல்லை, எந்த நடவடிக்கைக்கும் உத்தரவிடவில்லை. அதை விட கொடுமை அத்தகைய விஷயங்களை மறைமுகமாக ஆதரிக்கவும் செய்தது தான். இது தான் இங்கே வித்தியாசம். இதுவரை இருந்த அரசுகள் எல்லா சம்பவங்களிலும் நடவடிக்கை எடுத்தது. கண்டித்தது. இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவற்றை ஊக்குவிக்க தொடங்கி இருக்கிறது. இதை கவனிக்கும் மக்கள் அரசின் மறைமுக உதவியோடு தான் இப்படியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என நினைக்க கூடும். அது தான் இப்போது இந்தியாவில் நிலவும் பாதுகாப்பின்மைக்கான முக்கிய காரணம்.

இந்திய பத்திரிக்கைகள் எல்லாம் இப்போது நெருக்கடி நிலை காலகட்டம் மாதிரி கட்டுப்படுத்தப்பட்டு நாட்டில் நிலவும் பல செய்திகளை வெளியிட முடியாமல் ஒடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. நாடு முழுதும் நடைபெற்ற பல பல தாக்குதல்களில் பெரிய அளவில் நடைபெற்ற ஒன்றிரண்டு தவிர வேறு எதையும் பத்திரிக்கைகள் வெளியிடவில்லை. ஆனால் அவற்றில் பல சம்பவங்களை மனிதாபிமான உணர்வுள்ள சில  வெளிநாட்டு பத்திரிக்கைகள் தொகுத்து வெளியிட்டிருக்கின்றன. அதை படித்தால் இந்தியாவில் இப்போது நிஜத்தில் எவ்வளவு பயங்கரமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது புரியும்.

இந்த அரசில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவமும் நடந்துகொண்டிருப்பதை கவனித்து இருப்பீர்கள். இதுவரை சிறுபான்மை மதத்தினரான முஸ்லீம்கள் கிறித்துவர்கள் ஆகியோர் மீது நடந்து வந்த தாக்குதல்களுக்கு இணையாக இப்போது இந்த அரசில் ஹிந்து மதத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தினர் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. நம்முடைய பெருமதிப்பிற்குரிய தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை போல, ஆதிக்க வர்க்க இந்துக்கள் பிற இந்துக்களை ஒடுக்கி தங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய ஒரு சூழலை மெல்ல மெல்ல இந்த நாட்டில் உருவாக்கி வருவதை நாம் இப்போது காண முடிகிறது. எந்த பாவமும் அறியாத பிஞ்சு குழந்தைகள் இருவரை அவர்கள் தலித்துக்கள் என்கிற காரணத்துக்காகவே எரித்து கொன்றது அதில் ஒரு சாம்பிள் தான்.

இந்தியா உயர் வகுப்பு இந்துக்களின் நாடாக மாற்றபட்டு வருவதும், அதற்கான நடவடிக்கைகளில் சில அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதும், அந்த அமைப்புக்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், மக்களிடம் இதுவரை இருந்து வரும் சமத்துவத்தை குலைக்கும் செயலாகவே காண வேண்டி இருக்கிறது. அதை ஒரு அரசே ஆதரிப்பது தான் மிகப்பெரிய கொடுமை. இந்த விசித்திர நிலைமை தான் மக்களுக்கு அமீர்கான் சொல்லும் அந்த பாதுகாப்பின்மையை கொண்டு வந்திருக்கிறது.

பல கலைஞர்கள் அறிஞர்கள் அரசின் மீதான தங்களது அதிருப்தியை தெரிவிக்க தங்களின் விருதுகளை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள். அப்படியான எதிர்ப்பு மனநிலைக்கு காரணம் என்ன என கண்டறிந்து அவர்களை அழைத்து சமாதானம் செய்து அவர்களது உணர்வுகளை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து அவர்களது கவுரவத்தை காக்க வேண்டிய அரசு அதை எதையும் செய்யாமல், அவர்களது செயலுக்கு உள்ளர்த்தமும் அரசியல் சாயமும் பூசி கேலி செய்து கொண்டிருக்கிறது. இது பொறுப்பாகவும் தெரியவில்லை முதிர்ச்சியான நிர்வாகமாகவும் தெரியவில்லை.

இந்திய அரசு இந்திய மக்களுக்கான அரசு எனில் இந்நேரம் யோகி ஆதித்யநாத் எம்பி, ஹிந்து மகாசபை, சிவசேனா எம்பி வீச்சாரே, பாஜக எம்பி சாத்வி பிராச்சி, உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் போன்ற பலரையும் இந்நேரம் எச்சரித்து இருக்கவேண்டும். இந்திய மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யாரையும் அனுமதிக்கமுடியாது என உறுதியாக அறிவித்து இருக்கவேண்டும். இந்திய அரசு இந்திய மக்களுக்கான அரசா, உயர் வர்க்க இந்துக்களுக்கான அரசா என்பதே இப்போது குழப்பமாக இருக்கிறது. இந்த நிலை தான் நாட்டில் பலருக்கும் இந்தியா பாதுகாப்பான நாடு தானா என்கிற எண்ணம் தோன்ற காரணம்.

சகிப்புத்தன்மை என்பது ஒரு மெல்லிய கோடு. இந்தியாவை நேசிப்பவர்கள் அதன் இந்தப்பக்கம். மதத்தை நேசிப்பவர்கள் அந்த பக்கம். அமீர்கான் இந்தப்பக்கம். நான் இந்தப்பக்கம். 

நீங்கள்??
3 comments:

 1. அருமையான அலசல். 100% தங்களுடன் உடன்படுகிறேன்.

  M. செய்யது
  Dubai

  ReplyDelete
 2. நாட்டு மக்களுக்காகத்தான் அரசு...
  அரசின் செயல்பாடுகள் தவறாக இருப்பினும் அவர்கள் திருந்துவார்கள்... திருந்த வேண்டும்... நாம் அவர்களுக்கு பாடம் கற்பித்தால் கண்டிப்பாக திருந்துவார்கள்...
  அதை விடுத்து நாட்டை விட்டுப் போவேன் என்று டக்கால்டி காட்டுவது இந்த சினிமாக் கலைஞர்களுக்கான ஒரு துருப்புச் சீட்டுத்தான்...
  சகிப்புத் தன்மை கவலையில் எந்த விவசாயியும், கூலித் தொழிலாளியும் நாட்டை விட்டுப் போவேன் என்று சொல்வதில்லை... என் நாடு... ஆளும் அரசு சரியில்லை என்றால் அதை மாற்றுவோம் என்ற உறுதி கோடிகளில் புரள்பவர்களுக்கு வருவதில்லை...

  நான் மெல்லிய கோட்டின் மேல்... மனிதத்தின் பக்கம் மட்டுமே... மதத்தின் பக்கம் இல்லை...

  ReplyDelete
  Replies
  1. கலைஞர்கள் தாங்கள் 'வாங்கிய' விருதை திரும்ப கொடுக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இந்தியா உயர்சாதி இந்துக்கள் நாடாக மாறுகிறது என்பது கட்டுக்கதை. அடித்தட்டு சாதியிலிருந்து வந்த மோதி எப்படி இதை செய்வார்கள்? இது இந்துக்கள் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வீண்முயற்சி.

   இப்ப பத்திரிகைகள் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறதாம். நல்லா இருக்கு. இது காங்கிரஸ் கலாசாரம். இந்த பழங்கதையை விட்டு வேறு கதை புனையுங்கள்.

   முந்தைய காலங்களில் ஒரு யூசூப் கான் திலிப் குமாராகவும், மகஜபீன் பானு மீனா குமாரியாகவும் மாறி வெற்றி பெற வேண்டி வந்தது. இப்போது கான்களை கான்களாகவே இந்தியர்கள் மத பாகுபாடின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு இந்த கான்கள் அருகதை உள்ளவர்களா என்பது வேறு விவாதம்.

   இந்தியா ஒரு pluralistic society என்பதில் எவனது சர்டிபிகேட்டும் தேவையில்லை.மும்பை சித்தி விநாயகர் கோவிலின் நிர்வாகத்தின் தலைவராக இஸ்லாமியரான அந்துலே நியமிக்கப்பட்டார். இதை reciprocal ஆக நினைத்து பார்க்க முடியுமா?

   ஆமிர் கான் போன்ற சிறுமனம் படைத்தவர்கள் ஆனால் சமூகத்தில் துரதிர்ஷ்டமாக உயர் அந்தஸ்து உள்ளவர்கள் ஒரு public forum ல் சாதாரண குடிமகனாக அப்பாவித்தனமான கேள்விகள் கேட்க முடியாது. அப்படியானால் சவுதி அரசு பெண் உரிமை பற்றி ஹஜ் போகும்போது ரியாதில் கேட்டு பார்க்கட்டுமே? இந்து கடவுள்களை இழிவு படுத்தி பி.கே படம் மூலம் 300 கோடி சம்பாதித்த ஆமிர் அதில் ஒரு காட்சியை இஸ்லாத்தை விமர்சித்து எடுத்து பார்க்கட்டும், அப்போது தெரியும் what is real intolerance and insecurity! இன்று நம்மிடையே வியாக்கியானம் செய்ய ஆமிர் கான் உயிரோடு இருக்க மாட்டார்.

   கேரளத்தில் தவறுதலாக இஸ்லாம் குறித்த ஒரு பரிட்சை கேள்வி கேட்டாரென்று ஒரு கிறித்தவ
   பேராசிரியருக்கு எதிராக பத்வா கொடுக்கப்பட்டு அவர் கை வெட்டப்பட்டது.அப்பொழுது ஒரு சத்தமும் காணோம்.ஷாகி இமாம் தன்இல்ல திருமணத்திற்கு அழைத்தது இந்திய பிரதமரை அல்ல பாகிஸ்தான் பிரதமரை. அப்போது கானுக்கு இந்தியா இனித்தது. வெட்க கேடு!!

   மும்பை குண்டு வெடிப்பு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்புகள் இதில் எல்லாம்எவனும் அவார்ட் வாபஸ் செய்யவில்லை. Raza academy யினர் செய்த அமர்ஜவான் ஜோதி அவமதிப்புக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்காக உத்தமர்கள் ஊர்வலம் சென்ற போது ஆமிர் அமைதி காத்தார், இப்போது என்ன வந்துவிட்டது?

   ஆமிர் ஒன்று செய்யலாம் -உலகத்திலேயே பாதுகாப்பான நாடுகளான சவுதி, சிரியா,ஈராக் போன்ற ஏதாவது ஒரு நாட்டுக்கு போகலாம்.அப்போது பேகம் கிரண் ராவ் 'வெளியில் போகவே' பயப்பட மாட்டாள்

   நண்பரே உபதேசங்களை உங்களிடமிருந்து வைத்து கொள்ளுங்கள். 'வசுதெய்வ குடும்பகம்' என்பது எமது மூதாதையரின் 5000 ஆண்டு பாரம்பரியம். மதச்சார்பின்மை எங்கள் மாண்பு.

   சகிப்புத்தன்மை என்பது ஒரு மெல்லிய கோடு. ஒத்து கொள்கிறேன். அதனால்தான் கான் போன்றவர்கள் அதை அழிக்க முயல்கிறார்கள் . ஒரு ஆழமான, அழிக்க முடியாத கோடு கிழிக்கும் தருணத்தை கான் போன்றவர்கள் செய்து விடுவார்கள் என நம்புவோம். இந்தியாவை நேசிப்பவர்கள் இந்த பக்கம். அமீர்கான் போன்றவர்கள் அந்தப்பக்கம்.

   ஜெய் ஹிந்த்

   Delete

Printfriendly