கார்த்திகை
மாதம் போனால் கடும் மழை இல்லையே என்பதாலோ என்னவோ கார்த்திகை மாதத்திலேயே சென்னையில்
மொத்தமாக கொட்டி தீர்த்திருக்கிறது ஒரு பெருமழை.
பருவமழை
பொய்க்கத்தொடங்கிய போது மழை ஏமாற்றிவிடுமோ என்று நமக்குள் இருந்த வருத்தம், மேலடுக்கு
சுழற்சியாலும், காற்றழுத்த தாழ்வு மண்டலங்களாலும் சற்று
மறைந்தது.. அதன் அதீதத்தை இப்போது பார்க்க நேர்கையில் வருத்தம் கொடும் வருத்தமாக
மாறிபோயிருக்கிறது.
வரலாறு
காணாத மழை என நாளிதழ்கள் சொன்னாலும் வரலாற்றில் இப்படியான மழையை தமிழகம் அவ்வப்போது
சந்தித்து வந்தே இருக்கிறது. அது 1965 ஆழி கொடுங்காற்றாக இருக்கட்டும், 2004 சுனாமியாக
இருக்கட்டும், அவ்வப்போது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை
வந்துபோகும் பெருமழைக்காலமாக இருக்கட்டும் வஞ்சனை இல்லாமல் கொட்டி தீர்ப்பது தான்
தமிழகத்துக்கு மழையின் கொடை. கொளுத்தும் கோடையில் கூட கோடை மழை தந்து
குளிர்விக்கும் இயற்கை. அந்த அளவுக்கு தமிழகமும் மழையும் ஒன்றிணைந்த உறவு.
இப்படியான
வரலாறு கொண்ட தமிழகத்தில் மழை நீரை சேமிக்கவோ, வெள்ளம் வந்தால் தடுக்க தடுப்பணை திட்டமோ, மழை நீர் வடிகால் வசதிகளோ, நீர் நிலைகள்
செப்பனிடும் முன்னெச்சரிக்கையோ, நீர்வழி தடைகள் அகற்றும்
முனைப்போ, நீர்வரத்தை மடை மாற்றி வறண்ட பகுதிகளை வளமாக்கும்
தொலைநோக்கு பார்வையோ இதுவரை இருந்த சில ஆட்சியாளர்களுக்கும் அவர்களை தேர்ந்தெடுத்த
நமக்கும் இல்லாமல் போனதால், எல்லா மழைக்காலத்தும் தமிழகம்
பெறுகின்ற மழைகளில் பெரும்பான்மை கடலை தேடி கலப்பதே வழக்கம்.
இந்த
அளவுக்கு மெத்தனமாக இருக்கக்கூடிய சூழல் தமிழகத்திலே இருக்கிறதா என்றால் அதுவும்
இல்லை. ஆண்டுக்கு எட்டு மாதங்கள் வறட்சி, பருவம் மாறி பெய்யும் மழைகளால் பயிர் நாசம்
என மழை தன் அத்தனை முகங்களையும் நம்மிடம் காட்டிவிட்டு தான் செல்லும்.
இப்படியான
சூழலில், கடந்த
மூன்று வாரங்களாக தமிழக கடலோரப்பகுதிகளில் பெய்யென பெய்தொழிந்தது ஒரு பெருமழை.
மூன்றாவது
நாளே சிங்கார சென்னை SINK-கார சென்னையானது. மொத்த மக்களும் அவதிக்குள்ளானபோதும் அரசு மெத்தனம்
காத்தது. மக்கள் கொந்தளிப்பதும், மீடியா கிண்டலடிப்பதும்
ஆனபோது, மழை விடும்வரை காத்திருந்து ஒரு நன்னாளின்
சுபமுகூர்த்தத்தில் முதல்வர் நகர்வலம் வந்து ‘வாக்காள
பெருமக்களின்’ நலம் விசாரித்து சென்றதொடு அரசின் கடமை
முடிந்துவிட்டதாக கருதப்பட்டது.
எங்கெங்கும்
வெள்ளம். வெள்ளக்காடு வெள்ளப்பாலை வெள்ளநிலம் என எல்லா உவமைகளும்
சொல்லப்பட்டுவிட்டன சென்னைக்கு. ஆனால் அவதியுற்ற மக்களின் அல்லல் தீர்க்க தான்
யாருமில்லை.
ஏற்கனவே
தவித்துக்கொண்டிருந்த மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக சொல்லாமல் கொள்ளாமல் அரசு
திறந்து விட்ட எரிகளின் வெள்ளமும் மழைவெள்ளத்துடன் சேர்ந்துகொண்டு மொத்த
குடியிருப்பையும் சூழ்ந்தது. முன்னேல்லாம் ஆட்சியாளர்கள் மழை அறிவிப்பு வந்ததுமே
எரிகளிலிருந்து ஓரளவு நீரை வெளியேற்றி காலி செய்து வைத்திருப்பார்கள். அதனால்
மழைவெள்ளம் அதில் தேங்கி மக்களை அதிகம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும். ஆனால்
இந்த முறை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அரசு, எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்
எடுக்காமல் இருந்ததால் சென்னையை சுற்றி உள்ள எல்லா எரிகளும் ஏற்கனவே இருந்த
நீருடன் மழைநீரும் சேர்ந்துகொள்ள வேகமாக நிரம்ப தொடங்கிவிட்டன. அப்போது ஏற்பட்ட
சிக்கலை எப்படி தீர்ப்பது என யோசிக்கும் அளவுக்கு அரசுக்கு பொறுமை இல்லை.
அப்படியே
விட்டால் மழை நீர் ஏரியை நிரப்பி எரிக்கரைகளை உடைத்துவிடும். அப்படி நடந்தால்
மொத்த ஏரி வெள்ளமும் நகரத்துக்குள் வந்துடும். ஏரியை காக்க வேண்டும் என்றால் ஏரி
நீரை கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விட வேண்டும். அது ஏற்கனவே நகரில் தேங்கி நிற்கும்
மழை நீருடன் சேர்ந்துவிடும். இருக்கும் கொடுமையில் எந்த கொடுமை சுமாரானது என்று
யோசித்த அரசு ஏரி நீரை திறந்துவிடும் முடிவை எடுத்ததில் வியப்பில்லை. ஆனால் அதை
மக்களிடம் முறையாக அறிவிக்காமல், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், சட்டென நள்ளிரவு நேரங்களில் மொத்தமாக திறந்துவிட்டதில் கொஞ்ச நஞ்ச
நிம்மதியும் போனது மக்களுக்கு.
முன்னெல்லாம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு பொட்டலங்கள் ஹெலிகாப்டரிலிருந்து
போடப்படுவது வழக்கம். வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வீட்டிலிருப்பவர்களும் வெளியில்
எங்கும் செல்ல முடியாமல், வெளியிலிருந்தும் யாரும் எதையும் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு
வர முடியாமல் கிட்டத்தட்ட பட்டினி நிலைக்கு சென்றுவிட்ட மக்களை காக்கும் விதமாக அந்த
நடவடிக்கை. இந்த முறை அந்த மனிதாபிமான நடவடிக்கை எதையும் மக்களின் மனம் கவர்ந்த தாயுள்ளம்
கொண்ட அம்மாவின் அரசு செயல்படுத்தவில்லை.
இந்நிலையில்
தான் பரவலாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்பை
கட்டியிருப்பதால் தான் மழை வெள்ளம் போக வழியில்லாமல் ஆனது. சென்னை இந்த அவல நிலைக்கு
ஆளானதற்கு காரணம் இப்படியான ஆக்கிரமிப்புக்கள் தான் என்றொரு பேச்சு பரவலாக எழுந்தது.
கொளத்தூர்
பகுதியை சேர்ந்த ஒரு குடியிருப்பு, ஆக்கிரமிப்பு காரணமாக அகற்றப்படவேண்டும் என அரசு எடுத்த நடவடிக்கையை
எதிர்த்து முன்பு ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டு நிலுவையில் இருந்தது.
அந்த வழக்கை தொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர்
திரு சண்முகம். அவரது கோரிக்கை: குடியிருப்பவர்கள் 25 ஆண்டுகளுக்கும்
மேலாக அங்கே குடியிருந்து வருவதால் அவர்களுக்கு பட்டா வழங்கவும், ஆக்கிரமிப்பு பகுதியை வரைமுறை செய்யவும், அடிப்படை வசதிகள்
செய்துகொடுக்கவும் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்பது. அந்த வழக்கு சரியாக இந்த சமயத்தில்
விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, முதல், 'பெஞ்ச்' தனது வரலாற்று சிறப்புமிக்க கருத்துக்களை
பொன் முத்துக்களாக நேற்று உதிர்த்திருக்கிறது அவற்றில் சில:
மழை
வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்கு, தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறையும் தான் காரணம்.
25 ஆண்டுகளாக அவர்கள் வசம் இடம் இருந்தாலும், அவர்களுக்கு எந்த உரிமையும் வந்து விடாது; அவர்கள், ஆக்கிரமிப்பாளர்களாகத் தான் கருதப்படுவர்.
நீர்நிலைகளிலிருந்து ஆக்கிரமிப்புக்களையும் அரசு உடனே அப்புறப்படுத்தவேண்டும். அப்படி அப்புறப்படுத்தும்பொழுது எந்தவகையான நஷ்ட
ஈட்டையும் அரசு ‘ஆக்கிரமிப்பாளர்களுக்கு’ கொடுக்க தேவை இல்லை. அப்படி நஷ்டஈடு கேட்பதற்கு ‘ஆக்கிரமிப்பாளர்களுக்கு’ எந்த விட உரிமையும்
இல்லை.
நீண்ட நாட்களாக நீர்நிலைகளை ‘ஆக்கிரமித்து’ குடியிருந்து வருபவர்களுக்கு
அரசு இதுவரை பட்டா, அப்ரூவல் என எந்த அனுமதி கொடுத்திருந்தாலும், அவை செல்லாது. அப்படி அனுமதி கொடுத்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
நீர்
நிலைகளை பாதுகாக்கும் சட்டத்தை மறந்து விட்டு, வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கை ஆதாரங்களை அரசு மறைக்கும் போது, அரசுக்கு எதிராக, மக்கள் கையை உயர்த்துகின்றனர்
ஆக்கிரமிப்புகளை
அகற்றி, நீர் நிலைகளை மீட்கும் படி,
2005 ஜூனில், உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை
நிறைவேற்றவில்லை. அதிகாரிகளின் தவறால், உயிரிழப்பும், நிதி இழப்பும், 2005 அக்டோபரில் ஏற்பட்டது.
மழை
வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்கு, தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறையும் தான் காரணம்.
நீர்
நிலைகளை காக்கும் நோக்கிலும், சுற்றுப்புறச்சூழலை
மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும்
சட்டம், 2007ல் கொண்டு வரப்பட்டது.
(இதில் 2005 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி என்பதும் 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சி என்பதும்
இந்த பதிவுக்கு தேவையில்லாதது!)
2008
ஆம் ஆண்டு பெருமழை சமயத்துக்கு முன் அப்போதைய அரசு நீர் வடிகால்களை சீரமைத்து வெள்ளம்
வடிவதற்கான ஏற்பாடுகளை செய்ததால் இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளம் சென்னையில் நிற்கவில்லை.
மேலும் கூவம் மற்றும் பிற நீர்வழித்தடங்கள் எல்லாம் முறையாக தூர்வாரப்பட்டது. இதனால்
வெள்ளம் தங்கு தடையின்றி கடலுக்கு சென்றுகொண்டிருந்தது. கூவத்தை தூய்மைப்படுத்தும்
திட்டத்தை கொண்டு வந்து கரைகளை பலப்படுத்தி கடல் முகத்துவாரத்தை செப்பனிட்டது அப்போதைய
அரசு. நேப்பியார் பாலத்தில் நின்று கடலை பார்க்கும் எவருக்கும் இப்போதும் அந்த பணியின்
பிரம்மாண்டம் புரியும்.
ஆனால்
இப்போது நிலைமை வேறு. எல்லா நீர்வழி தடங்களும் கசடாகி கிடக்கின்றன. வடிகால்கள் பராமரிக்கப்படவில்லை.
மழைநீர் வழிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டன. கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்தின்
முன்பு வடிகால் பகுதியின் மேல் காவலர்களுக்கான மூன்று அடியில் ஷெட் அமைத்ததை எதிர்த்து
வழக்கு தொடுக்க முடிந்த அரசால், எண்ணற்ற நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை கண்டும் காணாமல் இருக்க முடிந்தது.
விளைவு? ஏரி குளங்கள் எல்லாம் குடியிருப்புக்களாக வேகமாக ஆக்கிரமிக்கப்பட
தொடங்கின.
மெட்ரோ
ரெயிலுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட சுரங்கங்கள் குழிகள் சாலைகள் எல்லாம் நிலைமையை மேலும்
மோசமாக்கிவிட்டன. இவைகள் எல்லாம் சேர்ந்து
தான் இப்போது நாம் காணும் இந்த அவலநிலையை நமக்கு பரிசளித்திருக்கிறது.
சென்னை
உயர்நீதிமன்றம் பொருத்தமான நேரத்தில் மிகச்சரியான உத்தரவுகளை கொடுத்து இருக்கிறது.
அதை மதித்து இனியேனும் அரசு நடந்தால் தான் சென்னை வருங்காலத்தில் தப்பிக்கும். நீதிமன்றத்துக்கு
இருக்கும் அக்கறையில் கொஞ்சமேனும் சென்னை மீது தமிழக அரசுக்கு இருந்தால் நல்லது தானே? எதிர்பார்ப்போம்!
சரியான தீர்ப்பு.
ReplyDeleteநீதிமன்றத்துக்கு இருக்கும் அக்கறையில் கொஞ்சமேனும் சென்னை மீது தமிழக அரசுக்கு இருந்தால் நல்லது தானே? எதிர்பார்ப்போம்!
ReplyDeleteஆம் எதிர்ப்பார்ப்போம்... இல்லையேல் அரசுக்கு எதிராக அணி சேர்ப்போம்...